Published:Updated:

“இந்தத் தனிமையும்கூட நல்லாதான் இருக்கு!”

“இந்தத் தனிமையும்கூட நல்லாதான் இருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்தத் தனிமையும்கூட நல்லாதான் இருக்கு!”

புன்னகை நினைவுகள்கு.ஆனந்தராஜ், படம் உதவி: எம்.உசேன்

“இந்தத் தனிமையும்கூட நல்லாதான் இருக்கு!”

புன்னகை நினைவுகள்கு.ஆனந்தராஜ், படம் உதவி: எம்.உசேன்

Published:Updated:
“இந்தத் தனிமையும்கூட நல்லாதான் இருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்தத் தனிமையும்கூட நல்லாதான் இருக்கு!”

“மூணு தலைமுறைகளா தொடர்ந்து நடிச்சுட்டு இருந்தேன். இப்போ அந்தப் பரபரப்பான ஓட்டம் குறைஞ்சு, தனிமையும் அமைதியுமா வாழ்ந்துட்டு இருக்கேன்’’ - புன்னகையுடன் நம்மை வரவேற்கிறார்
கே.ஆர்.விஜயா. தென்னிந்திய சினிமாவின் சூப்பர் சீனியர் நடிகை. மறைந்த தன் கணவர் வேலாயுதத்தின் நினைவுகளுடன் பல கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை நம்மிடம் காட்டியபடி பேச ஆரம்பித்தார்.

“நான் கேரளாவுல பிறந்தாலும், குழந்தையா இருக்கிறப்பவே குடும்பத்தோடு பழநியில செட்டிலாகிட்டோம். மூணாவதுவரை படிச்ச நிலையில, ஒரு நாடகக் கம்பெனியில சேர்ந்து நடிச்சுட்டு இருந்தேன். ‘சிம்ப்ஸன்’
(Simpson) சாக்லேட் நிறுவனம், ஒருமுறை என்னை போட்டோ எடுத்து அவங்க விளம்பரத்திலும் காலண்டர்லயும் போட்டாங்க. பதினாறு வயசுல ‘கற்பகம்’ படத்தில் ஹீரோயின் வாய்ப்புக் கிடைக்க அந்த விளம்பரம்தான் விசிட்டிங் கார்டு ஆச்சு. `தெய்வநாயகி' என்கிற என் பெயரை சினிமாவுக்காக ‘விஜயா’னு மாத்திக்கிட்டேன். தமிழ், மலையாளம், தெலுங்குனு நிறைய படங்கள்ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சேன்.

எந்தக் கதாநாயகியும் எடுக்கத்துணியாத முடிவை நான் எடுத்தேன். சினிமாவுக்கு வந்த மூணாவது வருஷமே திருமணம் செய்துக்கிட்டேன். என்னோட கணவர் வேலாயுதம், சிட் ஃபண்ட் கம்பெனி வெச்சிருந்தார். கூடவே, காஷ்மீர்ல இருந்து கேரளா வரைக்கும் எக்கச்சக்கத் தொழில் நிறுவனங்களையும் நடத்திட்டு இருந்தார்.

“இந்தத் தனிமையும்கூட நல்லாதான் இருக்கு!”

ஒருமுறை நானும் அவரும் வெளிநாட்டுக்குப் போயிட்டு விமானத்துல சென்னையில் வந்திறங்கினப்போ, அதை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போட்டுட்டாங்க. அப்போ நான் ஏழு மாச கர்ப்பிணி. சில சினிமா நபர்களையும் நண்பர்களையும் தவிர யாருக்குமே தெரியாம இருந்த அந்த விஷயம், பத்திரிகைகளில் வந்ததால பரபரப்பா பேசப்பட்டது.

‘அதை ஏன் மறைக்கணும்’னு கேட்கலாம். அப்போ நான் சினிமாவில் நடிச்சுட்டு இருந்த கதாபாத்திரங்களை மக்கள் திரையில் பார்க்கிறப்போ, என்னோட கர்ப்பிணி பிம்பம் அந்த கேரக்டரை தொந்தரவு செய்யக் கூடாது என்பதுதான் காரணம். ‘திருமால் பெருமை’ படத்தில் சிவாஜி சாருக்கு மகளா நடிச்சேன். அந்தப் படத்துல வரும், ‘ஸ்ரீஹரி ஹரி கோகுல ரமணா’ பாட்டு ஷூட் செய்தபோ, நான் ஒன்பது மாத கர்ப்பிணி. என்னோட மேடிட்ட வயிற்றை மறைக்க, உடம்பு முழுக்க நகைகள் போட்டு நடிச்சிருப்பேன்’’ என்பவர், பிரசவத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகவும் நினைத்திருக்கிறார்.

``என் பொண்ணு ஹேமலதா பிறந்த பிறகு, அந்தத் தாய்மை பூரிப்புல சினிமாவில் மனசு செல்லலை. ஆனாலும், தொடர்ந்து வாய்ப்புகள் வந்துட்டே இருந்தன. ‘ஹீரோயின் வாய்ப்புக்காக எத்தனை பேர் காத்திட்டு இருக்காங்க... உனக்குத் திருமணமாகி, குழந்தை பிறந்தபிறகும் அந்த வாய்ப்புகள் வீடு தேடி வருது. உனக்குன்னு நிறைய ரசிகர்களும் இருக்காங்க. யோசிச்சு முடிவெடு’னு என் கணவர் சொன்னார். நான் அப்போ கொஞ்சம் வெயிட் வேற போட்டுட்டேன் என்பதால, தயக்கத்தோடதான் மீண்டும் படங்களில் கமிட்டாக ஆரம்பிச்சேன். ஆச்சர்யப்படும்விதமா, அதுக்கு அப்புறம்தான் ஹிட் பட வாய்ப்புகள் தொடர்ந்து அமைந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமாவுல பிரேக் விடவே முடியாத அளவுக்கு, 60, 70-களில் தமிழ்ல எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட கதாநாயகர்கள்... மலையாளம், தெலுங்கு, கன்னட சூப்பர் ஸ்டார்களாக இருந்த ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடியா நடிச்சிருக்கேன். அதிலும், சிவாஜி - கே.ஆர்.விஜயா ஜோடி அப்போ ரொம்ப சென்டிமென்ட்டா இருந்துச்சு. சிவாஜி சார்கூட நாற்பது படங்களுக்கும் மேல நடிச்சிருக்கேன். எம்.ஜி.ஆர் சார்கூட பத்து படங்கள்ல நடிச்சிருக்கேன். பொதுவா முன்னணி நடிகைகள் பெரிய ஹீரோக்கள்கூட மட்டும்தான் நடிப்பாங்க. நான் நாகேஷ், தேங்காய் சீனிவாசன், பாலாஜி, எம்.என்.நம்பியார், அசோகன், சோ, மேஜர் சுந்தர்ராஜன்னு நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் ரோல்ல கலக்கின ஆர்ட்டிஸ்ட்டுகள்கூடவும் ஜோடியா நடிச்சேன். அதனால என் ‘பெரிய ஹீரோயின்’ பிம்பம் குறையலை என்பதும் பெருமையான விஷயம். இப்படி நான் ஒருபக்கம் சினிமாவில் பீக்ல இருக்க... என் கணவரும் தயாரிப்பாளராகி நிறைய படங்கள் எடுத்தார். அவருடைய படங்கள் பலவற்றில் நானும் நடிச்சேன்” என்பவர், தான் ‘புன்னகை அரசி’யான கதை யைச் சொல்கிறார்.

“இந்தத் தனிமையும்கூட நல்லாதான் இருக்கு!”

``நான் மாநிறம்தான். ஆனாலும், நான் நடிச்ச குடும்பப்பாங்கான பாத்திரங்களுக்கு அதுவே எனக்கு ப்ளஸ்ஸா அமைஞ்சது. குறிப்பா, என்னோட சிரிப்பு ரொம்ப அம்சமா இருக்கிறதா பலரும் சொல்வாங்க. அப்போ நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் இருந்துச்சு. ஒருமுறை திருச்சியில ஒரு படத்தின் வெற்றி விழாவுக்குப் போனப்போ, ‘புன்னகை அரசி’னு என் ரசிகர்கள்தான் எனக்குப் பட்டம் கொடுத் தாங்க. அதிலிருந்து நான் நடிக்கும் படங்களில், என் பெயருக்கு முன்னால அந்தப் பட்டத்தைப் போட ஆரம்பிச்சாங்க. ‘புன்னகை அரசி’ பட்டத்தை நினைச்சு பெருமைப்பட்டாலும், ‘இல்லத்தரசி’ங்கிற பொறுப்புதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 

80-கள் வரை ஹீரோயினா நடிச்சுட்டு இருந்த நிலையில, அடுத்து அக்கா, அண்ணி ரோல்களில் நடிக்க ஆரம்பிச்சேன். கூடவே, எந்த ஹீரோயினுக்கும் கிடைக்காத பெருமையா எக்கச்சக்க அம்மன் வேடங்கள்ல நடிச்சேன். அது மனசுக்கு நிறைவைக் கொடுத்தது. தொடர்ந்து 80, 90-கள்ல ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவா, அண்ணியா இருநூறு படங்களுக்கும் மேல நடிச்சிருப்பேன். 

இப்படி வாரத்துல ஆறு நாள்கள் வேலை வேலைன்னு ஓடினாலும், ஞாயிற்றுக் கிழமைகள் மட்டும் எப்பவும் குடும்பத்துக்கு மட்டும்தான். பெரும்பாலும் அவுட்டிங் போயிடுவோம். அப்போ நாங்க சொந்தமா ‘பொனான்ஸா’ (bonanza) ரக விமானம் வெச்சிருந்தோம். கணவருக்கு விமானம் ஓட்டத் தெரியும் என்பதால, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தியாவுக்குள்ள ஏதாச்சும் ஓர் இடத்துக்குப் பறந்துடுவோம். அல்லது ஜீப்ல சுத்துவோம்’’ என்பவர், தன் கணவர் பற்றி பேச்சு திரும்பும்போது நெகிழ்கிறார்.

“இந்தத் தனிமையும்கூட நல்லாதான் இருக்கு!”

``கல்யாணமான காலத்துல இருந்து வசதி வாய்ப்புக்குக் குறைவில்லை. சினிமா நட்சத்திரங்கள்லயே சாவித்திரி அம்மாவுக்கு அடுத்து, நீச்சல் குளத்தோடு பெரிய பங்களாவை சென்னையில கட்டினோம். பங்களாவுக்குள்ளேயே சினிமா தியேட்டர் உள்பட சகல வசதிகளும் இருக்கும். பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்ததுக்கு அப்புறம், நானும் அவரும் உறவினர்களோட அந்த வீட்டில் வாழ்ந்தோம். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, ஒருகட்டத்துக்குமேல அந்த வீட்டை எங்களால மெயின்டெயின் பண்ண முடியலை. அப்போதான், அந்த வீட்டை வித்துட்டு இப்போ வசிக்கிற இந்த தி.நகர் பங்களாவைக் கட்டினோம். ஓடி ஓடி நடிச்சதுக்கெல்லாம் ஓய்வு கொடுத்துட்டு, பத்து வருஷமா, உடல்நிலை சரியில்லாம இருந்த கணவரைப் பக்கத்துலேயே இருந்து பார்த்துக்கிற பாக்கியம் எனக்குக் கிடைச்சுது. ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி அவர் என்னை விட்டுட்டுப் போனப்போ, உடைஞ்சு போயிட்டேன். இப்போ அவர் நினைவுகள்தான் எனக்கு மருந்தா இருக்கு. எனக்குள்ள சொல்ல முடியாத கவலைகள் நிறைய இருக்கு. அதிலிருந்து வெளிவர அடிக்கடி கோயிலுக்குப் போறேன். சாப்பிட, தூங்கக்கூட நேரமில்லாம நடிச்சுட்டு இருந்தப்போ, உறவுகள் எல்லோரும் சூழ இருந்தாங்க. இப்போ சுவர்களும், பழைய போட்டோக்களும், வாங்கின விருதுகள், கேடயங்களும்தான் என்னைச் சுத்தியிருக்கு. இந்தத் தனிமையும்கூட நல்லாதான் இருக்கு. கோடிக்கணக்கான ரசிகர்களை என் நடிப்பால் மகிழ வெச்ச இந்தப் பிறப்பைப் பெருமையா உணர்றேன்.

இப்போ சில படங்கள்ல நடிச்சு முடிச்சிருக்கேன். தவிர, மலையாளத்துல ஒரு பக்தி சீரியல்ல நடிச்சுட்டு இருக்கேன். இந்த வாழ்க்கை எவ்வளவு தூரம் போகுதோ... போவோம்!” - நமக்கு விடைகொடுத்துவிட்டு, அந்தப் பிரமாண்டமான வீட்டில் தனக்குத் துணையாக இருக்கும் தனிமையிடம் புகுந்துகொள்கிறார் தெய்வநாயகி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism