Published:Updated:

வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல!

வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல!

சாஹா, படங்கள்: தி.குமரகுருபரன்

குழந்தைகளுடனான உலகில் ஆர்வம் கொள்வதும் ஐக்கியமாவதும் எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. அதீத அன்பும், அதைவிட அதிகமான பொறுமையும் இருப்பவர்களுக்கு மட்டுமே அது முடியும். சிறப்புக் குழந்தைகளுடனான உலகம் இன்னும் சிக்கல்கள் நிறைந்தது. அப்படிப்பட்ட குழந்தைகளைக் கையாள சிறப்புத் தகுதிகள் அவசியம். அந்தக் குழந்தைகளின் உடல், மன மொழிகளைப் புரிந்துகொண்டு அவர்களில் ஒருவராக வாழ்ந்துகொண்டிருக்கிறார் சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்த கோமதி ஜெகதீசன். மாற்றுத்திறனாளியான இவர், சிறப்புக் குழந்தைகளுக்கென இல்லம் நடத்துவதுடன், அவர்களுக்கான தொழிற் பயிற்சிகளையும் அளிக்கிறார்.

‘`மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் எடுத்திருக்கேன்.  அந்தக் குழந்தைகளுக்கான சேவையில் சுமார் 30 வருஷங்களா ஈடுபட்டுக்கிட்டிருக்கேன். சிறப்புக் குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. எந்த வேலையும் இல்லாம சும்மா விடும்போதுதான் இந்தப் பிள்ளைங்க ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போடறதையும் ஆக்ரோஷமா நடந்துகிறதையும் பார்ப்போம். ஏதாவது வேலை கொடுத்து, அவங்க கவனத்தைத் திசைத்திருப்பிட்டா... சூழல் மறந்து அதுலயே ஐக்கியமாயிடுவாங்க.

வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல!

அவங்களோட தனிப்பட்ட விருப்பம் மற்றும் ஆர்வத்தின்பேரில் வேறுவேறு பயிற்சிகள் கொடுக்கறேன். டெய்லரிங், சணல் பொருள்கள் தயாரிப்பு, பேப்பர் பொருள்கள் தயாரிப்புன்னு பல பயிற்சிகள் கொடுக்கிறோம். பேப்பர் பொருள்கள் தயாரிப்புங்கிறது இந்தப் பிள்ளைகளுக்குச் சுலபமா இருக்கு. மற்ற பயிற்சிகளை அவங்கக் கத்துக்கிட்டாலும், முழுமையான ஃபினிஷிங் கொடுக்கச் சிரமப்படறாங்க. பேப்பரை வெச்சு விளையாடறதுங்கிறது பிள்ளைகளுக்குப் பிடிச்ச விஷயமா இருக்கிறதும் ஒரு காரணம்...’’ என்கிற கோமதி, காகிதப் பைகள், காகித லேம்ப் ஷேடு, லாண்டரி பைகள், பேனா ஸ்டாண்டு, தட்டு, குப்பைக்கூடைகள் என்று பேப்பரில் எட்டுவிதமான பொருள்கள் செய்யக் கற்றுத்தருகிறார்.

``பேப்பர் பொருள்கள்னு சொன்னதும் காகிதக்கூழை வெச்சு செய்யற அயிட்டங்கள்னு நினைக்க வேண்டாம். இவை எல்லாமே காகிதங்களைத் துண்டு துண்டா கிழிச்சு மோல்டு மேல ஒட்டற வேலை. இந்த அளவுகள்லயோ, இந்த வடிவத்துலயோதான் கிழிக்கணும்னு இல்லை. அவங்க இஷ்டத்துக்குக் கிழிச்சு ஒட்டுவாங்க. இந்தக் குழந்தைகளுக்கு நல்லது கெட்டதைப் பகுத்தறியும் திறன் குறைவு. ஒட்டறதுக்கான பசையை சாப்பிடற பொருளா நினைச்சுடக்கூடாதுங்கிறது முக்கியம். மைதா மாவுப் பசையைத்தான் ஒட்டறதுக்கு கொடுப்போம்; அப்படியே அதை வாய்ல வெச்சுக்கிட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. சிறப்புக் குழந்தைங்ககிட்ட வேலை வாங்கறது பெரிய கலை. இன்னிக்கு இத்தனை பைகள் ஒட்டணும்னு கேட்க முடியாது. அவங்க மனநிலையைப் பொறுத்து விருப்பமிருந்தா செய்வாங்க. இல்லைன்னா, ஒரு நாளைக்கு ஒரே ஒரு பைகூட செய்யாமலும் இருப்பாங்க. அதனால நான் இதை கமர்ஷியலா செய்ய நினைச்சதில்லை. சிறப்புக் குழந்தைகள் இருக்கிற பெற்றோர், அவங்க பிள்ளைகளுக்கும் இந்தப் பயிற்சிகளைக் கத்துக்கொடுக்கலாம். அந்தப் பிள்ளைகளோட ஆக்ரோஷத்தைக் குறைக்கவும் அவங்களை ஏதோ ஒரு வேலையில பிஸியா வெச்சிருக்கவும் இந்தப் பயிற்சிகள் உதவியா இருக்கும். கூடவே, சின்ன அளவுல இதை ஒரு பிசினஸாகவும் செய்து, அந்தப் பணத்தை அந்தக் குழந்தையின் பெயர்ல சேமிக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல!

சிறப்புக் குழந்தைகள் மட்டுமல்லாமல், `ஏதோ ஒரு வருமானம் வேணும்... என்ன செய்யறதுனு தெரியலை’னு நினைக்கிற இல்லத்தரசிகளும் இந்தப் பயிற்சிகளைக் கத்துக்கலாம். பழைய செய்தித்தாள், மைதா மாவு அல்லது பசை, மேலே ஒட்டறதுக்கான அலங்காரத் துணிகள், மோல்டு... இவைதாம் தேவையான பொருள்கள்.  மூவாயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. 50 சதவிகித லாபம் நிச்சயம்...’’ - சிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களின் மிகச்சிறப்பான அம்மாக்களுக்கும்கூட வாழ்வாதாரத்துக்கான வழிகளைக்காட்டுகிறார் கோமதி.

இவரிடம் எட்டுவிதமான பேப்பர் பொருள்கள் தயாரிக்கப் பயிற்சி பெறலாம்.  கட்டணம் ஆயிரம் ரூபாய். சிறப்புக் குழந்தைகளுக்குச் சிறப்புச் சலுகையில் பயிற்சி அளிப்பதாகவும் உத்தரவாதம் தருகிறார்.

``சாதாரண ஆட்கள்னா ஒரே நாளில் எட்டு அயிட்டங்களையும் கத்துக்கலாம். சிறப்புக் குழந்தைகளுக்கு மூணு மாசம் தேவைப்படும். பொறுமையா சொல்லிக் கொடுத்தா நாம எதிர்பார்க்காத அளவுக்குக் கற்பனையை அவங்ககிட்ட பார்க்கலாம். அன்பான அணுகுமுறை மட்டுமே முக்கியம்...’’ - சுருக்கமாகப் பேசி முடித்துவிட்டு, மீண்டும் குழந்தைகளின் உலகினுள் ஐக்கியமாகிறார் கோமதி.