Published:Updated:

ஓடத் துணிந்தால் உற்சாகத்துக்குக் குறைவில்லை!

ஓடத் துணிந்தால் உற்சாகத்துக்குக் குறைவில்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஓடத் துணிந்தால் உற்சாகத்துக்குக் குறைவில்லை!

துணிச்சல் தாரகை ஆர்.வைதேகி

ஷெரில் என்கிற பெயருக்கு அகராதியில் தன்னம்பிக்கை எனப் புது அர்த்தம் சேர்க்கலாம். பெங்களூரில் வசிக்கிற ஷெரிலின் தன்னம்பிக்கையும், `நடந்ததும் நடப்பதும் நன்மைக்கே' என்கிற சித்தாந்தமும் மனவளக் கலைப் போதனைகள். மாற்றுத்திறனாளியாகப் பிறப்ப வர்கள் அவ்வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும், விதியின்வசத்தால் திடீரென மாற்றுத்திறனாளியாக மாறுவோர் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும் மலை யளவு வித்தியாசங்கள் உண்டு. ஷெரில் ரெபெக்கா இரண்டாவது ரகம்.

கல் தடுக்கி கால் இடறினால்கூட கடவுளையும் மற்றவரையும் பழிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், தனக்கு நேர்ந்த விபத்துக்குக் காரணமானவரைப் பற்றிப் பேசி அவர் மனத்தைப் புண்படுத்த விருப்பமில்லை என்கிறார் ஷெரில்.  ``நடந்ததை நான் மறக்க நினைக்கிறேன். நீங்களும் அதைப்பற்றி அதிகம் பேசாமலிருந்தால் சந்தோஷம்...'' - கோரிக்கை யுடன் ஆரம்பமாகிறது ஷெரிலின் அன்புப் பேச்சு...

ஓடத் துணிந்தால் உற்சாகத்துக்குக் குறைவில்லை!

``பூர்வீகம் பெங்களூரு. அப்பா மலையாளி. அம்மா கன்னடம். சின்ன வயசுலேருந்தே எனக்கு மிருகங்கள்னா பிடிக்கும். `ஜூ கீப்பர்' (Zoo keeper) ஆகறதுதான் என்னுடைய கனவா இருந்திருக்கு. வளர்ந்ததும் வைல்ட்லைஃப் கன்சர்வேஷனிஸ்ட்டாகவோ, வைல்ட் லைஃப் பயாலஜிஸ்ட்டாகவோ இருக்கணும்னு ஆசைப்பட்டேன். கனவுகள் சுமந்த காலமெல்லாம் கனவாகவே போயிடும்னு நினைக்கலை.

2016, ஜனவரி... காலேஜ்ல ஒரு ஃபங்ஷன். அதுக்காக என் ஃப்ரெண்ட்கூட டூ வீலர்ல வந்திட்டிருந்தேன்.  அப்பதான் அந்த விபத்து நடந்தது. அடிபட்டுக் கிடந்த நேரத்துல,  நான், என் ஃப்ரெண்ட்கிட்ட `என் கால்களை இழக்கப் போறேன்'னு நினைக்கிறேன்னு சொன்னேன். அப்பவே என் உள்மனசு சொல்லிடுச்சு. ஆனா, ஸ்கேன் எடுக்க ஆஸ்பத்திரிக்குப் போனபோது, டாக்டர்ஸ் எல்லாம் `உனக்கொண்ணும் இல்லை'னு சமாதானம் சொன்னாங்க. மூணு நாள் கழிச்சு ஏதோ சீரியஸானதுல அதே டாக்டர்ஸ் காலை எடுக்கணும்னு சொன்னபோது, எனக்குப் பெரிய அதிர்ச்சியா இல்லை. ஏன்னா, நான் மனசளவுல அதுக்குத் தயாராகியிருந்தேன். அந்த வாழ்க்கைக்கு எப்படிப் பழகணும்கிறதுதான் என் மனசுல ஓடிக்கிட்டிருந்தது...'' - கேட்கிற நமக்குதான் அது அதிர்ச்சி... ஷெரிலுக்கோ அது வெறும் சம்பவம்.

``புதுசா ஓர் இடத்துக்குப் போறோம். அந்த இடம் பழகற வரைக்கும் கஷ்டமாதான் இருக்கும். புதுசா ஒரு மொழியைக் கத்துக்கறபோதும் ஆரம்பத்துல கஷ்டமாதானே ஃபீல் பண்ணுவோம். அப்படித்தான் இதையும் பார்த்தேன். ஆபரேஷன்ல என் காலை வெட்டும்போது நான் விழிப்போடுதான் இருந்தேன். நான் கொஞ்சம்கூட அழலை. `ஐயையோ, இனிமே கால் இல்லாம என் மிச்ச வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போறேன்'னு கலங்கலை. நடந்ததை ஏத்துக்கிற மனநிலை எனக்கு சின்ன வயசுலேருந்தே உண்டு. நான் சுமாராத்தான் படிப்பேன். ஒருவேளை எந்த எக்ஸாம்லயாவது ஃபெயிலாயிட்டாலும் அதுக்காக அழ மாட்டேன். அடுத்தமுறை சரியா படிச்சு சரிபண்ணிடணும்னு நினைப்பேன். அந்தப் பக்குவம்தான் காலை இழந்த நிலையிலயும் என்னை மீட்டெடுத்தது...'' - புன்னகை மாறாமல் பேசுகிற ஷெரிலின் வாழ்க்கையில் விபத்துக்கு முன்பும், விபத்துக்குப் பிறகும் என்று நிறையவே மாற்றங்கள்.

``விபத்துக்கு முன்னாடி நான் அடுத்தவங்களுக்காக நிறைய விஷயங்கள் பண்ணிட்டிருந்தேன்.  பார்வை இல்லாத மாணவர்  களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கேன். அவங் களுக்குப் புத்தகம் படிச்சுக் காட்டறதுலேருந்து, எக்ஸாம் எழுதிக்கொடுக்கிறது வரைக்கும் நிறைய பண்ணியிருக்கேன். ரொம்பவே சுதந்திரமா இருந்திருக்கேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஓடத் துணிந்தால் உற்சாகத்துக்குக் குறைவில்லை!

விபத்துக்குப் பிறகு பல விஷயங்களைச் செய்ய முடியலை. நினைச்சபோது நினைச்ச இடத்துக்கு ஓட முடியாது. காலேஜுக்கு லேட்டானாலும் என்னால படிகள்ல தாவிக் குதிச்சு கிளாஸ் ரூமுக்குப் போக முடியாது. நின்னு நிதானமாத்தான் ஏறிப் போயாகணும். இப்போ  செயற்கைக் கால்தான் (பிராஸ்தெட்டிக்ஸ்) யூஸ் பண்றேன். மழை பெய்யும்போது அந்தக் காலோடு நான் வெளியில போக முடியாது. ஓரமா ஒதுங்கி நின்னு மழை விட்டபிறகுதான் போகணும். மொபைல் போன் தண்ணியில விழுந்தா என்னாகுமோ... அப்படித்தான் இதுவும். ஆனா, இவை எதுவும் என் ஆர்வங்களையோ, நம்பிக்கைகளையோ சிதைக்கலை.

விபத்து நடந்து வீட்டுல இருந்தபோது தினம் என்னைப் பார்க்க யாராவது வருவாங்க. பரிதாபப்பட்டுப் பேசிட்டு ஆறுதல் சொல்லிட்டுப் போவாங்க. அது எனக்குப் பிடிக்கலை. அதுலேருந்து மீண்டு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். விபத்து நடந்து மூணு மாசத்துல காலேஜ்ல ஃபவுண்டேஷன் கோர்ஸுக்கான ஃபெசிலிடேட்டரா இருக்க வாய்ப்பு கிடைச்சது. எல்லாருக்கும் கிடைக்கிற வாய்ப்பில்லை இது. டீச்சிங் வேலைக்கு வரும்போது வாக்கர் யூஸ் பண்ணிட்டிருந்தேன். கிளாஸ் ரூமுக்குள்ள நுழைஞ்சதுமே `தயவுசெய்து யாரும் என்னைப் பார்த்து இரக்கப்படவோ, கண்ணீர் சிந்தவோ வேண்டாம். இது அதுக்கான இடமோ, நேரமோ இல்லை'னு சொல்லிடுவேன். ஸ்டூடன்ட்ஸும் என் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகிட்டாங்க. அடுத்தவங்க நம்மளை எப்படிப் பார்க்கறாங்க என்கிறதை மட்டுமல்ல, எப்படிப் பார்க்கணும் என்கிறதையும் நம்ம நடவடிக்கைகள்தான் முடிவு பண்ணுது....'' - பன்ச் டயலாக் பேசுகிறவர், விபத்துக்குப் பிறகு இன்னும் பரபரப்பாக இயங்குகிறார்.

ஓடத் துணிந்தால் உற்சாகத்துக்குக் குறைவில்லை!

``ஃபேஷன் ஷோஸ்ல கலந்துக்கறேன். நான் கறுப்பு நிறம். அதுக்காகவே நிறைய உதாசீனப்படுத்தப் பட்டிருக்கேன். சிவப்பா இருக்கிறதுதான் அழகுன்னு கேட்டு வளர்ந்த எனக்கு அந்த எண்ணத்தை உடைக்கணும்னு தோணிச்சு. அந்த ஆசையிலதான் ஃபேஷன் ஷோஸ்ல கலந்துகிட்டேன். டிரைவிங் கத்துக்கிட்டேன். டான்ஸ் பண்றேன். மேல்படிப்பு படிக்கிறேன்.

இன்னிக்குத்தான் உங்க வாழ்க்கையோட கடைசி நாள்னு நினைச்சுக்கிட்டு ஒவ்வொரு நாளையும் வாழப் பழகுங்க. காலையில எழுந்திருக்கும்போது நீங்க செய்ய வேண்டிய விஷயங்களை எல்லாத்தையும் அன்னிக்கே முடிக்க முயலுங்க. நாளைக்குப் பார்த்துக்கலாம்னு நினைக்க வேண்டாம். நாளைங்கிறது நிகழாமலேயும் போகலாம்...''

இன்று... ஒன்று... நன்று!