Published:Updated:

அன்று போராளி... இன்று சேவகி!

அன்று போராளி... இன்று சேவகி!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்று போராளி... இன்று சேவகி!

மாற்றம் மு.பார்த்தசாரதி, படங்கள்: மீ.நிவேதன்

மும்பை, நாகுர் பகுதியிலுள்ள பிரபலமான பள்ளி அது. அங்கே மதிய உணவு இடைவேளையில் ஒரு மாணவரை மற்றொரு மாணவர் அடிக்க, அருகிலிருந்தவர்கள் ஓடிப்போய், ‘சுமித்ரா... உன் அண்ணனை அவன் அடிக்கிறான்’ என்று ஆறாம் வகுப்பு படிக்கும் அவளிடம் சொல்கிறார்கள். ஓடிச்செல்லும் சுமித்ரா, தன் அண்ணனை அடித்தவனை தன் வயதுக்குமீறிய பலத்துடன் எதிர்த்து அடிக்கிறாள். அன்றிலிருந்து அவளிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள்கூட பவ்யமாகத்தான் நடந்துகொண்டார்கள்.

‘`அந்தச் சம்பவம்தான் ‘கண்முன் நடக்கும் தவறுகளைத் தைரியமாகத் தட்டிக்கேட்கலாம்’ என்ற நம்பிக்கையை எனக்குள் பலப்படுத்தியது. கல்லூரிக் காலத்தில் வகுப்புகளைத் துறந்து,  கள்ளச் சாராய விற்பனைக்கு எதிராகப் போராடுவது, திருநங்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது, பாலியல் தொழிலாளிகளை மீட்க முன் நிற்பது என்று `ஆங்கிரி யங் கேர்ள்’ ஆகவே வளர்ந்தேன்’’ - ஒரு போராளியாகத் தான் களத்தில் நின்ற கதைகளைச் சொல்லத் தொடங்குகிறார் சுமித்ரா...

அன்று போராளி... இன்று சேவகி!

“அப்போ மும்பையில் வாழ்ந்தோம். என் கூடப் பிறந்த மூணு பேரும் நல்லா படிச்சு அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டாங்க. அதே மாதிரி நானும் செட்டில் ஆகலைன்னு அவங்களுக்கு வருத்தம். எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டத்துக்குப் போறது, குடிகாரர்களின் மனைவிகள், திருநங்கைகளோட பிரச்னைகளுக்குப் போயிட்டு வர்றதெல்லாம் அவங்களுக்கு அதிர்ச்சியா இருந்தது. ஆனா, வீட்டில் என்ன நினைப்பாங்க என்ற கவலையைவிட, நாட்டில் ஏன் இதெல்லாம் நடக்குது என்ற கோபம்தான் அப்போ எனக்கு அதிகம் இருந்தது. குடிக்கு அடிமையான பலர் என் கவுன்சலிங்கில் திருந்தியிருக்காங்க.ஆதரவற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கேன். தெருக்குழாய் பிரச்னையில் இருந்து மாவட்ட நிர்வாகப் புகார்கள் வரை பரபரப்பா ஓடியிருக்கேன். எல்லாமே என் மகன் சீனிவாசன் பிறக்கிற வரைதான்’’ என்று நிறுத்துகிறார் சுமித்ரா.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள சுமித்ரா வீட்டின் வாசற்கதவைத் திறந்தால் சுற்றிலும் நந்தவனமாகக் காட்சியளிக்கிறது. வராண்டாவில் சிலர் ஏதோ வரைந்து கொண்டிருக்கிறார்கள். பாபு எழுந்து வந்து நம்மைக் கட்டியணைத்துக் கொள்கிறார். தரையில் உட்கார்ந்தபடியே ஃப்ளையிங் கிஸ் கொடுத்து வரவேற்கிறார் ரிச்சர்ட். இரண்டு கைகளையும் மேலே தூக்கி சந்தோஷமாக ஆட்டுகிறார் ஷமினா. 40 வயதைக் கடந்த இவர்கள் அனைவரும் ஆட்டிஸக் குறைபாட்டால் மனதளவில் குழந்தைகள். “இவர் ஆனந்த், அவங்க ஹேமலதா, செடிக்குத் தண்ணி ஊத்திட்டு இருக்காளே... அவ ஷோமா, பக்கத்துல நிக்குறது சாபு” என்று ஒவ்வொருவரையும் நமக்கு அறிமுகப்படுத்திய சுமித்ரா, தன் மகனைத் தேடுகிறார்.  ‘`ஐ கண்டு பிடிச்சிட்டேனே’’ என்று வந்து நிற்கிறார் 25 வயதாகும் சீனிவாசன். சுமித்ராவின் மாற்றத்துக்குக் காரணமானவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அன்று போராளி... இன்று சேவகி!

’`என் மூத்த பொண்ணு சௌதன்யா `ஆர்ட் தெரபிஸ்ட்’டா இருக்கா. சீனு ரெண்டாவது பையன். பிறக்கும்போதே ஆட்டிஸக் குறைபாடும் கல்லீரல் வளர்ச்சிக் குறைபாடும் இருந்துச்சு. அதனால, குழந்தை ஏழு வயசு வரை வாழ்றதே பெரிய விஷயம்னு டாக்டர் சொல்லிட்டாங்க. என் உயிரையே சுமையா சுமந்திட்டு இருக்கிற அளவுக்குத் துயரம் என்னை அழுத்திச்சு. ஆனா, கடவுள் என்னை நம்பி இந்தக் குழந்தையைக் கொடுத்திருக்கார்.  இனி, இவனைப் பார்த்துக்கிறது மட்டும்தான் என் பொறுப்புனு முடிவெடுத்தேன். மும்பை வாழ்க்கை, முறுக்கும் கோபம் எல்லாத்தையும் விட்டுட்டுச் சென்னைக்கு வந்துட்டேன்’’ என்கிறவர், பாத்ரூம் போக வேண்டும் என்ற சீனுவை அழைத்துச்சென்று திரும்புகிறார்.

``என் பையனுக்கு ஆயுள் மிகக்குறைவுனு டாக்டர் சொன்னதையும் மீறி, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்புச் சிகிச்சை, உளவியல் சார்ந்த பயிற்சிகள் எல்லாத்தையும் சென்னையில் கத்துக்கிட்டு, அவற்றின் மூலமா அவனை மீட்டெடுத்தேன். அந்தப் பயிற்சிகளுக்கெல்லாம் போனப்பதான், ‘நம்ம புள்ளை மட்டும் நல்லாயிருந்தா போதுமா? ஆட்டிஸக் குறைபாடுள்ள மற்ற பிள்ளைங்களுக்கும் இவையெல்லாம் கிடைக்கச் செய்யணும்’னு முடிவெடுத்தேன். டெய்லரிங், பாடல், யோகானு அவங்கவங்களுக்கு விருப்பமானதைக் கத்துக்கொடுக்கிறேன். ‘இதெல்லாம் செய்றாங்களே’னு அவங்க குடும்பங்களே ஆச்சர்யப்பட்டன. இப்போ இவங்களைப் பங்களிக்க வெச்சு, கேக் ரெடி பண்ணி, பேக்கரிகளுக்குக் கொடுக்கிறோம். இவங்க எல்லோரும் இப்போ சம்பாதிக்கிறாங்க’’ என்று பெரிதுவந்து சுமித்ரா சொன்னபோது, அவர் அம்மா லட்சுமி மாடியிலிருந்து வந்தார்.

‘`குஜராத்ல பூகம்பம் வந்தாலும் சரி, நேபாளத்துல வெள்ளம் வந்தாலும் சரி... முதல் ஆளா ஓடிடுவா சுமித்ரா. 2004-ல சுனாமி வந்தப்போ தனி ஆளா போய் உதவிகள் செய்தா.

அன்று போராளி... இன்று சேவகி!

2015-ல சென்னை, வெள்ளத்துல தத்தளிச்சிட்டு இருந்தப்பவும் போன வருஷம் வர்தா புயல்லயும் களத்துல நின்னு வேலை பார்த்தா. இப்போ, இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் ஓவியம் வரையவும் கைவினைப் பொருள்கள் தயாரிக்கவும் பழக்கப்படுத்தி அதைக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கிறா. அதுல கிடைக்கிற வருமானம் அவங்களுக்கே போய்ச் சேர்ந்துடுது. அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கிற என் மற்ற மூணு பிள்ளைகளைவிட, இவளை நெனைச்சுதான் நான் பெருமைப்படறேன்’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

``என்னால நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா, அதில் என் கணவர் பிரசாத்தின் பங்களிப்பும் இருக்கு. இந்த இடத்துக்கு வாடகை கொடுக்கறதிலிருந்து, இங்கே வர்ற சிறப்புக் குழந்தைகளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுக்கறது வரை எல்லா செலவுகளையும் அவர்தான் செய்றார். நான் வெளியூர் போகிற சூழல்களில், அம்மாதான் இந்தக் குழந்தைகளை எல்லாம் பார்த்துகிறாங்க. அதேபோல, என் பொண்ணும் `தம்பிக்கு மட்டுமே எல்லாம் செய்யுறீங்க. எனக்காக என்ன செஞ்சீங்க’ன்னு இதுவரை கேட்டதேயில்ல. இவங்க மூணு பேரும்தான் என் பலம். இனி, ஆட்டிஸக் குழந்தைகளுக்குப் பயிற்சிகளும் உதவிகளும் சென்றடைய, இந்தியா முழுக்க நெட்வொர்க் ஏற்படுத்தணும். அதை நோக்கிதான் பயணிச்சுட்டு இருக்கேன்’’ என்ற சுமித்ரா, மெல்லிய குரலில் சொல்கிறார்...

``அறம் செய விரும்புவோம்!''