Published:Updated:

யாரிந்த பொக்கிஷ மங்கை?

யாரிந்த பொக்கிஷ மங்கை?
பிரீமியம் ஸ்டோரி
News
யாரிந்த பொக்கிஷ மங்கை?

பிக் பாஸ் ஹீரோயின்ஆர்.சரண்

`ஆவக்காய் பிரியாணி’ - சொல்லும்போதே ஊறுகாய் + பிரியாணி என வித்தியாச காம்பினேஷனாக இருக்கிறதா? ‘பிக் பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் ‘வைல்டு கார்ட் ரவுண்ட்’ மூலம் என்ட்ரி கொடுத்திருக்கும் பிந்து மாதவியின் வருகையும் அப்படித்தான்  இருக்கிறது. ‘ஆவக்காய் பிரியாணி’ படம்தான் பிந்து மாதவி அறிமுகமான முதல் தெலுங்கு படம். ‘பயோ டெக்னாலஜி’ படிப்பில் மெடல்கள் பல வாங்கியவர், சினிமா உலகுக்குள் வந்தது சுவாரஸ்யமான கதை.

ஆந்திராவில் பிறந்தாலும் சென்னையில் வளர்ந்தவர் பிந்து. பிந்துவின் சிறுவயதில் அப்பா வருமான வரித்துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர் என்பதால், பல ஊர்களில் ஜாகை. வடக்கே தெற்கே என மாறிமாறிப் பயணம் செய்ததில், மாடலிங்மீது இயல்பாக ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது பிந்துவுக்கு. வேலூரில் கல்லூரி நாள்களில் தமிழ்ப் பசங்க எல்லோரும் ‘சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கேப்பா!’ என ஏற்றிவிட, நடிப்பின்மீது ஆர்வம் லேசாக எட்டிப் பார்த்திருக்கிறது. குடும்பமே படிப்பாளி குடும்பம் என்பதால், சினிமா என்பதையே கெட்ட வார்த்தையாகத்தான் நினைத்தார்கள். அதனால், ஆசைகளை மூடி வைத்திருக்கிறார். இந்நிலையில், உடன்பிறந்த ஒரே சகோதரனும் விபத்தொன்றில் இறந்துவிட, ஒட்டுமொத்த குடும்பமும் நொறுங்கிப் போயிருக்கிறது. எல்லோரின் எதிர்பார்ப்பும் பிந்துவின்மீது இயல்பாக விழுந்துவிட்டது. சென்னையின் பிரபல நிறுவனத்தில் உயர்்ந்த பொறுப்பும் பிந்துவுக்குக் கிடைத்துவிட... கவலை மறந்து ஒட்டுமொத்தக் குடும்பமே சந்தோஷத்தில் திளைத்திருக்கிறது.

யாரிந்த பொக்கிஷ மங்கை?

லட்சங்களில் சம்பளம்... வசதியான வாழ்க்கை என்று போய்க்கொண்டிருந்தாலும் பிந்துவுக்கு சினிமா உலகுக்குள் நுழைய ஆசை. அப்பாவை மிகவும் கன்வின்ஸ் செய்து மாடலிங் செய்துகொள்ள மட்டும் அனுமதி வாங்கியிருக்கிறார். போட்டோகிராபர் ஒருவரின் மூலம் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வர, அதன் தொடர்ச்சியாகச் சில விளம்பரப்படங்கள் வாய்ப்பும், டோலிவுட் சினிமாவில் ‘ஆவக்காய் பிரியாணி’ வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. விளம்பரங்களுக்கு மட்டும் ஓகே சொன்ன `ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்’ அப்பா, சினிமாவுக்கு  உறுதியாக `நோ’ சொல்லியிருக்கிறார். ‘மத்திய அரசின் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பதவிக்குத் தேர்வு எழுதப் போகிறேன்’ எனப் பொய் சொல்லி, ஹைதராபாத்தில் லேண்ட் ஆகியிருக்கிறார் பிந்து. படத்துக்கான ஆடிஷன் முடிந்து திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எப்படியோ விஷயம் தெரிந்துவிட, அப்பாவிடம் செம டோஸ். கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வரை பேசாமல் இருந்திருக்கிறார் பிந்துவின் அப்பா. இவரும் பதிலுக்குப் பிடிவாதம் பிடித்து, `சினிமாவில் நடித்தே தீருவேன்’ என வீட்டுக்குள் போர்க்கொடி தூக்க, வேறுவழி இல்லாமல் ‘கொஞ்சநாள் நடி... அப்புறம் வேலைக்குப் போ’ என அனுமதித்திருக்கிறார் அப்பா.

மளமளவென நான்கைந்து தெலுங்கு படங்களில் ஆவரேஜ் ஹீரோயினாக நிலைத்தபோது, சேரனின் ‘பொக்கிஷம்’ வாய்ப்பின்மூலம் தமிழுக்கு என்ட்ரி ஆனார். ஒல்லியான உடல்வாகு, சில்க் ஸ்மிதா போன்ற கண்கள் என எல்லோரும் புகழ, ‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, `தேசிங்கு ராஜா’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ எனப் பேர் சொல்லும் படங்களில் நன்றாகவே நடித்திருந்தார். `நன்கு டான்ஸ் ஆடத் தெரிந்த, தெளிவாகத் தமிழ் பேசும் மூளைக்கார நடிகை’ என்று தமிழ் சினிமா உலகத்தில் இவருக்கு நல்ல பெயர் உண்டு. அதனாலேயே `பெரிய’ நடிகர்கள் படங்களில் இன்னும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஓவியாவுக்கு செம டஃப் கொடுக்கவே, இவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என எல்லோரும் கிசுகிசுக்கிறார்கள். எது எப்படியோ... பிந்து மாதவி என்னும் அழகுப் பெண் `பிக் பாஸ்’ வீட்டுக்குள் வரும் நாள்களில் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என எல்லோரும் ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாமும்தான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz