Published:Updated:

கண் பேசும் வார்த்தைகள் புரிகிறதே!

கண் பேசும் வார்த்தைகள் புரிகிறதே!
பிரீமியம் ஸ்டோரி
News
கண் பேசும் வார்த்தைகள் புரிகிறதே!

அசாத்திய தன்னம்பிக்கையாளர் ஆர்த்தி...நம்பிக்கை ஒலியானவள்! கு.ஆனந்தராஜ்

“வணக்கம். எல்லோரும் அங்கே நலமா? இந்த வருஷக் கடைசியில சென்னைக்கு வரும்போது உங்களைச் சந்திக்கிறேன்...” எனும் ஆர்த்தி... வீடியோகாலில் கொஞ்சம் தமிழும், நிறைய ஆங்கிலமுமாக நம்முடன் உரையாடினார். மழலைப் பருவத்தில் செவித்திறனை இழந்தவர், தான் ஒரு மாற்றுத்திறனாளி என்ற எண்ணத்தை மனதில் பதியவிடாமல், உற்சாகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் பொறியாளராகப் பணியாற்றும் இந்த அசாத்திய தன்னம்பிக்கையாளர்,  தன் கணவர் உதவியுடன் நமக்கு அளித்த பேட்டி, நமக்கும் கடத்துகிறது... அவர் உத்வேகத்தை.

“சென்னைதான் பூர்வீகம். அப்பா நாகேந்திரன் இன்ஸ்ட்ரூமென்டேஷன் கம்பெனி நடத்திட்டு இருந்தார். ஓர் அக்கா, தம்பி, தங்கைனு மிடில் கிளாஸ் குடும்பம். என்னோட அஞ்சு வயசுல திடீர்னு கேட்கும் திறனை இழந்துட்டேன். பெற்றோர் பல டாக்டர்களைப் பார்த்தாங்க. என்னோட செவித்திறன் நரம்புகள் எல்லாமே செயலிழந்து போயிடுச்சுன்னு மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லிச்சு. செயற்கை செவித்திறன் கருவியையும் பயன்படுத்த முடியாத நிலையில் நான் இருக்க, அந்த 1979-ம் வருஷம், செவித்திறன் ஆபரேஷன் செய்கிற அளவுக்கு டெக்னாலஜியும் வளரலை. ஒருகட்டத்துல என் பிரச்னைக்கு மருத்துவத் தீர்வு எதுவும் இல்லை, இதுதான் என் விதின்னு தெரியவந்தப்போ அப்பாவும் அம்மாவும் என்னைக் கட்டிப்பிடிச்சு அழுது துடிச்சது என் ஆயுளுக்கும் மறக்கமுடியாத கணம்’’ என்று குரல் தழுதழுக்கிறார் ஆர்த்தி. அதற்குப் பிறகு அவரை சென்னையிலுள்ள காதுகேளாதோருக்கான `கிளார்க் பள்ளி’யில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்திருக்கிறார்கள். அந்தக் குட்டிப் பெண் வெளிமாநிலத்தில் தனியாகத் தங்கி இன்ஜினீயரிங் படிக்கும் அளவுக்கு உறுதிபெற்றதை அவர் விவரிக்கும் போது, ஆச்சர்யம் மேலிடுகிறது நமக்கு.

கண் பேசும் வார்த்தைகள் புரிகிறதே!

``பேச்சு, டி.வி, இசை போன்ற ஒலியுணர் பொழுதுபோக்குகள் எனக்கு இல்லாமப் போக, என் கவனத்தை முழுக்கப் படிப்பில் செலுத்தினேன். ஆறாவது வரை காதுகேளாதோர் பள்ளியில் படிச்ச நிலையில், அதுக்கப்புறம் எனக்கிருந்த குறையை மீறி பயணிக்க நினைச்சேன். அதனால, பெற்றோர்கிட்ட சொல்லி ஒரு மெட்ரிக் பள்ளியில் சேர்ந்து நார்மலான பசங்களோட படிக்க ஆரம்பிச்சேன். பள்ளியில் எனக்குன்னு ஸ்பெஷல் கவனிப்பெல்லாம் இருக்காது. வீட்டில் அம்மாவும், உறவினர் ஒருவரும் எனக்குப் பாடங்கள் சொல்லிக்கொடுப்பாங்க. தூங்குற நேரத்தைக் குறைச்சுட்டு நானே படிச்சுப்படிச்சு நிறையப் பாடங்களைப் புரிஞ்சுக்குவேன். ஆறாம் வகுப்புல மட்டும் கொஞ்சம் திணறினேன், அதுக்கு அப்புறம் பழகிக்கிட்டேன். ப்ளஸ் டூவில் 78% மார்க் எடுத்தேன்.

அப்பா பிசினஸுக்கு உதவுற மாதிரி இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினீயரிங் படிக்க ஆசைப்பட்டேன். பெங்களூரில் ஒரு காலேஜ்ல ஸீட் கிடைச்சது. ‘உன்னால இன்ஜினீயரிங் படிக்கிறதும் தனியா இருந்து படிக்கிறதும் ரொம்ப சிரமம். சென்னையிலேயே ஒரு காலேஜ்ல சிம்பிளான கோர்ஸ் படிக்கலாம்’னு பெற்றோர் சொன்னாங்க. ‘என்னால முடியும்’னு உறுதியா நின்னு, பெங்களூருக்குக் கிளம்பினேன். பொதுவா, செவித்திறன் இழந்தவங்க அவங்களோட தாய்மொழியிலதான் சைகை மொழியைக் கத்துப்பாங்க. அதனால வெளியூருக்குப் போகும்போதும், வேலை சார்ந்த இடங்களுக்குப் போகும்போதும் மற்ற மொழிக்காரங்களோட பேச சிரமமா இருக்கும். இந்தப் பிரச்னை வரக்கூடாதுன்னு அம்மா கொஞ்சம் முன்கூட்டியே சிந்திச்சு, என்னை இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் சேர்த்து விட்டிருந்தாங்க. தவிர, எங்க வீட்டிலும் எனக்காக எல்லோரும் இங்கிலீஷில் பேசுவாங்க என்பதால, வெளியூர்லே என்னால ஆங்கில மொழிகொண்டு சமாளிக்க முடிஞ்சது. உதடுகள் மட்டுமல்ல... மனிதர்களின் கண் பேசும் மொழியையும் கத்துக்கிட்டேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்ஜினீயரிங் சிலபஸ், இன்ஸ்ட்ரூமென் டேஷன் சப்ஜெட்க்னு கடினமானதைத் தேர்ந்தெடுத்தது நான்தான் என்பதால், எந்த சுயபச்சாதாபமும் இல்லாம கடுமையா உழைச்சேன். ஸ்கூல்ல செஞ்ச மாதிரியே, நல்லா படிக்கிற ஃப்ரெண்ட்ஸோட நோட்ஸைப் பார்த்து எழுதிப்பேன். ஹாஸ்டல் ஃப்ரெண்ட்ஸ், என்னோட சந்தேகங்களுக்குப் பதில் சொல்லிட்டு தூங்கிடுவாங்க. விடியற்காலை மூணு மணி வரைக்கும் நான் உட்கார்ந்து படிச்சுட்டு இருப்பேன். அதுக்கெல்லாம் பலனா, 1997-ல் டிஸ்டிங்‌ஷனோடு படிப்பை முடிச்சேன்” என்பவருக்கு, அழகான மண வாழ்க்கையையும் பரிசாக அளித்திருக்கிறது காலம். ‘`இப்போ நான் பேசுறேம்மா’’ என ஆர்த்தியிடம் குறும்பாக சைகை செய்தவாறே, புன்னகையுடன் தொடர்கிறார் அவர் கணவர் ஸ்ரீராம்...

“பி.இ முடிச்சதும் சென்னை வந்த ஆர்த்தி, தன் அப்பா கம்பெனியிலேயே சேர்ந்து வேலை செய்தாங்க. அவங்க படிச்சு முடிச்ச நேரம், வெளிநாடுகளுக்கு உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி பண்ற அளவுக்கு அவங்க அப்பாவின் பிசினஸ் பெரிய அளவுல வளர்ந்திருந்தது. ‘இப்போ வெளிநாட்டுல உனக்குச் சிகிச்சை கொடுக்குற அளவுக்கு நம்மகிட்ட வசதி இருக்கு, வா’னு அவங்க பெற்றோர் சொல்லியிருக்காங்க. ‘என் குறைபாடு என்னை துளியும் தளர்த்தலை. சிகிச்சை வேண்டாம்... இவ்வளவு நாள் நான் வாழ்ந்தது மாதிரியே, இந்தச் சவாலான வாழ்க்கையை ஆயுளுக்கும் வாழ்ந்து கடக்கிறேன். அது என்னைப்போன்ற குறைபாடு உள்ளவங்களுக்கு ஒரு சின்ன முன்னுதாரணமா இருக்கும்’னு ஆர்த்தி சொல்லியிருக்காங்க.

கண் பேசும் வார்த்தைகள் புரிகிறதே!

பொதுவா மாற்றுத்திறனாளிகள், அவங்கள மாதிரியான எதிர்பாலினத்தவரை திருமணம் செய்துக்கத்தான் பெரும்பாலும் முடிவெடுப் பாங்க. ஆனா, குடும்ப நண்பர்களான நாங்க ரெண்டு பேரும் 1999-ம் வருஷம் திருமணம் செய்துகிட்டோம். ‘இது சரியா வருமா’னு கேட்டவங்களுக்கெல்லாம் வாழ்ந்துகாட்டியே பதில் சொல்றோம். திருமணத்துக்குப் பிறகு நான் சென்னையில ஒரு கம்பெனியிலயும், ஆர்த்தி அவங்க அப்பா கம்பெனியிலயும் வொர்க் பண்ணிட்டிருந்த நிலையில், எங்க ரெண்டு பேரோட சுயமுயற்சியில் முன்னேறணும்னு ஒரு சவாலான முடிவெடுக்கும் சூழல் உருவாச்சு. அதனால என் அக்கா வசித்த நியூசிலாந்துல போய் வொர்க் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்” என ஸ்ரீராம் இடைவெளிவிட, “அந்தக் கஷ்டமான சூழல்தான் நிறைய வைராக்கியத்தைக் கொடுத்துச்சு” என நெகிழ்ச்சியுடன் தொடர்கிறார் ஆர்த்தி...

“2003-ம் வருஷம் எங்க மூணு வயசுப் பையன் ரோஷனுடன் நியூசிலாந்து போனோம். அவரோட அக்கா வீட்டுல தங்கி ஏழு மாசமா வேலை தேடி அலைந்தோம். ரொம்பவே வலி மிகுந்ததாக அமைஞ்ச அந்தக் காலங்களில், அழுகையை வைராக்கியத்தால கட்டுப்படுத்திட்டு வாழ்ந்தோம். பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, எங்களுக்கு வேலை கிடைச்சது. மகிழ்ச்சியும் போராட்டங்களும் கலந்தே வேலை மற்றும் குடும்பச் சூழலை எதிர்கொண்டோம்’’ என்ற ஆர்த்தி, ``என்னை உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும்னு எடுத்துச் சொல்லுங்க’’ என்கிறார் கணவரிடம், கண் சிமிட்டி.

“ஆர்த்தியின் தன்னம்பிக்கை குணம், ஆஸம். தனியாவே வேலைக்குப் போறது, யார் துணையும் இல்லாம கார் ஓட்டுறது, வெளியில போயிட்டு வர்றதுனு எப்பவும் இண்டிபெண்டன்ட்டாதான் இருப்பாங்க. நான் துவண்டுப் போறப்போ, முடிவெடுக்க முடியாம தவிக்கிறப்போ என் வழிகாட்டியா இருப்பாங்க. இவங்க என் வாழ்க்கைத்துணையா கிடைச்சதுக்கு நான் கொடுத்துவெச்சிருக்கணும். தான் குறைபாடுடையவள்னு ஆர்த்தி நினைக்காததைப்போலவே, அவங்களை அப்படி நானும் என் பையனும், எங்க கூட இருக்கும் என் அம்மாவும் இதுவரை நினைச்சதில்லை. ஆர்த்தி இடையில்தான் செவித்திறன் இழந்தாங்க என்பதால, அவங்களால பேச முடியும், கேட்கத்தான் முடியாது. வீட்டில் இயல்பாக நாங்க பேச, எங்க உதட்டின் அசைவுகளைக் கவனிச்சு அர்த்தம் புரிஞ்சுக்கிட்டு அவங்க நார்மலா பேசுவாங்க. வெளியிடங்களுக்குப் போகும்போது போன் பேச முடியாது என்பதால, மெசேஜில் தகவல் பரிமாறிப்போம். இப்போ சிட்னி நகரத்துல அவங்க ஒரு முன்னணி கம்பெனியில டெக்னிக்கல் மேனேஜராகவும், நான் சிட்னி நகர மெட்ரோ புராஜெக்ட் இன்ஜினீயராகவும் வேலைபார்க்கிறோம். பையன் இன்ஜினீயரிங்கில் சேரப்போறார்’’ என்று நிறைவுடன் சொல்கிறார் ஸ்ரீராம்.

“என் கணவர், என்னோட பெரிய பலம். ‘சக மனிதர்களுடன் பேச முடியலையே; உலக நிகழ்வுகளை காதுபட தெரிஞ்சுக்க முடியலையேங்கிற வருத்தமெல்லாம், நான் பக்குவப்படுவதற்கு முன்பு அடிக்கடி வரும். அப்போல்லாம் கணவர், குழந்தை, ஃப்ரெண்ட்ஸ், பெற்றோர், உடன்பிறந்தோர், என்னை தங்கையா நினைக்கிற நாத்தனார்கள்னு இந்த வாழ்க்கை எனக்குக் கொடுத்திருக்கிற சந்தோஷங்களை நினைச்சுப்பேன். அதுக்கு முன்னாடி அந்த சோகம், சூரியனைக் கண்ட பனி போல மறைஞ்சுடும்’’ எனும் ஆர்த்தி, தன் கணவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு புன்னகைக்கிறார்.