Published:Updated:

“செமையா சிரிங்க... லைஃப் நல்லா இருக்கும்!”

“செமையா சிரிங்க... லைஃப் நல்லா இருக்கும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“செமையா சிரிங்க... லைஃப் நல்லா இருக்கும்!”

ஹீரோயின் புதுசுபொன்.விமலா

“செமையா சிரிங்க... லைஃப் நல்லா இருக்கும்!”

“அம்மா கர்ப்பமா இருந்தப்ப ஒருநாள்கூட ரெஸ்ட் எடுத்துக்காம எங்களுக்காக கஷ்டப்பட்டிருக்காங்க. என்னோட தங்கச்சி பிறக்கிற நாள் வரைக்கும்கூட அவங்க பார்லர்ல வேலை பார்த்துட்டுதான் இருந்தாங்க. அந்த அளவுக்கு எனக்கு ரோல்மாடலா இருக்கிற அம்மா பெயரான பினுவைத்தான் என் பெயருக்குப் பின்னாடி என் லைஃப் லாங் சேர்த்துக்கணும்னு ஆசைப்படுகிறேன்’’ - நன்றியோடு பேசுகிறார் நடிகை அர்த்தனா பினு. தெலுங்கு, மலையாளம் என அக்கறைச் சீமைப்படங்களில் நடித்தவர் தமிழில் `தொண்டன்’ திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். மாடலிங், ஆங்கரிங், நடிகை எனப் பட்டாசு தெறிக்கவிடும் அர்த்தனா பினு, தான் கடந்துவந்த பாதையை அலட்டல் இல்லாமல் ஷேர் செய்கிறார்.

 ``நான், அம்மா பினு, தங்கச்சி மீகல், தாத்தா, பாட்டினு அழகான குடும்பம். சின்ன வயசுலேருந்தே எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ஆசை. அடிக்கடி அம்மாவோட சாரியை எடுத்துக் கட்டிக்கிட்டு சாந்துப்பொட்டெல்லாம் வெச்சுக்கிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு நடிச்சுப் பார்த்துப்பேன். `ஐயம் எ ஆக்ட்ரெஸ்... ஐயம் எ ஆக்ட்ரெஸ்’னு மனசு பல தடவை சொல்லிக்கிட்டே இருந்துச்சு. நான் ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தப்ப ஏசியா நெட் டி.வி சேனல்ல ஆங்கரிங் பண்ண முதன்முறையா வாய்ப்பு கிடைச்சது. அந்த நேரம் எனக்குச் சிறகு முளைச்ச மாதிரி இருந்துச்சு’’ - கொஞ்சும் மலையாளம் கலந்த தமிழில் பேசும் அர்த்தனா பினுவுக்குச் சொந்த ஊர் திருவனந்தபுரம். படித்துக்கொண்டிருக்கும் போதே ஆங்கரிங் வாய்ப்பு, விளம்பரங்களில் நடிப்பது என நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த கதையை அர்த்தனா மூச்சுவிடாமல்  சொல்லும்போது வியக்கிறது நமக்கு.

“செமையா சிரிங்க... லைஃப் நல்லா இருக்கும்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``நீங்க சொன்னா நம்பமாட்டீங்க... நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சிட்டி ருந்தப்பதான் ஒரு துணிக்கடை விளம்பரத்துல பிருத்திவிராஜ் சாரோட நடிச்சேன். அந்த விளம்பரத்துல நான் எங்க இருக்கேன்னு நீங்க தேடணும்னா அதுக்குப் பூதக்கண்ணாடிதான் தேவை. ஏன்னா, கஜினி அசின் மாதிரி ஓர் ஓரத்துல போய் நின்னுட்டு நடிக்கிற மாதிரியான வாய்ப்புகள்தாம் ஆரம்பத்துல கிடைச்சது. எனக்கு என்ன ரோல் இருந்தாலும் அதுல நான் சின்சியரா இருக்கணும்னு நினைப்பேன். விளம்பரப் படங்கள்ல அப்பப்ப நடிச்சிட்டு இருக்கும்போதே ஒரு ஷார்ட் ஃபிலிம்லயும் நடிச்சிருந்தேன். அதுக்கடுத்துத் திரும்பவும் காமதேனு சேனல்ல ஆங்கரிங் பண்ண வாய்ப்பு வந்து காலேஜ், மாடலிங், டி.வினு லைஃப் ரொம்ப பிஸியா இருந்துச்சு. அந்த நேரத்துலதான் என் போட்டோவை ஃபேஸ்புக்ல பார்த்த காஸ்ட்டிங் டைரக்டர் ஒருத்தர், `ஒரு தெலுங்குப் படத்துல வாய்ப்பு இருக்கு'னு சொன்னார். நமக்குத் தாய்மொழி மலையாளம்... தெலுங்குல நடிக்க முடியுமானு யோசிச்சேன். இருந்தாலும் வர்ற வாய்ப்பைத் தவறவிட வேணாமேன்னு அந்தப் படத்தோட ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். அங்கே போனபிறகு ஆரம்பமே பயமா இருந்துச்சு. ஒரு நீளமான தெலுங்கு டயலாக்கைக் கொடுத்து அதைப் பேசிக்காட்டச் சொன்னதும், படபடன்னு வந்துடுச்சு. `போச்சு... போச்சு இனிமே நாம ரிஜக்டட்தான். அவ்ளோ தூரத்துல இருந்து ஆடிஷனுக்கு வந்ததெல்லாம் வேஸ்ட் ஆகிடுச்சே’னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டிருந்தேன். ஆனா, நம்பவே முடியல நான் செலக்ட் ஆகிட்டேன். நடிகர் ராஜ் தருணோட ‘சீதாம்மா அந்தாலு ராமைய்யா சித்ராலு’ படத்துல ஹீரோயினா நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. என்னோட முதல் தெலுங்கு படத்துக்குப் பாராட்டுகளும் கிடைச்சது. ஒரு படத்துல ஹீரோயினா நடிச்சிட்டா அதுக்காக தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புக்காகவே காத்திருக்கணுமா என்ன?’’ - குறும்பான கேள்வியுடன் நிறுத்தும் அர்த்தனா அதற்குக் கொடுக்கும் பதிலும் `ஆஹா’ ரகம்தான்.

``மாடலிங், ஆங்கரிங், நடிகைனு எந்த வேலையைச் செஞ்சாலும் அதுல நம்மை முழுசா ஈடுபடுத்திக்கணும். அதுதான் உன்னை ஒரு சக்சஸ்ஃபுல் மனுஷியா மாத்துணும்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. இதுதான் பிடிக்கும்னு அடம்பிடிக்காமக் கிடைச்சதைப் பிடிச்சு சின்சியரா வேலைப் பார்க்கணும்னு அவங்கச் சொல்ற அட்வைஸ்தான் எனக்கு வேத வாக்கு. தெலுங்கு படத்துக்குப் பிறகு திரும்பவும் ஆங்கரிங் பண்ண வாய்ப்பு கிடைச்சு டி.வி சேனல்ல வேலை பார்த்துட்டிருந்தேன். அதுக்கப்புறம் ரெண்டாவது படமா கோகுல் சுரேஷோட `முத்துகவ்’கிற மலையாளப் படத்துல நடிச்சேன். திரும்பவும் டி.வி ஷோ வாய்ப்பு. சினிமா, டி.வியுமா மாத்தி மாத்தி வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்பதான் தமிழ்ல ‘செம’ வாய்ப்பு வந்துச்சு. இயக்குநர் பாண்டிராஜோட அசோசியேட் டைரக்டர் வள்ளிகாந்த் எங்க வீட்டுக்கே வந்துட்டார். `ஜி.வி.பிரகாஷ் ஹீரோ, நீங்க ஹீரோயின்'னு சொன்னதும், உடனே `யெஸ்' ஆகிட்டேன். ‘செம’ படத்துக்காக நான் ஓகே சொல்லியிருந்தாலும், தமிழ்ல நான் அக்ரிமென்ட் போட்ட முதல் படம் `வெண்ணிலா கபடிக்குழு பார்ட்- 2’. அடுத்து `செம' படத்துக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கும்போதே, `தொண்டன்’ படத்துல சமுத்திரக்கனி சாரோட தங்கச்சி ரோல்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அடுத்து இப்ப தமிழ்ல ரிலீசாகப் போற படம் `செம’. ஒரு டைரக்டர்கிட்ட வேலை பார்த்த மாதிரியே இல்ல. ஒரு ஸ்கூல் பிரின்சிபால் மாதிரி ரொம்ப ஸ்ட்ரிக்டா வேலை வாங்கினார். அநேகமா இந்தத் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்னு நினைக்கிறேன்’’ - தன்னுடைய சினிமா டிராவலை மினி விக்கிப்பீடியாவாகப் படபடவென ஒப்பிக்கும் அர்த்தனா அந்த இடத்தைப் பிடிப்பதற்கான அவஸ்தைகள் சாதாரணம் அல்ல.

“செமையா சிரிங்க... லைஃப் நல்லா இருக்கும்!”

``இங்கே பெரும்பாலும் எல்லாரும் நினைக்கிறது இதுதான். சினிமாவுல நடிக்கிறது ரொம்ப ஈஸி. அங்கே பெயர் கிடைக்கும், பணம் கிடைக்கும்னுதான் யோசிக்கிறாங்க. அங்கேயும் அதிகபட்சமா உழைக்கணும்னு ரொம்ப சில பேர்தான் புரிஞ்சிருக்காங்க. சினிமாவுல நடிக்கணும்கிற  என் சினிமா கனவுக்காக என்னோட சேர்த்து எங்கம்மாவும், ஏழாவது படிக்கிற என்னோட குட்டித் தங்கச்சியும் என்னோடே டிராவல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க’’ - அம்மாவைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும்போதே குறும்பான பேச்சிலிருந்து மாறிக்கொள்கிறார்.

``அம்மா சிங்கிள் பேரன்டா இருந்து எங்களை வளர்க்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. வீட்லயே பார்லர் நடத்திட்டு, இன்னொருபக்கம் டெய்லரிங் வேலையும் பார்த்துட்டு இருந்தாங்க. துபாய்ல போய் ஒரு வருஷம் பியூட்டிசியன் கோர்ஸ் படிச்சிட்டுத் திரும்பவும் இங்கே வந்து தொழில் தொடங்கினாங்க. பணரீதியா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதைக் காட்டிக்கவே மாட்டாங்க. நல்ல ஸ்கூல், நல்ல காலேஜ், நான் ஆசைப்பட்ட கேரியர்னு எனக்காகவே எல்லாத்தையும் பார்த்துப்பார்த்துச் செஞ்சிட்டு இருக்காங்க. ரொம்ப தூரத்துல நடக்கிற ஷூட்டிங்குக்கு கிளம்பணும்னாகூட அம்மா அவங்க வேலையை விட்டுட்டு, தங்கச்சியைத் தனியா வீட்ல விட முடியாம அவளையும் அழைச்சுட்டு என்கூட துணையா வருவாங்க. காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப நிறைய நாள்கள் ஷூட்டிங்குக்காக ஊர் ஊரா டிராவல் பண்ணியிருக்கோம். மறுநாள் எக்ஸாம் இருக்கும். முந்தின நாள் இரவு முழுக்க ஷூட்டிங் இருக்கும். ரெண்டையும் பேலன்ஸ் பண்றதே பெரிய சவால்தான். இதெல்லாம் அம்மாவோட சப்போர்ட் இல்லாம நடந்திருக்காது. ஒரு பொண்ணு ஹீரோயினா ஆகணும்னு இல்ல. அவ எந்த வேலையைச் செய்யறதா இருந்தாலும், அதுக்காக அதிகமா உழைக்கணும். ஆண்களைப் போல எல்லா இடங்களுக்கும் தனிச்சு டிராவல் பண்ற தைரியம் பெண்களுக்கு வரணும். அதைத்தான் நானும் இப்ப கத்துக்கிட்டு இருக்கேன்’’ - நடுவில் கொஞ்சம் சீரியஸாகப் பேசியவர், ``நான் இன்னொரு விஷயமும் சொல்றேனே'' எனப் பேச்சைப் பேச்சாகவே நிறுத்திக்கொள்கிறார்.

``அது வேற ஒண்ணுமில்லை. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் சிரிச்சுட்டே இருங்க. வாழ்க்கைச் செமையா இருக்கும்!’’

செம!

“செமையா சிரிங்க... லைஃப் நல்லா இருக்கும்!”

அர்த்தனாவுடன் ஒரு ரேபிட் ஃபயர் ரவுண்டு

பிடிச்சது:

அம்மா.

படிச்சது:

ஜர்னலிசம் மாஸ் கம்யூனிகேஷன், இப்போ படிக்கிறது பிஜி டிப்ளோமோ இன் கவுன்சலிங் சைக்காலஜி.

பொழுதுபோக்கு:

எனக்கு நானே பாடுவது.

ஆசை:

குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடணும்.

சமீபத்தில் பார்த்த படம்:

அன்னபெல்லி கிரியேஷன்.

பிடித்த உணவு:

பசிக்குச் சாப்பிடும் எல்லா உணவுகளும்.

முதல் பாராட்டு:

தெலுங்குப் படத்துக்குக் கிடைத்த ஃபேஸ்புக் நண்பரின் பாராட்டு.

காதல்:

வரும்போது வரட்டுமே!

- சனா