Published:Updated:

காலங்களைக் கடக்க கால்கள் தேவையில்லை!

காலங்களைக் கடக்க கால்கள் தேவையில்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
காலங்களைக் கடக்க கால்கள் தேவையில்லை!

இவள் போராளி மு.பிரதீப் கிருஷ்ணா

1989... அன்றைய சோவியத் யூனியனில் ‘ஸ்பைனா பைஃபிடா’ என்னும் குறையோடு பிறந்தது ஒரு பெண் குழந்தை. முதுகுத்தண்டில் துளையோடு பிறந்த அந்தக் குழந்தைக்கு இடுப்புக்குக் கீழான உறுப்புகள் சீராக வேலை செய்யாது. பெற்றவர்களால் குழந்தைக்கான வீல் சேரைக்கூட வாங்க முடியாத நிலை. குழந்தையை ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்துவிட்டனர்.

அவருக்கு இப்போது வயது 28. இயற்கையின் வஞ்சகத்தாலும் பெற்றோரின் வறுமையாலும் கைவிடப்பட்டவர் இன்று என்னவாக இருப்பார்? தன் குறைபாடுகளுக்குச் சவால்விட்டு 16 பதக் கங்களோடு பாராலிம்பிக் அரங்கில் தன் பெயரைப் பட்டொளி வீசிப் பறக்க வைத்துள்ளார். அவர்தான் தாத்யானா மெக்ஃபேடன்.

காலங்களைக் கடக்க கால்கள் தேவையில்லை!

சமீபத்தில் லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 200, 400, 800 மற்றும் 1,500 மீட்டர் பந்தயங்கள் அனைத்திலும் தங்கம் வென்று அசத்தியவர் தாத்யானா. இந்தச் சாதனைகளெல்லாம் இவருக்குப் புதியதுமல்ல... பெரியதுமல்ல.

2013-ம் ஆண்டில், லயானில் நடந்த உலக பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஆறு தங்கங்களை வென்று அசாத்திய சாதனை படைத்தவர் இந்தப் பெண். பாரா ஒலிம்பிக்கில் 7 தங்கம் உட்பட 16 பதக்கங்கள். இத்தனை பதக்கங்களையும் 28 வயதுக்குள்ளேயே பெற்று பிரமிக்கவைக்கிறார் தாத்யானா.

தாத்யானாவின் முதுகுத்தண்டுப் பிரச்னையால் கால்கள் செயல்படாது. நடக்க முடியாது. வீல் சேரும் இல்லை. ஆனாலும், முடங்கிக்கிடக்கவில்லை தாத்யானா. நடந்தார்... ைகளாலேயே நடந்தார்.  தன் நம்பிக்கையைத் திரட்டி அவர் கைகளால் நடக்க நடக்க, நடந்தது அந்த மகத்தான மாற்றம்.

 ஒரு கதவை அடைத்த இயற்கை, மறு கதவை அவளுக்குத் திறந்தது. அவருக்கு ஆறு வயது இருக்கும்போது அவரைத் தத்தெடுத்தார் டெபோரா மெக்ஃபேடன் என்ற அமெரிக்கப் பெண். அவரும் ஒரு மாற்றுத்திறனாளிதான். அமெரிக்கச் சுகாதாரத்துறையில் மாற்றுத்திறனாளிகள் டிவிஷனின் கமிஷனர் அவர். அதன்பிறகு தாத்யானாவின் வாழ்க்கை மாபெரும் மாற்றம் கண்டது. அவரது குறைபாடு ஒருகட்டத்தில் உயிருக்குப் பெரும் பாதகமாக மாற, அதிலிருந்து மீள்வதற்காகவும் உடலைப் பலப்படுத்துவதற்காகவும் விளையாட்டுகளின் மீது கவனம் செலுத்தினார் தாத்யானா.அதுவும் ஒன்றிரண்டு விளையாட்டுகளில் மட்டுமல்ல... தான் கண்ட ஒவ்வொரு விளையாட்டிலும் பங்குகொண்டார். ஜிம்னாஸ்டிக், நீச்சல், கூடைப்பந்து, தடகளம், ஸ்லெட் ஹாக்கி என அனைத்திலும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காலங்களைக் கடக்க கால்கள் தேவையில்லை!

அத்தனை விளையாட்டுகளிலும் பங்கெடுத்தவருக்குத் தடகளத்தின் மீது அதீத காதல்.

எட்டு வயதிலேயே வீல்சேர் துணைகொண்டு களத்தில் ஓடவும் தொடங்கிவிட்டார். ஆனால், மீண்டும் இன்னொரு பிரச்னை. பள்ளி மாணவர்களோடு போட்டி போட ஆசைப்பட்டவரைத் தடுத்தது நிர்வாகம். வீல் சேரோடு தாத்யானா ஓடும்போது, அது அவருக்குச் சற்று சாதகமாக அமையலாம் என்பதாலும், வீல்சேரினால் மற்ற மாணவர்களுக்குக் காயம் ஏற்படலாம் என்பதாலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும், மனம் தளராது மாற்றுத்திறன்கொண்ட பிற வீரர்களுடன் போட்டியிட்டு, இன்று சாதனை நாயகியாக உருவெடுத்து நிற்கிறார்.

காலங்களைக் கடக்க கால்கள் தேவையில்லை!

பொதுவாக குறுகிய தொலைவுப் போட்டிகளில் பங்கேற்கும் தடகள வீரர், வீராங்கனைகளால் மாரத்தான் போன்ற நீண்ட நெடும் பந்தயங்களில் ஜொலிக்க முடியாது. அவ்வளவு ஏன், அவர்கள் பங்கேற்கவே மாட்டார்கள்.தாத்யானா அதிலும் விதிவிலக்கு.மாரத்தானையும் ஒருகை பார்த்துவிட வேண்டுமென்று பங்கேற்றார். என்ன ஆச்சர்யம்...அதிலும் குவிந்தன வெற்றிகள். சிறுதூரமோ நெடுந்தூரமோ இவரது சக்கர நாற்காலி சுழன்று கொண்டே இருக்கிறது. அதை அந்த பலமான கரங்கள் வலிமையான இதயத்தின் துணைகொண்டு சுழற்றிக்கொண்டே இருக்கின்றன.

தாத்யானா... இயற்கையால் வஞ்சிக்கப்பட்டவர். ஆனால், தன்முனைப்புடன் போராடி வெற்றி கண்டவர். தன் வெற்றி யோடு நிறுத்திக் கொள்ளாமல் தன்னைப் போன்றோருக்காகவும் போராடுகிறார். அவர் இன்னும் ஓடப்போகிறார். ஓடிக்கொண்டே தான் இருக்கப்போகிறார்.ஏனெனில் அவர், போராளி!