Published:Updated:

பண்ணை வீட்டில் ‘பிக் பாஸ்!’

பண்ணை வீட்டில் ‘பிக் பாஸ்!’
பிரீமியம் ஸ்டோரி
News
பண்ணை வீட்டில் ‘பிக் பாஸ்!’

சங்கமம் ஜி.பழனிச்சாமி

ன்றைய வாழ்வியல் சூழலில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை என்பது மறைந்துகொண்டே வருகிறது. கல்யாணம் முடிந்த அடுத்த நாளே தனிக்குடித்தனம் போய்விட ஆசைப்படுகிறார்கள், இந்தத் தலைமுறையினர். பெரும்பாலும் அது நிறைவேறியும்விடுகிறது. அதன் விளைவு, ரத்த உறவுச் சங்கிலியின் கண்ணிகள்  விடுபட்டு, எதிர்கால சந்ததிகளுக்கு உறவுமுறைகள் குறித்த அன்பும் அறிவும் அற்றுப்போய்விடுகிறது.

‘கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்குச் சாத்தியம் இல்லாத இச்சூழலில், ஆண்டுக்கு ஒருமுறை உறவுகள் அனைவரும் கூடி மகிழ்வோம்’ என்கிற கான்செப்ட்டில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், பருவாய் கிராமம், பூந்தோட்டம் பண்ணை வீட்டில் ஒரு குடும்ப விழா நடைபெறுகிறது என்று அறிந்து அங்கு சென்றோம். தோட்டத்தில் உள்ள களத்து வாசலில் தென்னங்கீற்றுகளைக் கொண்டு அமைத்திருந்த நேர்த்தியான பந்தலில், 90 வயது பாட்டீஸ் தொடங்கி 9 மாத குட்டீஸ் வரை குழுமி இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகளை ஒருங்கிணைக்கும் பாலமாகத் திகழும் ஈஸ்வரன் கலை, விளையாட்டு, விநாடி வினா, உணவு என அத்தனை ஏற்பாடுகளையும் சுழன்று சுழன்று செய்துகொண்டிருந்தார்.

பண்ணை வீட்டில் ‘பிக் பாஸ்!’

``எங்கள் சொந்தங்களின் சந்திப்பு நிகழ்ச்சியை ‘பூந்தோட்டம் விழுதுகள் குடும்பச் சங்கமம்’ என்ற பெயரில் நடத்திவருகிறோம். இன்றைய வாழ்வியல் சூழலில் ரத்த உறவுகளுடன் ஒன்றாகச் சந்தித்து அறிமுகமாகிப் பேசி மகிழும் வாய்ப்பு அறவே இல்லை என்கிற நிலையில், அதைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். அதன் விளைவுதான் மூன்று ஆண்டுகளாக, ஆகஸ்ட் 15 அன்று இங்கு நடக்கும் இந்த விழா’’ என்ற ஈஸ்வரன், ``என் தாய்வழி உறவுகளை மட்டும் அழைத்து இந்த ஆண்டு நடத்துவது என்று முடிவுசெய்து உள்ளூர் உறவுகள் தொடங்கி, வெளிமாவட்டம், வெளிநாடுகளில் வசிக்கும் சொந்தங்கள் வரை கலந்து பேசினோம். ‘தேதியைக் குறியுங்கள்... நாங்கள் வருகிறோம்’ என்றார்கள், சந்தோஷமாக. மேற்கு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பெயர் இருக்கும். அந்த வகையில் என் தாய்வழி தாத்தா நாச்சிமுத்து வகையாறாக்கள் ‘பூந்தோட்டம் வீடு’ என்று அழைக்கப்பட்டார்கள். முன்னோர் வாழ்ந்த பூந்தோட்டத்தில் இந்தச் சங்கம விழாவை நடத்தலாம் என்று முடிவானது. என் தாத்தா நாச்சிமுத்து ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதால்  ஆகஸ்ட் 15 அன்று விழாவைக் குறித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பண்ணை வீட்டில் ‘பிக் பாஸ்!’

காலம்சென்ற பூந்தோட்டம் நாச்சிமுத்து - திருமாத்தாள் தம்பதிக்கு பழனிச்சாமி, சுப்பையன் ஆகிய இரண்டு மகன்களும் ராமாத்தாள், சுப்பாத்தாள், உண்ணாத்தாள், பழனியம்மாள், வள்ளியம்மை ஆகிய 5 மகள்களும் என மொத்தம் ஏழு வாரிசுகள். அந்த வாரிசுகளுக்கு 16 மகன்களும் 11 மகள்களும் பிறந்ததில், நாச்சிமுத்துவுக்கு 27 பேரன் பேத்திகள். இந்த 27 பேரன் பேத்திகளின் வழியாக, 21 ஆண்களும் 22 பெண்களும் ஆக மொத்தம் 43 கொள்ளுப்பேரன் பேத்திகள் நாச்சிமுத்து வம்சத்தில் பிறந்தனர். கொள்ளுப்பேரன் பேத்திகளில் சிலருக்குத் திருமணம் ஆகிவிட்டது. அந்த வகையில் கொள்ளுப்பேரன் பேத்திகளின் வாரிசுகளாக 8 எள்ளுப்பேரன்களும், 5 எள்ளுப்பேத்திகளுமாக, 5-வது தலைமுறை வாரிசுகள் 13 பேர் வளர்கிறார்கள். நாச்சிமுத்துவின் நேரடி ஆண் வாரிசுகள் இருவரும் காலமாகி விட்டனர். அதைத் தவிர்த்து மகள்கள், அவர்களின் கணவர்கள், பேரன் பேத்திகள் அவர்களின் துணைகள், கொள்ளுப்பேரன், பேத்திகளின் ஜோடிகள் என்று மொத்தம் 132 சொந்தங்கள் குடும்பச் சங்கம விழாவுக்கு வந்துள்ளனர்” என்று அவர் சொன்னபோது, மூச்சு வாங்கியது நமக்கு.

பண்ணை வீட்டில் ‘பிக் பாஸ்!’

கணேஷ் - அபிநயா தம்பதி அமெரிக்காவில் வசிக்கும் பொறியாளர்கள். தங்கள் கைக்குழந்தை ஆதவ் சகிதம் இந்தக் குடும்ப விழாவில் கலந்துகொள்ள பறந்து வந்தவர்கள். ``நான் நாச்சிமுத்துவின் கொள்ளுப்பேரன். ஸ்கூல், காலேஜ்னு சின்ன வயசில இருந்தே ஹாஸ்டல் வாழ்க்கை வாழ்ந்துட்டேன். கல்யாணம் முடிஞ்சு வேலை கிடைச்சு அமெரிக்கா பறந்தாச்சு. அதனால, நெருங்கின சொந்தக்காரங்க யார், யார்னுகூட தெரியாம போயிடுச்சு. மாமா, அத்தை, சித்தப்பா, சித்தினு முறைவெச்சு பேசுற வாய்ப்புகூட இல்லாம பேச்சு. ஆன்ட்டி, அங்கிள்... இந்த ரெண்டு வார்த்தையைத் தவிர வேற எதுவும் தெரியாது. இந்த வருத்தம் ரொம்ப வருஷமா என் மனசுல இருந்தது. அதை இந்த விழா இன்னிக்கு போக்கிடுச்சு. இனி, வருஷம் தவறாம இந்த விழாவுக்கு வந்துடுவோம்’’ என்று கணேஷ் சொல்ல, அபிநயாவின் முகத்தில் பெரிய புன்னகை.

பண்ணை வீட்டில் ‘பிக் பாஸ்!’

ஜெர்மனியில்  இருந்து வந்திருந் தார்கள் புதுமண தம்பதி யோகானந்த் - சிந்தியா. ``இந்த விழாவுக்கு வந்திருக்கிற 132 பேரில் யாரும் யாரையும் பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது, முறை சொல்லிதான் கூப்பிடணும்கிறது விதி. தாத்தா, பாட்டி, அப்பச்சி, அம்மத்தா, சித்தப்பா, சித்தி, அண்ணா, அக்கா, தம்பி, தங்கச்சி, மாமா, அத்தை, நாத்தனார், கொழுந்தன், சகலை, சம்பந்தி, பேரா, பேத்தினு எல்லோரும் அவங்களோட முறை வெச்சு அழைச்சு பேசியது சூப்பர். சிலம்பாட்டம், கபடி, கயிறு இழுக்கும் போட்டி, நீச்சல், மாட்டுவண்டி பயணம்னு உறவுகளோடு கொண்டாடுற இந்த நிமிஷங்கள், எத்தனை கோடி கொடுத்தாலும் வேறெங்கும் கிடைக்காத விஷயம்’’ என்றார் யோகானந்த். ``வட்டக்கும்பி, ஒயிலாட்டம்னு கிராமியக் கலைகளை எல்லாம் நாங்க பாட்டுப்பாடி, கும்மி அடிச்சுக் கொண்டாடினது... வாவ்!’’ என்றார் சிந்தியா கண்கள் விரிய.

பண்ணை வீட்டில் ‘பிக் பாஸ்!’

ஈஸ்வரனுடன் சேர்ந்து விழாவை ஏற்பாடு செய்திருந்த அவர் மனைவி துளசிமணி, ``யோசிச்சுப் பார்த்தா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கே கூட்டுக் குடும்ப கான்செப்ட்தான் அடிப்படை!” என்று சொல்ல, சுற்றிலும் சிரிப்பு அதிர்கிறது. ``மறைஞ்சுட்டே வர்ற சிறுதானிய உணவுகளையும் இந்த விழா விருந்தில் சேர்த்திருந்தோம். ஆங்கிலம் கலக்காமல் நம்ம வட்டார வழக்கில் பேச குழந்தைகளுக்குக் கத்துக்கொடுத்தோம். நடவு நட ஒரு பாட்டு, களை எடுக்க ஒரு பாட்டு, கதிர் அறுக்க ஒரு பாட்டுனு அதையெல்லாம் பெரியவங்க தெம்மாங்கு போட்டு பாடிக்காட்டினாங்க. சுத்தி போடணும்ங்க எங்க குடும்பத்துக்கு!” என்றார் துளசிமணி. 

சிறப்பு!