Published:Updated:

வன்முறை - ஆபாசக் காட்சிகளிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

வன்முறை - ஆபாசக் காட்சிகளிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
வன்முறை - ஆபாசக் காட்சிகளிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

ஹேப்பி பேரண்டிங் கு.ஆனந்தராஜ்

வன்முறை - ஆபாசக் காட்சிகளிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

ஹேப்பி பேரண்டிங் கு.ஆனந்தராஜ்

Published:Updated:
வன்முறை - ஆபாசக் காட்சிகளிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
வன்முறை - ஆபாசக் காட்சிகளிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

குழந்தைகளின் மனதைப் பாதிக்கும் வார்த்தைகளும் காட்சிகளும் திரைப்படங்களில் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவை திரைப்படத் தணிக்கை குழுவால் நீக்கப்படுகின்றன. அல்லது ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட திரைப்படம் `குழந்தைகள் மற்றும் குடும்பமாகப் பார்க்க உகந்தது அல்ல' என  அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், நம் வீட்டின் வரவேற்பறைக்கு உள்ளேயே அதே ‘அடல்ட்ஸ் ஒன்லி’ விஷயங்கள் தொலைக்காட்சி வாயிலாக வரும்போது, நம் குழந்தைகளை எப்படிக் காப்பது? மிகவும் சிக்கலான இப்பிரச்னையைப் பக்குவமாகக் கடக்க பெற்றோர் செய்ய வேண்டியவற்றை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் முனைவர் சித்ரா அரவிந்த்.  

வன்முறை - ஆபாசக் காட்சிகளிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

குழந்தைகள் எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள்! 

“தியேட்டருக்குக் குடும்பமாகச் சென்று திரைப்படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவருகிறது. குடும்பத்தோடு தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையோ அதிகமாகி வருகிறது. இந்தச் சூழலில் திடீரென வன்முறை, ஆபாசக் காட்சிகள் தோன்றினால், உடனே சேனலை மாற்றுவதன் மூலமாக அந்நேரம் குழந்தைகளின் பார்வையை அக்காட்சிகளிலிருந்து திசை திருப்பிவிடுகிறோம். ஆனால், குழந்தைகள் தனிமையில் இருக்கும்போது அக்காட்சிகள் தோன்றினால்... அதைப் பார்க்கத்தானே அவர்கள் வயதும் மனதும் விரும்பும்? அக்காட்சிகளால் ஈர்க்கப்பட்டால், பெற்றோர் இல்லாத   பொழுதுகளிலும் குழந்தைகள் அவற்றைப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். அதனால் உளவியல் ரீதியான சிக்கல்கள் உண்டாகி, படிப்பு உள்ளிட்ட பிரதான விஷயங்களில் போதிய கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வன்முறை - ஆபாசக் காட்சிகளிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

சேனல்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்!

திரைப்படங்களைப் போலவே சின்னத்திரைக்கும் தணிக்கை வாரியம் வேண்டும் என இப்போது அதிகக் குரல்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சேனல்களில் இடைவிடாமல் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதால், அவை எல்லாவற்றையுமே தணிக்கை செய்வது என்பது சாத்தியமில்லை எனவும் சொல்லப்படுகிறது. மேலும், கொலை செய்வது, கொடூரமாக அடிப்பது போன்ற காட்சிகள்கூட `எக்ஸ்க்ளூசிவ்' என்கிற பெயரில் செய்தி சேனல்களில் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றன. அதுவும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும். அதனால் ஒவ்வொரு சேனல் நிர்வாகமும் லாப நோக்கத்தைத் தாண்டி, வன்முறை, ஆபாசக் காட்சிகளை ஒளி பரப்புவதைத் தவிர்த்து, சமூக நோக்கத்துடன் செயல்பட்டால்தான் தீர்வு கிடைக்கும்.

குழந்தைகளைக் குற்றவாளி ஆக்குமா தொலைக்காட்சி?

பெற்றோர் இல்லாத சூழலில் தொலைக் காட்சியில் வன்முறை, ஆபாசக் காட்சிகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு, தாங்கள் பார்த்த காட்சிகளே பல நாள்கள் அவர்கள் மனதில் வந்துபோகும். இப்பிரச்னை, எது சரி, எது தவறு என பிரித்தறியத் தெரியாத 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பெரிய அளவில் பாதிக்கும்.

தொலைக்காட்சியில் தாங்கள் பார்த்த விஷயங்களை சக நண்பர்களிடம் பகிர்ந்து மகிழ்வது, அதற்கு அடுத்தகட்டமாக, சேனல்களில் தாங்கள் பார்த்த அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களுக்கு விளக்கம் அல்லது மேலதிகத் தகவல்களை இணையதளம், செல்போன் போன்றவற்றில் தேட ஆரம்பிப்பது போன்றவை நடக்கலாம். நடைமுறை வாழ்க்கையில் சிறிய பிரச்னை என்றாலும் வன்முறையைக் கையாளவும், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தவும் முனைவார்கள்.  ஒருகட்டத்தில் தான் பார்த்து ரசித்த காட்சிகளை நிஜமாகவே செய்துபார்க்கவும் ஆசைப்படக்கூடும். பெரியவர்களாக வளர்ந்த பின்னர் குற்றச் செயல்களில் ஈடுபடும் அபாயமும் இருக்கிறது. இத்தகைய செயல்பாடுகளால் குழந்தைகளுக்குப் பயம், பதற்றம், குற்ற உணர்ச்சி, தவறான செயல்பாடுகளில் ஈடுபடும் எண்ணம் உருவாகும். இதனால் கல்வி உள்ளிட்ட பிரதான செயல்பாடுகளில் குழந்தைகளின் கவனம் குறைய தொடங்கும்.

வன்முறை - ஆபாசக் காட்சிகளிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

பெற்றோர் செய்ய வேண்டியவை...

* பாலியல் ரீதியான சிக்கல்களில் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகளின் வயது மற்றும் புரிந்துகொள்ளும் பக்குவத்துக்கு ஏற்ப அவர்களுக்குப் பாலியல் கல்வியைச் சொல்லித்தர வேண்டும். குடும்பத்தோடு உட்கார்ந்து டிவி பார்க்கும்போது ஆபாச, வன்முறைக் காட்சிகள் தோன்றினால் சேனலை மாற்றுவதால் தீர்வு கிடைத்து விடாது. பார்க்கக் கூடாது என்று சொல்லச் சொல்ல, குழந்தைகளுக்கு அக்காட்சிகளைப் பார்க்கத்தான் ஆர்வம் அதிகமாகும். அதனால், இவ்விஷயத்தில் உண்மையான காரணத்தைச் சொல்லி, குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பேச வேண்டும். நல்லது, கெட்டது என விஷயங்களைப் பிரித்துணரும் இயல்பை குழந்தைகளின் மனதில் சிறுவயதிலேயே ஆழமாக விதைத்துவிட்டால் அவர்கள் எந்தச் சூழலிலும் தவறான பாதையில் செல்ல  மாட்டார்கள்.

* குழந்தைகளுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில், அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். பழக்கவழக்கங்கள், செயல்பாடுகள், பழகும் நண்பர்கள் உள்ளிட்ட அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தே, தவறான பாதையில் செல்கிறார்களா என்பதைக் கண்டறியலாம். குழந்தைகளுக்கு அதீத செல்லம் கொடுக்காமல், பெற்றோர் இருவருமே ஒரே நிலைப்பாட்டில் குழந்தைகளைச் சரிசெய்ய வேண்டும். குழந்தைகள் செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் அளவிலான கண்டிப்பும் இருக்க வேண்டும். 

* ஆபாச, வன்முறைக் காட்சிகள் அதிகம் ஒளிபரப்பாகும் சேனல்களை `லாக்' செய்யும் வசதி எல்லாம் தொலைக்காட்சிகளிலும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி குழந்தைகள் அக்காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். குறிப்பாக இக்காலக் குழந்தைகள் பெற்றோர்களைவிட டெக்னாலஜியை அதிகம் கற்றுத் தெரிந்துவைத்துள்ளனர். அதனால் பெற்றோர் இல்லாத நேரங்களில் `லாக்'கை நீக்கிப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது. அதைக் கண்காணிப்பது, சிக்கலைச் சரிபடுத்துவது பெற்றோர் பொறுப்பு.

* பெற்றோர் வீட்டில் இருக்கும் போது, குழந்தைகள் தனிமையில் செல்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்கு முன்மாதிரியாக, குழந்தைகள் இருக்கும்போது பெற்றோர் தனிமையில் கேட்ஜெட்ஸைப் பயன்படுத்தக் கூடாது.

* செல்போன், லேப்டாப், டேப்லெட்டில் குழந்தைகள் என்னென்ன தளங்களைப் பார்க்கிறார்கள் என்பதை ‘ஹிஸ்டரி’ ஆப்ஷன் மூலம் கண்டறிய முடியும். அதை குழந்தைகளுக்கே தெரியாமல் கண்காணிக்க வேண்டும். ஒருவேளை குழந்தைகள் ஆபாச, வன்முறைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பது தெரியும்பட்சத்தில் அதைக் கோபமாகக் கேட்காமல், குழந்தைகளை அருகே உட்கார வைத்து மெல்ல, ‘இதுமாதிரியான செயல்பாடுகளை நீ செய்வதாக அறிந்தோம்’ என்று பேசி, குழந்தைகளின் வாயிலேயே உண்மையை வரவழைக்க வேண்டும். பிரச்னையை ஆரம்பக் கட்டத்திலேயே சரி செய்யலாம். அப்படி குழந்தைகளால் மீள முடியாத சூழலில், அந்தச் சிந்தனையை மறக்கும் வகையிலான புதிய பயிற்சிகளையும் பயனுள்ள செயல்பாடுகளையும் பழக்கப்படுத்தலாம். தேவைப்பட்டால் கவுன்சலிங் மையத்துக்கு அழைத்துச் செல்லலாம்.
 
* மொத்தத்தில், இலை மறைவு, காய் மறைவு விஷயமான இப்பிரச்னையைச் சரியான வகையில் கையாள வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஏனெனில், இன்றைக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் இளைஞர்களாலேயே செய்யப்படுகின்றன. சிறுவயதில் ஏற்படும் எண்ணங்களே காலப்போக்கில் செயல்பாடுகளாக உருமாறுகின்றன என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்!”

டேக் கேர், பேரன்ட்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism