Published:Updated:

மழைச்சாரல் வந்து இசை பாடினால்..!

மழைச்சாரல் வந்து இசை பாடினால்..!
பிரீமியம் ஸ்டோரி
News
மழைச்சாரல் வந்து இசை பாடினால்..!

கு.ஆனந்தராஜ்

`உன் மேல ஒரு கண்ணு... நான்தான் உன் முறைப் பொண்ணு...’

`ரஜினிமுருகன்' திரைப்படத்தின் இந்த ஹிட் பாடலுக்குச் சொந்தக்காரர் இவர்தான்!

"இந்தி உள்பட கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருந்தாலும், மும்பையில் வசிச்சாலும், தமிழ்ப்பொண்ணு, தமிழ்ப் பாடகி என்கிற அடையாளங்களைத்தான் எப்பவும் என் மனசு விரும்பும்!’’ - உள்ளம் குளிர்ந்து பேச ஆரம்பிக்கிறார் பிரபல பின்னணிப் பாடகி மஹாலட்சுமி ஐயர்.

“அப்பா கிருஷ்ணமூர்த்தி தஞ்சாவூர்க்காரர். அம்மா விஜயலட்சுமிக்குச் சென்னை பூர்வீகம். கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வருஷம் சென்னையில வசிச்ச என் பெற்றோர், அடுத்து மும்பையில செட்டில் ஆகிட்டாங்க. அம்மாவுக்குப் பாடகியாக ஆசை. ஆனா, தாத்தா அனுமதிக்கலை. அதனால தன்னோட நாலு பொண்ணுங்களுக்கும் இசையைக் கத்துக்கொடுத்தாங்க. ‘என்னோட ஆசைதான் நிறைவேறலை. உங்களுக்கு விருப்பமிருந்தால், எந்தத் துறையில வேணும்னாலும் கலக்குங்க’னு அம்மா சொன்னார். நாங்க மியூசிக்கையே விரும்பினோம். அதனால எங்களை, இந்துஸ்தானி மியூசிக் கத்துக்க அனுப்பினாங்க.

பி.காம் முடிச்ச நேரத்துல விளம்பரப் படங்கள் மற்றும் டெலிவிஷன் சீரியல்களில் இன்ட்ரோ சாங்ஸ் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன. அப்படியே ஆறு வருஷங்கள் கடந்த நிலையில், 1997-ம் வருஷம் சங்கர்-இஷான்-லாய் மியூசிக்ல ‘டஸ்’ (Dus) இந்திப் படத்துல பின்னணி பாடும் வாய்ப்பு கிடைச்சது. அதே வாரத்துலயே ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்ல ‘தில் சே’ (Dil Se) படத்தில் பாடினேன்.

மழைச்சாரல் வந்து இசை பாடினால்..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1998-ல் மும்பையில் நடைபெற்ற இளையராஜா சார் இசை நிகழ்ச்சியில் நான் உட்பட அஞ்சு பாடகிகள் பாடினோம். சில மாதங்களில் ராஜா சார்கிட்ட இருந்து சென்னைக்கு வரச்சொல்லி அழைப்பு வந்தது. ‘என்னை ஞாபகம் இருக்கா சார்... மும்பை நிகழ்ச்சியில பாடினேனே’னு அவர்கிட்ட தயங்கியபடி கேட்க, ‘அந்த நிகழ்ச்சியில உன்னை கவனிச்சதாலதானே இன்னிக்குக் கூப்பிட்டிருக்கேன்’னு சொன்னார். அவர் இசையில் பாடிய ‘மீட்டாத ஒரு வீணை’தான் (பூந்தோட்டம்) தமிழ்ல என்னோட முதல் பாடல்’’ என்பவரின் ஹிட் லிஸ்ட் நம்மை அசர வைக்கிறது.

குறுக்கு சிறுத்தவளே (முதல்வன்) வெள்ளி மலரே வெள்ளி மலரே (ஜோடி), யாரோ யாரோடி (அலைபாயுதே), கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்), எனக்கொரு சிநேகிதி (பிரியமானவளே), சிரி சிரி (ஆளவந்தான்), மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே (வேதம்), ஓஹோ சனம் (தசாவதாரம்), ஒரு வானம் (திருநாள்)...  இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்தியில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருப்பதுடன் தென்னிந்திய மொழிகள், பெங்காலி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி, அஸாமி என இந்திய மொழிகள் பலவற்றிலும் இதுவரை ஐந்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

``எந்த மொழிப் பாடல் பாடினாலும், அந்த மொழிப் பொண்ணு மாதிரியே பாடுறேன்னு பலரும் பாராட்டும்விதமா அர்ப்பணிப்போட வேலை செய்றதை என்னோட பலமா நினைக்கிறேன். சினிமா, ஆல்பம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கச்சேரிகள்னு பிஸியா பயணம் செஞ்சுகிட்டு இருக்கேன். நிறைய சவால்கள், பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கேன். அதையெல்லாம் அப்பப்போ கடந்து வந்துடுறதாலதான்
20 வருஷமா வெற்றிகரமா ஃபீல்டுல இருக்கேன்’’ என்னும் மஹாலட்சுமி,  தன் பெர்சனல் பேசும்போது, அவர் குரலில் சிறிய மாற்றம்...

“26 வயசுல சினிமாவுல பாட ஆரம்பிச்சேன். அடுத்தடுத்து நான் பெற்ற வெற்றி மூலமாக என் பெற்றோருக்கு பூரிப்பையும் பெருமையையும் நிறைவையும் கொடுத்தேன். இடைப்பட்ட காலத்தில் என் மூணு அக்காக்களுக்கும் திருமணம். வீட்டில் அடிக்கடி எனக்கும் திருமணப் பேச்சு எழும். அப்போ நான் கச்சேரி, ரெக்கார்டிங்னு ஓடிட்டே இருந்ததால, அந்தப் பேச்சு பேச்சாவே முடிஞ்சுடும்.

13 வருஷத்துக்கு முன்னாடி அப்பாவும், அடுத்த அஞ்சு வருஷத்துல அம்மாவும் இறந்துட்டாங்க. ஒரு அக்கா ஃபாரின்ல இருக்காங்க. நானும், மற்ற ரெண்டு சிஸ்டர்ஸும் மும்பையில அருகருகேதான் வசிக்கிறோம். பெற்றோர் இல்லாத குறை தெரியாம, என்னைக் குழந்தையைப் போல அன்பாகப் பார்த்துக்கிற அக்காக்கள், ‘கல்யாணம் பண்ணிக்கோ’னு அடிக்கடி சொல்வாங்க. ஆனா, என்ன காரணம்னு சொல்லத் தெரியலை. அந்தத் திருமண நிகழ்வு இதுவரை என் வாழ்க்கையில் நடக்கலை. இதெல்லாம் விதியின் விளையாட்டுன்னு உறுதியா நம்புறேன். அதனால என்ன நடந்தாலும், வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளத் தயார். ஒருவேளை, நாளைக்கே எனக்குக் கல்யாணமாகி, புது வாழ்க்கைக்குத் திரும்பினாலும் அதையும் மகிழ்ச்சியோடு ஏத்துப்பேன்...” என்று கண் சிமிட்டிச் சிரிக்கிறார்.
 
“ஒரு வருத்தம் இருக்கு. மும்பையில வளர்ந்தாலும், என்னோட சின்ன வயசுல சென்னையில இருக்கிற உறவினர்களைப் பார்க்க அடிக்கடி இங்க வருவோம். ஊர் சுத்துவோம். இப்போ எல்லா உறவுகளும் மும்பைக்கே வந்து செட்டில் ஆகிட்டதால, ரெக்கார்டிங், கச்சேரின்னா மட்டும்தான் சென்னைக்கு வர்ற சூழல். சென்னைக்கும் நமக்குமான பந்தம் மெலிதாகுதோனு நினைக்கும்போது கஷ்டமா இருக்கும். இப்போ இமான் சார் மற்றும் ஓர்  இளம் இசையமைப்பாளர் மியூசிக்ல தமிழ்ல பாடியிருக்கேன். ஒரு சில மாதங்களில் அந்தப் பாடல்கள் தமிழ் ரசிகர்களை ஹம் பண்ண வைக்கும்’’ என்று புன்னகைத்தவர், ``நான் பாடினதில் அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்ச இந்தப் பாடலோட `பை' சொல்லிக்குவோமா..?’’ என்று கேட்டுவிட்டுப் பாடுகிறார்...

``மலைக்காற்று வந்து தமிழ் பேசினால்
மழைச்சாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்!’’