Published:Updated:

“வைராக்கியத்துடன் போராடினேன்... வாழ்க்கை மாறியது!”

“வைராக்கியத்துடன் போராடினேன்... வாழ்க்கை மாறியது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“வைராக்கியத்துடன் போராடினேன்... வாழ்க்கை மாறியது!”

திருப்புமுனைம.கா.செந்தில்குமார், படங்கள் : `மக்கா

“உங்களுக்குத் தெரியுமா, சினிமாவில் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது ஆனந்த விகடன் தான். அது எப்படி நிகழ்ந்தது என்று இந்தப் பேட்டியின் கடைசியில் சொல்கிறேன்...”  - சஸ்பென்ஸுடன் தொடங்குகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தனித்தன்மை, தமிழ்த்தன்மை... இவைதாம் ஐஸ்வர்யாவின் பலம். இரு சிறுவர்களின் அம்மாவாக ‘காக்கா முட்டை’யில் கலங்கவைத்தவர், காமுக்காபட்டி அன்புச்செல்வியாகத் ‘தர்மதுரை’யில் நெகிழவைத்தார். வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்காமல், அவற்றில் தனக்கானதைத் தேர்வுசெய்வதுதான் ஐஸ்வர்யாவின் ஸ்பெஷல். அந்தத் தன்மைதான் மணிரத்னம், கௌதம் மேனன், வெற்றிமாறன், விஜய்... இப்படிப் பெரிய இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த இடத்தை ஐஸ்வர்யா எளிதாக அடைந்துவிடவில்லை. அந்தப் பயணத்தை ஐஸ்வர்யாவின் வார்த்தைகளிலேயே கேட்போமே...

“என் தாத்தா அமர்நாத், தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர், தயாரிப்பாளர். அப்பா ராஜேஷும் தெலுங்கு நடிகர்தான். அத்தை ஸ்ரீலட்சுமி அங்கே சீனியர் நகைச்சுவை நடிகை. ஆனால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். என் பத்தாவது வயதில் அப்பா இறந்துவிட்டார். நான், அம்மா, அண்ணன் மூவரும்தான் குடும்பம். வேறு துணையில்லை. யாருடைய உதவியும் இல்லை. அம்மா எங்களைப் போராடி வளர்த்தார். தி.நகர் ஹோலி ஏஞ்சல்ஸில் பள்ளிப் படிப்பு, எதிராஜில் கல்லூரிப் படிப்பு... இப்படி வளர்ந்து, தனிமனுஷியாகப் போராடியே இந்த இடத்துக்கு வந்துள்ளேன். இதை கர்வமின்றிப் பெருமையுடன் சொல்கிறேன். இந்த எளிமையான வாழ்க்கைக்குள்தான் நான்.”

“வைராக்கியத்துடன் போராடினேன்... வாழ்க்கை மாறியது!”

“சினிமா பின்னணிகொண்ட உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் எளிதாக அமையவில்லையா?”

“ஆமாம்... முதலில் சன் டி.வி-யில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியின் பத்து எபிசோட்களுக்கு ஆங்கர். பிறகு, ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் அந்த சீசன் டைட்டில் வின்னர்... இப்படிப் பிடித்ததைச் செய்து கொண்டிருந்தேன். பிறகு, ‘குடும்பத்துக்காகச் சம்பாதிக்கணும்’ என்கிற கட்டாயம் வரும்போது ‘நடிப்போம்’ என முடிவு செய்தேன். அப்படி ஒரு சீரியலில் நடித்தேன். நாளொன்றுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம். காலையிலிருந்து மாலை வரை காத்திருந்து நடித்து முடித்தால் வெறும் ஆயிரத்து ஐநூறுதானா? ஆனால், சிலருக்கு மட்டும் ஐயாயிரம், பத்தாயிரம் தந்தனர். ‘ஏம்மா இப்படி’ என்று அம்மாவிடம் கேட்டேன். ‘இல்லடி அவங்கெல்லாம் சினிமாவுல நடிச்சிட்டு வந்தவங்க. நீயும் அப்படி சினிமாவுல நடிச்சிட்டு வந்தீன்னா, அவ்வளவு காசு கொடுப்பாங்க’ என்று அம்மா சொல்ல, ‘ஓகே நாமளும் இரண்டு மூன்று படங்கள்ல நடிச்சிட்டுப் பிறகு சினிமாவுக்கு வருவோம்’ என்று நினைத்து வந்ததுதான் சினிமா!”

“சினிமா வாய்ப்பாவது எளிதாக அமைந்ததா?”

“தினமும் ஐந்தாறு தயாரிப்பு கம்பெனிகள் ஏறி இறங்குவேன். ஆனால், ஒன்றுமே அமையாது. அப்போது தமிழில் நடித்துக்கொண்டு இருந்த பல நடிகைகள் மலையாளம், இந்தி, தெலுங்கு சினிமாவிலிருந்து வந்தவர்கள். ‘ஒருவேளை தமிழ்ப் பேசுறதாலயே நமக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறாங்களோ’ என்று நினைத்து, ‘நான் ஹைதராபாத்ல இருந்து வந்திருக்கேன். தெலுங்கு மட்டும்தான் பேசுவேன்’ என்று சொல்லிப் பேசும்போது இடையிடையே தமிழ்ப் பேசி மாட்டிக் கொண்டு, ‘தமிழும் பேசுவேன் சார்’ என்று சமாளித்தது உண்டு. அப்போது என் அண்ணன் மணிகண்டன்தான் எல்லா தயாரிப்பு கம்பெனிகளுக்கும் என்னுடன் வருவான். அவன் நல்ல கலர். அழகாகவும் இருப்பான். நான் போகும் இடங்களில் எல்லாம் என்னை தவிர்த்துவிட்டு, ‘நீ என்னப்பா தம்பி பண்ற? நீ முயற்சி பண்ணலாமே... இதுல இப்படி ஒரு கேரக்டர் இருக்கு, பண்றீயா?’ என்பார்கள். ஒருகட்டத்தில், ‘டேய்... பேசாமா நீ நடிடா... எனக்கு செட்டாகாதுனு நினைக்கிறேன்’ என்று சொன்னேன். ஆனால், இங்கு ஹீரோயின்தான் கலராக இருக்க வேண்டும். ஹீரோவுக்கு மாநிறம்தான் தகுதி என்பதால், அதில் அவன் அடிபட்டு விட்டான்.”

“அந்த வாய்ப்பு தேடலின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதும் உண்டா?”

“நிறைய... ஓர் இயக்குநர், பாவம் அவரின் பெயரைச் சொல்ல வேண்டாம். இப்போது படம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். ‘நீ காமெடியனுக்கு ஜோடியா நடி. நீயெல்லாம் தமிழ் இன்டஸ்ட்ரியில ஹீரோயினுக்கு செட்டாக மாட்ட’ என்று கொச்சைப்படுத்தினார். ‘நீங்க ஹீரோயின் மெட்டீரியலே கிடையாதும்மா’ என்று சில தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். வெகு நாள்களாக ஹீரோயின்களை வெள்ளையாகப் பார்த்து வந்த அவர்களுக்கு நம் கலரில் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், என்னை அப்படிப் பேசிய இயக்குநரின் கையாலேயே நான் விருது வாங்கியிருக்கிறேன். அப்படி அவர்கள் பேசியதால்தான், வைராக்கியத்துடன் போராடி, இன்று ஓரளவு நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“வைராக்கியத்துடன் போராடினேன்... வாழ்க்கை மாறியது!”

“அப்போது அம்மாவின் மனநிலை எப்படி இருக்கும். என்ன சொல்வார்கள்?”

“அம்மா நாகமணி. ‘எதுவா இருந்தாலும் இவ சரியா பண்ணுவா’ என்று அவருக்கு என்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆனால், ‘நம்ம புள்ளை இவ்வளவு கஷ்டப்படுதே. அவளுக்கு எதுவுமே செட் ஆக  மாட்டேங்குதே. அப்பா இருந்தா இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாமே’ என்று வருத்தப்படுவார். ஒரு கட்டத்தில், ‘25 வயசாகுது. கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்’ என்கிற மனநிலைக்கு வந்து பலமுறை என்னிடம் பேசியிருக்கிறார். ‘கண்டிப்பா நான் நல்லா வருவேம்மா’ என்று நம்பிக்கையாகப் பேசியே அவரை சமாதானப்படுத்துவேன்.”

“சினிமா வாய்ப்புகள் எப்போது வந்தன?”

“ `அவர்களும் இவர்களும்’ - இதுதான் என் முதல் படம். அடுத்து, ஹரிஷ் கல்யாணுடன் எஸ்.ஏ.சி சார் டைரக் ஷனில் சின்ன கேரக்டரில் நடித்த ‘சட்டப்படி குற்றம்’. தொடர்ந்து சின்னச் சின்ன கேரக்டர்களில் சில படங்களில் நடித்தேன். முழுநீள ஹீரோயின் கேரக்டர் எதுவும் அமையவில்லை. அந்த நேரத்தில் ஒரு சீரியல் வாய்ப்பு வந்தது. ‘ஒரு நாள் சம்பளம் இரண்டாயிரம்’ ஆஃபர். ‘சில படங்கள் பண்ணியாச்சு. ‘சினிமா புகழ்’ நடிகைனு சீரியல்ல செட்டிலாகிடலாம்’ என்று முடிவு பண்ணி மறுநாள் ஓகே சொல்லலாம் என்று இருந்தேன். அந்த நேரத்தில்தான், ‘அட்டகத்தினு ஒரு படம். கேரக்டர் பேர் அமுதா. ஆடிஷன் இருக்கு. வாங்க’ என்ற அழைப்பு. இந்த ஆடிஷன் போய்வந்தபிறகு அந்த சீரியல் பற்றி யோசிக்கலாம் என்று போய், ‘அட்டகத்தி அமுதா'வாகத் திரும்பி வந்தேன்.”

“வைராக்கியத்துடன் போராடினேன்... வாழ்க்கை மாறியது!”

“ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை என்று தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் நடிக்கிறீர்கள். இந்த காம்பினேஷன் எப்படி?”

“விஜய் சேதுபதியுடன் நிறைய நல்ல கேரக்டர்கள் அமைந்தன. ஆனால், அவருடன் படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாக இதுவரை நடித்ததே இல்லை. ‘ஏங்க வெளியில நான் ஏதோ உங்களோட எல்லா படங்கள்லயும் நடிச்சிட்டு இருக்கிறமாதிரி பேசிட்டு இருக்காங்க. உண்மையில், சின்னச் சின்ன கேரக்டர்தான் பண்ணியிருக்கேன். அதனால அடுத்தப் படம் பண்ணினா ஃபுல்லா வர்றமாதிரி ரெஃபர் பண்ணுங்க’ என்று அவரிடம் சொன்னேன். சிரிச்சுட்டார். அவரை மாதிரி நல்லவர், எளிமையானவரை சினிமாவில் பார்த்ததில்லை. கேரவன் இருந்தாலும், அவர் ஏதாவது மரத்தடியில் படுத்திருப்பார். ஷூட்டிங் நடக்கும் இடங்களில் உள்ள வீடுகளில் தோசை சுடச்சொல்லி சாப்பிட்டுக்கொண்டு இருப்பார். துணை நடிகர்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். ஏதோ நம் வீட்டில் உள்ளவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வைத் தருவார். அவர் மனைவி, குழந்தைகளையும் தெரியும். விஜய், நான் மதிக்கக்கூடிய மனிதர்.”

‘‘இரண்டு மலையாளப் படங்கள், ஓர் இந்திப் படம்... எப்படி?”

“மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடு பெரிய இயக்குநர். துல்கர் சல்மான் பெரிய நடிகர். காக்கா முட்டை பார்த்துவிட்டு அழைத்தனர். ‘ஜோமோண்டே சுவிசேஷங்கள்’ படத்தில் பெரிய கேரக்டர் தந்தனர். ஹீரோவுக்கு உதவி செய்து அவரை நிலைநிறுத்தும் கேரக்டர். நிவின் பாலியுடன் ‘சகாவ்’... 60 வயசு கிழவி, ஃப்ளாஷ்பேக்கில் 27 வயது பெண் என்று இரண்டு வெவ்வேறு காலங்களில் நடக்கும் கதை. இந்தியில் அர்ஜுன் ராம்பாலுடன் ‘டாடி’ படம்...

16 வயது தொடங்கி 55 வயது வரை பயணமாகும் ஒரு பெண்ணின் கதாபாத்திரம். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தியது, இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்த ‘காக்கா முட்டை’தான்!”

“அடுத்து விக்ரம், கௌதம் மேனன் காம்பினேஷனில் ‘துருவ நட்சத்திரம்'. அதில் ஐஸ்வர்யாவை எப்படி எதிர்பார்க்கலாம்?”

 “எனக்கு வந்த பெரிய படங்களில் முதல் படம் `துருவ நட்சத்திரம்'தான். பார்த்திபன், சிம்ரன், ராதிகா மேடம், இன்னொரு ஹீரோயின் ரீது என அனைத்து கேரக்டர்களுமே வித்தியாசமாக இருக்கும். முதல் நாள் ஷூட்டிங்கிலேயே பெரிய சீன். மூன்று பக்க வசனம் பேசி நடிக்க வேண்டிய எமோஷனலான காட்சி. பதற்றமாக இருந்தாலும், இரண்டு மூன்று டேக்கிலேயே சரியாகப் பண்ணிவிட்டேன். கௌதம் மேனன் சார் கைதட்டினார். ‘சூப்பரா பண்ணீங்க ஐஸ்வர்யா’ என்று விக்ரம் சார் பாராட்டினார். அது மறக்கமுடியாத பாராட்டு!”

“இதற்கு நேரெதிர் படம், ‘வடசென்னை’. வெற்றிமாறன், தனுஷுடன் சேர்ந்து பணியாற்றி யிருக்கிறீர்களே...''

“தனுஷ் சாரும் வெற்றி சாரும்தானே ‘காக்கா முட்டை’ படத் தயாரிப்பாளர்கள்... ‘அந்த கேரக்டரை இந்தப் பொண்ணு எப்படிப் பண்ணும்’ என்று வெற்றி சாருக்கு `காக்கா முட்டை'யிலேயே சந்தேகம். படம் பார்த்தபிறகுதான் அவருக்கு நம்பிக்கை வந்தது. என் கேரக்டர் பயங்கர லோக்கலாக, இதற்குமுன் தமிழ் சினிமாவில் வராத கேரக்டராக இருக்கும். தனுஷ் சார், நாம் நாமாக இருந்து நடிக்க நிறைய ஸ்பேஸ் கொடுப்பார். வெற்றி சார், நடிகர்களை ரொம்ப மெனக்கெட வைக்கமாட்டார். நமக்கு என்ன வருகிறதோ அதிலிருந்து பெஸ்ட்டை எடுத்துக்கொள்வார்.”

“மணிரத்னம் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும்  கனவு.  உங்களுக்கு அமைந்திருக்கிறது. என்ன சொன்னார் மணிரத்னம்?”

“நான்கு ஹீரோக்கள், நான்கு ஹீரோயின்கள் என மல்ட்டி ஸ்டாரர் படம். முழுக்கதையையும் சொல்லிவிட்டு, ‘நீங்கள் இந்த கேரக்டரில் நடிக்கிறீர்கள்’ என்றார். அவர் படங்களில் ஹீரோயின் கேரக்டர்களில் ஓர் உயிர் இருக்கும். அதனால்தான் அவர் படத்தில் நடிக்க அவ்வளவு போட்டி. எங்கெங்கிருந்தோ வந்த வாழ்த்துகளைப் பார்த்தபிறகு, ‘மணி சார் படம்னா எல்லாருக்குமே அந்த எதிர்பார்ப்பு இருக்கு’ என்பதைப் புரிந்துகொண்டேன்.”

“வைராக்கியத்துடன் போராடினேன்... வாழ்க்கை மாறியது!”

“ஓகே. இப்ப அம்மா என்ன சொல்கிறார்?”

“சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும், ‘வர்ற படங்களை எல்லாம் பண்ணிடணும்டி. எதையுமே விடக் கூடாது. இப்பதாண்டி சம்பாதிக்கணும்’ என்று சொல்வார்கள். ‘ஹீரோயின்களோட லைஃப் மூணு நாலு வருஷங்கள்தான். அந்த டைம்லயே சம்பாதிச்சு செட்டில் ஆகிடணும்’ என்கிற மனநிலை. சினிமாவும் அப்படித்தான் இருந்தது. அப்பாவும் சினிமாவில் இருந்ததால் அம்மா அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், வீட்டில் எவ்வளவு சிரமம் இருந்தாலும், நான் தேர்ந்தெடுத்துதான் பண்ணினேன். அந்தப் பொறுமைதான், ‘ஐஸ்வர்யா நடிச்சா நல்ல கேரக்டராத்தான் இருக்கும்’ என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் விதைத்து இருக்கிறது. இப்போது அம்மா கல்யாணத்தைப் பற்றிப் பேச்சு எடுப்பதில்லை. ‘ஏன் அந்தப் படத்துல நடிக்கலை’ என்ற கேள்வியும் கேட்பதில்லை!”

“சினிமாவுக்கு வர ஆசைப்படும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“எந்தத் துறையாக இருந்தாலும் பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். சொந்தக்காலில் நிற்க கற்க வேண்டும். ஆசிட் அட்டாக், ரேப், சைல்ட் அப்யூஸ், கொளுத்துகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. 24 மணிநேரமும் குழந்தைகளை நம் பார்வையிலேயே வைத்திருக்க முடியாது. நாம் எப்போதும் அவர்களுடனேயே இருக்கும் உணர்வைத்தர `குட் டச் பேட் டச்' தொடங்கி, இக்கட்டான சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதுவரை அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும். பெண் குழந்தைகள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பது என்பது தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்தக்கூடிய தெளிவாகப் பேசும் படம் என்றால் சம்பளம் வாங்காமல்கூட நடிக்கத் தயார்!”

“இப்போது சொல்லுங்கள், திருப்புமுனை ஏற்படுத்திய அந்த விகடன் தருணம் பற்றி...”

“ ‘அட்டகத்தி’ படம் ரிலீஸ் ஆன நேரம். ஆனந்த விகடனில் அப்போது வந்த படங்களில் நம்பிக்கை ஊட்டக்கூடிய இளைஞர்களை ஒன்றிணைத்து ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அண்ணாசாலை ஆனந்த விகடன் அலுவலகத்தில்தான் அந்தச் சந்திப்பு. ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்களில் விஜய் சேதுபதி, ‘வழக்கு எண்’ மனிஷா, இயக்குநர்கள் பா.இரஞ்சித், அன்பழகன், ராஜுமுருகன், பிரேம்குமார்... இப்படி பலரையும் அழைத்திருந்தனர். ‘அட்டகத்தி’ நந்திதா அப்போது பெங்களூரில் இருந்தார். அதனால், அந்தப் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த என்னைக் கூப்பிட்டிருந்தார்கள். அப்போது எனக்கு விஜய் சேதுபதி யாரென்றே தெரியாது. ‘தமிழ் பேசும் நடிகைக்கு நல்ல வாய்ப்பு தரமாட்டேங்குறாங்க’ என்று பொதுவாக என் சினிமா முயற்சிகள் பற்றிப் பேசி புலம்பிக்கொண்டிருந்தேன். அதைப்பார்த்த விஜய் சேதுபதியும் இயக்குநர் பிரேம்குமாரும், ‘இவங்க நம் ஊர் பொண்ணுமாதிரி யதார்த்தமா இருக்காங்க. ‘ரம்மி’க்குப் பொருத்தமா இருப்பாங்க’ என்று ரெஃபர் செய்தனர். அப்படித்தான் எனக்கு `ரம்மி' பட வாய்ப்பு அமைந்தது. அதனால், அந்த விகடன் சந்திப்பு, திருப்புமுனை என்று நான் சொன்னது சரிதானே!”