Published:Updated:

புடவை கட்டுவது எப்படி?

புடவை கட்டுவது எப்படி?
News
புடவை கட்டுவது எப்படி?

க்ளாஸ் எடுக்கிறார் டிசைனர் சலீமா கமால்வே.கிருஷ்ணவேணி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

``எனக்குப் புடவைன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, கட்டத் தெரியாது. கல்ச்சுரல்ஸ், வீட்டு விசேஷங்கள்னு ஒவ்வொரு முறையும் புடவை கட்டிவிட அம்மா, ஃப்ரெண்ட்ஸ்னுதான் தேட வேண்டியிருக்கு. ஈஸியா புடவைகட்ட கற்றுக்கொடுக்க முடியுமா?'' - இது சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் மாடலுமான ஜெயாவின் கேள்வி. இது பலருடைய மைண்ட்வாய்ஸாகவும் இருக்கலாம். அவர்களுக்காக, ஸ்டெப் பை ஸ்டெப் புடவை கட்டும் முறையை இங்கு விளக்குகிறார், சென்னை அமைந்தகரையில் இருக்கும் `சராஸ் பொட்டீக்'கின் உரிமையாளர் சலீமா கமால்.

புடவை கட்டுவது எப்படி?

``ரெண்டு முறை கட்டிப்பார்த்துப் பழகிட்டா, மூணாவது முறை அசத்திடுவீங்க ஜெயா... சாரி டிரேப்பிங் அவ்ளோ ஈஸி!'' என்ற சலீமா, கறுப்பு நிற டிசைனர் புடவை ஒன்றை ஜெயாவுக்காகத் தேர்ந்தெடுத்திருந்தார். க்ளாஸ் ஆரம்பம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புடவை கட்டுவது எப்படி?

ஸ்டெப் 1

புடவையின் முந்தானைக்கு நேரெதிர் முனைதான், உள்முனை. அதில் சிறிய முடிச்சிட்டுக் கொள்ளவும் (பிகினர்ஸ் மட்டும்). அதைத்தான் முதலில் இடுப்பின் வலது ஓரத்தில் செருகி புடவை கட்ட ஆரம்பிக்க வேண்டும். முன்னதாக முன் உள்பக்கம், வெளிப்பக்கம் அறிந்து செருக வேண்டியது அவசியம். பார்டர், எம்ப்ராய்டரி என வேலைப்பாடுகள் உள்ள புடவையில் இதை எளிதாகக் கண்டறிந்துவிடலாம். செல்ஃப் டிசைன், பிளெய்ன் மற்றும் சிந்தடிக் புடவைகளில் உள்பக்கம் வெளிப்பக்கம் அறிவது சற்றுக் குழப்பமாக இருந்தாலும், போகப் போக அதைப் பழகிக்கொள்ளலாம். வலது இடுப்பு ஓரத்தில் செருகிய புடவையின் உயரத்தைத் தேவைக் கேற்ப சரிசெய்துகொண்டு, அதை அப்படியே இடது பக்க இடுப்பு நோக்கி எடுத்துவந்து, பின்புறம் வழியாக ஒரு சுற்றுச்சுற்றி வந்து வலது இடுப்பு வழியாக எடுக்கவும். இதேபோல இன்னொரு சுற்றுச்சுற்றிவந்து நிறுத்தவும்.

புடவை கட்டுவது எப்படி?

ஸ்டெப் 2

இப்போது புடவை யின் முதல் சுற்றில், வலது பக்க இடுப்பில் இருந்து இடது பக்க இடுப்பு நோக்கி, முதுகுப்புறம் வழியாக வந்து மீண்டும் வலது பக்க இடுப்புவரை, புடவையின் மேல் விளிம்பு முழுக்க உள்பாவாடைக்குள் செருகி, கீழ் விளிம்பு தரைதொடும் அளவுக்கு உயரத்தைச் சரிசெய்துகொள்ளவும்.

புடவை கட்டுவது எப்படி?

ஸ்டெப் 3

இரண்டாம் சுற்றுப் புடவையில் வலம் இருந்து இடமாக சுமார் நான்கு விரல் அகலத்துக்கு மடிப்புகளாக ப்ளீட்ஸ் வைத்து, அதை தொப்புள் பகுதிக்கு நேராக வரும்படி செருகிக்கொள்ளவும். வயிற்றில் இருந்து பாதம் வரை அந்த மடிப்புகளை அடுக்குகளாக நீவி எடுத்துவிடவும்.

புடவை கட்டுவது எப்படி?

ஸ்டெப் 4

இப்போது முந்தானை எடுக்கலாம். இடது பக்கத்தில் பார்டரைச் சுருக்கம் இல்லாமல் பின்புறம் நோக்கி நீவி, முதுகு வழியாக எடுத்து, முன்பக்கம் மாராப்பாக எடுத்துப் பின் செய்யவும்... ஓவர்!

புடவை கட்டுவது எப்படி?

ஸ்டெப் 5

``டிசைனர் புடவையை ஜெயாவுக்கு சிங்கிள் ப்ளீட் வைத்துக் கட்டியிருக்கிறோம். இதுவே ப்ளீட் வைத்துக் கட்டுவது எப்படி என்பதை பட்டுப் புடவை கொண்டு ஜெயாவுக்கு உடுத்திப் பார்ப்போம். வயிற்றுப் பகுதி ப்ளீட்ஸ் முடித்தபின்னர் அதேபோல இடது பக்க பார்டரை முதுகு வழியாக நீவிவிட்டு மாராப்பாக முன்னோக்கி எடுத்து வரவும். அவரவரின் உடல்வாகு, விருப்பத்தைப் பொறுத்து, பள்ளுவில் இருந்து ஐந்து, நான்கு என்ற எண்ணிக்கையில் சீராக ப்ளீட்ஸ் வைக்கவும். அனைத்து ப்ளீட்களும் ஒரே அகலத்தில் இருக்குமாறு அதை நீவி சரி செய்துகொண்டே முதுகுப்பக்கம் தொங்கவிடவும். மாராப்பைத் தளர்வின்றி இறுக்கமாக இழுத்தெடுத்து பிளவுஸின் தோள் பகுதியில் ப்ளீட்ஸைப் பின் செய்யவும். மாராப்பு மடிப்புகளை நீவி சரிசெய்து விடவும். அவ்வளவுதான்... செந்தமிழ் நாட்டுத் தமிழச்சி சேலையில் ரெடி!'' என்று க்ளாஸை முடித்தார் சலீமா.

புடவை கட்டுவது எப்படி?

``அட... புடவை கட்டுறது இவ்ளோ ஈஸிதானா? தோழீஸ்... நீங்களும் கத்துக்கிட்டீங்கதானே? இனி நாமளும் சேலை செல்ஃபீஸ்ல கலக்குவோம்'' என்று கண்ணடிக்க, அவருக்கு `ஹை ஃபைவ்' சொன்னார் சலீமா.
நீங்களும் `ஹை ஃபைவ்'தானே கேர்ள்ஸ்?!

சேலை டிப்ஸ்!

* புடவையின் நிறத்துக்கு ஏற்ற நிறத்தில் உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்கவும்.

* உள்பாவாடை நாடாவை வலது பக்கமாக வைத்து முடிச்சிட்டுக் கட்டவும்.

* புடவை கட்டிய பிறகு நகை அணியவும். இல்லையெனில், நகைகளில் உள்ள ஹூக், பீட்ஸ் போன்றவை புடவையில் சிக்கி, நூலை இழுத்துப் பாழாக்கிவிடும்.

* புடவைக்கு ஃபால்ஸ் அட்டாச் செய்து உடுத்தும்போது பார்டர் திரும்பிக்கொள்ளாமல், நீட் லுக் கொடுக்கும்.

* ஹீல்ஸ் அணியும் பெண்கள் புடவை கட்டும்போதே ஹீல்ஸ் அணிந்துகொண்டு அந்த உயரத்துக்கு ஏற்ப புடவையைச் சரி செய்து கட்டவும்.