Published:Updated:

அன்பு சூழ்ந்தால் அனைத்துத் துயரங்களையும் கடக்கலாம்!

அன்பு சூழ்ந்தால் அனைத்துத் துயரங்களையும் கடக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு சூழ்ந்தால் அனைத்துத் துயரங்களையும் கடக்கலாம்!

புதிய நம்பிக்கைஆர்.வைதேகி

ல்ட்டிபிள் ஸ்க்லெரோசிஸ்... தவணை முறையில் உயிரைப் பறிக்கும் பயங்கர நோய். இருபதுகளின் தொடக்கத்தில் மனிதர்களைக் குறிவைக்கிற இந்தப் பயங்கரம், பெண்களையே அதிகம் பாதிக்கிறது. உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்து போகும்; படிப்படியாக உடல் இயக்கம் முடக்கப்படும். குறிப்பிட்ட சில சிகிச்சைகளின்மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, வாழ்நாளை நீட்டிக்கச்செய்வது மட்டுமே இதில் சாத்தியம். நோயைப் புரிந்துகொள்வதும் அதனுடன் வாழப்பழகுவதுமே மிகப்பெரிய சவால் என்கிற நிலையில், தன்னலம் பற்றியே யோசிக்காமல், பிறர் நலனுக்காகவும் உழைக்கிற பெரிய மனதுக்காரராகக் கவனம் ஈர்க்கிறார் கோவையைச் சேர்ந்த ஸ்வர்ணலதா... மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை செய்துவரும் `ஸ்வர்கா' என்கிற தன்னார்வ அமைப்பின் நிறுவனர்.

அன்பு சூழ்ந்தால் அனைத்துத் துயரங்களையும் கடக்கலாம்!

``வருஷத்துல சில மாசங்கள் நான் ஆஸ்பத்திரியில இருந்தாகணும்கிறது கட்டாயமாகிடுச்சு. அந்த நாள்கள்ல நான், என் குழந்தைகளை, குடும்பத்தை, சராசரி வாழ்க்கையை... இப்படிப் பல விஷயங்களை மிஸ் பண்றேன். அந்தச் சில மாதங்கள் நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கலைன்னா, என் நோய் மறுபடி விஸ்வரூபம் எடுக்கும். நோய் முற்றிலும் குணமாகப் போறதில்லைன்னாலும் அது தீவிரமாகாமப் பார்த்துக்க இந்த நாள்களை நான் கடந்துதான் ஆகணும். அந்தச் சில மாதங்கள்ல என் உடம்புக்கும் மனசுக்கும் கிடைக்கிற தெம்பும் எனர்ஜியும்தான் மிச்ச மாசங்களைச் சரியான திட்டமிடலோடு நகர்த்த உதவுது...'' - ஸ்வர்ணலதாவின் வாழ்க்கையில் மட்டுமல்ல, வார்த்தைகளிலும் எனர்ஜிக்குக் குறைவில்லை.

``பெங்களூருல பிறந்து வளர்ந்தேன். மிட்ஸுபிஷி, அவுடி, ஐ.டி.சி கம்பெனிகள்ல வேலைபார்த்தேன். லைஃப் ரொம்ப இயல்பா, சந்தோஷமா போயிட்டிருந்தது. என் மகனுக்கு அப்போ ரெண்டு வயசு. ஒருநாள்  எனக்குத் திடீர்னு பயங்கரக் காய்ச்சல். மயங்கி விழுந்ததும் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டாங்க.  உடலின் ஒருபக்கம் முழுக்கச் செயலிழந்து போனது. எனக்கு `மல்ட்டிபிள் ஸ்க்லெரோசிஸ்'னு கண்டுபிடிச்சாங்க. தொடர்ச்சியாக ஸ்டீராய்டு மருந்துகள் கொடுத்ததுல ஒரு மாசத்துல 70 சதவிகிதம் சரியானது. ஆனா, எந்தக் காலத்துலயும்  நான் பழைய நிலைக்குத் திரும்ப முடியாதுனு புரிஞ்சுக்கிட்டேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மல்ட்டிபிள் ஸ்க்லெரோசிஸ் என்பது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிற பிரச்னை. நரம்புகள் உடம்பு முழுக்க இணைக்கப் பட்டிருக்கிறதால, ஒட்டுமொத்த உடம்பும் பாதிக்கப்படும்; நடக்கிறது சிக்கலாகும்; அடிக்கடி யூரினரி  இன்ஃபெக்‌ஷன் வரும்; கைகளைச் சரியா இயக்க முடியாது. சுருக்கமா சொல்லணும்னா, ஒவ்வொரு நாளும் உடல்நலம் மோசமாகிட்டே போகும். இது ஏன் வருதுங்கிறதை இன்னும் கண்டுபிடிக்கலை. ஸ்டீராய்டு மருந்து, தற்காலிக நிவாரணம் மட்டுமே. அது உயிரைக் காக்கும்... ஆனால், பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாது. அதனால நான் கேரளாவுக்குப் போய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கறேன். நோயோடு வாழறதைவிடவும் கொடுமையானது, அதுக்கான சிகிச்சைகளை எடுத்துக்கிறது...'' - அவரின் வார்த்தைகளில் தேங்கியிருக்கும் வலி, அந்த வேதனையை நமக்கும் கடத்துகிறது.

அன்பு சூழ்ந்தால் அனைத்துத் துயரங்களையும் கடக்கலாம்!

``எனக்கு உடம்புக்கு முடியாமல் போனதும் பெங்களூரிலிருந்து கோயம்புத்தூருக்கு வந்தோம். ஆஸ்பத்திரிக்கு ட்ரீட்மென்ட்டுக்குப் போகும்போது மர டேபிள் மேல படுக்க வெச்சுதான் எனக்கு மசாஜ் கொடுப்பாங்க. என்னால காலை நீட்ட முடியாது. தினசரி வாழ்க்கையில ஒவ்வோர் அசைவுமே வலி நிறைஞ்சதாகத்தான் இருக்கு. மசாஜ் பண்ணும்போது ஏற்படற வலியை வார்த்தைகளால சொல்ல முடியாது.  ஆனாலும், அதுலேருந்து கவனத்தைத் திருப்பற வித்தையைக் கத்துக்கிட்டேன். குழந்தைங்க விளையாடும்போது எங்கேயாவது விழுந்து அடிபட்டுப்பாங்க... அழுவாங்க. அவங்க அழுகையை நிறுத்த ஏதோ வேடிக்கை காட்டிக் கவனத்தைத் திசைத்திருப்புவோம் இல்லையா? அதையேதான் எனக்கு நான் செய்துக்கறேன். மசாஜ் வலியை மறக்க எனக்குப் பிடிச்ச வேற ஏதோ விஷயங்களை நினைச்சுப்பேன்...'' - தனக்குத்தானே குழந்தையாகிறார் ஸ்வர்ணா.

நினைவுதெரிந்தவரை நன்றாக இருந்த வாழ்க்கை... திடீரென எல்லாவற்றையும் புரட்டிப்போட்ட நோய்... அது மீளமுடியாத துயரம் என்கிற உண்மை... இவையெல்லாம் ஸ்வர்ணலதாவுக்கு அதீத மன அழுத்தத்தைக் கொடுத்ததையும் பகிர்கிறார்.

``2009-ல எனக்குப் பிரச்னை ஆரம்பமானது. 2012 வரை அந்த அதிர்ச்சியிலேருந்து மீளமுடியல. நான் ஆஸ்பத்திரியில இருக்கிற நாள்கள்ல என் குழந்தைகளைப் பார்த்துக்கிற அன்பான கணவரும் அனுசரணையான குடும்பமும் கிடைச்சிருக்கு.  மத்த நோயாளிகள்ல பலருக்கும் அப்படி எந்த ஆதரவுமே இல்லை. அதையெல்லாம் பார்த்த பிறகு, `படிச்ச நாமே இப்படி இருந்தா மத்தவங்க என்ன செய்வாங்க'னு யோசிச்சேன். அந்த எண்ணம்தான் சமூகத்தோடு இணைஞ்சு செயல்படவும் என்னைத் தூண்டியது. முதல்கட்டமா சக நோயாளிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கிறது, யோகா, கைவினைக் கலைகளுக்கான வொர்க்‌ஷாப் நடத்தறதுனு ஆரம்பிச்சேன்.

எதுவுமே தெரியாம இருந்த நான், கீபோர்டு வாசிக்கிறது, கதைகள் எழுதறது, போட்டோகிராபி, கைவினைக்கலைகள் செய்யறதுனு நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். மாடலிங் பண்ணினேன். `இதையெல்லாம் எனக்கான விஷயங்களா மட்டுமே பண்ணிட்டிருக்கேனே... மத்தவங்களுக்கும் கொண்டுபோனா என்ன'ன்னு தோணிச்சு. அதுதான் `ஸ்வர்கா ஃபவுண்டேஷ'னுக்கான விதை. இந்தியா முழுவதும் என்னை மாதிரியே நியூரோமஸ்குலர் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவிகள் செய்யறதுக்கான அமைப்பாக, விழிப்பு உணர்வு விஷயங்களோடு ஆரம்பிச்சது. அப்புறம் அவங்களுக்கான மருத்துவச் செலவுகள், கல்விக்கான உதவிகள்னு அடுத்தகட்டத்துக்குப் போனோம்.

`சாரதி' என்ற பெயர்ல கோயம்புத்தூரில் முதன்முறையா மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவான போக்குவரத்து வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கோம். இது வயசானவங்களுக்கும் மாற்றுத்திறனாளி களுக்குமான சேவை. கழிப்பிட வசதி, ரொம்ப நேரம் உட்கார முடியாதவங்களுக்கான படுக்கை வசதின்னு எல்லாம் இதுல உண்டு. இந்தியா முழுவதிலும் உள்ள மாற்றுத்திறனாளித் திறமையாளர்களைக் கண்டுபிடிச்சு அவங்களை வெச்சு கேலண்டர் டிசைன் பண்ணிட்டிருக்கோம்.

அன்பு சூழ்ந்தால் அனைத்துத் துயரங்களையும் கடக்கலாம்!

கோயம்புத்தூர் பகுதிகள்ல உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களை மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டுக்கு ஏற்ற மாதிரி மாத்தியிருக்கோம். கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல உள்ள கழிவறைகளையும் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டுக்கு ஏற்ற மாதிரி மாத்தியிருக்கோம். அரசாங்கம் சரியில்லைன்னு குற்றம் சொல்லிக்கிட்டே இருக்கிறதைவிட, யாராவது ஒருத்தர் அந்த விஷயங்களைக் கையில எடுத்துச் செய்யணும்கிற எண்ணத்துலதான் இதையெல்லாம் பண்றோம்...'' என்கிற ஸ்வர்ண லதாவின் மிகப் பெரிய பலம் அவரது குடும்பம்.

``கணவர் குருபிரசாத். என்னையும் என் நோயையும் அதிகமா புரிஞ்சுகிட்டவர். எட்டு வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் நாங்க சாதாரண தம்பதியா வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களையும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தோம். அப்போ இருந்த அதே அன்பு இன்னிக்கும் குறையாம இருக்கு. அது இருந்தாதான், அந்த தாம்பத்யம்தான் அர்த்தமுள்ளதுன்னு நினைக்கிறேன். எனக்கு இந்தப் பிரச்னை வந்தபோது என் பையன் கெகனுக்கு ரெண்டு வயசு. அதுக்கு முன்னாடி நான் வேலைக்குப் போனது, சமைச்சதுன்னு நான் சராசரியா இருந்ததை அவன் பார்த்திருக்கான். அவனுக்கு இப்போ பத்து வயசு. பொண்ணு கானாவுக்கு அஞ்சு வயசு. சராசரியான அம்மாவா இருந்திருந்தா இத்தனை நல்ல விஷயங்கள் பண்ணியிருக்க மாட்டேனோ என்னவோ... இப்போ நான் ஈடுபட்டுக்கிட்டிருக்கிற பல விஷயங்களைப் பார்த்து என் குழந்தைங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப சந்தோஷம்.

அன்பு சூழ்ந்தால் அனைத்துத் துயரங்களையும் கடக்கலாம்!

என் உடம்பு எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. ஒருநாள் உடம்பு விறைச்சுடும்;   அசைக்க முடியாது.  காலை நேரத்தைவிட மாலை நேரத்துல உடம்பு கொஞ்சம் சுமாரா இருக்கும். எங்க வேலைகளை எல்லாம் அந்த நேரத்துக்கு ஏத்த மாதிரி மாத்திப்போம். வருஷத்தில் 90 நாள்கள் ஆஸ்பத்திரியில இருக்கணும். எல்லா வேலைகளையும் அதுக்கேத்த மாதிரி பிளான் பண்றதும் நான் இல்லாத குறை தெரியாம குழந்தைகளைப் பார்த்துக்கிறதும் என் கணவரும் என் பெற்றோரும்தான். என்னைச் சுற்றி அன்பு சூழ்ந்திருக்கிறதாலதான் எல்லாவற்றையும் என்னால கடக்க முடியுது...'' - நெகிழ்ச்சியாகச் சொல்கிற ஸ்வர்ணலதாவுக்கு மாற்றுத்திறனாளிகளின் மீதான சமூகப் பார்வையைப் பற்றிய வருத்தம் இருக்கிறது.

``மாற்றுத்திறனாளிகள் யாராவது, ஏதாவது சாதிக்கிறபோது, அவங்க தங்களின்மீது விழும் இரக்கத்தின் காரணமாகவே அந்த வெற்றியை அடையறதா இந்தச் சமூகத்தில் பலரும் பேசறாங்க. சாதாரண நபர்கள் ஒரு விஷயத்தைச் சாதிக்க எடுத்துக்கிறதைவிட 100 மடங்கு அதிகமான முயற்சிகளையும் மெனக்கிடல்களையும் மாற்றுத்திறனாளிகள் எடுக்கறாங்க'' - சீற்றத்துடன் சொல்பவருக்கு மல்ட்டிபிள் ஸ்க்லெரோசிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு மையம் அமைப்பதே அடுத்த லட்சியம்.