Published:Updated:

உயிரோடு இருக்கிறதை விட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்!

உயிரோடு இருக்கிறதை விட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
உயிரோடு இருக்கிறதை விட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்!

சாகசங்களின் காதலி ஆர்.வைதேகி, படங்கள்: பா.காளிமுத்து

``மரணம் என்பது ஒரு நிகழ்வு. பிறந்த எல்லாரும் ஒருநாள் இறந்துதான் ஆகணும். உயிரோடு இருக்கோமாங்கிறதைவிட நம்ம வாழ்க்கை உயிர்ப்போடு இருக்காங்கிறதுதான் முக்கியம்!''

- மரணத்தை நெருக்கத்தில் பார்த்தவர்களால்தான் இப்படித் தத்துவம் உதிர்க்க முடியும். சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி பிரசாத் அப்படிப்பட்டவர்தான். ஒருமுறை அல்ல, பலமுறை மரணத்துக்கு அருகில் போய்வந்த அனுபவம் உள்ளவர்.

வைஷ்ணவிக்கு மூளையின் மிக முக்கிய தமனிகளில் ஒன்றில் பிரச்னை. எந்நேரமும் ஸ்ட்ரோக்  வரலாம்; வைஷ்ணவி நினைவிழக்கலாம்; எதுவும் நிகழலாம். ஆனாலும், வைஷ்ணவியின் பேச்சைக்கேட்டால் மரணமே மிரண்டு ஓடும். அவ்வளவு தன்னம்பிக்கை. பாரா கிளைடிங், ஸீ வாக்கிங், ட்ரெக்கிங், டைவிங் என சாகச விளையாட்டுகள் பலவற்றின் சாதனையாளர், குழந்தைகளுக்கான கதைசொல்லி, மிருக ஆர்வலர்.

``அப்பா கர்னல் பிரசாத் ஆர்மி ஆபீசர். ஜலந்தர்ல பிறந்து இந்தியா முழுக்கப் பல மாநிலங்கள்ல படிச்சு, வளர்ந்திருக்கேன். 98-ல் சென்னை வந்தோம். சின்ன வயசுலேருந்தே அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமுண்டு. ஆறு வயசுல ஹார்ஸ் ரைடிங் பண்ணப் பழகிட்டேன். க்ளைம்பிங், ட்ரெக்கிங்னு எதைப் பண்ணினாலும், `பொண்ணுங்களுக்கு இதெல்லாம் தேவையா'னு யாரும் வீட்டுல என்னைக் கட்டுப்படுத்தினதில்லை. ஸ்கூல் முடிச்சதும் உத்தரகாண்ட்ல அட்வென்ச்சர் கேம்ப்ல கலந்துக்கிட்டேன். ஆர்வத்தின்பேரில் ஜர்னலிசம் முடிச்சேன். ஆனா, படிப்பை முடிச்சதும் `முழுநேரப் பத்திரிகையாளராகணுமா'னு ஒரு யோசனை. அதனால வேற வேலையில சேர்ந்தேன். 2009, டிசம்பர் மாசத்தை என்னால மறக்கவே முடியாது!'' - வைஷ்ணவியின் `ரீவைண்ட்' பேச்சு, நம்மையும் எட்டு வருடங்கள் பின்னோக்கி அழைத்துச்செல்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உயிரோடு இருக்கிறதை விட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்!

``என்னுடைய புது வேலையில சேர்ந்த ஆறாவது நாள்... காலையில அம்மாகிட்ட பேசிக்கிட்டே வேலைக்குக் கிளம்பிட்டிருந்தேன்.  `ஏண்டி ஒரு மாதிரியா பேசறே... ஒழுங்கா பேசுடி'னு அம்மா சொல்லிட்டிருக்கும்போதே, எனக்குத் தலைசுத்த ஆரம்பிச்சது. அப்படியே உட்கார்ந்தேன். சுற்றிலும் என்ன நடக்குதுன்னே தெரியலை. பயங்கர குழப்பமான ஒரு மனநிலை. என் கையில இருந்த மொபைல் கீழே விழுந்திருச்சு. அதை எடுக்க ஒருபக்கமா சாய்ஞ்சதுதான் தெரியும். வலது பக்கம் முழுக்க செயலிழந்த மாதிரி ஆயிடுச்சு. வாய் கோணிட்டுப் போயிடுச்சு. ஆனால், நினைவு இருந்தது. `ஆம்புலன்ஸைக் கூப்பிடுங்க'னு அம்மாகிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன். வீட்டுல எல்லாருக்கும் பதற்றம். நடந்தது என்னன்னு அப்பாவுக்குத் தெரியலை. `இதுக்குத்தான் ரொம்ப நேரம் மொபைல் யூஸ் பண்ணாதே... கம்ப்யூட்டர் முன்னாடி இருக்காதேனு சொல்றது'னு என்னைக் கன்னாபின்னானு திட்டிக்கிட்டிருந்தார்.

`நிலைமை தெரியாம அப்பா இப்படிக் கத்தறாரே'னு கோபம் ஒருபக்கம்... என் கனவுகள் எல்லாம் சிதைஞ்சிடுமோங்கிற பயம் இன்னொருபக்கம். அது பொறுக்க முடியாம எழுந்து கத்தினேன். அதுல தான் எனக்குச் சரியாச்சு. அப்புறம் நார்மலாயிட்டேன். உடனே டாக்டரைப் பார்த்தோம்.

உயிரோடு இருக்கிறதை விட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்!

`21 வயசுல இப்படி வருவது அபூர்வம். ஃபிட்ஸா இருக்கலாம்'னு அதுக்கு மருந்து கொடுத்தாங்க. சி.டி.ஸ்கேன்ல `எல்லாம் நார்மல்'னு வந்தது. பதினஞ்சு நாள் கழிச்சு மறுபடி எனக்கு அதே மாதிரி வந்தது. அந்த முறை எனக்கு அப்படி வரப்போகுதுனு அஞ்சு நிமிஷம் முன்னாடியே தெரிஞ்சது. மறுபடி டாக்டரைப் பார்த்தோம்.

எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கச் சொன்னாங்க. நம்ம மூளையில மூணு பிரதான ரத்தக் குழாய்கள் இருக்கும். அதுல ஒண்ணுதான் மிடில் செரிப்ரல் ஆர்ட்டரி. அதுல அடைப்பிருக்கிறதாகவும் இது `மினி ஸ்ட்ரோக்'னும் சொன்னாங்க. எல்லா டெஸ்ட்டுகளையும் எடுக்கச் சொன்னாங்க. அப்போ ஆரம்பிச்சது என் ஆஸ்பத்திரி பயணம்.

ஒவ்வொருத்தர்கிட்டயும் என் கதையைச் சொல்வேன். ஆளாளுக்கு ஒரு டெஸ்ட் எடுக்கச் சொல்வாங்க. யாராலயும் என்ன பிரச்னைன்னு கண்டுபிடிக்க முடியலை.  `நீங்க ரொம்ப கவனமா இருக்கணும்... இது உயிருக்கே ஆபத்து'ங்கற பயமுறுத்தல்களையும் தொடர்ச்சியா கேட்டுக்கிட்டே இருந்தேன். கடைசியா `மோயாமோயா'னு ஓர் அபூர்வ நோயா இருக்கலாமோனு சந்தேகப்பட்டாங்க. ஜப்பான்ல அது சகஜம். பொதுவா ஒண்ணு, ரெண்டு வயசுக் குழந்தைகளுக்குத்தான் அதிகம் வருமாம். அதைக் கண்டுபிடிக்க மூளையில ஆஞ்சியோ பண்ணணும்னு சொன்னாங்க. எனக்கு அதுல விருப்பமில்லை. அம்மா ரொம்ப வற்புறுத்தினாங்க.

உயிரோடு இருக்கிறதை விட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்!

எனக்கு பைக் வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை. ஆனா, அதுக்கு வீட்ல பெர்மிஷன் கிடைக்கலை. `பைக் ஓட்ட `ஓகே' சொன்னா ஆஞ்சியோவுக்கு சம்மதிக்கிறேன்'னு சொன்னேன். வேற வழியில்லாம வீட்டுல `ஓகே' சொன்னாங்க. பைக் புக் பண்ணினதும், டிஜிட்டல் ஆஞ்சியோ பண்ணினாங்க. மோயாமோயா இல்லைங்கிறதும் அடைப்பு இருக்கிறதும் உறுதியானது. மூளையில பைபாஸ் பண்றதுதான் தீர்வுனு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆனா, மூளையில பைபாஸ் ரொம்ப ரிஸ்க் நிறைஞ்சது. மண்டையில ஓட்டை போட்டுப் பண்ற அந்த  ஆபரேஷனுக்கு அவ்வளவு சீக்கிரம் யாரும் தயாராக மாட்டாங்க. அந்த ரிஸ்க்கைச் சொல்லி, ஆபரேஷன் இல்லாம வாழ எனக்கு `பிளட் தின்னர்ஸ்' கொடுத்தாங்க. வாழ்நாள் முழுக்க இந்த மருந்துகளைச் சாப்பிடணும். வருஷத்துக்கொரு முறை எம்.ஆர்.ஐ ஸ்கேன் பண்ணி ஏதாவது மாறியிருக்கானு பார்க்கணும். இன்னும் சில வருஷங்கள் கழிச்சு இந்தப் பிரச்னைக்கான காரணங்கள் பத்தித் தெரியவரலாம். ஆனா, இப்போதைக்கு யாருக்கும் எதுவும் தெரியலை.

சென்னை, டெல்லி, மும்பை, அமெரிக்கா வரைக்கும் என் மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் அனுப்பிக் கேட்டாச்சு. யாருக்கும் தெரியலை. ஒரு கட்டத்துல இதைப் பத்தி இனிமே யோசிக்கிறதில்லைனு முடிவெடுத்தேன். டாக்டர்ஸுக்கே தெரியாதபோது நான் அதைப் பத்தி யோசிக்கிறதுல அர்த்தமே இல்லைன்னு தோணிச்சு. மருந்துகளையும் நிறுத்திட்டேன். உள்ளே இருக்கும் பிரச்னை தினசரி வேலைகளைப் பாதிக்கிறதில்லை. அப்புறம் நான் ஏன் அதைப் பத்திக் கவலைப் படணும்?'' என்கிறவர், அந்தப் பக்குவத்தைத் தன் அம்மாவுக்கும் அழகாகப் போதித்திருக்கிறார்.

``முதன்முதல்ல எனக்குப் பிரச்னை வந்தபோது எங்க வீடே சோகம் சூழ இருந்தது. வீட்டுக்கு வரும் எல்லாரும், `ஐயையோ, இப்படி ஆயிடுச்சே'னு பரிதாபப்படுவாங்க. அது, எங்கம்மாவை ரொம்ப பாதிச்சிருக்கு. பயமுறுத்தியிருக்கு. எந்நேரமும் அழுதுட்டே இருந்தாங்க. அவங்ககூட சேர்ந்து நானும் அழுதிட்டிருக்கிறது சரியா இருக்காதுனு நினைச்சேன். `என் மனசுல என்ன ஓடிட்டிருக்கு... இது எந்தளவுக்கு என்னைப் பாதிக்கும்னு யாராவது யோசிச்சீங்களா? எனக்கு சப்போர்ட்டா இருக்கிறதை விட்டுட்டு அழுதுட்டிருக்கிறது சரியா?'னு அம்மாகிட்ட பேசினேன். அன்னிலேருந்து அம்மா அழறதில்லை...'' - என்று சொல்லும் வைஷ்ணவியை நோய் பயத்திலிருந்து  மீட்டெடுத்து, நாள்களை அழகாக்கியிருப்பதில் அவரது அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்துக்கு முக்கியப் பங்குண்டு.

``இப்படியொரு நோய் இருக்கும்போது அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பண்ணலாமானு டாக்டர்ஸ்கிட்ட கேட்டேன். `பண்ணலாம்... ஆனா, நாங்க ரெகமெண்ட் பண்ண மாட்டோம்'னு பாதுகாப்பான பதிலைக் கொடுத்தாங்க. நியூசிலாந்துல பங்கி ஜம்ப்பிங் பண்ணப் போனேன். `ஏதாவது ஆயிடும்... வேணாம்'னாங்க அம்மா. `அப்படி ஏதாவது ஆனாலும், எனக்குப் பிடிச்சதைச் செய்யறப்ப ஆனா சந்தோஷம்தான்'னு சொல்லிட்டுப் போயிட்டேன்.

சிரபுஞ்சியிலேருந்து ஷில்லாங் வரைக்கும் ட்ரெக்கிங் பண்ணிட்டு வந்தேன். மூளைப் பகுதிக்கு ஆக்சிஜன் கிடைக்கலைன்னா எனக்குச் சிக்கலாகிடும். அதனால ஆக்சிஜன் குறையற மாதிரியான எந்த வேலைகளையும் நான் செய்யக்கூடாதுங்கிறது டாக்டர்ஸோட அட்வைஸ். உயரமான பகுதிகளுக்குப் போகிறது, ஆழ்கடலுக்குப் போகிறதை எல்லாம் அவங்க அனுமதிக்க மாட்டாங்க. தாய்லாந்துல `ஸீ வாக்கிங்' பண்ணினேன். அதுல தலையில ஹெல்மெட் போட்டுவிடுவாங்க. அது ரொம்ப கனமா இருக்கும். கடலோட ஆழத்துல இறக்கிவிடுவாங்க. அங்கே நிற்கிறபோது ஹெல்மெட்டுக்குள் ஆக்சிஜன் வரும். அதோடு   நடக்கணும். அப்புறம் மேலே கூட்டிட்டு வருவாங்க. திடீர்னு மூச்சு வாங்க ஆரம்பிச்சது. எனக்கு ஆக்சிஜன் குறையத் தொடங்கிச்சு. பயந்துட்டேன். பேசவும் முடியாது. சைகை மூலமா தகவல் சொல்லி என்னை வெளியில கொண்டுவந்தாங்க.  அதேமாதிரி உயரத்துக்குப் போனாலும் எனக்குச் சீக்கிரமே மூச்சு வாங்கும். `வொயிட் வாட்டர் ராஃப்ட்டிங்'னு ஒண்ணு இருக்கு. பயங்கரமா அலை அடிக்கிற ஆறுல படகுல போகணும். நாமதான் படகை ஓட்டணும். அதேமாதிரி `பிளாக் வாட்டர் ராஃப்ட்டிங்' - அது ஒரு குகைக்குள்ள இருக்கும். அந்த இருட்டுல நாம எங்கே வேணாலும் முட்டி மோதி அடிபடும். இதையெல்லாம்கூடப்  பண்றேன். எனக்குப் பிடிச்ச விஷயங்களைப் பண்றபோது நான் உயிரைப் பத்தியெல்லாம் யோசிக்கிறதில்லை. லைஃப் இஸ் டூ ஷார்ட். இருக்கிறவரைக்கும் சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறேன்...'' - சாகசக் காதலியின் வார்த்தைகளில் நிஜமான சந்தோஷம்!

வைஷ்ணவிக்கு இன்னொரு முகம் உண்டு. பாலியல் அத்து மீறல்களுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்குக் கதைகள் மூலம் அது பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறார். அதன் பின்னணியிலும் வலிகள் சுமந்த அனுபவமிருக்கிறது அவருக்கு.

உயிரோடு இருக்கிறதை விட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்!

``பெர்சனலா நான் என் வாழ்க்கையின் பல தருணங்கள்ல இந்தப் பிரச்னையை அனுபவிச் சிருக்கேன். அப்போ எனக்குச் சொல்லிக்கொடுக்க ஆளில்லை. செக்ஸ் பத்தி கண்டும் கேட்டும் புரிஞ்சுக்கிட்டதுதான். என் 12 வயசுல நடந்தபோது என்னன்னுகூடப் புரியலை. `அவன் இந்த இடத்துல தொட்டான்'னு மட்டும்தான் சொல்லத் தெரிஞ்சது. அப்போ எனக்கு விழிப்பு உணர்வு இருந்திருந்தா அவனை போலீஸ்ல ஒப்படைச்சிருக்கலாம். அதைப் புரிஞ்சுக்கவே பல வருஷங்களாச்சு. வளர்ந்த பிறகும் அது தொடர்ந்திருக்கு. என் 19 வயசுல என் கழுத்துல கத்தியை வெச்சு என்கிட்ட அத்துமீற முயற்சி பண்ணினாங்க.  சம்பவம் நடந்த ஜிம் வாசல்ல ஒரு நாய் இருக்கும். அது எனக்கு ஏதோ பிரச்னைன்னு தெரிஞ்சு குரைக்க ஆரம்பிச்சது. அந்தப் பயத்துல, என்கிட்ட தவறா நடக்க முயற்சி பண்ணினவங்க, அந்த நாயை அடிச்சாங்க. அதுக்குள்ள அந்த நாய் ஒருத்தனோட கையைக் கடிச்சிருச்சு. அதுல பயந்து ஓடிட்டாங்க.  

பாலியல் துன்புறுத்தல், பலரும் நினைச்சிட்டிருக்கிறமாதிரி எங்கேயோ, எப்போதோ நடக்கிற விஷய மில்லை. பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகள் சந்திச்சிட்டிருக்கிற பெரிய பிரச்னை அது. குழந்தைகளுக்கான ஸ்டோரி டெல்லிங் வேலையில இருக்கிறதால அது மூலமா குழந்தைகளுக்கு `குட் டச் பேட் டச்' பத்தின விழிப்பு உணர்வைச் சொல்லித் தரேன். எல்லா ஸ்கூல்லயும் இதைப் பத்தின விழிப்பு உணர்வு கட்டாயமாக்கப்படணும். எல்லாத்தையும்விட பெற்றோர் அவங்க குழந்தைகளுக்கு அதைப் புரிய வைக்கணும். குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கும் நபர்கள் குடும்பத்துக்குள்ளேயேதான் அதிகமா இருக்காங்க. சொந்தக்காரங்களா இருந்தாலும் குழந்தையை முத்தம் கொடுக்கச் சொல்றதையும் கட்டிப்பிடிக்கச் சொல்றதையும் பெற்றோர் தவிர்க்கணும். முக்கியமா `நோ' சொல்லப் பழக்கணும்...'' - அக்கறையுடன் சொல்கிற வைஷ்ணவிக்கு உலகம் முழுவதும் பயணித்துக் களிப்பது, வாயில்லா ஜீவன்களுக்கான புகலிடம் தொடங்குவது எனப் பெருங்கனவுகள் இரண்டு.

உயிரோடு இருக்கிறதை விட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்!

``இதுவரை என் லைஃப்ல நல்லதும் கெட்டதுமா எத்தனையோ அனுபவங்களைப் பார்த்துட்டேன். அத்தனையிலேருந்தும் என்னை மீட்டெடுத்து இன்னும் தைரியமா வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியத்தைக் கொடுத்திட்டிருப்பது என் தாத்தாவோட ஆசீர்வாதம்னு அழுத்தமா நம்பறேன். தாத்தா இறந்தபோது எனக்கு 14 வயசு. அவரைப் பெரியளவுல புரிஞ்சுக்க முடியாத வருத்தம் எனக்குண்டு. அவரைப் பத்தி மத்தவங்க சொல்லிக் கேட்டதுதான் அதிகம். தாத்தா ரொம்ப இரக்க குணமுள்ளவர். குழந்தைகள்னா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன விஷயத்தைக்கூடப் பெரிசா பாராட்டுவார். ஒரு சின்ன பாராட்டு ஒருத்தரோட மனநிலையையே மாத்திடும்கிறதை தாத்தாகிட்டருந்துதான் கத்துக்கிட்டேன். அவர் இருந்திருந்தா இன்னும்கூடப் பக்குவப்பட்டிருப்பேன். ஐ மிஸ் ஹிம்!''

- அன்பில் கரைகிறார் பேத்தி. அவரின் பாசத்துக்குரிய தாத்தா... பிரபல பத்திரிகையாளர் சாவி!