Published:Updated:

துப்புரவுப் பணியாளர்... பட்டப்படிப்பு படிக்கிறார்!

துப்புரவுப் பணியாளர்... பட்டப்படிப்பு படிக்கிறார்!
பிரீமியம் ஸ்டோரி
துப்புரவுப் பணியாளர்... பட்டப்படிப்பு படிக்கிறார்!

முயன்றால் முடியும்செ.சல்மான், படங்கள்: வீ.சதீஷ்குமார்

துப்புரவுப் பணியாளர்... பட்டப்படிப்பு படிக்கிறார்!

முயன்றால் முடியும்செ.சல்மான், படங்கள்: வீ.சதீஷ்குமார்

Published:Updated:
துப்புரவுப் பணியாளர்... பட்டப்படிப்பு படிக்கிறார்!
பிரீமியம் ஸ்டோரி
துப்புரவுப் பணியாளர்... பட்டப்படிப்பு படிக்கிறார்!

ரேகாவின் வெற்றியைப் பல்லோட்டி பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அப்படியென்ன சாதனை செய்துவிட்டார் ரேகா? பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 837/1200 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இது சாதனையா? ஆம்! காரணம்... ரேகா மாணவி அல்ல... அப்பள்ளியின் துப்புரவுப் பணியாளர்!

மதுரை, நாகமலை புதுக்கோட்டை அருகில் செயல்படும் சேவை அமைப்பான ‘பில்லர்’ மையத்தினரால் நடத்தப்படும் பல்லோட்டி பள்ளியின் துப்புரவுப் பணியாளர் ரேகா. அதே பள்ளியில்தான் அவருடைய மகனும் மகளும் படிக்கிறார்கள். இளம் வயதிலேயே கணவரை இழந்த ரேகா, ஆலம்பட்டி என்ற கிராமத்திலிருந்து தினமும் இங்கு வேலைக்கு வருகிறார். கிடைக்கும் நேர இடைவெளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடங்களைக் கவனித்து உள்வாங்கி இந்த மதிப்பெண்ணைப் பெற்றுள்ளார் என்பது சிறப்பு.

துப்புரவுப் பணியாளர்... பட்டப்படிப்பு படிக்கிறார்!

‘`வாடிப்பட்டிக்குப் பக்கத்துல இருக்கிற குட்லாடம்பட்டிதான் நான் பொறந்த ஊரு. விவசாயக் குடும்பம். நல்லா படிப்பேன், நிறைய படிக்கவும் ஆசை. ஆனா, எட்டாவது படிச்சதோட 16 வயசுல, அத்தை மகனுக்கு என்னைக் கல்யாணம் முடிச்சு வெச்சுட்டாங்க. ஆலம்பட்டிக்கு வந்துட்டேன். ஆணு, பொண்ணுன்னு ரெண்டு புள்ளைங்க. நல்லா இருந்தோம். ஆனா, என் வீட்டுக்காரர் திடீர்னு மாரடைப்பால இறந்துட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெண்டு புள்ளைங்கள ஆளாக்க வழி தெரியலை. அப்போதான் இந்தப் பள்ளிக்கூடத்துல வேலைக்குச் சேர்ந்தேன். என் புள்ளைங்களையும் இங்கேயே படிக்கச் சேர்த்துக்கிட்டாங்க. வார்த்தைக்குச் சொல்லலை...

துப்புரவுப் பணியாளர்... பட்டப்படிப்பு படிக்கிறார்!

ஆபீஸ்ல இருக்குறவங்கள்ல இருந்து டீச்சருங்க வரை இங்க எல்லாருமே ரொம்ப அன்பா இருப்பாங்க. நம்ம முகம் கொஞ்சம் வாட்டமா இருந்தாலும் கவனிச்சு விசாரிச்சிடுவாங்க. காலையில நான், பிள்ளைங்கன்னு மூணு பேருமா கிளம்பி வந்து, சாயங்காலம் சேர்ந்து திரும்பிப் போவோம்’’ என்றவர், வேலைகளுக்கு இடையே   தன் ஆர்வத்தால் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைக் காதில் வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.

‘`நான் எட்டாவது வரை படிச்சிருக்கிறதால, பத்தாம் வகுப்பு க்ளாஸைதான் ஆர்வமா கேட்பேன். இப்படி நான் வேடிக்கை பார்க்கிறதை கவனிச்ச எச்.எம் மரிய அமலி மேடம், ‘படிக்க ஏற்பாடு செஞ்சு கொடுத்தா படிப்பியா’னு கேட்டாங்க. எனக்குச் சந்தோஷமா இருந்தாலும், அது சரியா வருமானு தெரியலை. படிச்சிக்கிட்டா பொழச்சுக்கலாமேனு தவிப்பு ஒரு பக்கம். உறுதியா ‘படிக்கிறேன் மேடம்’னு சொல்லிட்டேன். அவங்களும் ஃபாதர் இமானுவேல்கிட்ட அனுமதி வாங்கி, தினமும் சாயங்காலம் ஒரு மணி நேரம் பள்ளியில் நடக்கும் ட்யூஷன்ல என்னையும் கலந்துக்க வெச்சாங்க.

ஆரம்பத்துல கூச்சமா இருந்தாலும், அப்புறம் டீச்சருங்ககிட்ட சந்தேகம் கேட்க, டெஸ்ட் எழுதன்னு வேகம் வந்துருச்சு. வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் புள்ளைங்களோட சேர்ந்து நானும் படிப்பேன். 10 வருஷ இடை வெளிக்குப் பிறகு படிச்சாலும், ஆர்வம் அப்படியேதான் இருந்துச்சு. என் புள்ளைங்களும், ‘அம்மா படிச்சிட்டு வரட்டும், அப்புறமா சோறு கேட்போம்’னு எனக்காகக் காத்திருக்குங்க. அடுத்ததா,  தொலைதூரக் கல்வியில டிகிரி படிக்கிறேன்!” - நன்றி, மகிழ்வு, கனிவு என்று ரேகாவின் முகத்தில் பரவசம்.

துப்புரவுப் பணியாளர்... பட்டப்படிப்பு படிக்கிறார்!

தலைமையாசிரியர் மரிய அமலி, ‘`ரேகாவுக்கு இயல்பிலேயே படிப்பதில் மிக ஆர்வம். தனித்தேர்வராகப் பரீட்சை எழுதினாலும், கணிதம், ஆங்கிலம், அக்கவுன்டன்சி பாடங்களை வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து படிக்க அனுமதித்தோம். எங்கள் மாணவர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். இடையில் கம்ப்யூட்டர் கோர்ஸும் பள்ளியிலேயே முடித்துள்ளார். எந்தச் சூழலிலும் கல்வி கற்கலாம் என்பதற்கு ரேகா ஓர் உதாரண மனுஷி. அதனால்தான் எங்கள் பள்ளி விழாக்களில் அவரை மேடையேற்றிக் கௌரவிக்கிறோம். ‘அக்காவே படிக்கிறாங்க, நம்மளால முடியாதா?’ என்று அவரால் நம்பிக்கை பெறுகிறார்கள் எங்கள் மாணவர்கள்” என்று பெருமிதத்துடன் சொல்ல, அதை கவனித்துக்கொண்டிருந்த ரேகாவின் பிள்ளைகளின் முகமெல்லாம் மகிழ்ச்சி. அதை நாம் ரேகாவுக்குக் காட்ட, அந்த அம்மாவின் முகத்தில் ஆயிரம் சூரியன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism