Published:Updated:

உணவைக் கொண்டாடுவோம்!

உணவைக் கொண்டாடுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
உணவைக் கொண்டாடுவோம்!

அவள் விகடன் கிச்சன் டெலிசியஸ் மு.பார்த்தசாரதி, படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன், பா.காளிமுத்து

`கணவன் மனைவி இருவரும் அரக்கப்பரக்க வேலைக்கு ஓடும் இந்தக் காலத்துல ரசிச்சு சமைச்சு, ருசிச்சு சாப்பிடுறதெல்லாம் நடக்கற காரியமா?’ என்கிற ஆதங்கம் பலருக்கும் உண்டு. ஆனால், ``இதெல்லாம் நடக்குற காரியம்தான். உங்க நேரத்துக்குத் தகுந்தபடி உங்க கைப்பக்குவத்துல வீட்டுல உள்ளவங்களுக்குச் சமைத்துப் பரிமாறி அசத்த முடியும்” - உறுதிபடச் சொல்கிறார்கள் `அவள் விகடன் கிச்சன்' உணவுத் திருவிழாவில் அசத்திய சமையல்கலை நிபுணர்கள்.

`அவள் விகடன் கிச்சன்' வழங்கிய டெலிசியஸ் குக்கரி வொர்க் ஷாப் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் (Venue Partner) நடந்தது. பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்த சமையல்கலை நிபுணர்கள் `மெனுராணி’ செல்லம், ரேவதி சண்முகம், சந்திரலேகா ராமமூர்த்தி ஆகிய மூவரும் ஆரோக்கியம் நிறைந்த ருசியான உணவுகளை விரைவாக எப்படி தயார் செய்யலாம் என்கிற சிறப்புப் பயிற்சியைக் கொடுத்தார்கள்.

உணவைக் கொண்டாடுவோம்!

“முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருந்தார்கள். ஒருவர் பத்து பேருக்குச் சமைக்க வேண்டும். ஆனாலும், அவர்களால் எளிதாகச் சமைக்க முடிந்திருக்கிறது. காரணம், அன்போடும் அக்கறையோடும் அவர்கள் சமைப்பார்கள். ரசித்து சமைத்தால், ஒருவரால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் எளிதாகச் சமைத்துவிட முடியும். சமைப்பதைப்போலவே, அதை பரிமாறும்போதும் ஆசையாகப் பரிமாற வேண்டும். அப்படிச் செய்வதால், சாப்பிடுபவருக்கு மன நிறைவும் ஆரோக்கியமும் கிடைக்கும்” என்று சொன்ன `மெனுராணி’ செல்லம் வந்திருந்தவர்களுக்கு ஸ்டஃப்டு பனீர் புல்கா செய்து காட்டினார்.

“ஒருவரின் பசியைப் போக்குவதென்பது மிகப்பெரிய புண்ணியம். இந்த நிகழ்ச்சியில் நான் சமைத்த உணவை ஒரே நேரத்தில் இத்தனை பேர் சுவைத்துப் பார்க்கப் போகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நம் முன்னோர் உணவைக் கொண்டாடினார்கள். இப்போதோ கிடைக்கும் உணவைச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நாம் வயிறார சாப்பிடுவதற்காகத்தானே உழைக்கிறோம். ஆகவே, நல்லா வேலை பாருங்க. அதே நேரத்துல வயிறார சாப்பிடுங்க” என்றார் ரேவதி சண்முகம் அக்கறையுடன்.

“இப்போதுள்ள தலைமுறையினர் வேலைக்குப்போகும் அவசரத்தில், ரெடிமேட் உணவுப் பொருள்களைக்கொண்டு எதையாவது தயார் செய்து சாப்பிடுகிறார்கள். தானிய வகைகளைப் பலரும் மறந்தேவிட்டார்கள். இங்கு வந்திருப்பவர்களுக்கு முளைகட்டிய தானியங்களைக்கொண்டு ஈஸியாக சாட் பண்ணுவது பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறேன்” என்றார் சந்திரலேகா.

நடைபாதையில் இட்லி வியாபாரம் ஆரம்பித்து இன்று கோடீஸ்வரராக உயர்ந்திருக்கும் இனியவன், “இட்லி என்றாலே நம் பிள்ளைகள் முகம் சுளிக்கின்றனர். இட்லியில் ஏதேனும் புதுமையைக் கொண்டுவர முடியுமா என்று யோசித்தேன். அப்படித்தான் இளநீர் இட்லி, சாக்லேட் இட்லி, தானிய இட்லி என்று பல வெரைட்டிகளில் இட்லி தயாரித்தேன். ஆரோக்கியமான உணவைப் பிள்ளைகளிடம் கொண்டுசேர்க்க வேண்டுமா? அதில் சில புதுமைகளைச் செய்து கொடுத்துப் பாருங்கள்” என்றவர், வாசகிகள் அனைவருக்கும் விதம்விதமான இட்லிகளைத் தயாரித்துப் பரிமாறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உணவைக் கொண்டாடுவோம்!

``தினமும் சாப்பிடும் இட்லியாக இருக்கட்டும், திருநெல்வேலி அல்வாவாக இருக்கட்டும்... நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவுக்குப் பின்னும் ஒரு வரலாறு பொதிந்திருக்கிறது’’ என்ற எழுத்தாளர் முகில், பார்வையாளர் முன்னே உணவு குறித்த ஐந்து கேள்விகளை முன்வைக்க, அனைவர் முகத்திலும் ஆர்வமும் பதிலுக்கான தேடலும் தொற்றிக்கொண்டன.

சமைத்த உணவைச் சாப்பிடுவதற்கு முன் சுடச்சுட புகைப்படம் எடுப்பதே இப்போது ட்ரெண்ட். சமைப்பதைப் போலவே உணவைப் புகைப்படம் எடுப்பதும் ஒரு கலையே. அதுபற்றிச் சுவையான புகைப்படங்களுடன் ருசியாக விளக்கினார் உணவுப் புகைப்படக் கலைஞர் ஸ்வாதி சேகரன். செஃப் உமாசங்கர், மாஸ்டர் யஷ்வந்த் ஆகியோர் காய்கறிகளில் கலைவண்ணம் படைக்கும் வெஜிடபிள் கார்விங் செய்துகாட்டி வியப்பூட்டினர்.

`அவள் விகடன் கிச்சன்' இதழின் சமையல் கலை நிபுணர்களான அன்னம் செந்தில்குமார், சசி மதன், சுதா செல்வகுமார், மீனா சுதிர், லட்சுமி வெங்கடேஷ், தீபா பாலசந்தர், லட்சுமி சீனிவாசன், ஹேமா, வடிவாம்பாள் ஆகியோர் புதுமையான ரெசிப்பிகளைச் செய்துகாட்டி பரிமாறினர். விழா முடிவில் வயிறும் மனமும் நிறைந்து, பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள் அவள் வாசகிகள்.