Published:Updated:

“குடும்பத்தோட பேசி சிரிங்கய்யா!”

“குடும்பத்தோட பேசி சிரிங்கய்யா!”
பிரீமியம் ஸ்டோரி
“குடும்பத்தோட பேசி சிரிங்கய்யா!”

சீனியர் தம்பதிகு.ஆனந்தராஜ்

“குடும்பத்தோட பேசி சிரிங்கய்யா!”

சீனியர் தம்பதிகு.ஆனந்தராஜ்

Published:Updated:
“குடும்பத்தோட பேசி சிரிங்கய்யா!”
பிரீமியம் ஸ்டோரி
“குடும்பத்தோட பேசி சிரிங்கய்யா!”

“எங்களுக்குக் கல்யாணமாகி 54 வருஷங் களாகுது. புருஷன் பொண்டாட்டியா வாழ்க்கையை ஆரம்பிச்சப்போ எங்ககூட துணைக்கு இருந்தது வறுமை மட்டும்தான். சொல்லி மாளாத கஷ்டம். அந்தச் சூழல்ல நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பலமாயிருந்து, கஷ்டத்தை எல்லாம் நல்லபடியா கடந்து வந்திருக்கோம். எனக்கு மதுரை மீனாட்சியை ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்டுலயும் மீனாட்சி ஆட்சிதான்யா!” - சாலமன் பாப்பையா பேசும்போது அந்தக் குரலும் தொனியும் அவ்வளவு ரசிக்க வைக்கின்றன.

``வாத்தியாரு வேலை பார்த்துக்கிட்டு இருந்த நான் பட்டிமன்றத்துல பிரபலமாக, ‘உங்க பேச்சுக்கு ஒரு வசியம் இருக்குங்க...’னு நம்பிக்கை கொடுத்து இவங்க என்னை மேடைகளுக்கு அனுப்பிவெச்சதுதான் காரணம்’’ என்று தன் மனைவி ஜெயாபாய் அம்மாவை அறிமுகப் படுத்த, அவர் முகத்தில் வெட்கம் தந்த தடுமாற்றம், அழகு. அவர்களுடைய மதுரை இல்லத்தில் முதுமைக்கே உரிய ஓய்வும் பேச்சுமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களைச் சந்தித்தோம்.

“குடும்பத்தோட பேசி சிரிங்கய்யா!”

“இவருக்கு நாலு அண்ணன், நாலு அக்கா. இவருதான் கடைசிப் புள்ள. இவரோட அப்பா, அம்மா மில்லுல வேலை பார்த்தாங்க. குடும்பச் சூழலைச் சமாளிக்க, இவரு படிக்கிறப்பவே ட்யூஷன் எடுக்கிறது, இலக்கியக் கூட்டங்கள்ல கலந்துக்கறதுன்னு இருந்தார். எனக்கு அருப்புக் கோட்டை பூர்வீகம். எங்கப்பா, அம்மா ஆசிரியர்களா இருந்தாங்க. கொஞ்சம் வசதியான குடும்பம். படிப்பு முடிச்சுட்டு, பள்ளி ஆசிரியையா வேலை செய்துகிட்டு இருந்தேன். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில பேராசிரியரா வேலை பார்த்துக்கிட்டே, பட்டிமன்றங்கள்ல பேச ஆரம்பிச்சாரு. வீட்டுல பார்த்துப் பேசி, 1963-ம் வருஷம் எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க’’ என ஜெயாபாய் அம்மா நிறுத்திய இடைவேளையில், ``இவங்க பெயரைக் கேட்டுட்டு, ‘என்ன பாப்பையா, கலப்புத் திருமணமா’ன்னு கேட்ட எத்தனை பேருக்கு விளக்கம் சொல்லியிருப்போம்?! இப்போ உங்களுக்கும் கேட்கத் தோணுதுதானே?’’ என பாப்பையா கலகலவெனச் சிரிக்க, ``இவருக்கு வீட்டுல முக்கியமான வேலை என்னன்னு நினைக்கிறீங்க... என்னைக் கிண்டல் செய்றதுதான்’’ என்று சந்தோஷச் சலிப்பு காட்டிவிட்டுத் தொடர்கிறார் ஜெயாபாய் அம்மா...

``அது சுதந்திரத்துக்கு முந்தைய காலம். எங்க அப்பா அம்மாவுக்கு மகாத்மா காந்தி மேல அபிமானம் நிறைய. காந்தியோட அம்மா புத்திலிபாய், மனைவி கஸ்தூரிபாய் மாதிரி எனக்கு ஜெயாபாய்னு பெயர் வெச்சுட்டாங்க’’ என்றவரைத் தொடர்ந்த பாப்பையா, ``நாட்டுக்குத் தியாகம் பண்றவங்களைப் பாட ஆளு இருக்கு. ஆனா, வீட்டுக்குத் தியாகம் பண்ணுற பொம்பளைப் பிறப்பை யாராச்சும் கண்டுக்குறோமா? எங்க வீட்டம்மாவையே எடுத்துக்கோங்க. கொஞ்சம் வசதியான வீட்டுல பிறந்திருந்தாலும், கல்யாணத்துக்கு அப்புறம் எங்க வீட்டுக்குத்தக்கபடி தன்னை மாத்திக்கிட்டாங்க. ஆசிரியை வேலைக்குப் போயிட்டு இருந்தாங்க. அவங்க வேலையைத் தொடர, அந்தப் பள்ளியில 500 ரூபாய் பணம் கேட்டாங்க. அப்போ நான் வாங்கிக்கிட்டு இருந்த மாசச் சம்பளமே, இருநூற்றுச்  சொச்சம்தான். அந்தத் தொகையை என்னால தர இயலாது என்பதைவிட, லஞ்சம் போல பணம் கொடுக்கிறதிலும் உடன்பாடில்லை. நான் யோசிச்சுட்டு இருக்கும்போதே, ‘ஒண்ணும் பிரச்னை இல்லை. உங்க சம்பளத்துல என்ன கஞ்சி குடிக்க முடியுமோ அதுபோதும்’னு வேலையை விட்டுட்டாங்க. அந்தளவுக்கு என்னை அவுக புரிஞ்சுக்கிட்டதுக்காகவே நான் வாங்குற சம்பளத்தை அப்படியே எங்க வீட்டம்மாகிட்ட கொடுத்துடுவேன். இப்போ வரைக்கும் அதுதான் தொடருது. வெளியூர் பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது, அவங்களா பார்த்து என் தேவைக்குன்னு கொடுக்குற பணத்தை வாங்கிக்குவேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“குடும்பத்தோட பேசி சிரிங்கய்யா!”

எங்க வீட்டம்மா ரொம்பச் சிக்கனம். என்னையும் தேவைக்கு மீறி எந்தச் செலவும் செய்ய அனுமதிக்க மாட்டாங்க. நான் செய்யுற ஒரே செலவும், புத்தகம் வாங்குறதாதான் இருக்கும். அதுகூட வெளிக்கூட்டங்கள்ல பேசப்போகும்போது பரிசாவும்  சன்மானமாவும் மூணு ரூபாய், அஞ்சு ரூபாய்னு கொடுக்குற பணத்துக்கு வாங்கிக்குவேன். ‘இந்தப் புத்தகங்களை வாங்குற காசுல அந்தச் செலவைப் பார்த்திருக்கலாமே’னு அவுக கேட்கிற நிலைமையிலதான் எங்க குடும்பம் அன்னிக்கு இருந்துச்சு. ஆனா, அப்படிக் கேட்டதில்லை. ஏன்னா, அவங்களுக்கும் அதோட அருமை தெரியும். அந்தப் புத்தகங்களையெல்லாம் என்கூட சேர்ந்து அவங்களும் படிப்பாக’’ என்றவர், தமிழகத்தில் பட்டிமன்றம் என்றாலே பாப்பையா என்றாக்கிய அந்த கால கட்டத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார்.

``1962-ம் வருஷம்தான் முதன்முதலா புதுக்கோட்டை யில ஒரு பட்டிமன்றத்துல பேச்சாளரா பேசினேன். தொடர்ந்து நிறைய வெளியூர் இலக்கிய பட்டிமன்றங்கள்ல பேசிக்கிட்டு இருந்தேன். இன்னிக்கு சினிமா, டி.வி, மொபைல்னு பொழுதைப் போக்குறாங்க சனங்க. எங்க காலத்துல, கோயில் விழாக்கள்ல நடக்குற கச்சேரி, பட்டிமன்றங்கதான் மக்களுக்குப் பொழுதுபோக்கு. கலை இலக்கிய மன்றங்களின் சார்பில், இலக்கியத் தலைப்புகள்ல பேச்சாளரா பேசிட்டு இருந்தவன், 70-களின் தொடக்கத்திலேயே பட்டிமன்ற நடுவரானேன். இலக்கியப் பட்டிமன்றங்கள்ல கூட்டம் நிறையுமே தவிர, மக்களுக்கு நாங்க பேசுற கருத்துகள் முழுமையா சென்றடையாம இருந்துச்சு. அதனால, குடும்பத் தலைப்புகளுக்குள்ள வந்தோம். குடும்ப உறவுகளுக்குள்ல வர்ற சிக்கல்களைத் தலைப்புகளா வெச்சு, அதுல சமுதாயம், அறிவியல், இலக்கியம், தொழில்நுட்பம்னு பல பயனுள்ள கருத்துகளையும் சேர்த்துப் பேசத் தொடங்கினோம். அந்தக் கலகலப்பான பேச்சு மக்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போக, பட்டிமன்றங்கள் ரொம்ப பிரபலமாச்சு’’ என்றவரை, ``அந்த கலகல பேச்சு, சிரிப்பு, கிண்டல், நையாண்டின்னு எல்லாத்தையும் இந்த வீட்டுல இருந்துதான் இவர் எடுத்துட்டுப் போவார்’’ என்று சிரிக்கிறார் ஜெயாபாய் அம்மா.

``எல்லா வீடுகள்லயும் நடக்குறதைதான் அவரு மேடையில பேசுவார். அதை மக்களும் ரசிச்சு, கைத்தட்டிச் சிரிப்பாங்க. ஆனா, ‘எங்க வீட்டுலகூட நேத்து...’னு இவர் குறிப்பிட்டுப் பேசும்போது, அடுத்த முறை என்னைப் பார்க்கிறவங்க எல்லோரும், ‘அப்படியாமே...’னு ஆர்வமா விசாரிப்பாங்க. ‘இந்த மனுஷனை...’னு ஆரம்பத்துல கொஞ்சம் சலிச்சுக்குவேன். போகப்போக, சிரிப்பை மட்டும் பதிலா கொடுக்கப் பழகிக்கிட்டேன். பட்டிமன்றத் தலைப்புகளில் இருந்து சமூக நிகழ்வுகள் வரைக்கும் இப்போ வரைக்கும் வீட்டுல ரெண்டு பேரும் காரசாரமா விவாதிச்சிக்குவோம். கடைசி வரைக்கும் நான் சொல்றதுல உறுதியா நிப்பேன். ‘ஒரு தீர்ப்பைச் சொல்லி ஒரு கூட்டத்தையே தலையாட்ட வெச்சிப்புடுறேன்... உங்கிட்ட எதுவும் முடியமாட்டேங்குதே’னு சொல்லிட்டு, ‘சரி போ, அது உன் கருத்து, இது என் கருத்து’னு உடன்படிக்கைக்கு
வந்துடுவோம். ஒருவர் தப்பே செஞ்சாலும், இன்னொருத்தர் விட்டுக்கொடுத்துப் போயிடுவோம். குடும்ப விஷயங்களைப் பொறுத்தவரைக்கும், எங்களுக்குள்ள மாத்திக்க வேண்டிய விஷயங்களை வெளிப்படையா சொல்லிக்குவோம். இப்படி எங்களோட மேன்மைக்கு முன்னாடி, சிறுமை அடிபட்டுப் போயிடும்” என்று ஜெயாபாய் அம்மா சொல்ல...

``1992-ம் வருஷம் ‘சன் டி.வி’ தொடங்கப்பட்ட காலத்துல இருந்து இப்போ வரைக்கும் அதுல பண்டிகைக்கால பட்டிமன்றங்களில் நடுவரா இருக்கேன். தொலைக்காட்சியில முகம் காட்டினதுக்கு அப்புறம் என் பயணம், கடல் கடந்து விரிவடைஞ்சது. பெரும்பாலும் இவங்க என் பட்டிமன்றத்துக்கு வரவே மாட்டாங்க. ரொம்ப பண்ணுவாங்க... அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குப் பேசப்போகும்போதுகூட வற்புறுத்திதான் அழைச்சுட்டுப் போனேன்’’ என்று கிண்டல் செய்கிறார் பாப்பையா.

“வறுமையான சூழலைச் சமாளிக்க வங்கி உள்ளிட்ட பல இடங்கள்லயும் கடன் வாங்கினோம். சம்பாதிக்கிற பணமெல்லாம் செலவுக்கே சரியா போயிட்டு இருந்துச்சு. ஒருகட்டத்துல சிறுகச் சிறுக சேமிக்க ஆரம்பிச்சு, எல்லா கடனையும் அடைச்சுட்டு திரும்பி பார்க்கிறப்போ... வயசாகிடுச்சு. எங்கப் பொண்ணு விமலா, பையன் தியாகமூர்த்தியைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்து பேரன் பேத்திகளையும் பார்த்துட்டு நிம்மதியா இருக்கோம். இப்போ அவருக்கு 82 வயசு, எனக்கு 80 வயசாகுது’’ என்று ஜெயாபாய் அம்மா நிறைவாகச் சொல்ல...

``இந்த வீட்டுல நாங்க ரெண்டு பேரும் தொணதொணன்னு ஏதாச்சும் பேசிட்டேதான் இருப்போம். நான் வீட்டுல இருக்கிற நேரமெல்லாம், இவுகளை ஏதாச்சும் கிண்டல், கேலி செஞ்சு வம்புக்கு இழுத்துக்கிட்டேதான் இருப்பேன். புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல அந்தச் சந்தோஷப் பேச்சு, சிரிப்பு எல்லாம் தேவை. ஆம்பளையும் பொம்பளையும் சம்பாதிக்க, சேமிக்க, சமைக்கன்னு ஓடிட்டே இருக்குறதுக்குப்பேரு வீடு இல்லைய்யா. பேசணும். ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கணும். நீ, வீடு கட்டி என்ன... காரு வாங்கி என்ன... சொத்து சேர்த்து என்ன... குடும்பத்தோட பேசி சிரிக்கிறதுதானேய்யா எல்லாத்தைவிடவும் முக்கியம்? இன்னிக்கு எத்தனை வீடுகள்ல அது நடக்குது? பலர் வாங்குற சம்பளத்துக்கு உழைச்சுட்டு, வீட்டுக்குத் தூங்க மட்டும்தான் வர்றாங்க. சிலர் கையில இருக்குற செல்போனு, பொண்டாட்டி, புருஷன், புள்ளைகன்னு சேர்ந்து பேசிச் சிரிக்குற நேரத்தைப் பறிக்குது. இது வீடாய்யா? `வீட்டுப்பாடம் என்ன?’, `மதியச் சாப்பாடு என்ன கொடுக்க?’, `கரன்ட்டு பில்லு கட்டியாச்சா?’னு... இப்படி விசாரிப்புகள்தான் பல வீடுகள்ல பேச்சாவே இருக்கு. தப்புய்யா. 54 வருஷம் சேர்ந்து வாழ்ந்திருக்கும் மூத்தவுகளா ஓர் அறிவுரை சொல்றோம்... பேசுங்கய்யா. வீட்டுல ஒருத்தரோட ஒருத்தர் பேசுங்க. குடும்பத்தோட பேசிச் சிரிச்சு இந்த வாழ்க்கையை வாழுங்க!”

‘`பட வாய்ப்புகளை மறுத்திடுறார்!”

‘`ஒரு சில படங்களில் அவர் நடிச்சார். ஆனா, அது எங்களுக்கு நல்ல அனுபவமா இல்லை என்பதால... அதுக்கு அப்புறம் எத்தனையோ பட வாய்ப்புகள் வந்தும் மறுத்துட்டார். பரபரன்னு ஓடினதெல்லாம் இப்போ கொஞ்சம் குறைஞ்சுட்டதால, நாங்க ரெண்டு பேரும் இன்னும் நிறையப் பேச, சிரிக்கன்னு இருக்கோம்’’ என்கிறார் ஜெயா பாய் அம்மா.

பாப்பையாவின் வருத்தம்!

“70, 80-கள்ல மதுரை அமெரிக்கன் கல்லூரியில பேராசிரியரா இருந்துகிட்டே பட்டிமன்றம், இலக்கியக் கூட்டம்னு தூக்கம்கூட இல்லாம அலைஞ்சிருக்கேன். அப்போ என் கல்லூரி நிர்வாகம் எனக்குச் சலுகைகள் கொடுத்து ஊக்கப்படுத்தினதுக்கு நன்றி சொல்லணும். 1994-ல் ஓய்வு பெற்றேன். ஒரு பேராசிரியரா என் மாணவப் பிள்ளைகளோட உரிய நேரம் செலவிட முடியாத வருத்தம் இன்னிக்கும் எனக்கிருக்கு. அவங்களையெல்லாம் என்னால முடிஞ்ச அளவுக்கு இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாமேன்னு வருந்துவேன். நான் ஒரு முழுமையான பேராசிரியரா செயல்பட முடியாத குற்ற உணர்வு இன்னிக்கு வரைக்கும் என்னை விடல’’ என்கிறார் பாப்பையா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism