Published:Updated:

“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா!”

“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா!”
பிரீமியம் ஸ்டோரி
News
“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா!”

பாசப் பிணைப்பு கு.ஆனந்தராஜ் படங்கள்: தே.அசோக்குமார்

“எனக்குப் பிடிக்காத பல விஷயங்களைப் பத்திப் பேசச் சொல்லித்தான் பத்திரிகையாளர்கள் என்னை அணுகுவாங்க. ஆனா நீங்க, என் யுபின் அம்மாவைப் பத்திப் பேசச் சொல்லிக் கேட்கிறீங்க. ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை நான் வாழக் காரணமான அவங்களைப் பத்திப் பேச வாய்ப்பு கிடைச்சதில் நான் சந்தோஷப்படுறேன். ஒரு கேர் டேக்கராதான் என் வாழ்க்கைக்குள் வந்தாங்க. ஆனா, எனக்கு அம்மாவா இருந்து நல்ல மனுஷியா, குடும்பத்தலைவியா, அரசியல்வாதியானு நான் பல தளங்கள்லயும் சிறப்பா செயல்பட முக்கியக் காரணமா இருந்தவங்க அவங்கதான்!’’

ஆரம்பத்திலேயே நெகிழ்ச்சியாகிறார் குஷ்பு. அவர் கையில் இருக்கும் யுபின் ஃபெர்னாண்டஸின் படத்தை நம்மிடம் காட்டுகிறார்.

“மும்பையில பிறந்து வளர்ந்த நான், முதல் ரெண்டு இந்திப் படங்களில் நடிச்சிட்டிருந்தப்போ எனக்கு பதின்மூன்றரை வயசு. அப்போ எங்கம்மா வேலை பிஸியா இருந்ததால, தாய்ப்பாசத்தோடு என்னைக் கவனிச்சுக்க 1984 ஜனவரி 22-ம் தேதி எங்க வீட்டுக்கு வந்தாங்க யுபின் அம்மா. இந்தியாவின் முதல் பெண் கேமரா உமன். செகண்ட் யூனிட் கேமரா உமனா, வாசன் சார் தயாரிப்பில் தமிழ் மற்றும் இந்தி படங்கள் பலவற்றிலும் வொர்க் பண்ணியிருக்காங்க. தனிப்பட்ட காரணங்களால், அந்த வேலையை விட்டுட்டு கணவர் இல்லாம தனி மனுஷியா நாலு பிள்ளைங்கள வளர்த்து ஆளாக்கத்தான் என் அம்மாகிட்ட வேலைக்குச் சேர்ந்தாங்க. ‘உன் கேர் டேக்கரில் இருந்து ஹேர் டிரெஸ்ஸர் வரை எல்லாம் இனி இவங்கதான். உன்கூடவே இருப்பாங்க’னு அம்மா அவங்களை அறிமுகப்படுத்தினாங்க. ஆனா, அவங்க எனக்கு அம்மாவாவே ஆகிட்டாங்க.

“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா!”

சினிமாத் துறையில் உள்ளவங்க என்ன நோக்கத்துல எங்கிட்ட பழகுவாங்க, அவங்க மனசுல என்ன இருக்கும்னு எதுவும் அந்த வயசுல தெரியாது. அதையெல்லாம் புரிய வெச்சதோடு, எனக்குப் பாதுகாப்பு அரணா இருந்தாங்க யுபின் அம்மா. பிரபல நடிகை என்பது இன்னிக்கு எனக்கான அடையாளம். ஆனா, ஒன்பதாம் வகுப்போடு ஸ்கூல் டிராப் அவுட் ஆனவள் நான். குடும்பப் பொருளாதாரத் தேவைகளுக்காக 13 வயசுலயே சினிமாவுல நடிச்சே ஆகணும் என்கிற பொறுப்பு என் தலைமேல விழுந்துச்சு. 1986-ம் வருஷம் சென்னை வந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். அடுத்தடுத்து நிறைய படங்கள் கிடைக்க, பத்து வருஷத்துக்கும் மேல முன்னணி ஹீரோயினா தூங்கக்கூட நேரமில்லாம பல மொழிப் படங்கள்லயும் நடிச்சேன். அப்போல்லாம் கார்ல பயணம் செய்தபடியே தூங்கும்போது, யுபின் அம்மா மடிதான் எனக்குத் தலையணை. சினிமாத் துறையினர் பலரும் அவங்கதான் என் அம்மான்னு நினைச்சுப்பாங்க.

குடும்பத்தை அப்படியே விட்டுட்டுப்போன என் அப்பாவை, நான் சந்திச்சு முப்பது  வருஷங்களுக்கும் மேல ஆகுது. அந்த மனுஷனைப் பத்தி நான் எதுவும் பேச விரும்பல. இப்படி தந்தை பாசமும் எனக்குக் கிடைக்கல. அம்மாவும் மும்பையில இருந்ததால, அவங்க என்மேல் வெச்சிருந்த பாசத்தை என்னால உணர முடியல. அதையெல்லாம் தன் அன்பால ஈடுசெஞ்சு என்னை வளர்த்தெடுத்தாங்க யுபின் அம்மா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா!”

சரியோ, தப்போ என்னைப் பத்தின எல்லா விஷயங்களையும் நான் அவங்க கிட்டப் பகிர்ந்துப்பேன். பிரமாதமான ஹேர் ஸ்டைலிஸ்ட் அவங்க. ஹெர்பல் அழகுப் பொருள்களை எனக்காகத் தயாரிச்சுக் கொடுப்பாங்க. அவங்க செய்ற மருதாணியை ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக்னு பல ஹீரோக்கள் போட்டிபோட்டுக் கேட்டு வாங்கிப்பாங்க’’ என்கிறபோது, அங்கு வந்த அவர் கணவர் சுந்தர்.சி, ``நான் கிளம்பறேன். நீ இன்டர்வியூ முடிச்சுட்டு வா’’ எனச் சொல்ல, ‘`சரிங்க’’ என அவரை அனுப்பிவைத்த குஷ்பு, ``எங்கள் காதலுக்கு அஸ்திவாரம் போட்டதும் யுபின் அம்மாதான்’’ என உற்சாக மோடுக்கு மாறுகிறார்.

“எனக்கு 23 வயசானப்போ, ‘இவளால முடிஞ்ச அளவுக்கு சினிமாவுல நடிச்சு சம்பாதிச்சுட்டா. இனி இவளுக்குக் கல்யாணம் செய்துடணும்’னு எங்கம்மாகிட்ட யுபின் அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அந்த நேரத்துலதான் நான் சுந்தரோட இயக்கத்தில் ‘முறைமாமன்’ படத்தில் நடிச்சுட்டு இருந்தேன். அந்தப் படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்ச வேளையில், ஒருநாள் சுந்தர் வேகமா எங்களை க்ராஸ் பண்ணிப் போனார். ‘உனக்குப் புருஷனா வர்றவரு, இவர் மாதிரி இருக்கணும்’னு யுபின் அம்மா சொல்ல, `ஐயோ, வாயை வெச்சுட்டு சும்மா இருங்க... இவர்தான் டைரக்டர்’னு பதறினேன். ஷூட்டிங் நாள்களில் சுந்தரும் அவங்களும் அறிமுகமானபின், ‘குஷ்பு குடும்பம் மேல அக்கறை உள்ள பொண்ணு, அவங்களுக்காகத்தான் உழைக்கிறா’னு அவர்கிட்ட என்னைப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. சுந்தருக்கு என் மேல காதல் வர முதல் காரணம் அதுதான். அவர் எனக்கு புரபோஸ் பண்ணின உடனே, நான் யுபின் அம்மாக்கிட்டதான் முதல்ல வந்து சொன்னேன். அப்புறம்தான் சுந்தர்கிட்ட சம்மதம் சொன்னேன்.

அவங்க பேரன், பேத்திகளைவிட என் பொண்ணுங்க அவந்திகா, அனந்திதா மேலதான் உயிரா இருப்பாங்க. நான் குழந்தைகளைத் திட்டினாலே ஆவேசமா எங்கிட்ட சண்டைக்கு வருவாங்க. ஒருமுறை அவந்திகாவை நான் அடிச்சப்போ, என்னை அவகிட்ட மன்னிப்புக் கேட்க வெச்சாங்க. ‘குழந்தைகளை அன்பாலதான் திருத்தணும்’னு அவங்க சொன்ன பாடத்தைத்தான் இப்போ வரைக்கும் கடைப்பிடிச்சிட்டு வர்றேன்’’ என்கிறவர், தன் வாட்ஸ்அப் புரொஃபைல் போட்டோவாக யுபினின் படத்தை வைத்திருப்பதையும் காட்டுகிறார்.

“எல்லா குடும்பங்களையும்போல எங்க வீட்டிலும் கணவன் மனைவிக்கு இடையில சண்டை, சச்சரவுகள் வந்திருக்கு. ஒரே வீட்டுல என் கணவரும் நானும் மூணு மாசமெல்லாம் பேசிக்காமலே தனித்தனி ரூம்ல இருந்திருக்கோம். அது தெரியவந்தப்போ உச்சகட்ட கோபத்தில் யுபின் அம்மா என்னைத் திட்டினதை எப்பவும் மறக்க முடியாது. நிறைய எடுத்துச்சொல்லி, எங்க ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி, எங்களுக்குள்ள பழைய அந்நியோன்யம் வரவெச்சதும் அவங்கதான். அதிலிருந்து சுந்தரும் நானும் எங்க பிரச்னைகளை உடனுக்குடன் பேசித் தீர்த்துப்போம். அதனாலதான் எங்க குடும்ப வாழ்க்கை அழகா போயிட்டு இருக்குது.

“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா!”

‘நீ கஷ்டப்பட்டு மேல வந்திருக்கே. பணத்தை வீணா செலவு பண்ணக் கூடாது. உழைச்ச பணத்தைச் சரியா சேமிக்கலைன்னா, வந்ததைவிட வேகமா திரும்பிப்போயிடும்’னு என்கூடவந்த நாள்லேர்ந்து சொல்லிட்டு இருப்பாங்க. அப்போ சென்னையின் மையப் பகுதியான போட் கிளப் ஏரியாவுல பெரிய ஃப்ளாட்ல இருந்தோம். ‘நீ தனிவீடு கட்டி, அதுல ராணி மாதிரி இருக்கணும்’னு சொல்லி, சாந்தோம் ஏரியாவில் என்னை இடம் வாங்க வெச்சு, இந்த வீட்டைப் பார்த்துப் பார்த்துக் கட்ட வெச்சவங்க அவங்கதான்.

என் வாழ்க்கையில் குழப்பங்கள், பிரச்னை கள் சூழ நான் இருந்தப்பவெல்லாம் அதிலிருந்து என்னை மீட்டுவந்ததும் அவங்கதான். நான் மட்டுமல்ல... என் கணவர், குழந்தைகளும் ஏதாச்சும் பிரச்னைன்னா ஆறுதலுக்கு உடனே யுபின் அம்மாவைத்தான் தேடுவாங்க. எனக்காக இவ்வளவு செய்தவங்க, என் மூலமா ஆதாயம் தேட ஒருநாளும் நினைச்சதில்லை.

எங்களுக்குள்ள அப்பப்போ சின்னச் சின்ன சண்டைகள் வரும்போதெல்லாம், ‘நான் மும்பைக்குப் போறேன்’னு கோபம் காட்டுவாங்க. ‘முதல்ல அதைச் செய்ங்க’னு நான் கையெடுத்துக் கும்பிடுவேன். அப்படி ஒரு நேரம் இந்தி நடிகரும் என் நண்பருமான கோவிந்தாகிட்ட, ‘எனக்கொரு இந்தி நடிகையைப் பார்த்துக் கொடுடா. இனி இவகிட்ட நான் வேலை பார்க்க மாட்டேன்’னு சொல்ல, ‘நீங்க சாகுற வரைக்கும் இவளைப் பிரிய மாட்டீங்க’னு கோவிந்தா சொன்னார். யுபின் அம்மாவின் இழப்பு...’’ - விழிகளில் வழியும் நீரைத் துடைக்கிறார் குஷ்பு.

“2011-ம் வருஷம் மார்ச் மாசம், எவ்ளோ சொல்லியும் கேட்காம மும்பையில இருக்கிற அவங்க பசங்க வீட்டுக்குப் போயிட்டாங்க. அவங்களுக்கு பிளட் கேன்சர்னு தெரிஞ்சப்போ, நான் ரொம்பவே நொறுங்கிப்போயிட்டேன். 28 வருஷங்கள் எங்கூடவே என் நிழலா இருந்த வங்க, 2011-ம் வருஷம் டிசம்பர் 21-ம் தேதி இறந்துட்டாங்க’’ - யுபின் சம்பந்தப்பட்ட தினங்கள் அனைத்தையும் மனப்பாடமாகச் சொல்கிறார் குஷ்பு.

``அம்மாவழிப் பாட்டியை, நாங்க ‘நானி’ன்னு கூப்பிடுவோம். எங்கம்மாவை என் பொண்ணுங்க ‘அம்மி’ன்னு கூப்பிடுவாங்க; ஆனா, யுபின் அம்மாவைத்தான் ‘நானி’ன்னு கூப்பிடுவாங்க. அவங்க இறந்தபோது, ரெண்டு நாள் முழுக்க சாப்பிடாம அழுதுகிட்டே இருந்தாங்க. நானும் அவங்க இழப்பை உணராத நாள் இல்லை. அடிக்கடி மும்பை போய் அவங்க பசங்களைப் பார்த்துட்டு வருவேன். இந்த ஹால்ல இருக்கிற அவங்க போட்டோவைத் தினமும் என் கண்கள் தேடும். அவங்க என் அம்மாவுக்கும் மேல. குஷ்புவைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச, முழுசா புரிஞ்ச ஒரே நபர் அவங்கதான்!” 

ஹாலில் இருக்கும் யுபினின் புகைப்படத்தில் பதிகிறது குஷ்புவின் பார்வை. அவரை அறியாமல் கசிகிறது கண்ணீர்.

“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா!”

சென்டிமென்ட் வெள்ளித்தட்டு!

“எனக்கு யுபின் அம்மா நிறைய பரிசு கொடுத்திருக்காங்க. குறிப்பா, என் கணவர் சுந்தரும் நானும் சாப்பிடுவதற்காக வெள்ளித்தட்டு வாங்கிக்கொடுத்து, அதுலதான் நாங்க எப்பவும் சாப்பிடணும்னு அன்புக் கோரிக்கை வெச்சாங்க. பல வருஷங்களா அதுலதான் சாப்பிடுறோம்.

1992-ம் வருஷம் தங்கத்துல ஒரு ட்ரெடிஷனல் ஆரம் வாங்கிக்கொடுத்தாங்க. என்னோட ஃபேவரைட் ஜுவல் அது!”