Published:Updated:

"கனவுக்கு வடிவம் கொடுக்க ஓடிக்கிட்டே இருக்கோம்!”

"கனவுக்கு வடிவம் கொடுக்க ஓடிக்கிட்டே இருக்கோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
"கனவுக்கு வடிவம் கொடுக்க ஓடிக்கிட்டே இருக்கோம்!”

புது அர்த்தம் கு.ஆனந்தராஜ், படங்கள்: செ.விவேகானந்தன்

“என்னை என் வீல்சேரோட ஏத்துக்கிட்டவர் என் கணவர் வேளாங்கண்ணி. மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி செய்யணும்கிற எண்ணம் எங்களைக் கரம்பிடிக்க வைக்க, அந்தக் கனவுக்கு வடிவம் கொடுக்க தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்கோம்!’’ - வலிகளைக் கடந்து மகிழ்வடைந்திருக்கும் மனுஷியாகப் பேசுகிறார் சோஃபியா.

“பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை. ஏழ்மையான குடும்பம். ரெண்டு அக்கா, ஓர் அண்ணன். எல்லா குழந்தைகளையும்போல துள்ளித் திரிஞ்சு விளையாடிட்டு இருந்தேன். அஞ்சு வயசுல தீவிரமான போலியோ பாதிப்பு ஏற்பட்டுச்சு. வலது கை மற்றும் ரெண்டு கால்களுமே செயலிழந்துடுச்சு. இடது கையும் அறுபது சதவிகிதம்தான் செயல்படும். ஏழு ஆபரேஷன் செஞ்சதுல, காலை மடக்கி நீட்ட முடியற அளவுக்கு மட்டும் பலன் கிடைச்சுது. ஆனாலும், நான் படிக்க ஆசைப்பட்டேன். ‘இந்த உடம்பை வெச்சுக்கிட்டு இன்னும் சிரமப்பட வேண்டாம்’னு அப்பா என்னைப் படிக்க அனுப்பல. அழுது அழுது ஓய்ந்தேன். என் பத்து வயசுல அப்பாவும் இறந்துபோக, படுக்கையும், வீல்சேரும் என் உலகம்னு ஆயிடுச்சு’’ - மெல்லிய புன்னகையை உதிர்த்துப் பேசுகிறார் சோஃபியா.

"கனவுக்கு வடிவம் கொடுக்க ஓடிக்கிட்டே இருக்கோம்!”

“சகோதர, சகோதரிகள் படிச்சுட்டு இருந்தாங்க. அவங்களைப் பார்த்துக்கிட்டு என்னையும் கவனிச்சுக்க சிரமமா இருந்ததால, என்னை ஒரு `மாற்றுத் திறனாளிகள் உண்டு உறைவிடப் பள்ளி’யில அம்மா சேர்த்துவிட்டாங்க.  அங்கே கைவினைத் தொழில்களைக் கத்துக்கிட்டேன். ‘உங்க பொண்ணைப் படிக்கவைத்தால் அவ எதிர்காலம் நல்லா இருக்கும்’னு அந்த ஸ்கூல் நிர்வாகிகள் அம்மாகிட்ட சொன்னாங்க. அதன் பிறகுதான் அம்மா என் 13 வயசுல, ஒரு ஸ்கூல்ல என்னை ஒன்றாம் வகுப்புல சேர்த்துவிட்டாங்க. என் நிலைமை தெரிஞ்சும், ‘இந்த வயசுல அ, ஆ படிக்கிறே’னு பலரும் கேலி செய்வாங்க. நான் கலங்க மாட்டேன். நல்லா படிச்சதால, ஒன்றாம் வகுப்புல இருந்து நேரடியா எட்டாவதுக்கும், அடுத்து பத்தாவதுக்கும் புரமோஷன் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினாங்க.

ப்ளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறம், இனி மாற்றுத்திறன் குழந்தைகளுக்காகவே செயல்படணும்னு முடிவு பண்ணினேன். அழகப்பா பல்கலைக்கழகத்துல கரஸ்ல பி.ஏ முடிச்சேன். சென்னை, தரமணியில இருக்கிற ஒரு இன்ஸ்டிட்யூட்ல, டிப்ளோமா இன் ஸ்பெஷல் எஜுகேஷனும், கரஸ்ல எம்.எஸ்ஸி சைக்காலஜியும், நேரடியா பி.எட் படிப்பும் முடிச்சேன். இந்தச் சூழல்ல என் சகோதர, சகோதரிகளுக்குக் கல்யாணமாகி செல்டில் ஆகிட்டதால, யாருக்கும் பாரமா இருக்கக்கூடாதுன்னு அம்மாவைக் கூட்டிட்டு 2011-ல் சென்னையை அடுத்த பெருங்களத்தூருக்குக் குடிபோனோம். அங்கே சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் டீச்சரா வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அங்கதான் அவர் தன் அன்பைச் சொன்னார்’’ என்கிற  சோஃபியா நெகிழ்ச்சியாகிறார்.

“அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்துல பிறந்தவன் நான்’’ என்கிற  அறிமுகத் தோடு தொடங்குகிறார் வேளாங்கண்ணி, ‘`பி.ஏ வரைக்கும் அங்கே படிச்சுட்டு, சென்னை வந்து ஒரு சர்ச் மூலமாக மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சேவை பண்ற வேலையில சேர்ந்தேன். அடுத்து மெடிக்கல், பேங்க் மார்க்கெட்டிங் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்தாலும், அதிலெல்லாம் விருப்பமில்லை. ஆதரவற்ற, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவும் வகையில என்னோட வேலை இருக்கணும்னு நினைச்சு, சேவை சார்ந்த வேலையையே முழு நேரமா செய்ய ஆரம்பிச்சுட்டேன். அப்படி சோஃபியா வொர்க் பண்ற ஸ்கூலுக்கு ஒருமுறை போனப்போதான் எங்களுக்குள்ள அறிமுகம் ஏற்பட்டுச்சு. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுட்டு நண்பர்களானோம்” என்று வேளாங்கண்ணி சொல்ல...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"கனவுக்கு வடிவம் கொடுக்க ஓடிக்கிட்டே இருக்கோம்!”

“மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி செய்யணும்கிற எங்க ரெண்டு பேருடைய நோக்கமும் ஒரே அலைவரிசையில வந்ததால, வாழ்க்கை முழுக்க நாங்க சேர்ந்து பயணிக்கலாம்னு அவர் நினைச்சார். ஆனா, நான் மறுத்தேன். ‘என்னோட அடிப்படைச் செயல்பாடுகளுக்கே அம்மாவை எதிர்பார்த்து வாழறேன். என்னைக் கல்யாணம் செய்துகிட்டா உங்களுக்கு நான் பெரிய சுமையாத்தான் இருப்பேன்’னு சொல்லி விலகினேன். ‘உன் நிலை நீ சொல்லிதான் எனக்குத் தெரியணும்னு இல்லை. நான் உன்னைப் பார்த்துக்குவேன். நம்ம இணை, சமூகத்துக்கு ஒரு முன்மாதிரியா இருக்கும்’னு சொன்னார். ஒருமுறை வயிற்றுவலின்னு நான் ஹாஸ்பிட்டலுக்குப் போனப்போ, ‘என் கர்ப்பப்பையில கட்டி இருக்கிறதால ஒரு குழந்தையைத் தாங்குற சக்தி அதுக்கில்லை; ஒருவேளை கர்ப்பமானாலும் அது கலைஞ்சுடும்’னு டாக்டர் சொல்லியிருந்தாங்க. அடுத்ததா அதையும் அவர்கிட்ட வெளிப்படையா சொல்லிப் பார்த்துட்டேன். ‘ஒருவேளை நீ நல்லா இருந்து கல்யாணத்துக்குப் பிறகு உனக்கு இந்த நிலை ஏற்பட்டதா நினைச்சுக்கோ. முகம் தெரியாத, பிறக்கப்போற அல்லது பிறக்காத அந்தக் குழந்தையைவிட, எனக்கு நீதான் முக்கியம்’னு அவர் சொன்னப்போ அழுதுட்டேன்’’ எனும்போது கண்ணீர் துளிர்க்கிறது சோஃபியாவுக்கு.

“எங்க வீட்டு எதிர்ப்பை மீறி, 2012-ல் சோஃபியாவைக் கல்யாணம் செய்துகிட்டேன். எங்க அன்புக்குக் கடவுள் தந்த ஆச்சர்ய பரிசானு தெரியலை... சோஃபியா கர்ப்பமானாங்க. பையன் ஜோஸ் ஆன்டன் பிறந்தான். கொஞ்ச நாள்ல வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. அவங்க சம்பளத்துல என்னை `மல்டிபிள் டிஸ்எபிலிட்டிக்கான பிஜி டிப்ளோமா இன் ஸ்பெஷல் எஜுகேஷன் கோர்ஸ்’ படிக்க வெச்சாங்க. ரெண்டு வருஷம் கழிச்சு, பொண்ணு மேரி ஸ்டெல்லா பிறந்தா’’ என்ற தன் கணவரை இடைமறிக்கிறார் சோஃபியா...

``இயல்பா இருக்கிற ஒரு பொண்ணு கர்ப்பமா இருந்தாலே, அவளை பார்த்துக்க ஓர் ஆள் வேணும். அப்போ என் நிலைமையைச் சொல்லவே வேணாம். அப்போவெல்லாம் ஒரு தாயைப்போல என்னைப் பார்த்துக்கிட்டார் என் கணவர். ரெண்டு குழந்தைகளும் சிசேரியன் பிரசவம் வேற. வீடு, சமையல், குழந்தைகள், நான்னு கொஞ்சமும் முகம் சுளிக்காம, சலிக்காம பார்த்துக்குவார். ‘அதுக்காக இந்த வீடே உன் கூடா ஆகிடக்கூடாது’னு சொல்லி, என்னை மீண்டும் வெளி உலகத்துக்கு வர வெச்சதும் அவர்தான். நாங்க ரெண்டு பேரும் சிறப்புக் குழந்தைகளுக்கான அறக்கட்டளை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தோம். அங்க எங்க சேவை மனப்பான்மையைக் கவனிச்ச ஒருத்தவங்க, ‘நாங்க ஆரம்பிக்கவிருக்கிற மனவளர்ச்சிக் குன்றியக் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை, நீங்க நிர்வகிக்க முடியுமா’னு கேட்டாங்க. குன்றத்தூர் போற வழியில் இருக்கும் சோமங்கலம் பகுதியில் இருக்கிற அந்தப் பள்ளியில் இப்போ நான் டீச்சர், அவர் தெரபிஸ்ட். கல்யாணத்துக்குப் பிறகுதான் கணவர் மூலமா வெளியுலக அனுபவங்களும் மத்தவங்களை சந்திச்சுப் பழகும் வாய்ப்பும் அதிகமா கிடைச்சது. அர்த்தமுள்ள வாழ்க்கையை எனக்குக் கொடுத்து, என்னையும் குழந்தையா பார்த்துக்கிற அவராலதான் இந்த ஆயுளைச் சந்தோஷமா கடந்துட்டு இருக்கேன்’’ என சோஃபியா நெகிழ்ச்சியாக முடிக்க...

“அஞ்சு வருஷம் கழிச்சு இப்போ எங்களை என் வீட்டில் ஏத்துக்கிட்டிருக்காங்க. இது எங்க நேசத்துக்கான அங்கீகாரம்... வாழ்க்கைக்கான வெற்றி. இன்னும் வாழ்ந்துகாட்டுவோம்” - தன் மனைவி, குழந்தைகளை வாஞ்சையுடன் அணைத்துச் சிரிக்கிறார் வேளாங்கண்ணி