Published:Updated:

தங்கச்சங்கிலியைவிட கறுப்புப்பாசி பிடிச்சிருக்கு!

தங்கச்சங்கிலியைவிட கறுப்புப்பாசி பிடிச்சிருக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கச்சங்கிலியைவிட கறுப்புப்பாசி பிடிச்சிருக்கு!

எளிமையே கம்பீரம்கு.ஆனந்தராஜ், படங்கள் : வீ.சிவக்குமார்

ளிமையிலும் எளிமையான வாழ்க்கை. தீவிரமான மக்கள் தொண்டு. இடைப்பட்ட சில மணிநேர ஓய்வில் வாசிப்பு. சமூக வலைதளப் பங்களிப்பு. பின்புலமற்ற, பணபலமற்ற பெண்கள் அரசியல் அதிகாரம் பெற முடியும் என்கிற நம்பிக்கையைத் தருகிற தனித்துவ வாழ்க்கை. திண்டுக்கல் மாவட்டம் கதிரனம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலபாரதி, தற்கால அரசியல் சூழலில் ஒரு பொக்கிஷம். அவரின் தீர்க்கமான வார்த்தைகள், ஒரு சமகால அரசியல் வரலாற்றைப் பதிவு செய்யும் நிறைவைத் தருகின்றன.

பள்ளிப் பருவத்திலேயே அறிமுகமான அரசியல்

“என்னோட பள்ளிப் பருவத்துல, கடுமையான வறட்சியால எங்க சுற்றுவட்டார விவசாயிங்க ரொம்பப் பாதிக்கப்பட்டாங்க. ஆட்சியாளர்கள் அவங்களைக் கண்டுக்கலை. கல்வி அறிவில்லாத அந்த மக்களுக்கு, தங்களோட பிரச்னையை அரசுகிட்ட கூட்டுக்குரல் எழுப்பியோ, எதிர்ப்பின் மூலமாகவோ வெளிப்படுத்தத் தெரியலை. அந்த 70-களின் இறுதிக் காலத்துல ரஷ்யா உள்ளிட்ட பல சோஷலிச  நாடுகள் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்தன. அதனால அந்த நாடுகளின் பெண்கள் வேலைக்குப் போறது, கல்வி கற்பது, சுயமுடிவுகளை எடுப்பதுனு முன்னேறிக்கிட்டு இருந்தாங்க. இதையெல்லாம், பத்திரிகைகளைப் பார்த்து எங்களுக்கு விளக்கிச் சொன்ன என் பள்ளி ஆசிரியர் சுப்ரமணியன் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். தொடர்ந்து நானும் புத்தகம், பத்திரிகைகள், நாளிதழ்களை வாசிச்சு, மார்க்ஸியச் சித்தாந்தத்தால்தான் நம்ம சமூகத்தையும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டுபோக முடியும்னு நம்பினேன்.

தங்கச்சங்கிலியைவிட கறுப்புப்பாசி பிடிச்சிருக்கு!

அப்பாவின் மரணமும் அரசியல் முடிவும்

காங்கிரஸ் கட்சிக்காரரான எங்கப்பா கதிரியப்பன், அப்போ பஞ்சாயத்துத் தலைவரா இருந்தார். கட்சிப் பணிகள்ல அவர் பரபரப்பா இருந்ததால, அவர்கூட பேசுறதுக்கான வாய்ப்பு எனக்குக் குறைவாகவே கிடைக்கும். நான் ப்ளஸ் டூ படிச்சுக்கிட்டு இருந்தபோது பள்ளியில கையெழுத்துப் பத்திரிகை நடத்துறது, கூட்டங்கள்ல கலந்துகிட்டு சோஷலிசக் கருத்துகளை ஆதரித்தும், எமர்ஜென்ஸியை எதிர்த்தும் பேசறதுனு இருந்தேன். இதையெல்லாம் பார்த்த அப்பா, ‘காங்கிரஸுக்கு எதிரா சின்ன வயசுலயே பேசிக்கிட்டிருக்கா. இவ போற போக்கைப் பார்த்தா, வாத்தியார் பேச்சைக் கேட்டு இடதுசாரி இயக்கத்துல சேர்ந்திடுவாபோல இருக்கே’னு அம்மா மதவானைகிட்ட சொல்லுவாராம். ஆனா, அப்பா என் செயல்களுக்காக என்னை நேரடியா கண்டிச்சதும் இல்லை; ஊக்கப்படுத்தினதும் இல்லை.

1981-ம் வருட சட்டமன்றத் தேர்தல்

நேரம். தேர்தல் அலுவலகம் திறப்பதில் இரு தரப்புக்குமிடையே ஏற்பட்ட சண்டையை விலக்கிவிடப் போன அப்பாவை யாரோ கத்தியால குத்தினதுல அவர் இறந்துட்டார். அப்போ சின்னக் குழந்தைகளா இருந்த எனக்கும், அண்ணனுக்கும், மற்ற உறவினர்களுக்கும் பெருசா அரசியல் விவரம் தெரியாததால, அப்பாவின் கொலை வழக்கைக்கூட எங்களால எதிர்கொள்ள முடியலை. போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டுல, அவர் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டதா இருந்தது. அப்பா சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சிக்காரங்க யாருமே அவரோட கொலைக்கு நீதி வாங்கித் தரவோ, ஆதரவா இருக்கவோ முன்வரலை.

பத்து வருஷம் பஞ்சாயத்து உறுப்பினரா இருந்த அப்பாவின் உயிருக்கு, அவர் சார்ந்திருந்த கட்சி கொடுத்த மரியாதை அதிர்ச்சியளித்தது. அவருக்கே இந்த நிலைன்னா, மக்களோட நலனில் இந்தக் கட்சி எந்தளவுக்கு அக்கறை கொண்டிருக்கும்? கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் சமுதாய நலனில் இதைப்போல ஒரு இரட்டை வேடத்திலேயே இருக்க, இவற்றுக்கெல்லாம் நேர் எதிரா இடதுசாரி இயக்கம் இருப்பதாக உணர்ந்தேன்’’ என்கிற பாலபாரதி, தொடர்ந்து தன் அரசியல் பயணம் குறித்தே குறிப்பிடுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தங்கச்சங்கிலியைவிட கறுப்புப்பாசி பிடிச்சிருக்கு!

23 வயதில் முழுநேர அரசியல்வாதி!

``கல்லூரிப் பருவத்தில் எனக்குள்ள அரசியல் எண்ணங்கள் அதிகரிச்சுட்டே இருந்துச்சு. பி.எஸ்சி படிச்சுக்கிட்டே மக்கள் பிரச்னைகளுக்கான காரணம், தீர்வு, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை யெல்லாம் தெரிஞ்சுக்கிட்டும் புரிஞ்சுக் கிட்டும் வந்தேன். காலேஜ் முடிச்ச நேரம், சத்துணவு ஊழியர் வேலையில் சேர்ந்தேன். கூடவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துலயும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துலயும் சேர்ந்து மக்கள் பணிகளைச் செஞ்சேன். அப்பா இறந்து நாலு வருஷங்கள் கழிச்சு அம்மாவும் இறந்துட்டாங்க. தொடர்ந்து முழு நேரமா கட்சிப் பணிகள்ல ஈடுபட முடிவெடுத்தேன். 1985-ம் ஆண்டு, என் னோட 23 வயசில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரா சேர்ந்தேன்.

கால் பவுன் கம்மலும், முக்கால் பவுன் செயினும்!

மக்களின் அடிப்படைப் பிரச்னை களுக்காக வீதியில் இறங்கிப் போராடு றது, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக் கிறது, மக்களைத் திரட்டி அரசு அதிகாரி களிடம் மனு கொடுக்கிறதுனு என் நாள்கள்
நகர்ந்த காலகட்டம் அது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கும் கட்சிக் கூட்டங்கள்ல நான் பேசிய பேச்சுக்கு, மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு. தேர்தல் அரசியல்ல பெருசா ஆர்வமில்லாம இருந்த எனக்கு,
1996-ம் வருட சட்டமன்றத் தேர்தல்ல எங்க கட்சியின் சார்பா ஆத்தூர் தொகுதியில போட்டியிடும் வாய்ப்பு எதிர்பாராதவிதமா கிடைச்சது.

அதுவரை கழுத்தில் கறுப்புப்பாசி, காதில் ஒரு கவரிங் வளையம், தோள்ல ஒரு ஜோல்னா பைன்னு இருந்தேன். ‘ஓட்டுக் கேட்க ஆயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கணும்... உங்க தோற்றத்தைக் கொஞ்சம் மாத்திக்கலாமே’னு தோழர் கள் எங்கிட்ட சொன்னாங்க. காதுல இருந்த வளையத்துக்குப் பதிலா கால் பவுன்ல தங்கக் கம்மலும், கறுப்புப்பாசியை மாத்திட்டு முக்கால் பவுன்ல ஒரு தங்கச்சங்கிலியும், ஒரு கைக்கடிகாரத்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். 2001-ம் வருஷம் போட்ட அதே சங்கிலியைத்தான் இன்னும் பயன்படுத்திட்டிருக்கேன். அதென்னமோ தெரியலை, கறுப்புப்பாசிமேல இருக்கிற ஆர்வம்... தங்கச்
சங்கிலி மேல வரமாட்டேங்குது!

மூன்று தேர்தல்கள், 15 வருடங்கள்... ஒரே எம்.எல்.ஏ!

முதல் தேர்தல்ல தோல்வி கிடைச்சாலும், நேரடியா மக்களைச் சந்திச்சதால நிறைய அனுபவங்கள் கிடைச்சது. மறுபடியும் 2001, 2006, 2011-ம் வருஷம்னு மூன்று சட்டமன்றத் தேர்தல்கள்ல திண்டுக்கல் தொகுதியில வெற்றிபெற்று, தொடர்ந்து 15 வருடங்கள் சட்டமன்ற உறுப்பினரா பணியாற்றினேன்.

பென்ஷன் பணம்... கட்சிக்கே!

எங்க கட்சியைப் பொறுத்தவரைக்கும் தேர்தல்ல சீட் கொடுத்தா கட்சி நிர்வாகமே வேட்பாளரோட செலவுகளை ஏத்துக்கும். வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி எல்லோருமே தங்களோட அரசு ஊதியத்தை அப்படியே கட்சிக்குக் கொடுத்துடணும். கட்சியே ஒவ்வொருத்தருக்கும் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்கும். இப்போ என் பென்ஷன் பணத்தையும் கட்சிக்கே கொடுத்துடுறேன். ஒவ்வொரு மாசமும் கட்சியிலிருந்து எனக்கு ரூபாய் 8,000 பணம் வருது. அதில் என் தேவைகளை நிறைவேத்திக்கிறேன்.

'பொம்பள' விமர்சனம்... ஆணாதிக்க அரசியல் வழக்கம்!

என் 32 வருட அரசியல் அனுபவத்துல எதிர்க்கட்சிகளின் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கேன். ஆனா, 'பொம்பள' என்ற வார்த்தைச் சீண்டலை இப்போதான் எதிர்கொள்றேன். `நீட்' தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதாவின் மரணம் தொடர்பான என்னோட முகநூல் பதிவுல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாகிட்ட கோரிக்கைவெச்சு தன் மகளுக்கு சீட் வாங்கினது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமியின் பதிலைக் கேட்டிருந்தேன். ‘மறைந்த முதல்வர் அம்மாகிட்ட நான் சீட் கேட்கலை’னு கவனமா பேசுறவரு, என்னை ‘அந்தப் பொம்பளையை நான் சட்டசபையில பார்த்ததே இல்லை’னு மீடியா பேட்டியில் சொல்றாரு. அடுத்த சில நாள்களில் ஒரு பேட்டியில், ‘நான் சொன்னது தப்பில்லையே? அவங்க பொம்பளதானே?’ங்கிற மாதிரி இன்னும் தெளிவா தன் அகத்தை வெளிப்படுத்துறாரு. ஆரம்பத்தில் இந்தச் சொல் சுடுவதா இருந்தாலும், இது ஆணாதிக்க அரசியல் வழக்கம்தானேனு அமைதியாகிட்டேன். 'பொம்பள'யா இருக்கிறதில் ஒவ்வொரு பெண்ணும் பெருமைப்படுறோம். ஆனா, அந்த வார்த்தையால சுட்டும்போது எங்களை நீங்க கீழிறக்கிப் பேசுறதா நினைச்சா, அது பேசுறவங்களோட ஆணாதிக்க மனதை உலகுக்குக் காட்டிக்கொடுக்கிற கண்ணாடி... அவ்வளவுதான்!

அரசியல் பணிக்காக... திருமணம் செய்து கொள்ளவில்லை!

எல்லா அரசியல் கட்சிகள்லயும் சம அளவு பெண் பிரதிநிதிகள் இருந்தா, இது மாதிரியான விஷயங்கள் நடக்காதுனு நினைக்கிறேன். சுதந்திரம் கிடைச்சு 70 வருஷம் ஆகிடுச்சு. ஆனா, விரல்விட்டு எண்ணக்கூடிய பெண் ஆளுமைகள்தான் கட்சித் தலைவர்களா இருந்திருக்காங்க. மிகக் குறைவான பெண்களே மக்கள் பிரதிநிதிகளா பதவி வகிச்சிருக்காங்க. இதுக்கு ஆணாதிக்க அரசியலில் எல்லா கட்சியிலயும் உள்ள ஆண்கள், பெண்களை பெரிய அளவில் வளரவிடாததே முக்கியக் காரணம். பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரிய அளவிலான பங்களிப்பையும் ஆண் தலைவர்கள் செய்வதில்லை. இந்த நிலையில ஒரு பெண் அரசியல் பயணத்தில் வெற்றி பெறுவதுங்கிறது ரொம்ப சவாலான விஷயம். அத்தகைய சவாலான அரசியல் பணிக்காகத்தான், நான் திருமணமே செய்துக்கலை. அதனாலதான், எனக்குன்னு பெருசா எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாம மக்கள் பணியை என்னால நிறைவாகச் செய்ய முடிஞ்சிருக்குனு நினைக்கிறேன்.

ஆட்டோ, பஸ், ரயில் பயணங்கள்தான்!

சின்ன வயசுல மாவட்ட அளவிலான கட்சிப் பொறுப்புல இருந்தப்போ சைக்கிள்லதான் பெரும்பாலும் பயணம் செய்வேன். எம்.எல்.ஏ. ஆன பிறகு தொலைதூரப் பயணங்களுக்குக் கட்சிக் கார்ல அழைச்சுகிட்டுப் போவாங்க. இப்போ பெரும்பாலும் ஆட்டோ, பஸ், ரயில்லதான் பயணம் செய்றேன். இப்போ என் அண்ணன் முத்துவடிவேல் குடும்பத்தோட இருக்கேன். மக்கள் பணி, எனக்கு சுவாசம் மாதிரி!''

பாலபாரதிக்கு கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய நினைவுறுத்தல் அலைபேசியில் வருகிறது. ``மதியம் 12 மணி பஸ்ல வந்திடுறேன்'' என்று பதிலளித்து, நமக்கு ஒரு விடைபெறுதல் புன்னகை தருகிறார் தோழர்!