Published:Updated:

யாரிந்த ஓவியத் தாரகை?

யாரிந்த ஓவியத் தாரகை?
பிரீமியம் ஸ்டோரி
News
யாரிந்த ஓவியத் தாரகை?

பிக் பாஸ் ஹீரோயின் ஆர்.சரண்

மிழ்கூறு நல்லுலகமே உச்சரிக்கும் மந்திர வார்த்தை... பிக் பாஸ்! அதிலும், நடிகை ஓவியாவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இன்றைய தேதியில் சமூக வலைதளங்களில் ஓவியாவைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். காரணம், பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் காட்டிவரும் ஒளிவுமறைவற்ற... மனதில் பட்டதைப் ‘படார்’ எனப் பேசிவிடும் இயல்புதான். புன்னகையோ கண்ணீரோ, கோபமோ தாபமோ... டக்டக்கென உண்மை முகத்தைக்காட்டி பலரை வசீகரித்துள்ளார் ஓவியா. ‘ஓவியா ஆர்மி’, ‘ஓவியாலஜி’ என ஆண்களையும் தாண்டி பெண்களும்கூடக் கொண்டாடும் `பிக் பாஸ்’ ஓவியா, நிஜத்தில் யார்? யாரிந்த ஓவியத் தாரகை?

ஓவியாவின் இயற்பெயர் ஹெலன். மலையாள தேசத்து தேவதை. திருச்சூரில் பிறந்தவருக்கு சிறுவயதில் மலையாள சினிமாவின் எவர்கிரீன் பேரழகி மஞ்சு வாரியர் என்றால் கொள்ளை இஷ்டம். காரணம், மஞ்சு வாரியரும் திருச்சூர் தேவதைதான். அவரைப்போல ஆக வேண்டும் என்றெல்லாம் கனவுகண்டது கிடையாது. ஆனால், மஞ்சுவின் துறுதுறு நடிப்பை இந்தக் குட்டிப்பெண் பள்ளியில் இமிடேட் செய்து கைதட்டல் வாங்குவாராம். வீட்டிலும் சொந்தக்காரர்கள் மத்தியிலும்கூட ஓவியா அப்படித்தான். ஆனால், ‘மஞ்சு போல நடிச்சுக் காட்டு!’ என்று சொன்னால் மட்டும் `முடியாது’ என மறுத்துவிடுவாராம். அவருக்கே மனதில் தோன்றி நடித்தால்தான் உண்டு. 

யாரிந்த ஓவியத் தாரகை?

துறுதுறுவென இருக்கும் ஓவியாவை அவ்வளவு எளிதில் ஏமாற்றி வேலை வாங்கிவிட முடியாது என்கிறார்கள் அவர் பெற்றோர். லோக்கல் டி.வி சேனலில் காம்பியரிங், மாடல் என வளர்ந்தவர் ‘கங்காரு’ என்ற மலையாள சினிமாமூலம் பெரிய திரைக்குள் ‘விளையாட்டாக’ கால் பதித்தார்.சொல்லிக்கொள்ளும்படியான ரோல் அந்தப் படத்தில் இல்லை என்பது பிரச்னை இல்லை. அடுத்தடுத்து வந்த படங்களும் ‘வீட்டுல யாரும் இல்லையே’ என மொத்தப் படத்துக்கும் ஒற்றை டயலாக் பேசும் வகையான குட்டிக்குட்டி ரோல்கள்தான்!

வேறொரு பெண்ணாக இருந்தால் ‘சீச்சி இந்தப் பழம் புளிக்கும்’ என சினிமாவை ஏறக்கட்டி ஓரங்கட்டியிருப்பார்கள். ஓவியாவோ, மாடலிங் செய்வதற்காக போர்ட்ஃபோலியோ ஆல்பங்கள் ரெடி செய்து சென்னை வரை வாய்ப்பு தேடியிருக்கிறார். 2007-ல் சற்குணம் கண்ணில் அந்த ஆல்பங்கள் அகப்பட, கிடைத்ததுதான் ‘களவாணி’ பட வாய்ப்பு. உண்மையில் `களவாணி’ ஓவியாதான்.  முதல் படமே தமிழ் தாண்டி, தெலுங்கிலும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டபோது, ஹீரோவில் ஆரம்பித்து லைட்மேன் வரை ஒட்டுமொத்தமாக எல்லோரும் மாறிப்போய் இருந்தாலும், ஹீரோயின் ரோல் மட்டும் மாறாமல் இவருக்கே கிடைத்தது. அந்த அளவுக்கு எல்லைகள் தாண்டி, களவாடியிருந்தார் இதயங்களை!

முதல் படமே ஹிட்டடித்தால் தலைகால் புரியாமல் ஆடும் இந்த சினிமா உலகில், அடுத்தடுத்து சுமாரான படங்களில்தான் ஓவியா நடித்தார். காரணம், சினிமாவின் நெளிவுசுளிவுகள் இவருக்குத் தெரிய வில்லை. அதற்காக இவர் அலட்டிக்கொள்ளவும் இல்லை.மொத்தத்தில், ‘மெரினா’, ‘மதயானைக்கூட்டம்’, ‘கலகலப்பு’ எனச் சில படங்கள் மட்டுமே ஓவியாவை நன்கு அடையாளப்படுத்தின. கமலின் `மன்மதன் அம்பு' படத்திலும் ஓவியா தலைகாட்டியிருக்கிறார் என்பது உபரித் தகவல்.

ஒரே படத்தில் பெயர் வாங்கிய ‘களவாணி’ ஓவியா, இப்போது ‘பிக் பாஸ்’ ஓவியாவாக ஒரே நிகழ்ச்சியின்மூலம் தமிழ்க் குடும்பங்களின் அன்புப் பெண்ணாக மாறி நிற்கிறார். கோடிகளில் ‘ஓட்டு’ போட்டு அவரைத் தொடர்ந்து வீட்டில் தங்கவைக்க பார்வையாளர்கள் ஆர்வம் காட்டியிருப்பதன் மூலம் அவரின் செல்வாக்கை அறியலாம்.  நாளைக்கே பிக் பாஸ் வீட்டிலிருந்து அவரது இயல்பான குணத்தைக் காரணம் காட்டி, காயப்படுத்தி வெளியேற்றிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், இன்னும் எத்தனை பிக் பாஸ் சீசன்கள் வந்தாலும், ஓவியாதான் டக்கென நம் எல்லோரின் மனக்கண்முன் வந்து போவார் என்பது மட்டும் நிஜம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz