Published:Updated:

‘வலிகளால் பெற்றேன் வலிமையை!’

‘வலிகளால் பெற்றேன் வலிமையை!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘வலிகளால் பெற்றேன் வலிமையை!’

என் உலகம் என் குழந்தைகள் வே.கிருஷ்ணவேணி , படம்: தே.அசோக்குமார்

தாய்மை அடைந்த ஒவ்வொரு பெண்ணுக்குமே பிரசவக் கதை இருக்கலாம். அதைப் பகிரும்போதுதான், பெண்மையின்  வலியையும் வலிமையையும் இன்னும் அழுத்தமாக உணர்த்த முடியும். `ஜி தமிழ்' சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீஸன் 2’ நிகழ்ச்சியில் நடுவராக இருந்துவரும் நடிகை ரோஜா, அந்நிகழ்ச்சியின் ஓர் எபிசோடில் தனது இரண்டாவது பிரசவத்தின் வேதனைகளைப் பகிர்ந்திருந்தார். 

``1992-ம் ஆண்டு ‘செம்பருத்தி’ படம் மூலமா சினிமாவில் அறிமுகமானேன். இயக்குநர் செல்வமணியும் நானும் பல வருடங்கள் காதலிச்சு, 2002-ல் திருமணம் செய்துகிட்டோம். திருமண வாழ்க்கை அழகா ஆரம்பிச்சாலும், எனக்கு ஃபைப்ராய்டு கட்டி இருந்ததால, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதோ என்ற பயம் வாட்டியது. குடும்ப மருத்துவர்  என்னைப் பரிசோதித்து, `உன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்'னு நம்பிக்கை கொடுத்தார். அதேபோல சில மாதங்களில் கர்ப்பமானேன். என் சினிமா வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும் நான் பெற்ற பாராட்டுகள், விருதுகள் எல்லாவற்றையும்விட என் தாய்மை உறுதியான அந்த நாள்தான் என்றும் மறக்க முடியாதது.

‘வலிகளால் பெற்றேன் வலிமையை!’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நாளையும் இப்போ நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கும். அப்போ நான் அரசியலில் இல்லை. ஆனா,  ஷூட்டிங்குகளில் பிஸியா இருந்தேன். பிரசவத்துக்கு முதல் நாள் வரை, நிறைமாத கர்ப்பிணியா ‘கிருஷ்ணவேணி’ தெலுங்கு சீரியலில் நடிச்சேன். மறுநாள் அறுவைசிகிச்சை மூலமா என் பொண்ணு அனுஷூ மாலிகா பிறந்தா. குட்டிக் குட்டி கை கால், மூக்கு வாய்னு அந்த உயிரைப் பார்த்தப்போ, ஏதோ சாதிச்ச மாதிரி இருந்தது. என் கணவருக்கு ஆனந்தக் கண்ணீர். இப்படி, எல்லாப் பெண்களுக்குமான முதல் பிரசவம் போலவே, எனக்கும் ஆனந்த அவஸ்தைகளோட நல்லபடியா முடிஞ்சது.

இரண்டாவது முறை கருவுற்றப்போ, அந்தக் கர்ப்ப காலம் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அது 2006-ம் வருஷம், நான் அரசியல்ல தீவிரமா இருந்த காலகட்டம். நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேலைகளுக்கு இரவு பகல் பார்க்காம  உழைக்க வேண்டியிருந்தது. ஆந்திர மக்கள் பிரச்னைகளுக்காக, சந்திரபாபு நாயுடு தலைமையில் பல்வேறு தர்ணா போராட்டங்களில் பங்கேற்க வேண்டியிருந்தது. வெயில்ல, நடுரோட்டுல உட்கார்ந்து போராடிட்டு இருந்தேன். அந்த வெப்பம், அலைச்சல் ஏத்துக்காததாலோ என்னவோ, ஆறாவது மாசம் உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பிச்சது. உடனடியா அட்மிட் ஆகி, ரெண்டு மாசம் ஹாஸ்பிடல்லயே  இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. ரெண்டு மாசமும் உதிரப்போக்கு தொடர்ந்துட்டேதான் இருந்தது. படுத்த நிலையில் இருந்து எழுந்தாலே உதிரம் வெளியேறும்னு...பெரிய அவஸ்தை! பல் துலக்குறதுல இருந்து எல்லாமே படுக்கையிலேயேதான். முதுகில் படுக்கைப்புண் வர்ற அளவுக்கு ஆகிடுச்சு.  அதிலும் பாதங்கள் உயர்த்தியே இருக்கிற மாதிரி கால்களுக்கு அடியில் தலையணைகள் போட்டுதான் படுத்திருப்பேன். ‘எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, என் குழந்தையை உயிரோடு இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தா போதும்’னு ஒவ்வொரு மூச்சிலும் கடவுள்கிட்ட வேண்டியபடியே இருப்பேன். ஏழாவது மாசத்துல, குறைமாதக் குழந்தையா என் பையன் கிருஷ்ண கௌசிக் பிறந்தான். அவனைக் காப்பாத்துறது அடுத்த தவம்.

ஒருவழியா அந்தச் சின்ன உயிரை தேத்திட்டு இருக்கும்போதே, அத்தியாவசிய கட்சிப்பணிகளுக்காக   சந்திரபாபு நாயுடு என்னை வரச் சொல்லிட்டார். களம் வேற வேறயா இருந்தாலும், பணிக்குச் செல்லும் அம்மாக்களோட அந்த அவஸ்தைதான் எனக்கும். பச்சைக் குழந்தையைத் தூக்கிட்டு, அண்ணியைத் துணைக்கு அழைச்சுட்டு, காரில் சுற்றுப்பயணம் போனேன். குறை பிரசவக் குழந்தை என்பதால எளிதா தொற்று ஏற்படும்னு ரெண்டு மடங்கு கவனமா இருப்பேன். தாய்ப்பால்தான் ஆகாரம். அதனால, ஆரோக்கியமும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கொடுத்து தொற்றைத் தவிர்க்க முடிஞ்சது. ஒரு கட்டத்துக்கு மேல, அரசியலுக்கு லீவு விட்டுட்டு முழு நேர அம்மாவாகிட்டேன்.

குழந்தையைப் பார்த்துக்க ஆள் வைக்கிறது செல்வமணிக்குப் பிடிக்காத விஷயம். இப்போ வரை, நாங்க ரெண்டு பேரும்தான் எங்க பிள்ளைங்களை மாறிமாறிப் பார்த்துக்கறோம். செல்வாவுக்கு அஞ்சு குழந்தைங்க பெத்துக்கணும்னு ஆசை. ஆனா, ரெண்டாவது குழந்தைக்கு நான் பட்ட அவஸ்தைகளைப் பார்த்துட்டு, இந்த ரெண்டே போதும்னு கண்ணீர் வடிச்சுட்டார். என் பையன் கிருஷ்ண கெளசிக்குக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச பிறகு அடிக்கடி என் வயிற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து, ‘அம்மா நான் இங்கிருந்துதானே வந்தேன்? உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல?’னு கேட்பான். எனக்குக் கண் கலங்கிடும்’’ என்கிற ரோஜாவுக்கு அந்தத் துளிகள் இப்போதும் கண்களில் மினுங்குகின்றன.

``நான் உலகமே சுற்றி வந்தாலும், என் உலகம் இந்தக் குழந்தைகள்தான்!’’

- ரோஜாவின் புன்னகையில் தாய்மையின் நிறைவு!