Published:Updated:

வாழ்வை மாற்றிய புத்தகம் - 80 வயதானாலும் அவள்தான் ஹீரோயின்!

வாழ்வை மாற்றிய புத்தகம்  - 80 வயதானாலும் அவள்தான் ஹீரோயின்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்வை மாற்றிய புத்தகம் - 80 வயதானாலும் அவள்தான் ஹீரோயின்!

நாடகக் கலைஞர் ஷைலஜா

“எழுத்தாளர் சிவசங்கரி யின் ‘மூக்கணாங்கயிறு’ சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழி பெயர்ப்புதான் ‘பீட்ரேயல் அண்டு அதர் ஸ்டோரீஸ்’. சிவசங்கரியின் எழுத்துகளைப் படிப்பது எனக்கு எப்போதுமே ஒரு சுகானுபவமாக இருந்திருக்கிறது. அவர் எழுதிய பயணக்கட்டுரைகளைப் படித்த பிறகு அவர் எழுத்துகளின் மீதான ஈர்ப்பு பலமடங்கு அதிகரித்துவிட்டது. ‘அவன்’, ‘47 நாட்கள்’ படித்து பல வருடங்கள் கழித்துப் படித்த புத்தகம் இது.

சிவசங்கரிக்கு இந்த வருடம் 75 வயது. அதைச் சிறப்பிக்கும் வகையில் ஆங்கில நாடகமாகத் தயாரிக்கிற எண்ணமிருப்பதால், இந்தக் கதைகளை நான் ஆங்கில மொழிபெயர்ப்பிலேயே படித்தேன். அமிதா அக்னி ஹோத்ரியும் கீதா ராதாகிருஷ்ணனும் மொழிபெயர்த் திருக்கிறார்கள். சிவசங்கரியின் கதைகள், 30 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டவையாக இருந்தாலும், சமகாலத்துக்குப் பொருந்துகிற மாதிரி பார்க்க முடியும்.
இந்தத் தொகுப்பின் முதல் கதையான பீட்ரேயல்தான் ‘மூக்கணாங்கயிறு’ கதை. மென்மை யாக இருக்கும் ஒரு பெண், இறுதியில் அவளுக்குத் தெரிந்தவிதத்தில் சாதுர்யமாகப் பழிவாங்குகிறாள் என்பது இந்தக் கதையில் எனக்குப் பிடித்த விஷயம். ஒரே நபருக்குள் இருக்கும் அந்த இருமை இயல்பு என்னை ஈர்த்தது.

ஒரு கதையில் நாயகி, தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் பெற்றோரின் விருப்பத்துக்காகத் திருமணம் செய்துகொள்வாள். இன்னொரு கதையில் அதன் நாயகன் தனக்கு வரப்போகிற மனைவியை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற  கனவுகளுடன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான்.

வாழ்வை மாற்றிய புத்தகம்  - 80 வயதானாலும் அவள்தான் ஹீரோயின்!

இந்தக் கதைகளைப் பற்றி இயக்குநர் நாகாவிடம் பேசிக்கொண் டிருந்தபோது இரண்டு கதைகளின் முடிவையும் இணைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்கிற மாதிரி கதையை மாற்றினால் நன்றாக இருக்குமே என்றார்.

40 வயதைக் கடந்த பிறகு, நாம் ரசித்த கதைகளை வேறொரு பரிமாணத்தில் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள பலரின் வாழ்வில் இதை நான் பார்க்கிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பீட்ரேயல் கதையில் தன் கணவன் இன்னொரு பெண்ணை விரும்புவது தெரிந்து மனைவி, ‘அவளை நீ திருமணம் செய்துகொள். நான் சம்மதிக்கிறேன்’ என்பாள். தன் மகனின் மூலம்தான் அவளுக்குக் கணவனின் இன்னோர் உறவு தெரியவரும். ஓர் அம்மாவாக அந்தச் சூழலை அவள் மிக அழகாக எதிர்கொள்வாள். அவன் விரும்பும் அந்த இரண்டாவது பெண்ணும் அவளின் குடும்பத்தாரும் அவனின் சொத்துகளை அபகரிக்க வந்தவர்களாக இருப்பார்கள். அது தெரிந்ததும் கணவனை அவர்களிடம் விட்டுவிட்டு, தன் வழியைப் பார்த்துக்கொண்டு போய்விடுவாள். இத்தனைக்கும் அவள் நடுத்தர வயதுப் பெண். ‘80 வயதானாலும் அந்தக் கதைக்கு அவள்தான் ஹீரோயின்’ என்பார் கே.பாலசந்தர் சார்.

ஆண் பெண் உறவென்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற மாதிரியே இன்றைய ஊடகச் சித்திரிப்புகள் தொடர்கின்றன. இந்தப் புத்தகம் அதைத் தகர்க்கிறது.

வாழ்வை மாற்றிய புத்தகம்  - 80 வயதானாலும் அவள்தான் ஹீரோயின்!சொத்தை எல்லாம் இழந்து நிர்க்கதியாக நிறுத்தப்படுகிற பெண்களை நிறைய கதைகளில் படித்திருப்போம். அந்த நிலையை இப்படியொரு புத்திக்கூர்மையால் வென்ற அந்தப் பெண்ணின் தைரியமும் வீரமும் எனக்குப் பிடித்தது.

நான் சின்னத்திரையில் நடித்து எட்டு வருடங் களாகின்றன. ஒரே மாதிரியான விஷயங்களைச் செய்வது எனக்குச் சலிப்பைத் தந்தது. அம்மா கேரக்டர் என்கிறார்கள். இன்னாருக்கு அம்மா என்பதைத் தவிர்த்து வேறு பரிமாணமே இல்லையா, அந்தப் பெண்ணுக்கு?

நிஜ வாழ்க்கையில் நான் 24 வயது மகளுக்கு அம்மா. என் கணவருக்கும் எனக்கும் இன்னும் காதல் அப்படியே இருக்கிறது. என் மகளுடனான உறவு என்பது திரையில் சித்திரிக்கப்படுவதைப் போல அல்லாமல் வேறு மாதிரி அழகாக, நல்ல நட்புடன் இருக்கிறது.

எல்லோர் வாழ்விலும் ஒருகட்டத்தில் வாசிப்புப் பழக்கத்தில் ஒரு தற்காலிகத் தடை ஏற்படும். சிவசங்கரியின் இந்தப் புத்தகத்தைப் படித்ததன் மூலம் வாசிப்பில் மறுபடி தீவிரமாகியிருக்கிறேன். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு மேடை நாடகங்கள் இயக்குவதிலும் கதைகளைச் சொல்வதிலும் என் சிந்தனையில் சில மாற்றங்களை உணர்ந்தேன். நான் இப்போது என்ன செய்கிறேன், இனி என்ன செய்யப் போகிறேன் என்பது போன்ற எண்ணங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.’’