வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில், ராமின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘தரமணி’. பரபரப்பாக இயங்கும் சென்னையின் ஹைடெக் பகுதிகளுள் ஒன்றான தரமணியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்குகிறது திரைக்கதை. ஆண் பெண் இருவருக்குமான உளவியல் சிக்கலை, உறவுச்சிக்கலை அவரவர் பார்வையிலிருந்து பேசும் படம் இது.
ஆல்தியா ஜோசப் (ஆண்ட்ரியா) தரமணியில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக (HR) வேலைபார்க்கிறார். ஒரு மழைநாளில் அவருடைய இருசக்கர வாகனம் பஞ்சராகிவிட, மழைக்கு ஒதுங்கும் இடத்தில் பிரபுவைச் (வசந்த் ரவி) சந்திக்கிறார். இருவருக்குமான அந்தச் சந்திப்பு நட்பாகி, காதலாகத் துளிர்க்கிறது. கணவனைப் பிரிந்து மகனுடன் வாழும் ஆல்தியாவின்மீதும் அவர் மகன்மீதும் அளவுக்கு அதிகமாக அன்பைக் கொட்டும் பிரபு, நாளடைவில் ஆல்தியாவைச் சந்தேகப்படும் ஆசாமியாக மாறுகிறார். பிரபு அவரிடம் நடந்துகொள்ளும்விதம் ஆணாதிக்க சைக்கோதனத்தின் உச்சம்.
காதலுக்கு முன் / காதலுக்குப் பின் என ஓர் ஆண், பெண்ணிடம் காட்டும் காதல் எப்படி ஈகோவாக மாறி பின்பு சந்தேகமாகி, அதையும் தாண்டி காதலியை ‘பிட்ச் (bitch)' என்று பழிக்கும் அளவுக்கு, அவனைக் கொடூரமானவன் ஆக்குகிறது என்பதை யதார்த்தத்தின் சாட்சியாகச் சொல்கிறது `தரமணி'.

அத்தனை தவறுகளைச் செய்த பிறகும் `ஆண்கள் மன்னிக்கப்பட வேண்டிய வர்களே' என்று வலியுறுத்துவதைப்போல, மீண்டும் பிரபுவை ஆல்தியா ஏற்றுக் கொள்ளும் இறுதிக்காட்சி விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதுகுறித்து `தரமணி' யைப் பார்த்த பெண்களிடம் பேசினோம்.
``ஆரம்பத்தில் துணிச்சலான பெண்ணாக வரும் ஆண்ட்ரியா க்ளைமாக்ஸ் காட்சியில் எடுக்கும் முடிவு ஏத்துக்கிற மாதிரி இல்லை. பெண்ணியம் என்ற தோரணையில் ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்துற மாதிரி இருக்கு. படத்தில் வரும் ஆண் கதாபாத்திரங்களைத் தவறாகக் காட்டிவிட்டு, அதே நேரத்தில் பெண்கள் அவர்களையெல்லாம் கடந்துதான் போகணும்னு சொல்றது சரிதானா?ஆண் தவறுகளை மன்னிக்கறதுதான் பெண்மையா?'' என்கிற துர்கா, சென்னை, தரமணியில் ஐ.டி நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த செல்வியின் பார்வை சற்று மாறுபடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``பெண்களின் மன அழுத்தத்துக் குக் குடிப்பதையோ, சிகரெட் பிடிப்பதையோ , பிற ஆண்களுடன் பழகு வதையோ தீர்வாகச் சொல்லியிருப்பது தேவையில்லாதது. ஆண் குடிக்கிறான் என்றால், அதற்கு இணையாகப் பெண்களும் குடிக்க வேண்டும் என்பது பெண்ணியம் அல்ல. இதைத் தவிர்த்துப்பார்த்தால் படத்தில் நிறைய நல்ல விஷயங்களும் இருக்கு.
குறிப்பாச் சொல்லணும்னா படத்துல ஸ்டேஷன் மாஸ்டர் கேரக்டர் பேசுற வசனம் அழுத்தமா இருந்துச்சு... `ஓர் ஆண், ஒரு பெண்ணோட ஒழுக்கத்துக்காக அவளைத் தண்டிக்கிறதா இருந்தா, அவ தன்னோட மனைவியா, காதலியா இருந்தா மட்டும்தான் கொடூரனா மாறிடுறான். இதுவே அவனோட சகோதரியா இருந்தா, தண்டிக்காம அவளோட தப்பைதான் முதல்ல மறைக்கப் பார்ப்பான். தன்னோட மனைவியும் யாரோ ஒருத்தரோட சகோதரிதானே’னு சொல்ற வசனம் நச்சுன்னு இருந்துச்சு. போலீஸ்காரன் மனைவி வர்ற ஒரு காட்சியைப் பார்க்கிற ஆண்கள், தங்கள் மனைவி மேல தேவையில்லாம சந்தேகப்பட்டிருந்தால்கூட ஒரு நிமிஷம் தங்களைச் சுயவிமர்சனம் செஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன். தனியா இருக்குற பெண்கள் அன்புக்கு அடிமையாகுறதையும் அதனால வர்ற ஆபத்துகளையும் எடுத்துச் சொல்லதான் ஹீரோ கேரக்டரை நெகட்டிவ்வா காட்டியிருக்காங்க. அதனால, இந்தப் படத்துல வர்ற விஷயங்களை அவங்கவங்க தேவைக்கு ஏத்த மாதிரி பொருத்திப் பார்த்துக்கிட்டா படம் நமக்குப் பாடம்தான்’’