Published:Updated:

“இசையையும் சினிமாவையும் நான் மறக்கல!”

“இசையையும் சினிமாவையும் நான் மறக்கல!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இசையையும் சினிமாவையும் நான் மறக்கல!”

நட்சத்திர ஜன்னல் கு.ஆனந்தராஜ் , படங்கள்: ரா.வருண் பிரசாத்

“இசையைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, இத்துறையை விட்டு நான் விலகிட்டேன்னு பலரும் நினைச்சுக்கிட்டாங்க. அதனாலதான் எனக்கு சினிமா வாய்ப்புகள் குறைஞ்சது. அதுக்காக நான் வருத்தப்படலை. தொடர்ந்து இசையைக் கத்துக்கிட்டுதான் இருக்கேன்” - நெகிழ்ச்சியாகப் பேசத் தொடங்குகிறார் பின்னணிப் பாடகி சுனந்தா. ‘மன்னவா மன்னவா மன்னாதி மன்னனல்லவா’ பாடல் முதல் இன்னும் பல பாடல்களில் நம் மனதை வருடிய இசைக்குயில். 15 வருடங்களாக இவர் குரல் சினிமாவில் ஒலிக்காத நிலையில் அவரைச் சந்தித்தோம்.

“கேரளாவில் பிறந்து வளர்ந்தேன். பெரிய கூட்டுக் குடும்பம். அதில் என் பெற்றோர் உள்பட சங்கீத ஆர்வம் கொண்டவர்களும் இசைக்கலைஞர்களும் இருந்தாங்க. ஆனா, அதுல பெரும்பாலானவங்க வெளி நிகழ்ச்சிகள்ல பாட மாட்டாங்க. டாக்டர் ஆகணும்கிறது என் ஆசை. ஒருகட்டத்துல `இசைதான் என் ஆர்வம்... இதுதான் என் எதிர்காலம்’னு உணர்ந்தேன். வங்கி மேனேஜராக இருந்த எங்க அப்பாவுக்குச் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்க, சென்னையில பி.ஏ மியூசிக் சேர்ந்தேன். தனியாகவும் மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்பாவோட நண்பர் மூலமா இளையராஜா சார்கிட்ட வாய்ஸ் டெஸ்ட்டிங்குக்கு வாய்ப்பு கிடைச்சது.

“இசையையும் சினிமாவையும் நான் மறக்கல!”

ராஜா சார் பீக்ல இருந்த காலகட்டம் அது. நான் சின்னப் பொண்ணா இருந்ததால, அவரைப் பற்றிய பிரமிப்பு இல்லாம, அவர் சொல்லிக்கொடுத்தபடி ஒரு பாடலைப் பாடினேன். ரெக்கார்டிங்குக்கு போனப்போ அங்கே ஜானகி அம்மாவும் மலேசியா வாசுதேவன் சாரும் பாடிக்கிட்டு இருந்தாங்க. அப்போ கவிஞர் வைரமுத்து சார், ராஜா சாரின் உதவியாளரா இருந்த சுந்தர்ராஜன் சார் ரெண்டு பேரும் எனக்குத் தமிழ் உச்சரிப்புகளைக் சொல்லிக்கொடுத்தாங்க. அதைக் கேட்டு மலையாளத்துல எழுதி வெச்சுப் பாடினேன். அப்படி ‘புதுமைப் பெண்’ படத்துக்கு பாடிய ‘காதல் மயக்கம்’கிற பாடல் மூலமாகத்தான் என் குரல் சினிமாவுல ஒலிக்க ஆரம்பிச்சது” எனும்போது, சுனந்தாவின் புன்னகையும் இசையாக ஒலிக்கிறது.

“முதல் பாட்டு ஹிட்டானதும், ராஜா சார் அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுக்க ஆரம்பிச்சார். அப்படி ‘வெள்ள மனம் உள்ள மச்சான்' (சின்ன வீடு), ‘பூ முடித்து' (என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்), ‘சின்னச் சின்ன' (சக்திவேல்), ‘பட்டுப் பட்டு பூச்சிப்போல' (எங்க ஊரு பாட்டுக்காரன்), ‘மன்னவா மன்னவா மன்னாதி மன்னல்லவா' (வால்டர் வெற்றிவேல்), ‘நட்சத்திர ஜன்னலில்' (சூர்ய வம்சம்)னு நிறைய ஹிட் சாங்ஸ் பாடினேன். இளையராஜா சார் இசையில் பாடியதுதான் அதிகம். இதுக்கிடையே காலேஜ் முடிச்சேன். தொடர்ந்து சினிமாவுல பாடிகிட்டே, என்னோட அங்கிள் பின்னணிப் பாடகர் ஜெயசந்திரன்கூட நிறைய உள் மற்றும் வெளிநாட்டு மேடைக் கச்சேரிகள்ல பிஸியா பாடிகிட்டு இருந்தேன்’’ என்றவருக்கு 1993-ம் வருடம் திருமணம் முடிந்திருக்கிறது.

`` ‘மன்னவா மன்னவா’ பாடல் ரெக்கார்டிங் டைம்ல, அது தாலாட்டுப் பாடல்னு அந்தப் பாட்டோட சிச்சுவேஷனை ராஜா சார் எங்கிட்ட சொல்லல. இன்னொரு பாடலா நானும் பாடிட்டேன். அந்தப் பாடல் செம ஹிட் ஆனதும், ‘சார், இது தாலாட்டுப் பாடல்னு சொல்லியிருந்தா நான் இன்னும் நல்லா பாடியிருப்பேனே’னு சார்கிட்ட சொன்னப்போ, ‘எந்தப் பாடலா இருந்தாலும் இயல்பிலேயே நீ நல்லாதான் பாடுவ’னு புன்னகைச்சார். ‘அம்மா... அம்மா... எந்தன் ஆருயிரே’ பாடல் பாடினப்போ, எனக்கு பயங்கர ஜலதோஷம். தொண்டை வலியில் ‘மா’ உச்சரிப்பு மட்டும் வரலை. எனக்காக ஒரு மாசம் வெயிட் பண்ணி அந்தப் பாடலைப் பாட வெச்சார் இளையராஜா சார். அவருக்கு நான் நிறைய நன்றிகள் சொல்லணும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“இசையையும் சினிமாவையும் நான் மறக்கல!”

ரஹ்மான் சாருக்கு நிறைய ஜிங்கிள்ஸ் பாடியிருக்கேன். எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார்னு பலர் இசையமைப்பிலும் பாடினேன். என்னோட ரெண்டாவது டெலிவரிக்கு சரியா ஒரு வாரத்துக்கு முன்னாடி நிறைமாத கர்ப்பிணியா ‘சூர்யவம்சம்’ படத்துக்கு ‘நட்சத்திர ஜன்னலில்’ பாடப் போனேன். என்னைப் பார்த்த எஸ்.ஏ.ராஜ்குமார் சார், ‘நீங்க கர்ப்பமா இருக்கிறது எனக்குத் தெரியாது. உங்களால் சிரமமில்லாம பாட முடியுமா’னு கேட்டார். ‘எந்தப் பிரச்னையும் இல்லை சார்’னு நான் ரசிச்சுப் பாடின அந்தப் பாட்டைத் தமிழ்நாடே கொண்டாடிச்சு. இப்படி பீக்ல இருந்த நிலைமையிலதான், சீக்கிரமே என்னை அவுட் ஆஃப் ஃபீல்டுனு சொல்லிட்டாங்க” என்னும்போது குரலில் சோகம் இழையோடுகிறது.

“சினிமா ஃபீல்டுக்குள் நுழைஞ்சப்போ எங்க வீட்டுல போன் கனெக்‌ஷன் கிடையாது. இசையமைப்பாளர்கள், எங்க ஹவுஸ் ஓனர் வீட்டு போனுக்குத்தான் ரெக்கார்டிங் தகவல்களைச் சொல்வாங்க. சில நேரங்களில் அவங்க வீட்டில் இல்லாம போயிடுறது, தகவலைச் சொல்ல மறந்துடுறது, அந்த நேரத்துல கேரளாவில் கச்சேரிகளில் நான் இருந்ததால தகவல் கிடைக்காம போயிடுறதுனு பல வாய்ப்புகள் எனக்கு விட்டுப்போயிருச்சு.

கெமிக்கல் இன்ஜினீயரான என் கணவர் ராம்தாஸ் மேனன், இந்தியாவின் பல மாநிலங்கள்லயும், சில வருஷம் லிபியா நாட்டுலயும் வொர்க் பண்ணினார். அதனால மாசத்துல சில நாள்கள் அவரைப் பார்க்கப் போவேன். அப்படிப்போன ஒரு தருணத்துல, ‘சுனந்தா அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டாங்க, இனி பாட மாட்டாங்க’னு ஒரு வதந்தி கிளம்பிருச்சு. ஆனா, இதுவரை நான் அமெரிக்காவுக்குப் போனதே கிடையாது.

2000-மாவது வருஷத்துக்குப் பிறகு எனக்கான சினிமா வாய்ப்பு சுத்தமா நின்னுபோச்சு. ஆனாலும், இசையை என்னால விடமுடியாததால, தொடர்ந்து இசை கத்துக்கிட்டும், கச்சேரிகள், ஆல்பங்களில் பாடிட்டும்தான் இருக்கேன். 2004-ல் கணவர் சென்னையில் வந்து செட்டில் ஆகிட்டார். அதனால குடும்பத்தோடு செவழிக்க நேரம் சரியாகிடுச்சு. வீட்டு வேலைகளையெல்லாம் முடிச்சுட்டு, தினமும் புதுப்புது ராகம், கீர்த்தனையைக் கத்துக்கிட்டு பாடிகிட்டே இருப்பேன். என் குடும்பம் அதை ரசிச்சுக் கேட்கும்’’ என்றவரின் மகள் காயத்ரி ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார்; மகன் சுஷாந்த் இன்ஜினீரியரிங் படிக்கிறார்.

``கேரளப் பூர்வீகம் கொண்ட நான், ஜென்ஸி அக்கா, மின்மினி மூணு பேரும் 80, 90-களில் எங்களுக்குன்னு தனி அடையாளத்தோடு புகழ்பெற்றோம். நான் பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள், டிவோஷனல் சாங்ஸ் மற்றும் தனி ஆல்பங்களிலும், பத்து மொழிகளில் பல நூறு பாடல்களும் பாடியிருக்கேன். ஆனா, சினிமா என்னை மறந்துடுச்சு. மறுபடியும் பாட ஆசை இருக்கு. பார்ப்போம்’’ எனும்போது அவர் குரல் மெலிதாகிறது. இறுதியாக, ‘பூவே செம்பூவே’ பாடலை அவர் பாட, காற்று கீதமாகிறது.