Published:Updated:

அன்பாலே அழகான வாழ்க்கை!

அன்பாலே அழகான வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
அன்பாலே அழகான வாழ்க்கை!

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்ஆர்.வைதேகி

அன்பாலே அழகான வாழ்க்கை!

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்ஆர்.வைதேகி

Published:Updated:
அன்பாலே அழகான வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
அன்பாலே அழகான வாழ்க்கை!

ந்த வயதில் இப்படியொரு காதல் சாத்தியமா? தெரியவில்லை! பெங்களூரில் வசிக்கும்  மெரூ - விஜய் தம்பதியின் காதல் கதை நெகிழ்ச்சியானது மட்டுமல்ல... மகிழ்ச்சியானதும்கூட! எதிர்பார்ப்புகளற்ற அன்பு, என்றும் இளமையானது என்பதற்கு இவர்களின் காதல் சரித்திரமே சான்று. மெரூ - விஜய் தம்பதி சீனியர் சிட்டிசன்களாக இருந்தாலும் அவர்களின் காதலுக்கு வயது... ஜஸ்ட் 16. அந்தக் காதலில் அன்பு கரைபுரண்டு ஓடுகிறது.

`பீயிங் யூ' (Being You) முகநூல் பக்கம் வாயிலாக மெரூவைத் தொடர்புகொண்டோம். தன் வாழ்க்கையின் ஆரம்பகால வலிகளுடன் ஆரம்பிக்கிறார் மெரூ...

அன்பாலே அழகான வாழ்க்கை!

``பிறந்ததுலேருந்து ஒன்பது வயசு வரைக்குமான வாழ்க்கை ரொம்ப கொடுமையானது. எப்போதும் காய்ச்சல், இடதுபக்க இடுப்புல தாங்க முடியாத வலி, சிறுநீர்ல சீழும் சேர்ந்து வெளியேறும். ரெண்டு நாளைக்கொரு தடவை ஹாஸ்பிடலுக்குப் போகறதும், மருந்து மாத்திரை சாப்பிடறதும், எக்ஸ்ரே எடுக்கிறதும் மட்டும்தான் பிரதான வேலைகளா இருந்திருக்கு. வீட்டுக்குப் பக்கத்துல உள்ள பார்சி ஸ்கூல்ல படிச்சேன். வாரத்துல மூணு நாள்கள் ஸ்கூலுக்குப் போனாலே அதிகம்தான். அடிக்கடி காய்ச்சல் வரும். ஸ்கூல்ல எல்லாருக்கும் என் பிரச்னை தெரியும். அதனால என்கிட்ட ரொம்பக் கனிவா நடந்துப்பாங்க. ஒருநாள் என் நிலைமை ரொம்ப மோசமாச்சு. அதைப் பார்த்துட்டு எங்கம்மா அழுத அழுகையில அக்கம்பக்கத்தினர் எல்லாம் கூடிட்டாங்க. உடனடியா ஆம்புலன்ஸை வரவழைச்சு என்னை மும்பையில ஓர் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனாங்க. என்னை டெஸ்ட் பண்ணின டாக்டர், `உடனடியா ஆபரேஷன் பண்ணி ஒரு கிட்னியை எடுத்தாகணும்'னு சொன்னார். சிறுநீர்ப்பைக்குச் சிறுநீரை எடுத்துட்டுப் போற குழாய்ல அடைப்பு இருக்கிறதாகவும் அதன் விளைவா என் கிட்னி உள்ளுக்குள்ளேயே அழுகத் தொடங்கினதாகவும் அவர் சொன்னாராம். கிட்னியை எடுத்த பிறகு எனக்கு எல்லா அவதிகளும் குணமாகி உடம்பே லேசானதுமாதிரி இருந்தது...'' - வலியிலிருந்து மீண்ட மெரூவுக்கு அதற்குப் பிறகானவை படிப்பும் பொறுப்பும் நிறைந்த பொழுதுகள்...

``படிப்பை முடிச்சேன். அப்பா ரயில்வேலேருந்து ரிட்டயர்டு ஆகியிருந்தார். எனக்குப் பிறகு ரெண்டு தங்கைகள் இருந்தாங்க. என் குடும்பத்தை சப்போர்ட் பண்ண வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. இந்தியன் ஏர்லைன்ஸ்ல ஏர்ஹோஸ்டஸா சேர்ந்தேன். ஆசாரமான பார்சி இனத்தைச் சேர்ந்த எனக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். ஆன்களுடன் பேசவோ  தனியா டிராவல் பண்ணவோ  அனுமதி கிடையாது. வேலைக்காக முதன்முறையா தனியா டெல்லி வந்தேன். டிரெய்னிங்குக்காக மூணு மாசம் டெல்லி போனேன். ஆண்களும் பெண்களும் தனித்தனி ஹாஸ்டல்ல தங்கியிருந்தோம். அப்பதான் விஜய்யைச் சந்திச்சேன்...'' - சொல்லும்போதே குரல் குழைகிறது மெரூவுக்கு. 
 
``காலையில ரெண்டு பேரும் டிரெய்னிங்ல சந்திச்சிப்போம். சாயந்திரம் வெளியிடங்களில் மீட் பண்ணுவோம். எங்க நட்பு வளர்ந்தது. டிரெய்னிங் முடிஞ்சு நான் மும்பைக்குத் திரும்பற நாள் வந்தது. `இனிமே நாம பேசிக்க முடியாது. அதை என் வீட்டுல ஏத்துக்க மாட்டாங்க'னு விஜய்கிட்ட சொன்னேன். என் மெத்தை ஒண்ணு என் பெட்டிக்குள்ள அடங்கலை. அதைத் தன்னோட பெட்டிக்குள்ள வெச்சுக்கிட்டு, ஊர்ல கொண்டுவந்து கொடுக்கிறதா விஜய் சொன்னபோது நான் பயந்தேன். ஆண்களோடு நட்பா பேசறதையே ஏத்துக்காத என் வீட்டாளுங்க, ஓர் ஆண் மெத்தையோட வீட்டு வாசல்ல வந்து நிக்கறதை எப்படி எடுத்துப்பாங்களோன்னு பயந்தேன்.

அந்த அதிர்ச்சி மறையறதுக்குள்ளேயே விஜய் என்கிட்ட புரொபோஸ் பண்ணி அடுத்த ஷாக்கைக் கொடுத்தார். `சத்தியமா இந்தக் காதலை என் அப்பா ஏத்துக்க மாட்டார். எனக்கு ஒரு கிட்னிதான் இருக்கு, அதனால இந்தக் கல்யாணம் நடைமுறையில சாத்தியமில்லை'ன்னு விஜய்கிட்ட சொன்னேன். `எனக்கு அதைப் பத்தியெல்லாம் கவலையில்லை'ன்னு சொல்லி இன்னும் அதிகமா என்னைக் காதலிக்க ஆரம்பிச்சார் விஜய்...'' - காதல் எபிசோடை விவரிக்கும்போது மெரூவின் குரலில் இன்னமும் மிச்சமிருக்கிறது வெட்கம்.

``விஜய் மலையாளி. பாலக்காட்டுல உள்ள அவங்க வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போனார். அவங்களுக்கு பார்சினு ஓர் இனம் இருக்கிறதே தெரியலை. மொழியிலேருந்து உணவு வரைக்கும் எனக்கு எல்லாமே புதுசா இருந்தது. அவங்க வீட்டுல சமையலுக்குத் தேங்காய் எண்ணெய் மட்டும்தான். நானோ, அதைத் தலைக்குத் தடவி மட்டுமே பழகியிருந்தேன். இத்தனை வித்தியாசங்களைத் தாண்டியும் அவங்க வீட்டுல எனக்கு அத்தனை அன்பு கிடைச்சது.

மும்பைக்கு வந்த பிறகு நாங்க ரெண்டு பேரும் வேற வேற ஏர்கிராஃப்ட்டுல வேலை பார்த்திட்டிருந்தோம். ஆனா, அது எங்கக் காதலுக்குத் தடையா இல்லை. நிறைய நிறைய ஊர் சுத்தினோம். திகட்டத் திகட்டக் காதலிச்சோம். ஆனாலும், விஜய் கல்யாணப் பேச்சை எடுக்கிறபோது எனக்குள்ள நடுக்கம் வரும். அதேநேரம், விஜய் இல்லாம வாழ முடியாதுங்கிறதுலயும் தீர்மானமா இருந்தேன். மும்பையில இருந்தா எங்க கல்யாணம் சாத்தியமில்லைன்னு சென்னைக்கு மாற்றல் வாங்கிட்டு வந்தோம். மூணு மாசம் தற்காலிகமா சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருக்கிறதா எங்க வீட்டுல பொய் சொன்னேன். சென்னையில ரெண்டு பேரும் தனித்தனியா தங்கியிருந்தோம்.

இதை ரொம்ப நாளைக்கு மறைக்கக்கூடாதுனு முடிவெடுத்து எங்க வீட்டுக்குத் தகவல் சொன்னேன். அவங்களைச் சென்னைக்கு வரச்சொன்னேன். வந்தாங்க.  `அந்தப் பையன் யாருன்னு எனக்குத் தெரியும். அன்னிக்கு உன் மெத்தையை எடுத்துட்டு வந்தவன்தானே'னு கேட்டார் அப்பா. `நாங்க கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறோம்'னு சொன்னபோது அம்மாவும் அப்பாவும் என் தங்கைகளோட நிலைமையைச் சொல்லி, எங்கக் கல்யாணத்துல பங்கெடுத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டு மும்பைக்குத் திரும்பிட்டாங்க. ஆனா, அம்மா மட்டும் அப்பாவுக்குத் தெரியாம எனக்கு ஒரு புடவையும் ரெண்டு மோதிரங்களும் அனுப்பி வெச்சாங்க. கேரளாவுல விஜய்யோட பெற்றோர் முன்னிலையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மோதிரம் மாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

அந்தக் காலத்துல கல்யாணமான பெண்களுக்கு ஏர்ஹோஸ்டஸா வேலை பார்க்க அனுமதியில்லை. அதனால அந்த விஷயம் நான் வேலை பார்க்கிற இடத்துக்குத் தெரியாமப் பார்த்துக்கிட்டேன். ஆறு மாசங்கள் கழிச்சு, நான் கர்ப்பமான மூணாவது மாசம், அந்த வேலையை விடறதுன்னு முடிவெடுத்தேன். ஒரு கிட்னி மட்டும் இருக்கிறதால நான் குழந்தை பெத்துக்கக் கூடாதுன்னு டாக்டர்ஸ் அட்வைஸ் பண்ணினாங்க. ஆனாலும், என் உள் மனசு `உனக்கு ஒண்ணும் ஆகாது'ன்னு சொன்னது. அழகான பெண் குழந்தை பிறந்தாள். அவ பேர் கமல். அவளுக்கு ஏழு வயசிருக்கும்போது ரெண்டாவதா ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குப் பிறவியிலேயே நெஞ்சுப் பகுதியில கட்டி. அவனைக் காப்பாத்த முடியலை.

வாழ்க்கையில கஷ்டங்கள் வந்தபோதெல் லாம் அதுலேருந்து என்னை மீட்டெடுத்தது என் கணவரோட அன்பு மட்டும்தான். அவர் மாதிரி ஒரு கணவர் அமைய, போன பிறவியில நான் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கணும். கடவுள், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற் பட்டவர் அவர். `நல்ல மனுஷங்களா இருக்கிறதும் பிரதிபலன் எதிர்பார்க்காம அடுத்தவங்களுக்கு உதவறதும்தான் முக்கியம்'னு நம்பறவர். வாழ்க்கைன்னா என்னங்கிறதை அவர்கிட்டருந்துதான் கத்துக்கிட்டேன். என் மகள் குணத்துல அப்படியே என் கணவர் விஜய்யோட பிரதி. இப்போ ஏழைக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்திட்டிருக்கேன். வயசானா காதல் காணாம போயிடும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, எங்க விஷயத்துல அது ஒவ்வொரு நாளும் அதிகமாகிட்டிருக்கு...'' -  காதலில் கசிந்துருகுகிறார் மெரூ.

அன்பாலே அழகான வாழ்க்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism