Published:Updated:

மனுஷி - அமிழ்தினும் இனிதான தாய்ப்பால்!

மனுஷி - அமிழ்தினும் இனிதான தாய்ப்பால்!
பிரீமியம் ஸ்டோரி
News
மனுஷி - அமிழ்தினும் இனிதான தாய்ப்பால்!

சுபா கண்ணன், ஓவியம்: ஸ்யாம்

பெண்மையை யாரெல்லாம்  மதிக்கிறார்களோ அவர்களே மேன்மக்கள். பெண்மையை மதிப்பவர்கள் எவருமே பெண்களை அடிமைப்படுத்த விரும்பவே மாட்டார்கள். அவர்கள் முழுமனதுடன் பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதுடன், அவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டுவார்கள்.

- சுவாமி விவேகானந்தர்


வசுமதிக்கு மிகவும் கவலையாக இருந்தது. ‘நான் குழந்தையைச் சரியாகத்தான் பார்த்துக்கொள்கிறேனா? என் செல்லத்தின் குட்டி வயிறு நிறையுதா?’ என்று அடிக்கடி தன்னையே கேட்டுக்கொண்டாள்.
வேலையின் காரணமாக வெளிநாட்டில் செட்டில் ஆனவர்கள் வசுமதியும் அவள் கணவன் சேகரும். குறித்த தேதிக்குப் பத்து நாள்களுக்கு முன்பாகவே குழந்தை பிறந்துவிட்ட செய்தி கேட்டு, அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்த மாமியார் பூரணிக்கு வசுமதியின் கவலை புரியவே செய்தது. தாய் இல்லாத பெண்ணான வசுமதியிடம் தனிப் பிரியம் பூரணிக்கு.

வசுமதியின் கவலையைப்போக்கும் வகையில், அவளின் முதுகை ஆதுரமாகத் தடவிக்கொடுத்தபடியே, ``நீ வீணாக கவலைப் படாதே. அழுத குழந்தைதான் பால் குடிக்கும்னு சொல்லுவாங்க. குழந்தை அழுதேன்னு கவலைப்படாதே. பசிச்சா அவனே அழுவான். படிச்ச பொண்ணு நீயே குழப்பிக்கலாமா?’’ என்ற பூரணியைக் குறுக்கிட்டு,

``இல்லேம்மா, என்னோட மார்பகம்..?’’ என்று இழுத்தாள் வசுமதி.

மனுஷி - அமிழ்தினும் இனிதான தாய்ப்பால்!

அவள் எதைச் சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்ட பூரணி, ``அடி அசடே, மார்பகம் சிறுத்து இருக்கறதுக்கும், தாய்ப்பால் சுரக்கறதுக்கும் சம்பந்தமே இல்லை. பத்தியச் சாப்பாடா செஞ்சு தர்றேன். சென்னிமலை முருகன் அருளால குழந்தை நல்லபடியா வளருவான். பால் சரியாகத்தான் கொடுக்கிறோமான்னு உனக்குச் சந்தேகம் இருந்தா நான் சொல்றதைக் கேட்டுக்கோ’’ என்ற பூரணி தொடர்ந்து,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``குழந்தையின் முழு உடம்பும் உன் பக்கம் திரும்பி இருக்கணும். குழந்தையின் தலையை உயர்த்திப் பிடிச்சுக்கோ. அப்பத்தான் குழந்தை ஓய்வாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். குழந்தையின் வாய் அகலமாக விரிந்திருக்க வேண்டும். குழந்தையின் முகவாய் தாயோட மார்பில்பட வேண்டும். மார்பகத்தின் கரிய பகுதியின் பெரும்பகுதி வாயின் மேற்பகுதியில் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையால் ஆழமாக உறிஞ்ச முடியும். அப்படி ஆழமா உறிஞ்சினாலும்கூட தாய்க்கு வலியே தெரியாது. பொதுவாக எல்லா அம்மாக்களாலும் பால் கொடுக்க முடியும். சுரப்பே இல்லாதவர்கள்கூட தொடர்ந்து கொடுக்கப் பழகினால் பால் சுரப்பது இயல்பாகவே ஏற்படும்’’ என்றார்.

வசுமதிக்கு மேலும் தெளிவு ஏற்படுத்த நினைத்த பூரணி, ``உனக்கு இன்னும் தெளிவு ஏற்படுத்த என் தங்கை மகள் கீதாவுக்கு போன் போட்டுத் தர்றேன். உன் கல்யாணத்தப்போ ஹவுஸ் சர்ஜன் பண்ணிக்கிட்டிருந்தா. இப்ப கைனகாலஜி படிக்கறா. அவகிட்டயே பேசிக்கோ’’ என்றபடி, வாட்ஸ் அப் காலில் சுருக்கமாக விவரம் சொல்லிவிட்டு, போனை வசுமதியிடம் கொடுத்தார்.

``ஹாய் அண்ணி, வாழ்த்துகள்’’ என்றபடி தொடர்ந்தாள் கீதா.

``தாய்ப்பால் கொடுக்கறதால குழந்தைக்குப் பல நன்மைகள் ஏற்படறதைப் போலவே, தாய்க்கும் பல நன்மைகள் உண்டாகும். குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது இயல்பாகவே தாய் கருத்தரிப்பது தள்ளிப்போடப் படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் பெண் களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமலும் தடுக்க முடியும். அதோடு, கர்ப்ப காலத்தில் அதிகமாகச் சாப்பிட்டதால் ஏற்பட்ட தாயின் உடல் பருமனைக் குறைத்து, பழைய நிலைக்குக் கொண்டு வரவும் தாய்ப்பால் கொடுப்பது உதவும். கர்ப்பப்பையைச் சுருங்கச் செய்து மீண்டும் இயல்பான நிலைக்குக் கொண்டு வரவும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் சாத்தியமாகும்.

பிறந்த குழந்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் தாயின் தொடு உணர்வுடன் இருப்பது அவசியம். தாயும் குழந்தையும் ஒரே படுக்கையில் சேர்ந்து இருப்பது சிறந்தது. குழந்தைக்கு எத்தனை முறை வேண்டுமோ அத்தனை முறை தாய்ப்பால் தர வேண்டும். குழந்தை பிறந்த உடனே சுரக்கும் கெட்டியான மஞ்சள் நிறப் பால், பிறந்த குழந்தைக்கு மிக முக்கியமான உணவாகும்.  இது ஊட்டமானது மட்டு மல்ல; குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. அப்புறம்... பத்திய உணவுன்னு பெரியம்மா பண்ற உணவு வகைகள் அலர்ஜியாகாம பார்த்துக்கோங்க’’ என்றபடி
இணைப்பைத் துண்டித் தாள் கீதா.

அதுவரை தெளிவை ஏற்படுத்தியவள், கடைசியில் `பத்திய உணவு அலர்ஜியாகாம பார்த்துக்கச் சொல்லி பயமுறுத்திட்டாளே' என்று குழம்பிய வசுமதி, அத்தை பூரணியிடம்,
``அம்மா, பத்திய உணவு கூட அலர்ஜியாகுமா?’’ என்று கேட்டாள்.

வசுமதி இப்படிக் கேட்டதுமே அதற்குக் காரணம் கீதாதான் என்பதைப் புரிந்துகொண்ட பூரணி, ``அப்பல்லாம் சின்ன வயசுல இருந்தே முருங்கைக் கீரையைக் கொதிக்க வச்சு வடிகட்டிய குடிநீர், சீரகத் தண்ணீர், ஓமத் தண்ணீர், கஷாயம்லாம் கொடுப்போம். வேப் பிலையை அரைச்சு கொஞ்சமா கொடுப் போம். அதனால கசப்பு, துவர்ப்பு சாப்பிடப் பழகியவர்களாக இருந்தார்கள். இப்பத் தான் எல்லாம் மாறிடுச்சே. இனிப்பான டானிக் தவிர கசப்பு மருந்தோ, உணவோ சேர்ப்பதே இல் லையே. அதனாலேயே பயமும் பதற்றமுமா ஆகிடறீங்க. எல்லாமே நம்ம ஆரோக்கியத்துக் காகத்தான்னு நம்பு. கவலையேபடாதே... பத்து நாளைக்கப்புறம் உன்னோட உடம்பு கண்டிஷனைப் பார்த்துட்டு பத்தியச் சாப்பாட்டை ஆரம்பிக் கலாம். பத்தியச் சாப்பாடுன்னதும் பயந்துடாதே. வாயு பண்டங்களைத் தவிர்த்து, சத்தான ஆகாரத்தை எடுத்துக்கச் செய்வதுதான் பத்தியச் சாப்பாடு. பயப்படாம தைரியமா இரு. உனக்கும் உன் பிள்ளைக்கும் ஒண்ணும் ஆகாது’’ என்று சிரித்தார் பூரணி.

மாமியாரின் வார்த்தைகளுடன் கீதா வின் வார்த்தைகளும் சேர்ந்து, தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்பட்ட குழப்பங்களைப் போக்கவே... கலகலப்பாக மாறிவிட்டாள் வசுமதி.

பிரசவ லேகியம்

சிலருக்குக் கருப்பையில் ரணம் ஏற்பட்டு வலி அதிகரிக்கும். கருப்பை ரணத்தை ஆற்றவும், வலிகளைப் போக்கவும் பிரசவித்த பெண்களுக்கு நாட்டு மருந்துகளை கஷாயம் செய்தும், லேகியம்போலச் செய்தும் சாப்பிடக் கொடுப்பது வழக்கம்.

சுக்கு, மிளகு, திப்பிலி, ஆலரிசி, லவங்கப் பத்திரி, லவங்கப்பட்டை ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் அளவில் எடுத்து, லேசாக வறுத்து, இடித்துத் தூளாக்கி, சலித்துக் கொண்ட சூரணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்தால் போதும். அடி வயிற்றுவலி குணமாகும்.

வில்வ இலைச் சாறு

குழந்தை பிறந்த பின்னர் கருப்பையில் ரணம் ஏற்பட்டு, அதனால் ரத்தப்பெருக்கு ஏற்படுவதும் உண்டு. அவ்வேளையில் வில்வ இலையுடன் வெங்காயம் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றில், அதே அளவு விளக்கெண்ணெயும் சேர்த்து, காய்ச்சி வடித்து அந்தத் தைலத்தில் ஒரு ஸ்பூன் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்து வர, ரணம் ஆறும். ரத்தப்போக்கும் நிற்கும். மஞ்சள்தூளுடன் இஞ்சிச் சாறு சம அளவு எடுத்து, பால் அல்லது காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து பருக வலி குறையும்.

கடுகுப் பொடி

சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் கடுகு, பிரசவித்த பெண்களுக்கு அருமருந்தாகச் செயல்படுகிறது. வாணலியில் கடுகைப் போட்டு லேசாக வறுத்து அதைப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும்போது சோறுடன் கடுகுப்பொடி, நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட கருப்பைப் புண்கள் ஆறும், வலியும் குறையும்.

குடம்புளி ரசம்

குழந்தைப்பேற்றுக்குப் பின்னர் புளி, காரம் அதிகம் சாப்பிடுவது தாய்மார்களுக்கு ஏற்றதல்ல. வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்த பத்திய உணவும், குடம்புளி, மிளகு சேர்த்த ரசமும் உணவில் சேர்த்துக் கொடுப்பார்கள். இது வயிற்றுவலிக்கு இதம் தரும்.