
மெர்சல்னாலே ஸ்பெஷல்தான்ஆர்.வைதேகி, படங்கள்: பா.காளிமுத்து
இது பி.சுசீலா பாடியது, இது எஸ்.ஜானகி பாடியது, இது சித்ரா பாடியது... இப்படிக் குரலை வைத்துப் பாடகர்களை அடையாளம் காண்கிற நிலை இன்றில்லை. எல்லா குரல்களும் ஒரே மாதிரி ஒலிக்கின்றன. பெரும்பாலான குரல்களில் தனித்துவம் இல்லை. விதி விலக்குகளை விரல்விடாமலேயே எண்ணிவிடலாம். பின்னணிப் பாடகி பூஜாவின் குரலும் அந்த விரல் களின் எண்ணிக்கையில் இருக்கும்.
‘பார்க்காதே... பார்க்காதே...’ என மெலடியில் கரைவதிலாகட்டும், ‘எப்போ மாமா மாமா ட்ரீட்டு’ என ஃபாஸ்ட் பீட்டிலாகட்டும்... பூஜாவின் குரல் தனித்து ஒலிக்கும். விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலிலும் பூஜாவின் குரல் தனித்துவத்துடன் ஒலிக்கிறது.

‘`விஜய் சார் படத்துல நாலாவது முறையா பாடியிருக்கேன். ‘தலைவா’ படத்துல ‘தளபதி தளபதி’, ‘ஜில்லா’ படத்துல ‘எப்போ மாமா ட்ரீட்டு’, ‘புலி’ படத்துல ‘ஜங்கிலியா’னு மூணுமே ஹிட். அதேமாதிரி இப்போ ‘மெர்சல்’ல ‘ஆளப்போறான் தமிழ’னும் செம ஹிட்டாயிருக்கு. விஜய் சார் எனக்கு லக்கினு நினைக்கிறேன்’’ - ‘மெர்சல்’ சிலிர்ப்பிலிருந்து வெளியே வராதவருக்கு இசைப் புயலுடன் இது இரண்டாவது பாடல்.
‘`ரஹ்மான் சார் மியூசிக்ல பாடறதுங்கிறது எல்லா பாடகர்களுக்குமே வாழ்நாள் கனவா இருக்கும். எனக்கும் அப்படித்தான் ‘ராஞ்சானா’னு இந்திப் படத்துக்குத்தான் முதல்ல பாடினேன். அவர்கூட பிரைவேட் ஆல்பம்ஸ்ல பாடிட்டிருக்கேன். ‘ஆளப்போறான்...’ ரெக்கார்டு பண்ணும்போது ரஹ்மான் சாரும் கூட இருந்தார். சின்னச் சின்ன கரெக்ஷன்ஸ் சொல்லிக்கொடுத்துப் பாட வெச்சார்.
முன்னல்லாம் ரஹ்மான் சாருக்குப் பாடறதுன்னா பயத்துல வெறும் காத்துதான் வரும். இப்போ அந்தப் பயமும் பதற்றமும் கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சிருக்கு. ரஹ்மான் சார்கூட வொர்க் பண்ற அனுபவமே அலாதியானது. சில இடங்கள்ல, ‘உங்க இஷ்டத்துக்குப் பாடுங்க’னு சுதந்திரம் கொடுப்பார். சில இடத்துல அவர் சொல்றபடிதான் பாடணும்னு சொல்வார். அவர் மியூசிக்ல பாடறதுன்னா எப்போதும் நைட் ரெக்கார்டிங்தான். நைட் 11 மணிக்குப் போனா விடியற்காலையில 4 மணிக்குத்தான் பாடுவேன். அந்த வெயிட்டிங் டைம்ல என்ன பாடப் போறோம், எப்படிப் பாடப் போறோம்னு எந்த ஐடியாவும் இருக்காது. திடீர்னு எக்ஸாம் எழுதற மாதிரியான ஃபீல் அது. லட்சக்கணக்கான பாடகர்கள் ரஹ்மான் சார் மியூசிக்ல பாடணும்னு தவம் இருக்கிறபோது எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்குன்னா, அதைச் சிறப்பா செய்து காட்டணும்கிற எண்ணம்தான் பெரிசா இருக்கும். ஒருவேளை காலை வேளையில ஃப்ரெஷ்ஷா இருக்கும்போது பாடியிருந்தா இன்னும் நல்லாப் பாடியிருக்கலாமோனு தோணியிருக்கு. நாங்க அப்படி ஃபீல் பண்றது சாருக்கும் தெரியும். ‘எந்த டைம்ல பாடச் சொன்னாலும் பாட முடியணும். அதுதான் உண்மையான திறமை’னு சொல்வார். ‘நோ’ சொல்றது சாருக்குப் பிடிக்காது’’ - ரஹ்மானாயணம் பகிர்பவருக்கு மோதிரக்கையால் குட்டுப்பெற்ற அனுபவமும் இருக்கிறது.
‘`என் குரல்ல ஸ்வர்ணலதாவோட சாயல் இருக்குன்னு ரஹ்மான் சார் சொன்னதா கேள்விப்பட்டேன். ஓப்பன் த்ரோட்ல பாடறது நல்லாருக்குன்னு பாராட்டியிருக்கார். அவர் மியூசிக்ல பாடறதே கனவா இருந்த எனக்கு அவருடைய தனிப்பட்ட பாராட்டுங்கிறது வாழ்நாள் சாதனை மாதிரியிருக்கு’’ - சிலிர்க்கும் பூஜா, எம்.பி.ஏ-விலிருந்து இசைக்கு இடம்பெயர்ந்தவர்.
``பாலக்காட்டுப் பொண்ணு நான். ஆனா, ஹைதராபாத்ல வளர்ந்தேன். பஜன்ஸும் தெலுங்கு, இந்திப் பாடல்களும்தான் எனக்குப் பரிச்சயம். எம்.பி.ஏ முடிச்சிட்டு வேலைக்குப் போற ஐடியாவுல இருந்தபோது விஜய் டி.வி-யில சூப்பர் சிங்கர் ஷோவுல கலந்துக்கிற வாய்ப்பு வந்தது. வாராவாரம் ஹைதராபாத்லேருந்து சென்னைக்கு வந்துட்டுப் போயிட்டிருந்தேன். ஒருகட்டத்துல சென்னையிலயே செட்டிலாகிற அளவுக்கு எனக்கு அந்த ஷோவும் மியூசிக்கும் நெருக்கமானது. அந்த புரோகிராம் மூலமா ஜி.வி.பிரகாஷ் மியூசிக்ல ‘அன்னக்கொடி’ படத்துல பாடறதுக்கு முதல் வாய்ப்பு வந்தது. அப்புறம் ரஹ்மான் சாருக்கு ‘ராஞ்சானா’வுல பாடினேன். இமான் சாருக்கு நிறைய பாடினேன். யுவன், ஜேம்ஸ் வசந்தன்னு எல்லாருக்கும் பாடிட்டேன். சந்தோஷ் நாராயணனுக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் பாடணும். பக்திப் பாடல்கள் கச்சேரி பண்ற ஆசையிருக்கு. படிச்ச படிப்பு, வேலைனு எல்லாத்தையும் மறந்துட்டு இசைதான் உலகம்னு ஐக்கியமாயிட்டேன். இத்தனைப் பாடல்கள் பாடிட்டேன். ஆனாலும், புதுசா ஒரு பாடலுக்கான வாய்ப்பைத் தக்க வெச்சுக்கிறதுங்கிறது எனக்கு மட்டுமில்லை, எல்லாருக்குமே பெரிய போராட்டமானதாகவே இருக்கு....’’ - வருத்தம் இழையோடுகிறது வார்த்தைகளில்.
‘`ஹார்டுவொர்க் பண்றேன். திறமையை நம்பறேன். ‘மெர்சல்’ ரிலீசானதும் எனக்கு இன்னொரு பிரேக் கிடைக்கும்கிற நம்பிக்கை யோட ஐ’ம் வெயிட்டிங்...’’
காத்திருக்கிற பூஜாவுக்கு மற்றொருமுறை விஜய் மேஜிக் வொர்க் அவுட் ஆகட்டும்!