Published:Updated:

“அடுத்த தலைமுறைக்காக விதை விதைக்கிறேன்!” - பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிவகாமி

“அடுத்த தலைமுறைக்காக விதை விதைக்கிறேன்!” - பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிவகாமி
பிரீமியம் ஸ்டோரி
“அடுத்த தலைமுறைக்காக விதை விதைக்கிறேன்!” - பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிவகாமி

நம்பிக்கை மனுஷிகு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

“அடுத்த தலைமுறைக்காக விதை விதைக்கிறேன்!” - பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிவகாமி

நம்பிக்கை மனுஷிகு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

Published:Updated:
“அடுத்த தலைமுறைக்காக விதை விதைக்கிறேன்!” - பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிவகாமி
பிரீமியம் ஸ்டோரி
“அடுத்த தலைமுறைக்காக விதை விதைக்கிறேன்!” - பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிவகாமி

“வாழ்க்கையில ரொம்பக் காயப் பட்டவங்கள்ல பலரும், `வேற யாருக்கும் இப்படி ஒரு கஷ்டம் வரக்கூடாது’னு நினைப்பாங்க. அப்படித்தான் நானும். கஷ்டங்கள், சோதனைகள் எல்லாமே என்னோட போகட்டும்... நான் பெத்த பிள்ளைங்க, பெறாத பிள்ளைங்க நோய் நொடி இல்லாம சந்தோஷமா இருக்கணும்!” - உற்சாகமான வார்த்தைகளும் புன்னகையுமாக அறிமுகமாகிறார் சிவகாமி. இவர், சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியின் நம்பிக்கை அடையாளம். ஏரியாவாசிகளுக்கு வீட்டுவேலைகளில் உதவுவதிலிருந்து, பெரியவர்களுக்கு இயற்கை உணவு முறைகள் சொல்லிக்கொடுப்பது, குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுப்பது என பலருக்கும் பயனுள்ள ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். 

“பிறந்தது திருநெல்வேலின்னாலும் வளர்ந்தது எல்லாம் சென்னைதான்.

“அடுத்த தலைமுறைக்காக விதை விதைக்கிறேன்!” - பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிவகாமி

19 வயசுல கல்யாணமாச்சு. அஞ்சு பிள்ளைங்கள்ல மூணு ஆம்பளப் புள்ளைங்க, பிறந்த சில வாரங்கள்லயே இறந்துட்டாங்க. ஒரு பையன், ஒரு பொண்ணு மட்டும் கையில தங்க, அவங்கதான் என் வாழ்க்கைனு ஆச்சு. கணவரோட நிறைய கருத்துவேறுபாடுகள். ரெண்டு குழந்தைகளோட எதிர்காலத்தை நினைச்சு, முடிஞ்சவரைக்கும் அவரை அனுசரிச்சு 16 வருஷங்கள் வாழ்ந்தேன். ஒருகட்டத்துல `என் பிள்ளைங்களோட எதிர்காலம் அவங்க அப்பாவாலேயே தவறான வழிக்குப் போயிடக் கூடாது, இந்தச் சமூகத்துக்கு நானும் என் பிள்ளைங்களும் ஏதாச்சும் நல்ல காரியங்களைச் செய்ய கணவரோட சேர்ந்து வசிக்கும் சூழல் சரிபட்டு வராது’ன்னு தீர்க்கமான முடிவெடுத்தேன். சொத்து, ஜீவனாம்சம்னு எதுவும் வாங்காம அவரைப் பிரிஞ்சு குழந்தைங்களோட வந்துட்டேன்.

தப்பு ஆண் பக்கம் இருந்தாலும்கூட, விவாகரத்து வாங்கின பெண்ணைச் சமூகம் கேவலமா பார்க்குற மனநிலைதான் 25 வருஷத்துக்கு முன்னாடி இருந்துச்சு. அதையும் தாண்டி என் வாழ்க்கையைப் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிச்சேன்.  நான் விவாகரத்துக்கு விண்ணப்பிச்சும், அவர் இன்னொரு கல்யாணம் செஞ்சுகிட்டு நாலு வருஷம் கழிச்சுதான் எனக்கு விவாகரத்து கொடுத்தார்’’ என்று சொல்லும் சிவகாமி, இந்த இடைப்பட்ட காலத்தில் தன் எஸ்.எஸ்.எல்.சி படிப்புக்கான சில வேலைகளைப் பார்த்தவாறே, கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் எம்.ஏ படித்திருக்கிறார். கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்து, அந்த சென்டரிலேயே ட்ரெயினர் வேலை பார்த்ததோடு அங்கேயே தன் பையனையும் டிசைனிங் கோர்ஸ் படிக்க வைத்து நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அடுத்த தலைமுறைக்காக விதை விதைக்கிறேன்!” - பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிவகாமி

``டீச்சர், பத்திரிகை நிருபர், பிரின்ட்டிங் ஆபரேட்டர், ட்யூஷன், ஃபவுல்ட்ரி ஃபார்மிங்னு அடுத்தடுத்து இரவு பகலா பல வேலைகளைச் செஞ்சு ரெண்டு பிள்ளைங்களையும் முன்னேத்துற கடமையை நிறைவா செஞ்சு நல்லபடியா கல்யாணத்தை முடிச்சேன். திருமண வாழ்க்கையிலபட்ட கஷ்டங்கள், ஒற்றையாளா பிள்ளைகளை வளர்த்த பொருளாதாரச் சிரமங்களையெல்லாம்விட ஆண் துணை இல்லாம வாழ்ந்த பெண்ணுக்கு இந்தச் சமூகம் கொடுத்த அவமானங்களால மனசளவுல ரொம்பவே உடைஞ்சு போயிட்டேன்’’ என்பவரின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியிருக்கிறது, பிறர்மீது அவர் காட்டும் அன்பு. அதே நேரத்தில் சிவகாமி, இயற்கை வாழ்வியல்முறைக்கு மாற காரணமான மரணம் வரை சென்று திரும்பிய அந்தத் தருணத்தையும் பகிர்ந்தார்.

“நாலு வருஷத்துக்கு முன்னாடி காசி யாத்திரை போனப்போ, ஒரு விஷப்பூச்சி கடிச்சு கால் பெருசா வீங்கி என் சுயநினைவே குறைய ஆரம்பிச்சது. ட்ரெயின்ல சென்னைக்கு வந்துக்கிட்டு இருக்குறப்போவே, உயிர் போயிடும்னு ரயில்வே டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. ஆனா, எப்படியோ உயிரோட கொண்டுவந்து சென்னையில ஒரு ஆஸ்பத்திரியில என்னைச் சேர்க்க, 21 நாள்கள் கோமாவுல இருந்தேன். ‘உயிருக்கு ஆபத்தில்லை. ஆனா, பாதிப்புள்ள ஒரு காலை நீக்கணும்’னு மருத்துவர்கள் சொல்ல, கோயம்புத்தூர்ல இருக்குற ஒரு இயற்கை மருத்துவமனையில் எனக்குச் சிகிச்சை கொடுத்தாங்க. என் கால் குணமானதும் எனக்கு இயற்கை வாழ்வியல்முறை மேல நம்பிக்கையும் ஆர்வமும் வந்தது.

இயற்கை ஆர்வலர் பாலகிருஷ்ணனோட பயிற்சியால இயற்கைமுறை உணவுப் பழக்கத் தையே சிகிச்சையா எடுக்க ஆரம்பிச்சேன். எந்தெந்த உணவுப் பொருள்களை எப்போ, எப்படி, எவ்வளவு சாப்பிடணும்... வெள்ளை உணவுப் பொருள்களான அரிசி, சர்க்கரை, மைதா, பால் மற்றும் எண்ணெய், புளி, கடுகு, காய்ந்த மிளகாய், கெடுதலான மற்ற  உணவுப் பொருள்களைத் தவிர்க்கணும்... இனிப்புக்கு வெல்லம், புளிப்புச் சுவைக்கு புளிச்சக்கீரைனு தேவைக் கேற்ப ஆரோக்கியமான உணவுப் பொருள்களையே சேர்த்துக் கொள்ளணும்... தினமும் யோகா, தியானம், நடைப்பயிற்சி செய்யணும்னு என் வாழ்க்கைமுறையை மாத்தினேன். அதிலிருந்து நான் ஆஸ்பத்திரிக்குப் போகவே யில்ல. எல்லா நோய்களும் இருந்தஇடம் தெரியாம போயிடுச்சு. அதனாலதான் 61 வயசுலயும் எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லாம வாழ்ந்துட்டு இருக்கேன்’’ என்பவர் இயற்கை வாழ் வியலுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார்.

“அடுத்த தலைமுறைக்காக விதை விதைக்கிறேன்!” - பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிவகாமி

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்கள் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூத்துக்கணக்கான வீடுகளுக்குப் போய் இயற்கை வாழ்வியல்முறை பயிற்சிக்கு வரச் சொல்லி, அவங்களோட வாட்ஸ்அப் நம்பரையெல்லாம் வாங்கிட்டு வந்தேன். முதல் கிளாஸுக்கு 75 பெண்கள் ஆர்வமா வந்தாங்க. அப்படியே ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைன்னு தொடர்ந்து இப்போ வரைக்கும் வகுப்பு எடுக்கிறதோட, விதவிதமான இயற்கை உணவுகளை சமைச்சுக்காட்டி சாப்பிடக் கொடுப்பதால், நிச்சயமா இயற்கை உணவு முறைக்கு மாற முடியும்கிற நம்பிக்கை அவங்களுக்குக் கிடைச்சது. அக்கம்பக்கத்துக் குழந்தை களுக்குத் தன்னம்பிக்கை வகுப்புகளையும் எடுத்துகிட்டு இருக்கேன்” என உற்சாகமாகச் சிரிக்கும் சிவகாமி, தன் பகுதி மக்களின் பங்களிப்புடன் பாழடைந்த பூங்காவைப் பசுமையான சோலையாக மாற்றும் முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

“போன வருஷம் வந்த வர்தா புயல்ல, எங்க வீட்டைச் சுத்தியிருந்த மரங்கள் வேரோட சாய்ஞ்சிருச்சு. அதனால புதுசா நிறைய மரங்களை நடணும்னு ஓர் எண்ணம் வந்தது. ஏரியா மக்கள்கிட்ட சொல்லி எல்லோரையும் ஒண்ணு திரட்டினேன். திருவேற்காடு நகராட்சியில அனுமதி வாங்கி, பூங்கா முழுக்க இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருவேல மரங்களை அப்புறப்படுத்தினோம். அடுத்து முறையாக பத்திரிகை அடிச்சு, எல்லா வீட்டுக்கும் சென்று அழைப்பு விடுத்து, ஒரு திருவிழா மாதிரி மரக்கன்றுகளை நடும் விழாவை நடத்தினோம். ஏரியாக்காரங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மரத்தை நட்டதோட, அதைத் தத்தெடுத்து முறையா வளர்க்கிறாங்க. மேலும், பல்வேறு இடங்களிலும் குழுவாக இணைந்து தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்’’ என்றவர், ``கணவரைச் சகிச்சிட்டு இருந்திருந்தா, நான் ரொம்ப வசதியா இருந்திருப்பேன். ஆனா, சந்தோஷம் இல்லாமலும், குழந்தைங்களை நல்ல மனுஷங்களா வளர்க்கமுடியாத ஒரு தாயாகவும்தான் இருந்திருப்பேன். இப்போ நடுத்தரக் குடும்பமா இருந்தாலும், எங்க வீட்டுல எல்லோருமே நிம்மதியா, மகிழ்ச்சியா, மத்தவங்களுக்கு உபயோகமா இருக்குற ஒரு வாழ்க்கை வாழ்றோம். குறிப்பா, இயற்கை உணவுமுறை, தன்னம்பிக்கை வகுப்புகள், மரம் வளர்க்கிறதுனு அடுத்த தலைமுறைக்கு நல்ல எண்ணங்களை, முயற்சிகளை விதையா விதைக்கிறது ரொம்பவே நிறைவா இருக்கு...”

-  உளமார சொல்கிறார்... இயற்கை ஆர்வலர், இனிய சகோதரி சிவகாமி!

இது மருமகள் யோசனை!

``மூலிகை, பழவகைனு 66 செடிவகைகளை பூங்காவில் நட்டுவெச்சு பராமரிப்பு செய்துகிட்டு இருக்கிறோம். நாலு நுழைவு வாயில், பெரிய காம்பவுண்ட் சுற்றுச்சுவர், கார் பார்க்கிங், ஆர்கானிக் செடிகள், மூலிகைச் செடிகள், பூச்செடிகள் என பலவும் இருக்கும். விளையும் அனைத்து காய்கறிகளையும் ஏரியா மக்கள் எல்லோருமே சேர்ந்துப் பயன்படுத்தப்போறோம். அரச மர திண்ணையின் கீழ் பல பயிற்சி வகுப்புகள், ட்யூஷன் வகுப்புகள், நீரூற்றுகள், பறவைகள் வளர்ப்பு, தேனீ வளர்ப்புப் பெட்டிகள், கிராமிய விளையாட்டுகள் மட்டுமே விளையாட அனுமதின்னு, இந்த பூங்கா ஒரு சில வருஷத்துல புத்துயிர் பெறப்போகுது. இந்த எல்லா யோசனைகளுமே என் மருமக அமுதாவுடையது. பல உயிர்கள் இந்தப் பூங்காவில் உயிர்ப்போடு இயங்கவிருப்பதால் ‘பல்லுயிர் பூங்கா’ன்னு பெயர் வெச்சிருக்கிறோம்’’ என்கிறார் சிவகாமி, பூரிப்புடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism