Published:Updated:

இரும்பு பெண்மணி... இப்போது திருமதி!

இரும்பு பெண்மணி... இப்போது திருமதி!
பிரீமியம் ஸ்டோரி
இரும்பு பெண்மணி... இப்போது திருமதி!

இரோம் ஷர்மிளாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ்ஆர்.குமரேசன், படம்: வீ.சிவக்குமார்

இரும்பு பெண்மணி... இப்போது திருமதி!

இரோம் ஷர்மிளாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ்ஆர்.குமரேசன், படம்: வீ.சிவக்குமார்

Published:Updated:
இரும்பு பெண்மணி... இப்போது திருமதி!
பிரீமியம் ஸ்டோரி
இரும்பு பெண்மணி... இப்போது திருமதி!

ரோம் ஷர்மிளா... அமைதியான போராளி, அஹிம்சையின் அடையாளம். இப்போது மாலையும் கழுத்துமாக அவர் மணப்பெண்ணாக நிற்கும் காட்சி... அழகும் மகிழ்வும்!

மணிப்பூரைச் சேர்ந்தவர் இரோம் ஷர்மிளா. அங்கு ராணுவத்தின் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, தன் மக்களுக்காகப் போராடத் தொடங்கி, தனது இளமைக்காலம் முழுவதையும் அந்தப் போராட்டத்திலேயே தொலைத்தார். 16 வருட உண்ணாநிலைப் போராட்டம் அது. காந்திக்குப் பிறகு இந்தியாவில் நடந்த நெடிய அஹிம்சை போராட்டம், இரோம் ஷர்மிளாவின் இந்தப் போராட்டம்தான். போராட்டத்தை முடித்துக்கொண்டு தேர்தலில் நின்றார். தங்களுக்காகப் போராடியவருக்கு மணிப்பூர் மக்கள் தேர்தலில் கொடுத்த பரிசு, இரட்டை இலக்க வாக்குகளே. அந்த அதிர்ச்சியிலிருந்து தன்னை மீட்டெடுத்துக்கொள்வதற்காக மணிப்பூரைவிட்டு வெளியேறினார் ஷர்மிளா.

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார் ஷர்மிளா. டவுன் பஸ்ஸில் ஏறி இறங்கி நகரின் பல பகுதிகளுக்கும் சென்று வருகிறார். சைக்கிளில் ஷாப்பிங் செல்கிறார். மாலை நேரங்களில் அமைதியாக வாக்கிங் போகிறார்.

இரும்பு பெண்மணி... இப்போது திருமதி!

கடந்த ஏழு ஆண்டுகளாக ஷர்மிளாவைக் காதலித்து வரும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டேஷ்மாண்ட் கௌடின்ஹோ, இப்போது அவரது வாழ்க்கைத் துணையாக மாறியிருக்கிறார். ஷர்மிளா எழுதிய ‘பர்னிங் ஆஃப் பிரைட்’ புத்தகம்தான் இவர்களுக்குள் காதல் ஏற்படக் காரணம். உலகம் முழுவதிலும் உள்ள போராளிகளை ஒருங்கிணைக்கக்கூடிய, ஒரு சோஷியல் மீடியாவின் அட்மின் ஆக இருக்கிறார் டேஷ்மாண்ட். இவர் தனது காதலைச் சொன்ன பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்தே `ஓகே’ சொல்லியிருக்கிறார் ஷர்மிளா. வாழ்க்கை முழுவதிலும் எதிர்ப்பையே சந்தித்துவந்த இரோமின் திருமணமும் பலத்த எதிர்வினைகளுக்கு இடையேதான் நடந்தேறியிருக்கிறது. வீட்டிலிருந்து சார்பதிவாளர் அலுவலகம் வரை இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குப் புதுப்பெண் ஷர்மிளா, புது மாப்பிள்ளை டேஷ்மாண்ட் இருவரும் நடந்தே வந்தனர். பெண்ணுக்குத் தோழியாக வந்தார், ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி.

45 வயதாகும் ஷர்மிளா, எந்த அலங்காரமும் செய்து கொள்ளவில்லை. வெள்ளை டி-ஷர்ட், அதற்கு மேல் ஒரு ஸ்வெட்டர், தலையில் எப்போதும்போல ஒரு ஷால், தோளில் ஜோல்னா பை என எளிமையாக இருந்தாலும் அந்த முகத்தில் அவ்வப்போது ஓடிய மெல்லிய புன்னகை, பொன் நகையைவிட அழகாக மிளிர்ந்தது.

திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்துப்போட வேண்டியவர்கள் வரத் தாமதமானதால், மணமக்கள் அமைதியாகக் காத்திருக்கத் தொடங்கினார்கள். ஒரு மணி நேரம் கழித்து, சாட்சிகள் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர, அடுத்த சோதனை ஒன்று காத்திருந்தது. டேஷ்மாண்டின் பாஸ்போர்ட்டின் ஒரிஜினல் வேண்டும் என சார்பதிவாளர் கேட்க, நகல் மட்டும் போதும் என நினைத்து ஒரிஜினலை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருந்த டேஷ்மாண்ட், அதை எடுத்து வரக் கிளம்பினார். அவர் திரும்ப அரை மணி நேரமாக, அதுவரை முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாகக் காத்திருந்தார் ஷர்மிளா. காத்திருப்பின் கொடும்வலியை 16 ஆண்டுகள் பொறுமையாக அனுபவித்தவருக்கு, இதுவும் கடந்துபோகும்தானே?

ஒருவழியாக இந்தியத் திருமணச் சட்டப்படி, கொடைக்கானல் சார்பதிவாளர் முன்பாக, ஆவணத்தில் கையெழுத்திட்டு, கணவன் மனைவியானார்கள் இருவரும். அப்போதும் மெல்லிய சிரிப்பை தவிர, ஷர்மிளா முகத்தில் வேறெந்த உணர்ச்சியும் இல்லை. திருமணம் முடிந்த பின்பு பேசிய இரோம் ஷர்மிளா, ‘`வாழ்க்கையின் இன்னொரு பாதையில் பயணிக்கப் போகிறேன். அதேநேரம் அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் போராடத் தயங்க மாட்டேன். உள்ளூர் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் பாசமானவர்கள். அவர்களது அன்புக்கு எனது நன்றி’’ என்றார் புன்னகையுடன்.

‘`இந்தத் தருணத்துக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன். உங்கள் அனைவரின் ஆசியுடன் எங்கள் மணவாழ்க்கையைத் தொடங்குகிறோம். எங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. மனிதர்களையே பெரிதும் நம்புகிறோம்!” என்றார் டேஷ்மாண்ட் மெல்லிய குரலில்.

போராட்ட மனம் சற்று ஓய்வெடுக்கட்டும். வாழ்க்கை முழுவதும் வேதனை தாங்கிய அந்த ஜீவனுக்குக் கணவரின் அன்பு, அமைதியைத் தரட்டும். வாழ்த்துகள் தோழி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism