நவராத்திரி... பெண்களின் பெருமை போற்றும் பெருவிழா; பெண் தெய்வங்களுக்குப் பெண்கள் எடுக்கும்

திருவிழா. ஒன்பது தினங்களைக் கோலாகலமாக்கும் இவ்விழா, இந்தியாவின் பல மாநிலங்களிலும் மட்டுமல்ல, தாய்லாந்து நாட்டிலும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
பல நாடுகளிலிருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருக்க, தாய்லாந்து மகா மாரியம்மன் கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவைக்காணக் கண்கோடி வேண்டும். மகா மாரியம்மன் திருவீதி உலா வரும் வைபவத்தைத் தரிசிக்க மட்டுமே மூன்றரை லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதில் இருந்தே, இவ்விழாவின் சிறப்பு நமக்குத் தெரியவரும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


தமிழகத்தின் கலை, பண்பாட்டுத்துறை சார்பில் நாதஸ்வரம், தவில், தேவாரம், திருவாசகம் ஓதுவார் மற்றும் பரதநாட்டியக் கலைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் தாய்லாந்து மகா மாரியம்மன் திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.
சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞரும் நடன ஆசிரியருமான திவ்யசேனா கடந்த 15 ஆண்டுகளாகத் தாய்லாந்தில் நடக்கும் நவராத்திரி விழாவில், தனது திவ்யாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவிகளுடன் சென்று பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அவர் தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.


‘‘நவராத்திரி விழாவுக்குத் தாய்லாந்து செல்லும் நாள்கள் மறக்க முடியாதவை. இந்தப் பிரமாண்டத்தைக் காண்பதற்காகவே 1994-லிருந்து 15 வருஷங்களா வாய்ப்பைத் தவற விட்டுடாம போய்ட்டு இருக்கேன். தாய்லாந்தில் ரொம்பவும் அழகான பெண்கள். அவ்ளோ அன்பா உபசரிப்பாங்க. உதவின்னு கேட்கறதுக்கு முன்னாடியே நம்ம முகத்தைப் பார்த்தே, `என்ன வேணும்'னு பக்கத்துல வந்து கேட்டுடுவாங்க. பார்க்க மென்மையா இருந்தாலும் மனதளவில் வலிமையானவங்க. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் கலங்கிட மாட்டாங்க. பல துறைகள்லயும் இந்தப் பெண்கள் சாதிக்கிறதைப் பார்க்கலாம். அங்கே நள்ளிரவுலகூட தனியாகப் போய் வரலாம். பெண்கள் அவ்வளவு சுதந்திரமாத்தான் தாய்லாந்துல இருக்காங்க.


நவராத்திரி விழாவில் விநாயகர், முருகன், அம்மன்னு திருவீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அங்கே கூடுகிற அஞ்சு லட்சம் மக்கள்ல மூன்றரை லட்சம் பேர் பெண்கள். பார்க்கவே பிரமிப்பா இருக்கும். அவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஒரு சத்தம், பிரச்னை இருக்காது. எல்லாமே திட்டமிட்டபடி நடக்கும்.
உலகத்தில் எங்கிருந்து வந்திருந்தாலும் ஒரே மாதிரியான அன்பு. அவ்வளவு கூட்டத்துக்கு மத்தியிலயும் நான் பாதுகாப்பா உணர்ந்தேன்.
தாய்லாந்து நவராத்திரி விழாவில் ஆச்சர்யங்கள் நிறையவே இருக்கு. பரதநாட்டியப் பாடல்களையும் நடன அசைவுகளையும் பொருத்திப் பார்த்து அவ்வளவு அழகா ரசிக்கிறாங்க.
மகா மாரியம்மன் கோயிலுக்கு வர்ற பெண்கள் நேர்த்திக்கடனா தேங்காய் உடைப்பாங்க. உடைச்ச சில நிமிடங்கள்ல அந்த இடம் அவ்வளவு சுத்தமாகிடும். தேங்காய் உடைக்கிற இடத்தைச் சுத்தமா வெச்சிருக்கவே சுமார் 500 பேர் கொண்ட டீம் இயங்குது. இது ஒரு உதாரணம்தான். உணர்வுபூர்வமாகவும், ரொம்ப சந்தோஷமாகவும் ஒரு திருவிழால கலந்துக்கணும்னு நினைக்கிற யாரும் தாய்லாந்துல நடக்குற நவராத்திரி விழாவுக்குப் போகலாம்’’ என்கிறார் திவ்யசேனா.
தமிழக அரசு கலை, பண்பாட்டுத் துறையின் மண்டல இயக்குநர் ஹேமநாதன் நடனம் மற்றும் இசைக்கலைஞர்களை தாய்லாந்து நவராத்திரி விழாவுக்கு அழைத்துச் செல்கிறார். கடந்த 24 ஆண்டுகளாக அவர் இந்த விழாவில் பங்கேற்கிறார். தாய்லாந்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து அவர் கூறுகிறார்...


‘‘சீதை மிதிலையில் பிறந்ததாகக் கூறு வோம். ஆனால், தாய்லாந்தில் தான் சீதை பிறந்தார்னு அந்த மக்கள் நம்பறாங்க. இன்றும் அந்த நாட்டின் மன்னர்களை முதலாம் ராமா, இரண்டாம் ராமான்னுதான் அடையாளப்படுத்தறாங்க. மகா மாரியம்மன் விழா இவ்வளவு பிரமாண்டமா கொண்டாடப்படறதுக்கு, `சீதை எங்கள் நாட்டில்தான் பிறந்தார்' என்கிற அவங்களோட நம்பிக்கையும் ஒரு காரணமா இருக்கலாம்.
தாய்லாந்துல பேசும் மொழி ‘தாய்’. இப்படி வரலாறு, பண்பாடு சார்ந்த பல விஷயங்கள்லயும் பெண்கள் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறதை உணரலாம். `தாய்' மொழியில நம்மோட தாய்த்தமிழையும் உணரலாம். அந்தத் திருவிழா நம்பிக்கைகள், பாடல், நடனம் எல்லாம் ஏதோ ஒரு வகையில தமிழ் உணர்வையும் நமக்குள்ள ஏற்படுத்தும். தமிழகப் பெண்கள், சீனப் பெண்கள், தாய்லாந்து பெண்கள் எல்லாரும் தங்களோட பாரம்பர்யக் கலைநிகழ்ச்சிகளை நவராத்திரி விழாவில் கொண்டாடுறாங்க. இந்த விழாவே பெண்களின் மிகப்பெரிய சங்கமமாகத்தான் நம்மால உணர முடியும். கோயில் பூஜைப் பணிகள், பக்தர்களுக்கு உதவும் பணிகள் என்று எல்லா இடங்கள்லயும் பெண்களைப் பார்க்க முடியும். அன்புக்கும் கனிவுக்கும் இன்னொரு பெயர்தான் தாய்லாந்து பெண்கள்.

இந்தப் பக்திச் சங்கமத்துல ஒரு வருஷமாவது ஒவ்வொரு பெண்ணும் கலந்துக்கணும். இந்த விழா நம்மூர் பெண்களுக்கு நிறைய தன்னம்பிக்கையைத் தரும்’’ என்கிறார் ஹேமநாதன்.
நவராத்திரி என்றாலே கோலாகலம்தானே!