Published:Updated:

'நாங்க மூணு பேரும் சேர்ந்தா டான்ஸ் ஆடியே டயர்ட் ஆகிடுவோம்!’ - நடிகை அபிநயா

'நாங்க மூணு பேரும் சேர்ந்தா டான்ஸ் ஆடியே டயர்ட் ஆகிடுவோம்!’ - நடிகை அபிநயா
பிரீமியம் ஸ்டோரி
News
'நாங்க மூணு பேரும் சேர்ந்தா டான்ஸ் ஆடியே டயர்ட் ஆகிடுவோம்!’ - நடிகை அபிநயா

லைஃப் இஸ் பியூட்டிஃபுல்ஆரா

கேட்கும் திறன், பேசும் திறனில் குறைபாடுள்ள ஒரு பெண் சினிமாவில் நடிகையாக ஜொலிக்க முடியுமா? பதில்... அபிநயா! தன் பதின்வயதுகளில் மாடலிங்கில் கலக்க ஆரம்பித்தவர், கடின முயற்சிக்குப் பலனாக ‘நாடோடிகள்’, ‘ஈசன்’, ‘வீரம்’, ‘பூஜை’, ‘தாக்க தாக்க’, ‘குற்றம் 23’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்து அப்ளாஸ்களை அள்ளினார். இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 30 படங்கள் வரை நடித்திருப்பவர், தென்னிந்திய சினிமாக்களில் மகிழ்ச்சியுடன் பயணித்துக்கொண்டிருக்கிறார். அவருடன் ஒரு சாட்...

பேபி அபிநயா

பிறந்தது சென்னைன்னாலும், ஏழாவது மாசத்துலேயே ஹைதராபாத்துக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம். பிறவியிலேயே கேட்கும் மற்றும் பேசும் திறனை இழந்துட்டதால, சவாலான குழந்தைப் பருவம்தான் எனக்கு.

'நாங்க மூணு பேரும் சேர்ந்தா டான்ஸ் ஆடியே டயர்ட் ஆகிடுவோம்!’ - நடிகை அபிநயா

ஏழு வயசுல, ‘எனக்கு மட்டும் ஏன் காது கேட்கல? வாய் பேச முடியல? நான் என்ன தப்பு பண்ணினேன்’னு அம்மாகிட்டக் கேட்டேன். ‘நீ எந்த தப்பும் பண்ணல. சின்னப் பொண்ணுங்கிறதால, வளர வளரதான் உனக்குக் காது கேட்கும். உன்னால பேச முடியும். என் சின்ன வயசுலயும் அப்படித்தான் ஆச்சு’னு சைகையில சொல்லி எனக்குப் புரிய வெச்சாங்க. அப்படி நான் கலங்கின தருணங்கள்ல, பப்ளியா இருந்த என்னை அடிக்கடி போட்டோ எடுத்து என்கிட்ட காட்டி பெற்றோர் சந்தோஷப்படுத்துவாங்க!

படிப்பு

`எங்க போனாலும் பிழைச்சுக்கலாம்’னு, நாலு வயசுல இருந்து பெற்றோர் எனக்கு இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஒவ்வோர் எழுத்தைச் சொல்லும்போதும், அவங்க தொண்டைப்பகுதியில் கை வெச்சுப்பேன். அவங்க குரல் அதிர்வை என் விரல் வழியே தொடு உணர்வின் மூலமாகத் தெரிஞ்சுப்பேன். அப்படி ஒவ்வோர் எழுத்தையும், வார்த்தையையும் அவங்க சொல்லிக்கொடுக்க, அதைப் புரிஞ்சுக்கிட்டு நோட்ல எழுதுவேன். அடுத்ததா, அதே வார்த்தைகளை அவங்க உதட்டசைவைப் பார்த்து நான் பேச முயல்வேன்.

ஹைதராபாத்தில் ஒரு `டெஃப் அண்ட் டம்ப் ஸ்கூல்’ல படிச்ச நான், பிறகு நார்மலான குழந்தைகளோட சேர்ந்து ஒரு கான்வென்ட் ஸ்கூல்ல படிச்சேன். ஆரம்பத்தில், ‘இந்தப் பொண்ணால படிக்க முடியுமா’னு தயங்கின அந்தப் பள்ளி நிர்வாகத்துக்கிட்ட, ‘எங்க பொண்ணால என்ன முடியுமோ அதைப் படிக்கட்டும். அவ வாழ்க்கை முன்னேற ஹெல்ப் பண்ணுங்க’னு என் பெற்றோர் வேண்டுகோள் வெச்சாங்க. எல்லாரையும் சந்தோஷப்படுத்துற விதமா நான் பிக்-அப் பண்ணிட்டேன். ப்ளஸ் டூ-வுக்கு மேல படிக்க முடியாத அளவுக்கு நடிப்பில் பிஸியாகிட்டேன்!

ஆபரேஷன்

12 வயசுல சென்னையில எனக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ ஆபரேஷன் செய்தாங்க. அதன் பிறகு ஹியரிங் எய்டு கருவியைப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். அதன் மூலமா 70% செவித்திறன் கிடைச்சது.
பெற்றோர் ஸ்பீச் தெரபியும் கொடுத்ததால, ஓரளவுக்குப் பேசவும் முடிஞ்சது!

சினிமா

சின்ன வயசுலேருந்து ஐஸ்வர்யா ராயை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பத்திரிகைகள்ல அவங்க போட்டோவைப் பார்த்தா, ‘ஐஸ் ஐஸ்’னு கத்துவேன். எனக்கு மீடியால ஆர்வம் இருக்குன்னு புரிஞ்சுகிட்ட என் பெற்றோர், என்னை மாடலிங் துறையில் ஈடுபட வெச்சாங்க. ‘நாடோடிகள்’ வாய்ப்பு எனக்குக் கிடைச்சப்போ, நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். ஷூட்டிங்கில் என் டயலாக்ஸை லிப் மூவ்மென்ட்தான் கொடுப்பேன். ஆரம்பத்துல நிறைய டேக் எடுப்பேன். `என்னால மத்தவங்களுக்குக் கஷ்டம்’னு வருத்தப்படுவேன். ‘டேக் பத்தியெல்லாம் கவலைப்படாதே’னு இயக்குநர் சமுத்திரக்கனி சார் உற்சாகப்படுத்துவார். இப்போவெல்லாம் அதிகபட்சமா ரெண்டு டேக்குக்கு மேல போறதில்லை!

சகோதரர்கள்

அண்ணன் சாய் சுனந்தன் மற்றும் தர்மானந்த் துக்கு இன்னும் நான் குழந்தைதான். வீட்டுல ஓடிப் பிடிச்சு துரத்தி விளையாடுற பழக்கத்தை இன்னும் நாங்க விடலை. மூணு பேரும் சேர்ந்துட்டா டான்ஸ் ஆடியே டயர்ட் ஆகிடுவோம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'நாங்க மூணு பேரும் சேர்ந்தா டான்ஸ் ஆடியே டயர்ட் ஆகிடுவோம்!’ - நடிகை அபிநயா

திருமணம்

ஹைய்யோ... என்ன நீங்களும் எங்கப்பா, அம்மா மாதிரி கேட்கிறீங்க? இப்போ சினிமாதான் என் ஆர்வமா இருக்கு. திருமணம் செய்துக்க தோணினா, அப்போ பண்ணிக்கலாம். என்னை நல்ல நிலையிலுள்ள ஆண் யாராச்சும் கட்டிக்க முன்வருவாங்களான்னு தெரியலை. அப்படியே வந்தாலும் அவர் காலம் முழுக்க என்னை புரிஞ்சு சந்தோஷமா வெச்சுக்குவாரான்னும் தெரியலை. அதனால, என் லைஃப் பார்ட்னர் என்னை மாதிரியே ஒரு மாற்றுத்திறனாளியா இருந்தா பெட்டர்னு நினைக்கிறேன்!

நண்பர்கள்

சின்ன வயசுல கோலி, பம்பரம் விளையாடின ஸ்ட்ரீட் ஃப்ரெண்ட்ஸ் முதல், உயர் பொறுப்புகளில் இருக்கிறவங்க வரை எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அதில் பெரும்பாலானவங்க என்னை மாதிரியே சவால் மனிதர்கள்தான். நாங்க என்னிக்காச்சும் சந்திக்கும்போது சோகமெல்லாம் மறந்து ஜாலி, கேலினு சந்தோஷமா இருப்போம்!

மாற்றுத்திறனாளிகள்

இவர்களே என் கண்ணாடி... சகாக்கள். நான் அதிகமாக பார்க்கவும் பழகவும் நினைக்கும் மனிதர்கள். குறிப்பா, விழிச் சவால் மாற்றுத்திறனாளிகள் மேல எனக்கு அன்பும் மரியாதையும் அதிகம். பத்து வயசுல இருந்து என் பிறந்த நாளை மாற்றுத்திறனாளிகள் ஹோம்லதான் கொண்டாடிட்டு வர்றேன். இணையில்லாத மகிழ்ச்சி அது!

வாழ்க்கை

இந்த வாழ்க்கையை எனக்கு உருவாக்கிக் கொடுத்தவங்க, என் பெற்றோர். ‘வயசானதுக்கு அப்புறம் நீங்க இறந்துட்டா, நான் எப்படி இருப்பேன்? நானும் உங்ககூடவே வந்துடவா’னு எல்லாம் சின்ன வயசுல கேட்டிருக்கேன். ஆனா, இப்போ எந்தச் சூழலையும் எதிர் கொள்கிற நம்பிக்கையையும் பக்குவத்தையும் பெற்றிருக்கேன். ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் அடையாளம் உண்டு. அதைக் கண்டுபிடிக்க நிறைய உழைப்பைக் கொடுக்கணும். அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். அந்தத் தருணத்தில்தான் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர முடியும். லைஃப் இஸ் ஸ்வீட் அண்ட் பியூட்டிஃபுல்!

பெற்றோர்

குழந்தையின் ஒவ்வொரு அசைவும் தாய்க்குத் தெரியும்னு சொல்லுவாங்க. அப்படி என் கேட்கும் திறன், பேசும் திறன் குறைபாட்டை டாக்டர் உறுதி செய்றதுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சவங்க என்னுடைய அம்மா ஹேமலதா. இவங்க, என்னோட ஃப்ரெண்டும்கூட. என் வயசுக்கு இறங்கிப் பேசி என்னை கலகலன்னு வெச்சுப்பாங்க.

நான் கேட்கிறதையெல்லாம் நிறைவேற்றிக்கொடுக்கிறவர், எங்கப்பா ஞானானந்த். என்னோட சவாலான வாழ்க்கைக்குத் தேவையான தன்னம்பிக்கையை ஒவ்வொரு நாளும் வளர்த்துட்டு இருக்கிறவர் இவர்தான்!