Published:Updated:

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது!

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது!
பிரீமியம் ஸ்டோரி
News
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது!

போரும் அமைதியும் வெ.நீலகண்டன், படங்கள்: ப.சரவணகுமார்

“போர் எங்கள் வாழ்க்கையை சின்னாபின்னப்படுத்திச்சு. கொத்துக் கொத்தாக எங்கள் மக்கள் செத்து மடிஞ்சிருக்காங்க. இதுதொடர்பான விசாரணைகள், விவாதங்கள் சர்வதேச அளவுல நடந்துக்கிட்டிருக்கு. புலம்பெயர்ந்த தமிழர்களும் அதுக்கு அழுத்தம் கொடுத்துக்கிட்டிருக்காங்க. போரால லட்சக்கணக்கான குடும்பங்கள் கலைஞ்சுபோய் கிடக்கு. இலங்கை அரசாங்கத்தோட அறிக்கைப்படியே, கணவனை இழந்த சுமார் 90 ஆயிரம் பெண்கள் தங்களோட எதிர்காலம் புரியமா தவிச்சுக்கிட்டிருக்காங்க. சிறுசிறு குழந்தைகளைக் கையில வெச்சுக்கிட்டு ஒவ்வொரு நாளையும் நகர்த்த அவங்கபடுற அவஸ்தையை வார்த்தைகளால சொல்ல முடியாது. கையை இழந்தவங்க, காலை இழந்தவங்க, இடுப்புக்குக் கீழே செயல் இழந்தவங்கன்னு போரால சிதிலமடைஞ்சவங்களும் பெரும் வலியைச் சுமந்துக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. அவங்க மேல சர்வதேச சமூகத்தோட பார்வையோ, புலம்பெயர்ந்த தமிழர்களோட பார்வையோ படவேயில்லை...” - கவலையும் அக்கறையுமாகப் பேசுகிறார் பரமேஸ்வரி சீவகன்.

பரமேஸ்வரி, ஈழத்தின் ஊடகவியலாளர். ஆவணப்படத் தயாரிப்பாளர்.  நாடகக் கலைஞர். இலங்கை வானொலி நேயர்களுக்குப் பெரிதும் பரிச்சயமானவர். இறுதிப்போருக்குப் பிந்தைய தமிழர்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை அரசாங்க நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆவணப்படங்களாகப் பதிவு செய்து உலகத்தின் பார்வைக்குக் கொண்டுவந்தவர். `உயிரிழை',  `பெண் தலைமை', `போராளிகள்' உள்பட பரமேஸ்வரி தயாரித்த ஆவணப்படங்கள் உலகின் மனசாட்சியை உலுக்கியவை.

போரில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு, இடுப்புக்குக் கீழே இயங்காமல் வாழ்க்கை முழுவதும் படுக்கையில் கிடப்பவர்கள், மட்டகளப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை கிராமத்தில் 1987 ஜனவரி 27 அன்று  இறால் பண்ணையில் கொத்தாகக் கொல்லப்பட்ட 80-க்கும் மேற்பட்ட தமிழர்களின் இப்போதைய குடும்பச்சூழல்,  புனர்வாழ்வு மையங்களிலிருந்து மீண்டு, புதுவாழ்க்கைக்குத் திரும்பியிருக்கும் முன்னாள் போராளிகளின் அவல நிலை என அதிர்வையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் இந்த ஆவணப்படங்கள் போருக்குப் பிந்தைய இலங்கையின் சூழ்நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது!

பரமேஸ்வரியின் கணவர் சீவகனும் ஊடகவியாளர். போர்க்காலத்தில் கொழும்பில் பணியாற்றிய சீவகன்மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டைச் சுமத்தியது இலங்கை அரசு. அதனால், குடும்பத்தோடு இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றது இவர்கள் குடும்பம். போருக்குப் பிந்தைய இலங்கைப் பயணங்களில், விரக்தியில் உச்சத்தில் வாழும் ஈழத்தமிழர்களின் நிலை கண்டு  அவற்றை வெகுஜன கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

பரமேஸ்வரியின் பூர்வீகம் தமிழகம். பரமக்குடி அருகில் உள்ள பாம்பூரைச் சேர்ந்தவர். 1957-58-களில் பணிக்காக இலங்கையில் குடியேறிய குடும்பம்.

“அது கடுமையான பஞ்சக்காலம். அந்தச் சூழலில்தான் அப்பா இலங்கைக்குப் போனார். அங்குதான் அவருக்குத் திருமணம் நடந்தது.  அம்மாவும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். அவர்களின் பூர்வீகம் அறந்தாங்கி. மொத்தம் ஐந்து பிள்ளைகள் நாங்கள். அப்பா கடும் உழைப்பாளி. தொடக்கத்தில் கொழும்பு துறைமுகத்தில் மூட்டை தூக்கும் வேலை செய்தார்.  படிப்படியாக முன்னேறி வீட்டுப் புரோக்கர் வேலைக்கு நகர்ந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்பாவுக்கு அந்தக் காலகட்டத்தில் பிரஜா உரிமையும் இல்லை. சிறீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தக்காலங்களின்போது அடிக்கடி அப்பாவைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். அம்மாவுக்குச் சிங்களம் தெரியும் என்பதால், அவங்க போய் அழுது கதறிக் கூட்டிக்கொண்டு வருவார்கள்.

நாங்கள் அங்கே பிறந்ததால் இலங்கைத் தமிழர் என்னும் அங்கீகாரத்தோடு வாழ்ந்தோம். நான் கொழும்பில் பள்ளிப்படிப்பை முடித்தேன். 9-வது வயதிலிருந்தே இலங்கை வானொலியில் நாடகம், கலை நிகழ்ச்சிகள் என்று அறிமுகமாகிவிட்டேன்.இரா.பத்மநாதன், கே.எம்.வாசகர், பி.ஹெச்.அப்துல் ஹமீதுன்னு நிறைய ஆளுமைகளுடன் வேலை செய்திருக்கேன். இப்போ டி.வி சீரியல் மாதிரி அப்போ ரேடியோ நாடகங்கள். `பரமேஸ்வரி கருப்பையா'ன்னா பலருக்குத் தெரியும்.  

சென்னையிலதான் சீவகனைச் சந்தித்தேன். இரண்டு பேருடைய கருத்துகளும் பல விஷயங்கள்ல ஒருங்கிணைஞ்சிருந்துச்சு. நண்பர்களா தொடங்கின உறவு காதலாகி திருமணத்துல முடிஞ்சுது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில இல்லறத்துல இணைஞ்சோம்..” - மெல்லிய வெட்கம் படரப் பேசுகிறார் பரமேஸ்வரி. 

“சீவகன் மட்டகளப்பு தமிழர். படிப்புக்காகச் சென்னை வந்தவர். திருமணம் முடிந்ததும் திரும்பவும் இலங்கை போயிட்டோம். சீவகன்  பத்திரிகையாளரானார். வீரகேசரி, தினக்குரல்னு  சில பத்திரிகைகள்ல வேலைசெய்த பிறகு பிபிசியோட கொழும்பு செய்தியாளரானார். நான் தோட்டத் தொழிலாளர்களோட குழந்தைகள் படிக்கிற பள்ளியில ஆசிரியையா சேர்ந்தேன். மிகவும் மோசமான காலகட்டம் அது. எங்கே குண்டு வெடிக்கும், எப்போ சுடத் தொடங்குவார்கள் என எதுவும் தெரியாது. இந்தச் சூழல்ல ஆசிரியப்பணியை விட்டுட்டு நானும் ஆஸ்திரேலியாவில `தமிழ் முழக்கம்' என்ற ரேடியோவுக்கும், லண்டன் தமிழ் ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்துக்கும் வேலை செய்ய ஆரம்பித்தேன். போர் உச்சகட்டமா நடந்துக்கிட்டிருந்த காலகட்டம். ரெண்டு பேரும் ஒண்ணா களத்துக்குப் போவோம். ரத்தமும் உடல்களுமா சிதறிக்கிடக்கிற களத்துல நின்னு ரிப்போர்ட் செய்வோம்.

நெருக்கடிகள் அதிகமாச்சு. என்னதான் இருந்தாலும் நாங்கள் தமிழர்கள். கொழும்பு மண்ணுல நின்னுக்கிட்டு ரிப்போர்ட் செய்றது ரொம்பவே சவாலான வேலையா இருந்துச்சு. அதையும் கடந்து `சூரியன்' என்கிற பேர்ல ஒரு இணைய சஞ்சிகையும் நடத்தினோம்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது!

ஒருகட்டத்துக்கு மேல இலங்கை அரசு எங்களைக் கண்காணிக்க ஆரம்பிச்சுது. சமன் வகாராஜ், தராக்கி சிவராம், ராய் டேனிஷ் போன்ற பத்திரிகையாளர்கள் வரிசையில சீவகனையும் தேசத்துரோகியா அறிவிச்சாங்க. எங்களுக்கிருந்த ஒரேவழி... நாட்டைவிட்டு வெளியேறுவதுதான். குடும்பத்தோடு லண்டன் போய் அரசியல் தஞ்சம் கேட்டோம். தஞ்சம் கிடைச்சபிறகு சீவகன் பிபிசியில வேலைக்குப் போனார்.

தஞ்சமடைந்த நாட்டில் பொருளாதாரச் சிக்கல் பெரிதா உருவாச்சு. நானும் ஏதாவது ஒரு வேலைக்குப் போனால் நல்லதென்று நினைத்தேன். பிள்ளைகள் வளர்ந்து விட்டதால் இருவரும் ஊடகத்தில் இருக்க வேண்டாம் என்று யோசித்தோம். அதனால், நான் ஒரு நிறுவனத்தில் அக்கவுன்டன்ட்டாகச் சேர்ந்தேன்.

எனக்கு சிறுவயசுல இருந்தே ஆவணப் படுத்துதலில் தீவிர ஆர்வமுண்டு. கிடைத்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமா ஆவணப்படுத்தும் பணிகளையும் செய்ய ஆரம்பித்தேன். இலங்கையில் ஏகப்பட்ட பொக்கிஷங்கள் உள்ளன. எல்லாம் பல்லாண்டு போர்களில் அழிந்துவிட்டன. அதையெல்லாம் ஆவணப்படுத்தி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். முதலில் யாழ்ப்பாண நூலகம் பற்றி ஓர் ஆவணப்படம் செய்தோம். ஆனாலும், அப்போதிருந்த நிலையில் எங்களால் இலங்கைக்குள் நுழைய முடியவில்லை. 2010-க்குப் பிறகே இலங்கை செல்ல முடிந்தது.

போர் நிறைவுற்றபிறகு, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இலங்கைக்குப் போனோம். போர் நடந்த பகுதிகளுக்கெல்லாம் சென்றோம். அங்குள்ள சூழல் எங்களுக்கு மிகப்பெரும் கேள்வியை உருவாக்கியது.
போர் முடிந்துவிட்டது? அடுத்து என்ன?

போர்க்குற்றம் பற்றி உலகமெங்கும் விவாதங்கள் நடக்கின்றன. போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. ஆனால், போருக்குப் பிறகு அங்கு வசிக்கும் தமிழர்கள் பற்றியோ, புனர்வாழ்வு முகாமுக்குப் போய்த் திரும்பிய போராளிகள் பற்றியோ யாரும் பேசவில்லை; கவலைப்படவும் இல்லை. குறிப்பாகத் தமிழகத்திலோ, புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலோகூடப் பெரிதாகப் பேசப்படவில்லை.

எங்களுக்காகப் போராடிய போராளிகள், அவர்களுக்கு உறுதுணையாக நின்ற மக்கள் எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் விரக்தியோடு வாழ்வதைப் பார்த்தபிறகு, நாம் ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற உறுதியை எடுத்தோம். இந்தச் சூழலை எப்படியேனும் சர்வதேசப் பார்வைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அதற்கு ஒரேவழி, ஆவணப்படுத்துவதுதான்.

ஒரு குழுவைக் கொண்டுபோய் நிறுத்திப் படமாக்குவதையெல்லாம் இலங்கையில் கற்பனைகூடச் செய்ய முடியாது. கேமரா, எடிட்டிங் எல்லாவற்றையும் நாமே செய்தாக வேண்டும். நானும் சீவகனும் அவற்றை யெல்லாம் பழகினோம். நான் பேட்டி எடுக்க, சீவகனும் என் பிள்ளைகளும் கேமராவில் பதிவு செய்வார்கள்.

 ஒரு கிராமத்தில் ஒரே நாளில் 85 பேர் கணவனை இழந்திருக்கிறார்கள். அங்கு ஒரு கடலேறி இருக்கிறது. ஒருபுறம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், இன்னொருபுறம் புலிகளுடைய கட்டுப்பாட்டிலும் இருந்தது. ஒருவருக்கொருவர் சுட்டுக் கொள்வார்கள். ஆனால், அந்தக் கிராம மக்களுக்கு அந்தக் கடலேறிதான் ஜீவாதாரம். அங்கு மீன் பிடித்தால்தான் சாப்பாடு. அந்தக் கடலேறியில் தினமும் இரண்டு பிணங்களாவது மிதக்கும். மீன்பிடிக்கச் செல்பவர்களைப் பிணங்களாகத்தான் தூக்கி வருவார்கள். இப்படி ஏகப்பட்ட நிஜங்கள் அங்கே இருக்கின்றன.

சில பெண்களுக்கு, தன் கணவனைக் கொன்றது யார் என்று தெரியும். அவன் அந்தச் சூழலிலேயே வாழ்ந்து கொண்டிருப்பான். ஆனால், எதுவும் செய்ய இயலாது. இது எவ்வளவு கொடுமை என்று எண்ணிப்பாருங்கள்.

மாவிலாறு கிராமத்தில் இரண்டு சகோதரிகள். முதற்கட்டப் போர் இங்குதான் தொடங்கியது. போர் தொடங்கியதும் உயிர் தப்பிக்க கிழக்கு நோக்கி ஓடுகிறார்கள். இரண்டு பேருக்கும் கையில் இரண்டு குழந்தைகள். போகும் வழியில் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி நான்கு பேரும் ஷெல் விழுந்து இறந்து போகிறார்கள். போர் துரத்திக்கொண்டே வருகிறது. தப்பித்து வடக்கு நோக்கி ஓடுகிறார்கள். அங்கே இரண்டு பேரின் கணவன்மார்களும் இறந்து போகிறார்கள். திரும்பவும் ஊருக்கு வந்தால், ஊர் மொத்தமாக அழிந்துவிட்டது. இப்போது இரு குழந்தைகளோடு இருவரும் அகதிகளாக இருக்கிறார்கள்.

`கணவன் இருக்கிறாரா? இறந்துவிட்டாரா?' என்று தெரியாமலே நிறைய பெண்கள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். `உன் கணவனைக் காட்டுகிறேன்' என்று சொல்லி, காசு பறிப்பவர்கள் ஊருக்கு ஊர் சுற்றுகிறார்கள். ஒரு பெண்ணாக இது என் உயிரை உலுக்குகிறது. அந்த வேதனை சாதாரணமானதில்லை. 2010-ல் ஆரம்பித்து ஆறு வருடங்கள் அந்தத் துயரத்தைக் காட்சிகளாகப் பதிவு செய்தோம். இதற்கெனவே, உறவினர்களைப் பார்க்கப்போவது போல இலங்கை சென்றோம்.

போரால் உடல் உறுப்புகளை இழந்த போராளிகள், சாதாரண மனிதர்களின் நிலை இன்னும் மோசம். இவர்களுக்கெல்லாம் இனி என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்துத்தான் நாங்கள் ஆவணப்படங்களாக்கி வெளியில் கொண்டு வந்தோம்.

அந்தப் பெண்களுக்கு அது நேர்ந்தது, இது நேர்ந்தது என்று தோண்டித் துருவி மேலும் மேலும் அவர்களைத் துன்புறுத்துவதைவிட, குறைந்தபட்சம் ஒரு கவுன்சலிங்காவது கொடுக்கலாமே? ஒவ்வொருவருடைய பிரச்னையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. தனித்தனியாக ஆய்வுசெய்து அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய வேண்டும். 

இந்தச் சூழலைப் பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள். பண்பாடு மாற்றப்படுகிறது. இதையெல்லாம் ஆவணப்படுத்தி, நிறைய நிர்பந்தங்களுக்கு மத்தியில் லண்டன் ஐபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பினோம். அவை மிகுந்த அதிர்வையும் நெகிழ்ச்சியையும் உருவாக்கின. பாதிக்கப்பட்ட முள்ளந்தண்டு போராளிகள் பற்றிய `உயிரிழை' படத்தைப் பார்த்து நிறைய அமைப்புகள் அவர்களைத் தத்தெடுத்து, போதிய உதவிகளைச் செய்திருக்கிறார்கள். ஆவணத் தயாரிப்பாளராக மிகுந்த மனநிறைவை அளித்த தருணம் அது.” என்கிறார் பரமேஸ்வரி.