Published:Updated:

“நாற்பது வருஷங்களா கைகோத்து இருக்கோம்!”

“நாற்பது வருஷங்களா கைகோத்து இருக்கோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நாற்பது வருஷங்களா கைகோத்து இருக்கோம்!”

அசரவைக்கும் ஐ.பி.எஸ் நட்புநட்புக் காவலர்கள்கு.ஆனந்தராஜ் - படங்கள்: ரா.வருண் பிரசாத்

“நாற்பதாண்டு கால நட்பு  எங்களுடையது. பெர்சனல் விஷயங்கள் முதல் பணிச்சுமைகள் வரை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகிட்டு, பலம் பெற்று, வாழ்க்கையைப் புன்னகையால் கடக்க உதவும் நட்பு இது!”     

“நாற்பது வருஷங்களா கைகோத்து இருக்கோம்!”

சென்னை பெசன்ட் நகர் பீச்சில் கரம்கோத்து நடைப்பயிற்சி செய்தவாறு பேசுகிறார்கள் ஓய்வுபெற்ற காவல்துறை டி.ஜி.பி-க்களான திலகவதி ஐ.பி.எஸ் மற்றும் லத்திகா சரண் ஐ.பி.எஸ். 1976-ம் ஆண்டு  ஐ.பி.எஸ் பயிற்சியில் பேட்ச்மேட்களாக அறிமுகமாகி தொடங்கிய நட்பு, பணி ஓய்வுக்குப்பிறகும் தொடரும் நினைவலைகளை இருவரும் பகிர கேட்ட அனுபவம், சுவாரஸ்யம்.

‘`ஒண்ணா ரெண்டா... எத்தனை ஞாபகங்கள். அந்த ட்ரெய்னிங் பீரியட், நீங்க பேசுற தமிழ், தைரியமான குணம், ஸ்லிம் சீக்ரெட்... உங்களை நினைச்சாலே இதெல்லாம்தான் என் ஞாபகத்துக்கு வரும்’’ என்று திலகவதி சொல்ல, அவர் கைகள் பற்றிப் பூரிக்கிறார் லத்திகா.

“1976-ம் ஆண்டு பேட்ச்ல இந்தியா முழுக்க 120 ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்வானோம். அதுல தமிழ்நாடு கேடர்ல நாங்க ரெண்டு பேர், ஏ.வி.எஸ்.மூர்த்தி, எஸ்.கே.உபாத்யாய், பாலச்சந்திரன், போலோநாத், நாஞ்சில் குமரன்னு மொத்தம் ஏழு பேர். எல்லோரும் இன்னிக்கு வரை நட்பில் இருக்கோம்.

1972-ம் வருஷம் தேர்வான கிரண்பேடியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த வருஷமும் சில பெண் ஐ.பி.எஸ் ஆபீஸர்கள் தேர்வு செய்யப்பட்டாங்க. ஆனா, முதன்முறையா எங்க பேட்ச்ல மொத்தம் அஞ்சு பெண்கள் தேர்வாகியிருந்தோம். ஹைதராபாத்துல நடந்த போலீஸ் ட்ரெய்னிங்லதான் நானும் லத்திகாவும் அறிமுகமானோம். தொடர்ந்த நாள்களில் நல்ல தோழிகளானோம். ட்ரெய்னிங் முடிஞ்சு, சென்னை அசோக் நகர் போலீஸ் ட்ரெய்னிங் சென்டருக்கு நாங்க அனுப்பப்பட்டோம். அந்த நாள்கள் மறக்க முடியாத பசுமை நினைவுகளைத் தந்தன.

லத்திகா கேரளாவுல பிறந்து, கொடைக்கானல் கார்ன்வென்ட்டுல படிச்சு, சென்னையில கல்லூரிப் படிப்பை முடிச்சிருந்தாங்க. நுனி நாக்கு இங்கிலீஷ்லதான் பேசுவாங்க. நான் அவங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்க முயற்சி செஞ்சு, அவங்ககிட்ட இருந்து ஸ்டைலா இங்கிலீஷ் பேசக் கத்துப்பேன். ரெண்டு பேரும் ஒருமுறை ‘தி எக்ஸார்சிஸ்ட்’ படம் பார்க்கப் போய், பயத்துல கத்தினதை இப்பவும் பேசிச் சிரிப்போம். இப்படி போஸ்ட்டிங்குக்கு முன்னாடி எங்களுக்குள்ள இருந்த அன்யோன்யம், பணிச்சூழல்ல தொலைவில் பிரிந்திருந்தாலும் அதிகரிக்கவே செஞ்சுது” என்றவரை நிறுத்திவிட்டு, ‘`இப்போ நான் பேசட்டுமா ஆபீஸர்!” என்று குறும்பாகக் கேட்டுவிட்டுத் தொடர்கிறார் லத்திகா...

“ட்ரெய்னிங்குக்குப் பிறகு ஏ.எஸ்.பி-யா நான் சேலத்துக்கும், திலகவதி வேலூருக்கும் நியமிக்கப்பட்டோம். வேலூர் சரகத்துக்கு உட்பட்டதால எங்களுக்கு அடிக்கடி வேலூர்ல டி.ஐ.ஜி உடன் மீட்டிங் இருக்கும். அதுக்காக நான் சேலத்துல இருந்து முந்தின நாளே திலகவதி வீட்டுக்கு வந்துடுவேன். அப்போ திலகவதி வேலைக்குப் போயிருந்தாகூட அவங்க பெரியம்மா அமிர்தம்மா வடை, பாயசத்தோட விருந்து வெச்சு என்னைக் கவனிச்சுப்பாங்க. நான் இங்கிலீஷும் அவங்க தமிழும் பேசிக்கிறதைப் பார்க்கிறவங்களுக்கு காமெடி சேனல் பார்த்த ஃபீலிங் இருக்கும். திலகவதி வீட்டுக்கு வந்ததும், எவ்வளவு டயர்டா, பிஸியா இருந்தாலும் எனக்காக சமைச்சுக் கொடுப்பாங்க. ‘இவகூட சேராதே. இவ என்ன சமைச்சாலும், எப்படி சமைச்சாலும் நாலு வாய்க்கு மேல சாப்பிட மாட்டேங்கிறா’னு அவங்க பெரியம்மா என்னைப் பத்தி கம்ப்ளெயின்ட் பண்ணுவாங்க. சேலத்துல என் வீட்டுக்குத் திலகவதி வரும்போதும் ஒரே சந்தோஷம்தான்.

என் உயிர்த்தோழி எனக்காக அழுத அந்தத் தருணத்தைச் சொல்லியே ஆகணும். ஒருமுறை சென்னையில போலீஸ் ஆபீஸர்ஸ் மீட்டிங். திலகவதி வேலூர்ல இருந்து கார்ல வந்துட்டுப் போயிட்டாங்க. நான் சேலத்துல இருந்து ரயில்ல வந்துட்டு, ரயில்லயே ரிட்டர்ன் ஆகிறதா பிளான். மறுநாள் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் சேலம் வர இருந்ததால, ஒருநாள் முன்பாகவே ரயில்ல சேலம் கிளம்ப வேண்டியதாகிடுச்சு. பந்தோபஸ்து பணியில பிஸியா இருந்ததால, புக் பண்ணியிருந்த ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ய மறந்துட்டேன். நான் போக இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலோடு இன்னொரு ரயில், வாணியம்பாடி பக்கத்துல நேருக்கு நேர் மோதி விபத்தாகிடுச்சு. மீட்புப் பணிக்கு அங்கே வந்த திலகவதி, அந்த ரயில்ல பயணம் செய்தவங்க லிஸ்ட்ல என் பெயரைப் பார்த்து நான் இறந்திருப்பேன்னு நினைச்சு கதறி அழ ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க எனக்கு போன் பண்ணிப்பார்த்து, என் குரலைக் கேட்டதும்தான் சமாதானமானாங்க’’ என்கிறார் லத்திகா, திலகவதியைக் கட்டியணைத்தபடி.

“அப்போ நான் அழுத கண்ணீரில்தான் எங்க நட்பின் ஆழத்தை உணர்ந்தேன்’’ என்கிற திலகவதியின் வார்த்தைகளில் நெகிழ்ச்சி.

‘`நேரம் காலம் பார்க்காம வேலை பார்த்துட்டு இருந்தாலும் வாரத்துல ஒருமுறையாவது நாங்க போன்ல பேசிடுவோம். எங்க ரெண்டு பேரோட டெலிவரி டைம்லயும் இன்னொருத்தர் கூட இருந்து தைரியமூட்டுவோம். அடிக்கடி ஸ்போர்ட்ஸ் மீட், மீட்டிங், பாதுகாப்புப் பணிகளில் சந்திச்சுக்க நேரும்போது ஆசுவாசமா இருக்கும். எங்க பணிச்சுமை, பிரச்னைகளை எல்லாம் மனம்விட்டுப் பேசிப்போம். வாகனம் வாங்குவதில் இருந்து வீடு வாங்குவது வரை எல்லா முக்கியமான விஷயங்களையும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கலந்தாலோசிச்சுதான் செய்வோம். எங்களோட பதவி உயர்வு, கிட்டத்தட்ட இணையாகவே இருக்கும். சில வேறுபாடுகள் வரும்போது அதுக்கான அரசியல் காரணங்களும் எங்களுக்கு நல்லாவே தெரியும் என்பதால, எங்க நட்புக்கு இடையில் அரசியல் வராது. அதனாலதான் நாற்பது வருஷமா கைகோத்து இருக்கோம்’’ எனச் சிரிக்கிறார் திலகவதி.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நாற்பது வருஷங்களா கைகோத்து இருக்கோம்!”

‘`எங்க பேட்ச் தமிழ்நாடு ஐ.பி.எஸ் ஆபீஸர்கள் ஏழு பேரும், குறிப்பிட்ட கால இடைவேளையில் சந்திக்கிறதை வழக்கமா வெச்சிருக்கோம். மாவட்டங்கள்ல வேலை செய்த நிலை மாறி, 1990-கள்ல நாங்க எல்லோரும் சென்னையில பெரிய போஸ்ட்டிங்குக்கு மாறினோம். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏதாச்சும் ஒரு ரெஸ்டாரன்ட்ல சந்திச்சு மகிழ்வோம். ஒவ்வொரு மீட்டுக்கும் ஒருத்தர் செலவுகளை ஏத்துப்போம். கூடவே, எங்க பேட்ச் சிவில் சர்வீஸ் ஆபீஸர்கள் எல்லோரும் வருஷத்துல ஒரு முறை சந்திக்கிறதும் வழக்கம். பணி ஓய்வுக்குப் பிறகு மூணு மாசத்துக்கு ஒருமுறை எங்க பேட்ச் நண்பர்கள் மீட் பண்றோம். அப்போவெல்லாம் எக்காரணம் கொண்டும் வேலை விஷயங்களை பேசிக்கக் கூடாதுங்கிறதை ஆரம்பத்துல இருந்து கொள்கையா கடைப்பிடிச்சுட்டு வர்றோம்’’ என்ற லத்திகா, ‘`ரொம்ப நேரம் நடந்துட்டோம்ல...’’ என்றபடியே அமர்கிறார்.

‘`90-கள்ல சென்னையில நாங்க லேடி ஐ.பி.எஸ் ஆபீஸர்களா கலக்கினோம். அடுத்தடுத்து பல பணிகள்ல நியமிக்கப் பட்டாலும், நேர்மையா வேலை செஞ்சோம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி திலகவதி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஜி.பி-யா இருந்து பணி ஓய்வுபெற்றாங்க. அதற்கு ஒரு வருஷம் கழிச்சு, நான் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக இருந்து ஓய்வுபெற்றேன். திலகவதிகிட்ட எனக்கு எப்பவுமே ஒரு கம்ப்ளெயின்ட் இருக்கும். ஆரோக்கியத்துல கவனம் செலுத்த மாட்டாங்க’’ எனும்போது, லத்திகா குரலில் சின்னக் கோபம். “திலகவதி எழுத்தாளராகவும் சாதிச்சுகிட்டு இருக்காங்க. அவங்க ‘சாகித்ய அகாடமி’ விருது வாங்கினப்போ, ‘உன்னால நம்ம டிபார்ட்மென்டுக்குப் பெரிய பெருமை’னு நான் கொண்டாடினேன். ஆனா, மற்ற வேலை களோட எழுத்து வேலையும் அவங்க நேரத்தை அபகரிக்க, தன் ஆரோக்கியத்துக்குனு அவங்க நேரம் ஒதுக்கத் திணறுவது எனக்கு வருத்தமா இருக்கு. அதைச் செஞ்சா, இன்னும் நிறைய சாதிப்பாங்க’’ என்று அக்கறையுடன் லத்திகா சொல்ல, அவருக்குத் தலையசைத்து உறுதி கொடுக்கிறார் திலகவதி.

“களரி பயிற்சி, வாக்கிங், உடற்பயிற்சினு  லத்திகா எப்பவுமே உடல்நிலையில ரொம்ப கவனம் செலுத்துவாங்க. நாற்பது வருஷங்களா எடையைச் சீரா மெயின்டெயின் செய்றாங்க. அந்தக் காலத்தில் நாம ஒண்ணா போகும்போது, ‘லத்திகா காத்தடிச்சா பறந்துடுவாங்க. உங்களைப் பார்த்தா காத்து பறந்துடும்’னு ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் செய்வாங்களே ஞாபகம் இருக்கா?” என்று திலகவதி கேட்க, ‘`அந்த சீக்ரெட்டை பப்ளிக்ல சொல்றியா...” என்று தன் தோழியின் கன்னம் கிள்ளுகிறார் லத்திகா சரண்.

 நட்பு இனிது!