Published:Updated:

“வேலையை நேசிச்சா எப்பவும் சந்தோஷம்தான்!”

“வேலையை நேசிச்சா எப்பவும் சந்தோஷம்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“வேலையை நேசிச்சா எப்பவும் சந்தோஷம்தான்!”

புத்தக மனுஷிஆர்.வைதேகி, படங்கள்: சு.குமரேசன்

“வேலையை நேசிச்சா எப்பவும் சந்தோஷம்தான்!”

புத்தக மனுஷிஆர்.வைதேகி, படங்கள்: சு.குமரேசன்

Published:Updated:
“வேலையை நேசிச்சா எப்பவும் சந்தோஷம்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“வேலையை நேசிச்சா எப்பவும் சந்தோஷம்தான்!”

`தி பிக்கெஸ்ட் லிட்டில் புக் ஷாப்' என்கிற அறிவிப்புடன் வரவேற்கிறது `கிகிள்ஸ்'. அண்ணாசாலையில் உள்ள கன்னிமாரா ஹோட்டலுக்குள் பார்க்கிங் ஏரியாவுக்குச் சற்று அருகில் இருக்கிறது இந்தப் புத்தகக் கடை. நூற்றைம்பது சதுர அடி பரப்பளவு மட்டுமே இருக்கும் இந்தக் கடையின் வாயிலில் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் நளினி செட்டூர். 85 வயதிலும் நளினியின் பேச்சிலும் செயலிலும் தளர்வில்லை. அவரது அபாரமான நினைவாற்றல் பிரமிக்கவைக்கிறது.

``1974-ம் வருஷம் இந்தக் கடையை ஆரம்பிச்சேன். இந்த மாசம் என் கடைக்கு 43-வது வயசு பிறக்குது. வருஷங்கள் ஓடினாலும் இந்தக் கடைக்கும் எனக்குமான ஒவ்வொரு நாள் அனுபவமும் பசுமையா ஞாபகத்துல இருக்கு'' - ஆச்சர்ய மனுஷியின் வார்த்தைகள், அவருடனான உரையாடல் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.

``எனக்கு மூணு வயசிருக்கும்போது என் அப்பா ஆரம்பிச்சு வெச்ச பழக்கம் இது. தினமும் ஒரு புத்தகம் வாங்கித் தந்து படிக்கச் சொல்வார். அப்படித்தான் புத்தகங்களுக்கும் எனக்குமான பந்தம் வளர்ந்ததுனு சொல்லலாம். என் தாத்தாகிட்ட 25 ஆயிரத்துக்கும் மேலான புத்தகங்கள்கொண்ட நூலகம் இருந்தது. என்னுடைய வாழ்க்கையில புத்தகம் படிக்காத நாள்கள் ரொம்பவும் குறைவு. புத்தகங்கள் மீதான ஆர்வம்தான் என்னை இலக்கியமும் லைப்ரரி சயின்ஸும் படிக்க வெச்சது.

“வேலையை நேசிச்சா எப்பவும் சந்தோஷம்தான்!”

அப்பாவுக்கு பெங்களூருலேருந்து சென்னைக்கு மாற்றலானதும் சென்னையில மிகப்பெரிய புத்தகக் கடையில வேலை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. ஆறு மாசத்துக்கு மேல எனக்கு அந்தச் சூழல் பிடிக்கலை. சொந்தமா புத்தகக்கடை  ஆரம்பிக்க நினைச்சேன். ஆனா, எங்கப்பா எனக்கு எந்த வகையிலயும் உதவத் தயாரா இல்லை. `உனக்குப் புத்தகங்களைப் பத்தித் தெரிஞ்சிருக்கலாம். ஆனா, பிசினஸ் பத்தி எதுவும் தெரியாது... ஸாரி'ன்னு சொல்லிட்டார். வேற வழியில்லாம வெறும் ஆயிரம் ரூபாய்ல நான் இந்தப் புத்தகக் கடையை ஆரம்பிச்சேன். ரெண்டு மாசம் தாக்குப்பிடிச்சா பெரிசுன்னு அம்மாவும் அப்பாவும் சொன்னாங்க. நான், ரெண்டு வருஷம் தாக்குப்பிடிக்கும்னு நினைச்சேன். 43 வருஷங்களை எட்டினது எனக்கே ஆச்சர்யமா தான் இருக்கு'' என்கிறவரின் ஆச்சர்யம் நம்மையும் பற்றிக்கொள்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வேலையை நேசிச்சா எப்பவும் சந்தோஷம்தான்!”

``கடையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே எனக்கு முதல் ஆர்டர் வந்திருச்சு. அமெரிக்க தூதராக இருந்த கால்ப்ரெத் பத்தின புத்தகத்துக்கான ஆர்டர் அது. மெக்மில்லனுக்குப் போனேன். அந்தப் புத்தகத்தோட விலை 12 ரூபாய்.  மூணு பிரதிகள் வாங்கினதுக்கு 25 சதவிகிதம் தள்ளுபடி கொடுத்தாங்க. `உங்களோட லாபத்தை ஏன் விட்டுக் கொடுக்கறீங்க'னு அவங்கக்கிட்ட அப்பாவியா கேட்டபோது, `உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா'னு கேட்டாங்க. அந்தப் புத்தகங்களுக்கான பணத்தை செக்கா கொடுக்கலாமானு கேட்டபோது, `கடன்லகூட வாங்கிக்கோங்க. பிறகு பணம் கொடுக்கலாம்'னு சொன்னது அடுத்த அதிர்ச்சியா இருந்தது. அந்தச் சம்பவம்தான் எனக்குள்ள தெளிவைத் தந்தது. ஒண்ணுமே தெரியாம இந்த பிசினஸுக்குள்ள வந்தவள்தான் நான்'' என்கிறவர், இன்று கடையின் எந்த மூலையில் எந்தப் புத்தகம் இருக்கும் என்கிற தகவல்களை விரல்நுனியில் வைத்திருக்கிறார்.

விருப்பமான புத்தகத்தைத் தேடி வருகிறவர் களிடமும் சரி, எந்தப் புத்தகம் படிப்பதென்கிற தெளிவின்றி வருகிறவர்களிடமும் சரி... பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன நளினியிடம். அகராதி முதல் அரசியல் வரை; இலக்கியம் முதல் இன்ஜினீயரிங் வரை; சமையல் முதல் சாகசம் வரை எந்தத் தலைப்பில்  கேட்டாலும் அது தொடர்பான அனைத்துப் புத்தகங்களையும் அவற்றை எழுதியவர்களின் பெயர்களோடு நினைவில் வைத்துச் சொல்கிறார்.

``ஆரம்பத்துல இந்தக் கடை கன்னிமாரா ஹோட்டலுக்குள்ள இருந்தது. ஹோட்டலுக்கு வர்ற யாரும் என் கடையை விசிட் பண்ணாம போக மாட்டாங்க. பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள் வந்திருக்காங்க. சாமானிய மக்களை வரவழைக்கிறதுதான் சவாலா இருந்தது. ஒருமுறை `லோன்லி பிளானெட்' பத்திரிகையில என் கடையைப் பத்தி எழுதியிருந்தாங்க. அது சாமானிய மக்களையும் என் கடையைத் தேடி வரவெச்சது’’ - அமைதி யாகச் சொல்கிறார்.

கடையைத் திறந்தபோது தொடங்கிய சவால், சமீபத்திய சென்னைப் பெருவெள்ளம் வரையிலும் தொடர்ந்திருக்கிறது நளினிக்கு.

``அந்த வெள்ளத்துல என் கடையும் தப்பலை. ஏராளமான புத்தகங்கள் சேதமாயிடுச்சு. `தி கூவம்ஸ் சாய்ஸ்' என்ற பெயர்ல தள்ளுபடி விற்பனை போட்டு அந்தப் புத்தகங்களை வித்தேன்...'' - துயரத்தையும் வாய்ப்பாகவே பார்க்கிறவரிடம், ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.

``எனக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. தமிழ் புரியாது. என் கடைக்கு வர்றவங்களுக்கு அவங்க கேட்கற புத்தகத்தை எடுத்துக் கொடுக்கிற அளவுக்காவது அந்த மொழி எனக்குத் தெரிஞ்சிருக்கணு மில்லையா... அதனாலதான் தமிழ்ப் புத்தகங்கள் வைக் கலை. ஆனாலும், தமிழ்ப் புத்தகங்களின் மொழி பெயர்ப்புகள் நிறைய வெச்சிருக்கேன்'' என்கிற நளினி, திருமணம் செய்து கொள்ளவில்லை.

“வேலையை நேசிச்சா எப்பவும் சந்தோஷம்தான்!”

``கல்யாணத்துல எனக்கு விருப்பமும் இல்லை. நிறைய நல்ல வரன்கள் வந்தது. ஆனாலும், திருமண உறவுல சிக்காம நான் என் சொந்தக் கால்ல நிக்கணும்னு முடிவெடுத்தேன். இங்க உள்ள அத்தனை புத்தகங்களும் எனக்குக் குழந்தைகள்'' என்று நெகிழும் நளினியின் கடைக்குள் கால் படாத பிரபலங்களே இல்லை எனலாம்.

``புத்தகம் படிக்கணும்னு நினைக்கிற ஒவ்வொருத்தருமே என் பார்வையில ஸ்பெஷல்தான். அதையும் மீறிச் சொல்லணும்னா சத்யஜித் ரே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மணிரத்னம், சுஹாசினி, வினோத் கன்னா, ராஜேஷ் கன்னா, டிம்பிள் கபாடியா, ஸ்மிதா பாட்டீல், ஷபானா ஆஸ்மி, எழுத்தாளர் நைக் பால், நோபல் பரிசு வாங்கின வில்லியம் கோல்டிங்னு அது ஒரு பெரிய லிஸ்ட். இதுல பலரை எனக்கு யார்னே தெரியாம அவங்ககூட மணிக்கணக்கா பேசியிருக்கேன். கடையை விட்டுக் கிளம்பறபோது அவங்களா சொன்ன பிறகு தெரிஞ்சு அவ்வளவு பெரிய ஆட்கள்கிட்டயா பேசிட்டிருந் தேன்னு நினைச்சிருக்கேன்.''

தன்னை சீனியர் சிட்டிச னாக அடையாளப்படுத்திக் கொள்வதிலும் நளினிக்கு விருப்பமில்லை. ``நான் எப்போதும் என் வயசைப் பத்தி யோசிக்கிறதில்லை. வயசாயிடுச்சேன்னு கவலைப்படறதுல என்ன அர்த்த மிருக்கு? நான் என்னை இன்னமும் டீன் ஏஜராதான் நினைச்சிட்டிருக்கேன். டீன் ஏஜ் ஆட்களோடுதான் நேரத்தைச் செலவிடறேன். அதுதான் என்னை மனசளவுல இளமையா வெச்சிருக்கு...'' என்கிறார்.

``ஹோட்டலுக்குள்ள நடத்தற கடையாச்சே... எல்லா நேரமும் கெஸ்ட் வந்து போயிட்டிருப்பாங்க. எனக்கு உதவியாளர்கள் இருந்தாலும் கடையில என்னோட பெர்சனல் அட்டென்ஷனை மிஸ் பண்ண மாட்டேன். உங்க வேலையை நீங்க நேசிச்சீங்கன்னா, அது ஒரு நிமிஷம்கூட உங்களுக்கு அலுப்பையோ, சலிப்பையோ தராது. ஐ லவ் மை ஜாப்!''

- நளினி சொல்லும் மெசேஜ், மூத்தக் குடிமக்களுக்கு மட்டுமானது அல்ல; அனைத்து மக்களுக்குமானது... மகத்தானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism