Published:Updated:

‘திறமையும் உழைப்பும்தான் என் அடையாளம்!’

‘திறமையும் உழைப்பும்தான் என் அடையாளம்!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘திறமையும் உழைப்பும்தான் என் அடையாளம்!’

குறையொன்றுமில்லை ச.பவித்ரா, படம்: பா.ராகுல்

``ஸ்கூல்ல படிக்கும்போதிலிருந்து இப்போ வரைக்கும் நான்தான் நம்பர் ஒன். ஏன்னா, எப்பவுமே எனக்கு முன் வரிசை கிடைச்சுரும்” என்று ஜாலியாகப் பேசுகிறார் சுசித்ரா. நான்கு அடிக்கும் குறைவான உயரமே இருந்தாலும், `சாதிக்கத் துணிந்தவருக்கு உயரம் ஒரு குறையல்ல' என்பதை மெய்ப்பித்துவரும் மதுரைப் பெண்.

ஜூட் பேக் மேக்கிங் முதல் க்வில்லிங் வரை 55 வகையான கிராஃப்ட் பொருள்கள் செய்யப் பயிற்சி வழங்கும் சுசித்ராவிடம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் மேல். ‘சுசித்ரா எக்சைம்’ நிறுவனத்தின்மூலம் சுமார் 50 பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார் இவர். மதுரை, விருதுநகர், காரைக்குடி நகரங்களில் பள்ளி கல்லூரிகளிலும் இவரது கைத்திறன் பயிற்சி வகுப்புகள் தொடர்கின்றன. தான் உருவாக்கிய பொருள்களை வெளிநாடுகளிலும் விற்பனை செய்கிறார்.

“எனக்கு அஞ்சு வயசு ஆனதுக்கு அப்புறம்தான் நான் மத்த குழந்தைங்களைவிட வேறுபட்டிருக்கேன்னு அப்பா, அம்மாவுக்குத் தெரியவந்தது. ஆனாலும், அவங்க என்னை ஒரு தேவதையாகத்தான் கொண்டாடினாங்க. எனக்கு கிராஃப்ட் என்கிற துடுப்பைக் கொடுக்க முடிவெடுத்த எங்கம்மா, அதற்கான பயிற்சி வகுப்புகளைத் தேடித்தேடி என்னைச் சேர்த்துவிட்டாங்க.

‘திறமையும் உழைப்பும்தான் என் அடையாளம்!’

பலமுறை நான் நிலைகுலைந்து போய் அழுது தீர்த்திருக்கேன். ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல என்னை நானே சரிசெஞ்சுக்கக் கத்துக்கிட்டேன். மன அழுத்தம் ஏற்படும் போது, வீட்டுல கப்போர்டு, ஷெல்ஃப் எல்லாத்தையும் சுத்தம் செய்வேன். அந்த வேலையை முடிக்கும்போது, என் மனசுல தேங்கியிருந்த வருத்தம், ஆதங்கம், கோபம் போன்ற குப்பைகளெல்லாம் வெளியேறியிருக்கும். இப்படித்தான் என் குறையைப் பொருட்படுத்தாம பயணித்து, என்னால கரஸ்பாண்டன்ஸ்ல டிகிரி முடிக்க முடிஞ்சது. 1995-ல ‘சுசித்ரா ஆர்ட் கேலரி’யைத் தொடங்கினேன். தொடர்ந்து என் ஆர்வம், கைத்திறன் பயிற்சி கொடுக்குறதுல திரும்புச்சு” எனும் சுசித்ராவின் கைவண்ணத்தில் உருவான `ஆர்ட்டிஃபிஷியல் ஜுவல்' இலங்கை சர்வதேச கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. மக்கள் டி.வி-யின் ‘மூவலூர் ராமாமிர்தம் விருது’, ‘சிறந்த சேவையாளருக்கான விருது’, உலக மகளிர் தினத்தில் ‘சிறந்த பெண்மணி விருது’ என்று தன்னை உயர்த்திக்கொண்டிருப்பவர், தன் வாழ்வின் மறக்க முடியாத தருணம் பற்றியும் பகிர்கிறார்...

``எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தப்போ, `எல்லாம் ஓகே’னு சொல்லி, கடைசியில ‘ஆனாலும் உயரம்...’னு நின்னுபோயிடும். அதையும் மீறி என்னை நிச்சயம் பண்ண வந்த ஒருத்தர்கிட்ட, ‘கல்யாணத்துக்கு அப்புறம் நான் உங்ககூட வெளியே வர்றப்போ, மத்தவங்க உங்களைக் கிண்டல் பண்ணுவாங்க. இது வேண்டாம்’னு பேசினேன். `குறைங்கிறது மனசுதானே தவிர உடம்பு இல்லை’னு சொன்னார். அவரே என் கணவரானார். இப்போ வரை எனக்கு உறுதுணையா இருக்கார். என் பொண்ணு சின்ன வயசுல, ‘மம்மி ஏன் டாடி இவ்ளோ குட்டியா  இருக்காங்க... நல்லாயில்லே’ன்னு சொல்லுவா. என் கணவர் ரொம்ப பக்குவமா பேசி அவளுக்குப் புரிய வைப்பார். இப்போ ‘மை மம்மி இஸ் த பெஸ்ட்’னு சொல்றா’’ எனும்போது விழிகளில் ஈரம் கசிகிறது சுசித்ராவுக்கு... பத்தாம் வகுப்பு படிக்கும் அவர் மகள் வினிதாவுக்கும்.

``இப்போ என் உயரம் என் அடையாளம் இல்லை. திறமையும் உழைப்பும்தான் என் அடையாளம். பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடக் கூடாது என்பதை, என் பயிற்சி வகுப்புகளில் வலியுறுத்துறேன். ஏதாவது  ஒரு கலையைக் கத்துக்கிட்டு, தினமும் ஒரு மணி நேரம் செலவு செஞ்சா, அது ஒரு வகையில கைகொடுக்கும். எங்கிட்ட பயிற்சி பெற்ற பெண்கள் பலர் இன்னிக்கு தங்களோட குடும்பத்தை முன்னேற்றப்பாதையில் எடுத்துட்டுப் போறாங்க. தன்னம்பிக்கை மனுஷினு என்னை நானே பாராட் டிக்குவேன்!” என்னும் சுசித்ராவின் குரலில் உற்சாகம் பொங்கி வழிகிறது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz