Published:Updated:

RJ கண்மணி அன்போடு... - தலைமை தாங்கலாம் வாங்க!

RJ கண்மணி அன்போடு... - தலைமை தாங்கலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
RJ கண்மணி அன்போடு... - தலைமை தாங்கலாம் வாங்க!

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

டகத்துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆர்.ஜே கண்மணி, அதே ஊடகத்துறையில் பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் சக பெண்களைக் கண்டு கலந்துரையாடுகிறார். வாருங்கள்... ஒவ்வொரு பெண்ணின் வெற்றி வரலாற்றையும் வாழ்க்கையையும் சற்றே அருகிலிருந்து பார்ப்போம்.

இந்த இதழில் பவித்ரா, எக்ஸிக்யூடிவ் புரொட்யூசர், பிக் எஃப்.எம்.

டீம் மேனேஜ்மென்ட் என்பது சாதாரண காரியம் இல்லையே... அதை எப்படி சக்சஸ்ஃபுல்லா செய்யறீங்க?

``எனக்குக் கொஞ்சம் அதிகமாவே பொறுமை உண்டு கண்மணி. கூடவே, எனக்கான இடத்தையும் மரியாதையையும் அன்பையும் என் டீமிடமிருந்து நான் பெற்றிருக்கிறேன். அவர்களோடு கலந்துரையாடி, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். பத்து வேலைகள் மேலிடத்திலிருந்து வருதுன்னா, அத்தனையையும் டீமுக்குக் கொண்டுசென்று, `ஏன் அதை நாம் செய்ய வேண்டும்' என்று விளக்கிச் சொல்லி ஏற்றுக்கொள்ளவைப்பது என் பொறுப்பு.''

RJ கண்மணி அன்போடு... - தலைமை தாங்கலாம் வாங்க!

நீங்களே ஒரு `ஆர்.ஜே'வாக இருந்திருக்கீங்க... அந்த அனுபவம் இப்போ உங்களுக்கு எப்படி உதவுகிறது?

``இப்போ ஒரு ரேடியோ லிங்க் 45 நொடிக்குள் பேச வேண்டும் என்று ஒரு ரூல் இருக்கிறதென்றால், அது எப்போது சாத்தியம், எப்போது தளர்த்த வேண்டும் என்று எனக்குத் தெரியும். அதிலுள்ள பிரச்னைகளை பிராக்டிகலாகப் புரிந்துகொள்ளவும் முடியும். கண்ணைக்கட்டிக்கிட்டு, `ரூல் படி செய்' என்று சொல்ல மாட்டேன்.  `ஆர்.ஜே'வும் நானும் ஒரே தளத்தில் இருக்கும்போது எல்லாம் நலமே!''

எக்ஸிக்யூடிவ் புரொட்யூசர் என்கிற உங்களது பணியின் அழுத்தத்தை மற்றவர்கள் புரிந்துகொள்ளாதபோது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

``சில நேரங்களில் சில முடிவுகளைச் செயல்படுத்தச் சொல்லும்போது, அதன் அவசியம், தர்ம நியாயங்களை எடுத்துச்சொல்லி வாதிட்டு ஒப்புக்கொள்ள வைக்கும் அளவுக்கு நேரம் இருக்காது. அது ஒரு மிகப்பெரிய பிரஷர்தான். இவர்கள் செய்யவில்லையென்றால், நான் மேலிடத்தில் காரணம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எனக்குள் வரும் கோபத்தையோ, எரிச்சலையோ, அழுத்தத்தையோ அலுவலகத்தில் யாரிடமும் காட்டமாட்டேன்.''

`அசிஸ்டென்ட் டைரக்டர் என்பவர்கள் தோற்றுப்போன நடிகர்கள்' என்று சொல்வார்களே... பின்னணி வேலையில் இருக்கிறவங்களுக்கும் இந்த ஒப்பிடு பொருந்துமா?

``நிச்சயமாக அப்படியில்லை.  மற்றவர்கள் திறமையை வெளிக்கொண்டு வருவது என்பதும் மிக முக்கியமான திறமை. அதனால், இயங்குபவர்கள் சாதித்தாலும் எங்களுக்குத்தான் பெருமை. அவர்கள் சொதப்பினாலும் எங்களுக்குத்தான் கெட்ட பெயர்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
RJ கண்மணி அன்போடு... - தலைமை தாங்கலாம் வாங்க!

நிகழ்ச்சியை நடத்துபவர், வழங்குபவரைவிட பலமடங்கு சுமைகளையும் பொறுப்புகளையும் தோளில் தாங்கி நிற்கும் உங்களுக்கு நிறைய புத்துணர்ச்சி தேவைப்படுமே... அதற்கு என்ன செய்றீங்க?

`` டென்ஷன், ஸ்ட்ரெஸ் என்பது இல்லாமல் இருக்காது. அதை எப்படி அணுகுவது என்பது தான் மெச்சூரிட்டி. எனக்குள் இருக்கிற துள்ளாட்டம் போடுற பவித்ராவை ஒருபோதும் இழக்க மாட்டேன். எனக்குச் சமையல் பிடிக்கும்; புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். முன்னெல்லாம் என்னால என் மூளையை அலுவலக விஷயங்களிலிருந்து ஆஃப் பண்ண முடியாமல் இருந்தது. இப்போ அதுல தேறிட்டேன். வயலின் வகுப்புல சேர்ந்திருக்கேன். நானும் என் கணவரும்  சேர்ந்து கிரிக்கெட், ஃபுட்பால், டென்னிஸ் பார்ப்பதால் அலுவலக டென்ஷனை மறக்கிறோம்.''

கடைசி லிங்க் சொல்வதோடு ரேடியோ நிகழ்ச்சி முடிந்துவிடும். உங்க வேலை எப்போ முடியும்?

``எப்போ ரேடியோ கேட்டாலும், சாதாரணமா சாய்ந்து உட்கார்ந்து கேட்கவே முடியாது; நேரம் சொன்னார்களா,  விளம்பர இடைவேளை வந்ததா, சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டார்களா... இப்படித்தான் இருக்கும் என் கவனம் எப்போதுமே...''

உங்களை எப்படி அப்டேட் செய்துகொள்கிறீர்கள்? அது மிகவும் அவசியமான ஒன்றுதானே?

``எப்போதோ படிச்ச படிப்பையே இன்னும் சொல்லிகிட்டு இருக்க முடியாது. அப்பப்போ தொழில் சார்ந்த திறமைகளால் நம்மை நாமே புதுப்பித்துக்கொண்டால்தான் உயர்நிலையை அடையமுடியும். என் துறை சார்ந்த விஷயங் களைக் கற்றுக்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவருடன் பேசும்போது எனது பேச்சின் கருத்தும் செறிவுமே எனக்கு நன்மதிப்பை அளிக்கும்.

போட்டிகள் நிறைந்த இந்த உலகில் என்னைத் தக்கவைத்துக்கொள்ள என்னை நானே புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.  யாரையும் நிரந்தரம் என்று சொல்லவே முடியாது. என்னைவிடப் பல வருடங்கள் குறைவான அனுபவம் இருப்பவர்கள் என்னுடைய நிலையை சற்றுச் சீக்கிரமாகவே அடைந்துவிட முடியும். அதனால், கற்றல் என்பதில் அதிக நம்பிக்கையுடைய நான், அதை எப்போதும் செய்துகொண்டே இருப்பேன். சமீபத்தில்தான் மைக்கா கல்வி நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்து முடித்தேன்.''

இன்னும் 10 வருடங்கள் கழித்து பவித்ரா எங்கே இருப்பாங்க?

``சொல்லித்தருவதில் எனக்கு நிறைய விருப்பம். கம்யூனிட்டி ரேடியோ துறையில் பிஹெச்.டி செய்ய விருப்பம் உண்டு. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியிலும் என்னைக் காண விருப்பம் இருக்கு. டி.வி-யில் நிர்வாகப் பொறுப்பு நிலைக்குச் செல்ல விரும்புகிறேன்.''

அடிக்கடி உங்க இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்ல `டிராவலிங்'னு சில பதிவுகளைப் பார்க்கிறேன். அற்புதமா இருக்கே இந்த கான்செப்ட்... என்ன பின்னணி?

``எனக்கும் கணவருக்கும் பயணம் செல்வது ரொம்பப் பிடிக்கும் அதோடு, அலுவலக  தோழிகளோடு `மகளிர் மட்டும்'  டூர் செல்வேன். இன்னும் ஒருபடி மேலே போய்... தனியாக நான்கு வாரம் பயணம் செய்து வந்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. அது என்னுடைய அணுகுமுறையே மாற்றி அமைத்துவிட்டது. அறிமுகம் இல்லாதவர்களோடு பேசவே தயங்கும் என்னால், இப்போது யாரிடமும் கண் நோக்கிப் பேச முடியும். இந்த முன்னேற்றம் எனது வேலையிலும் வாழ்க்கையிலும் என்னை உயர்த்துகிறது. தனியாக மும்பை சென்று, லோக்கல் டிரான்ஸ்போர்ட்டைப் பயன்படுத்தி எனக்குத் தெரிந்த ஹிந்தியில் பேசி, திரும்ப வந்ததும் என் தன்னம்பிக்கையை மிகவும்  அதிகப்படுத்தியது.''

அலுவலக அரசியல், வதந்திகளை எப்படிச் சமாளிப்பது?

``உங்களைப் பற்றி வதந்தி  கிளப்பறவங்களோட நோக்கமே உங்களைக் கோபமூட்டறதுதான். ஒண்ணு, புறந்தள்ளுங்க... அல்லது நேரடியா கேட்டுடுங்க. வாழ்க்கையில மேலே போகப்போக இப்படி ஏதாவது, யாராவது பண்ணுவாங்க. சிரிச்சுட்டுப் போயிட்டே இருக்கணும். மூளைக்கோ இதயத்துக்கோ எடுத்துட்டுப் போகக்  கூடாது.''

ரேடியோ ஸ்டேஷனில் காதல் வருவது போல ஒரு டி.வி சீரியல் வருகிறதே... நிஜத்தில் அப்படி நடக்குமா?

``காதல் எங்கும் எப்போதும் பூக்கலாம். அது ஓர் உண்மையான உறவாக இருக்கும்பட்சத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. வேலையையோ, பேரையோ கெடுக்கும் விதமாக ஏதாவது நிகழும்போது வேலை இழத்தல், அவப்பெயர் எல்லாம் வர வாய்ப்புண்டு. யாரையாவது பிடித்துப்போய்விட்டால், அதை அடுத்த நிலைக்குக்கொண்டுசென்று, திருமணமாக முழுமை யடையச் செய்வதுதான் நல்லது. அப்படி இல்லைன்னா, அதிகம் பாதிக்கப்படறது பெண்ணோட பெயர்தான்.''

ஒரு `டீம் ஹெட்'டாக இருப்பதற்குத் தேவையான பண்புகள் என்னென்ன, பவித்ரா?

``* அசாத்திய பொறுமை

* ஒவ்வொருவரையும் புரிந்துகொள்கிற சக்தி

* எளிதில் அணுகக்கூடியவராக இருத்தல்

* வளைந்துகொடுக்கும் தன்மை

* தொழில் சார்ந்த முழுமையான அறிவு

* அனைவரையும் ஒரே நிலையில் நடத்துதல்

* நல்ல நட்போடு இருப்பது...''

அலுவலக மீட்டிங்கில் ஏற்படும் மனவருத்தங்களை எப்படிச் சமாளிப்பது?

``மன்னிப்போம்... அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு மற்றதை மறப்போம்... ஹாஹாஹா!''

பவித்ரா, உங்கள் ஜூனியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முன்னுதாரணமாகச் செயல்படுகிறீர்கள். இவ்வளவு ஸ்ட்ரெஸ், பிரஷர் உள்ள மேலதிகாரி நிலையில் உள்ள ஆணாக இருந்தால், இந்நேரம் வழுக்கை, தொப்பை எல்லாம் ஏற்பட்டிருக்கும். நீங்க இத்தனை நீள முடியோட... ஒல்லியா, அழகா இருக்கீங்களே... எப்படி?

``என்னோட நீள முடிமேல் உங்களுக்கு இத்தனை கண்ணா, கண்மணி! நான் காலை உணவைச் சாப்பிட்டால்தான், கணவர் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வார். நேரத்துக்குச் சாப்பிடுவதற்குப் பழகுகிறேன். தண்ணீர் அதிகம் குடிக்கிறேன். என்  ஆரோக்கியத்துக்கு நேரம் கொடுக்கிறேன்... அவ்ளோதான்!''

எக்ஸிக்யூடிவ் புரொட்யூசர் ஆவது எப்படி?

*  மீடியா சம்பந்தப்பட்ட படிப்புடன் management studies கற்றிருப்பது நலம் பயக்கும்.

*  இந்த நிலைக்குப் படிப்படியேதான் உயர முடியும்.

*  உங்களது அனுபவம் மற்றும் நிர்வாகத்திறமை appraisals மூலம் அளவிடப்பட்டு, உயரதிகாரிகளின் மதிப்பீடுகளோடு, குழு மனப்பான்மையைக் கணக்கில்கொண்டு அடையப்படவேண்டிய ஓர் இடம் இது.