Published:Updated:

வாழ்வை மாற்றிய புத்தகம் - புரட்சி வாளைக் கையில் கொடுத்த பாவேந்தர் பாரதிதாசன்!

வாழ்வை மாற்றிய புத்தகம்  - புரட்சி வாளைக் கையில் கொடுத்த பாவேந்தர் பாரதிதாசன்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்வை மாற்றிய புத்தகம் - புரட்சி வாளைக் கையில் கொடுத்த பாவேந்தர் பாரதிதாசன்!

டாக்டர் நர்த்தகி நட்ராஜ்படம் உதவி: வினோத் வேலாயுதன்

டனம்  இல்லாமல் இருந்திருந்தால் நர்த்தகி என்பவள் இந்தப் பூமியில் வந்து விழுந்திருக்கவே மாட்டாள். அதுபோலவே புத்தகம் படிப்பது என்ற ஒரு பழக்கம் இல்லாமல் போயிருந்தால்  நான் உயிர்த்திருக்கவே மாட்டேன்.  இதுதான் என் மனம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். இந்தச் சமூகத்தின் எள்ளல்களில் இருந்து நான் கடைத்தேற எனக்குக் கிடைத்த அற்புதம்,  ‘புத்தகங்கள்'.

எங்களது மூதாதையர் மதுரை அனுப்பானடியில் திண்ணைப் பள்ளிக் கூடம், ஓட்டுப் பள்ளிக்கூடம் வைத்து கல்வி போதித்தவர்களாம். எப்படியோ படிக்கும் பழக்கம் இன்றுவரை என் குடும்பத்தில் அனைவருக்கும் உண்டு. என் குழந்தைப் பருவத்தில் என் அத்தை சங்கரேஸ்வரியும் எனது மூத்த அக்கா தனலட்சுமியும் நாவல்கள் படிக்க நூலகத்துக்குத் தூது போகும் தேவதை நான். இப்படியும்கூட எனக்கு வாசிக்கும் பழக்கம் வாய்த்திருக்கலாம். ப்ளஸ் டூ வரை தமிழ்வழியில் படித்த எனக்கு, என் தமிழாசிரியர்கள்தான் நடன ஆர்வத்தையும்  தமிழார்வத்தையும் கிளர்ந்து எழச் செய்தனர். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். 80-90களில் எங்களைப் பற்றி பேசுவதையே அருவருப்பாக நினைத்த சமூகம். ஆனால், மதுரைக்கே உண்டான எதையும் எதிர்த்துப் போராடுவது என்ற குணம் எனக்கும் உரித்தானது.

வாழ்வை மாற்றிய புத்தகம்  - புரட்சி வாளைக் கையில் கொடுத்த பாவேந்தர் பாரதிதாசன்!

புறக்கணிப்புகளைக் கடக்க நான் புத்தகங்களை நாடினேன். இதில் என்னைக் கவர்ந்த புத்தகங்கள் என்றோ, என் வாழ்க்கையைப் புரட்டிப்போட வைத்தவை என்றோ எண்ணிப்பார்க்க ஆரம்பித்தால் பட்டியல் மிகமிக நீளும். அவற்றில் சில புத்தகங்கள் இன்றுவரை அடிக்கடி எடுத்துப் படித்துப் பார்த்து உரமேற்றிக்கொள்பவையாக இருக்கும். அப்பட்டியலில் நான் தரும் முதலிடம் பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகளுக்குத்தான். வாள் வீச்சுப் போன்ற  அவரது படைப்புகள் தந்த வேகம் என்னை ஏளனம் செய்தவர்கள் முன்பு வீறுகொண்டு எழ உதவியாக இருந்தது.

சிறுவயதுப் பருவத்தில் எனக்கு முறையாக நடனம் தெரியாது. `கானகத்தில் வீசும் காற்றுபோல’ எனது நடனம் தன்னிச்சையானது. அப்போது பாரதிதாசனின் ‘பாவோட்டும் பெண்கள்’ பற்றி எழுதிய பாட்டு என் வாட்டத்தைத் தீர்த்தது. என் கிராமத்தின் வாய்க்காலுக்கும் வரப்புக்கும் வயலுக்கும் தோப்புக்கும்கூட இந்தப் பாடல் தெரியும்.

‘இடது கை திரிவட்டம் எழிலொடு சுழலும்

ஏந்தும் வலதுகை வீசும்முன் அசையும்'

தண்டை ஆடிடும் காலில். கொண்டை விழிபோகும் நூலில்.

என்னவொரு பொருத்தம் பாருங்கள்.

ஊராரும் சமூகமும் என்னைச்  சாடும்போதெல்லாம் என் மனம் ஏங்கும், `என்னை அள்ளி எடுத்து ஆதரித்து அணைப்பவர் யார்?' என்று.

‘ஓவியம் கற்றாள்! உன் மகள் காவியம் கற்றாள்! எனவே

ஊரார் உன்தனை மெச்சும் போது! - கண்ணே!

உவகைதான் தாங்குமோ? என் காது! - நீ ஓர்

பா எழுதும் திறத்தால் ஊர் அமைதிகொண்ட தென்று பாரோர் புகழ்வ தென்னாள் ஓது! '

மீண்டும் படித்துப் பாருங்கள்... என் ஏக்க விழிகளுக்கு இந்தப் பாடல் எப்படி இருந் திருக்கும் என்று.

ஒருவேளை இப்படி யெல்லாம் என்னை யாரும் அரவணைக்காததால்தான் என்னவோ எனக்கு அன்பின் அருமை பாரதிதாசன் வாயிலாக வெகுவாகப் புரிந்ததுபோலும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாழ்வை மாற்றிய புத்தகம்  - புரட்சி வாளைக் கையில் கொடுத்த பாவேந்தர் பாரதிதாசன்!

அதுபோலவே சாதியைச் சொல்லி மடமக்கள் மனிதரை ஒதுக்கும்போதெல்லாம், அந்த ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்கும் எங்களுக்கும் ஏதும் வேறுபாடுகள் இருப்பதாக எனக்குப்படுவதில்லை.

`நேரில் பார்க்கத் தகாதோர்: நிழல்பட்டால் தீட்டென்போர்:
பாருக்குள் நாமேயடி சகியே! பாருக்குள் நாமேயடி சகியே!'

இப்படி நான் விரக்தி கலந்த சிரிப்பில் என் திருநங்கைத் தோழி சக்தியிடம் வேடிக்கையாகப் பாடி ஆடிக்காட்டுவேன். அதற்கு சக்தி நெகிழ்ந்துபோய் உடனே...

`நைந்தாய் எனில் நைத்துபோகும் என் வாழ்வு! நன்னிலை உனக்கெனில் எனக்கும்தானே!' என்று அவளும் பாரதிதாசனைத் துணைக்கிழுத்துப் பாடுவாள். பாரதிதாசனின் படைப்புகளுக்குள் நாங்கள் கலந்து மகிழ்ந்து கிடப்பதை விவரிக்க ஆரம்பித்தால்... அது முடிவின்றி நீண்டு கொண்டே போகும்.

‘தாய் என்று பெண்ணை நவில்வார் இப்புவியில் தாய் என்று காட்ட தமிழர்க்கு வாய்த்தவளே!' என்று அவர் பெண் குழந்தை தாலாட்டுக்காக மட்டும் பாடி வைக்கவில்லை. தன் படைப்புகளைப் படித்து என் போன்றோர் பிறருக்கு உதவுவதற்காகவும்தான் படைத்துள்ளார்.

நூலைப்படி... நல்ல தமிழ் நூலைப்படி!