Published:Updated:

திருமிகு கணவர்கள் - சமைப்பது... துவைப்பது... இதுவும் எங்க வேலைதானே!”

திருமிகு கணவர்கள் - சமைப்பது... துவைப்பது...  இதுவும் எங்க வேலைதானே!”
பிரீமியம் ஸ்டோரி
News
திருமிகு கணவர்கள் - சமைப்பது... துவைப்பது... இதுவும் எங்க வேலைதானே!”

வே.கிருஷ்ணவேணி, எம்.பார்த்தசாரதி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார், தி.குமரகுருபரன், ப.பிரியங்கா

வீட்டு வேலைகளைப் பெண்கள்தான் செய்ய வேண்டும் என்பது சமூக விதி. ஆனாலும் அத்திப்பூக்களாக, மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவும் கணவர்களும் காலம்தோறும் இருந்து வருகிறார்கள். ``மனைவியின் வேலையைப் பகிர்ந்துக்கிறேன்னு சொல்றதே வேண்டாமே. எங்க வீட்டு வேலைகளை நாங்க பார்க்கிறோம்... அவ்ளோதான்’’ என்று சொல்லும் இந்தத் தலைமுறை ஆண்கள் நல்ல நம்பிக்கை தருகிறார்கள். அவர்களில் சிலர் இங்கே... 

திருமிகு கணவர்கள் - சமைப்பது... துவைப்பது...  இதுவும் எங்க வேலைதானே!”

``எனக்கும் என் மனைவிக்கும் பூர்வீகம் திருநெல்வேலி பக்கத்துல களக்காடு. கல்யாணமாகி அஞ்சு வருஷமாகுது. ஆரம்பத்துல எங்களுக்குள்ள நிறைய சண்டை வரும். வீட்டு வேலைகள் தர்ற பாரம்தான் மனைவியோட மனக்கசப்புக்கு முக்கியக் காரணம்னு புரிஞ்சது. அதை ரெண்டு பேரும் வெளிப்படையா பேசிப் புரிஞ்சுக்கிட்டு, வேலைகளைப் பிரிச்சிட்டுப் பார்க்க ஆரம்பிச்சோம். காலையில ஏழு மணிக்கு நான் வீட்டைவிட்டுக் கிளம்பியாகணும். அதனால அதுக்கு முன்னாடியே காய்கறிகளை நறுக்கி வெச்சுட்டு நான் கிளம்ப ஆரம்பிக்க, அவங்க சமையலை முடிச்சிடுவாங்க. ரெண்டாம் வகுப்புப் படிக்கிற எங்க பையன் நிஷாந்த்தோட ஹோம்வொர்க்ஸை ரெண்டு பேரும் சேர்ந்துதான் கவனிச்சுக்குவோம். சனி, ஞாயிறுல ஒட்டடை அடிக்கிறது, தூசி தட்டுறது, மாப் போடுறதுனு சும்மா ‘சிட்டி’ ரோபோ மாதிரி வேலைகளை முடிச்சிடுவேன். இன்னிக்கு பிரியாணி நான்தான் சமைச்சேன். சாப்பிடுறீங்களா?'' என்று அருள் சொல்ல, அந்த கமகம மணத்தின் ஊடே பேச ஆரம்பித்தார் மீனா. ``ஊர்லேர்ந்து வர்ற சொந்தக்காரங்க, இவர் வேலை செய்றதைப் பார்த்துட்டுக் கிண்டலா பேசினாலும் கண்டுக்க மாட்டார். ‘நம்ம சூழ்நிலை என்னன்னு மத்தவங்களுக்கு எடுத்துச்சொல்லி எதுக்கு நம்ம நேரத்தை வீணடிக்கணும்’னு கேட்பார். அப்புறம்... பிரியாணி சூப்பரா சமைப்பார்!” என்கிறார் பெரிய சிரிப்புடன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திருமிகு கணவர்கள் - சமைப்பது... துவைப்பது...  இதுவும் எங்க வேலைதானே!”

“நானும் என் கணவர் சிவகுமாரும் காதல் திருமணம் செய்துகிட்டவங்க. நான் தேர்ட்டு இயர் ஆர்க்கிடெக் படிக்கிறப்பவே கல்யாணம் ஆகிட்டதால குடும்பப் பொறுப்புகளை எப்படி ஏத்துக்கப் போறோம்னு தயக்கமா இருந்தது. முக்கியமா, எனக்குச் சமைக்கவே தெரியாது. ஆனா, அவரோ அதைப்பத்தியெல்லாம் கவலைப்படவே இல்ல.`உனக்குச் சமைக்கத் தெரியலைன்னா என்ன... நான் ரொம்ப நல்லா சமைப்பேன்'னு சொல்லி, தினமும் விதவிதமா சமைச்சுக் கொடுப்பாரு. அஞ்சு வருஷமா என் வீட்டுல அவர் சமையல்தான். அவர் என்னோட கணவர் மட்டுமில்ல, எனக்கு சமையல் சொல்லிக்கொடுத்த குருவும் கூட” சொல்லிக்கொண்டே புன்னகைக்கும் ஜீவிதாவைச் செல்லமாகக் கிள்ளிவிட்டு சிவகுமார் பேச்சைத் தொடர்ந்தார்.

“நான் தினமும் காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திடுவேன். எங்க பொண்ணு தன்வி நைட் லேட்டா தூங்குறதுனால அவங்களால காலையில நேரத்தோட எழுந்திருக்க முடியாது. அதனால, காலையில வீடு பெருக்குறது, சமையல் பண்றது மாதிரியான வேலைகளையெல்லாம் நானே முடிச்சிடுவேன். பேபி சீக்கிரமே முழிச்சிட்டான்னா அவளுக்கு பிரஷ் பண்ணிவிட்டு, குளிக்க வெச்சிடுவேன். ஜீவிதா எழுந்ததும் மற்ற வேலைகளைப் பார்க்குறதுக்கு சரியா இருக்கும். நாங்க ரெண்டு பேரும் எந்த மனக்கசப்பும் இல்லாம வேலைகளை என்ஜாய் பண்ணி பாக்குறதுனால லைஃப் ஸ்மூத்தா போகுது” என்று திருப்தியாகப் புன்னகைக்கிறார் சிவகுமார்.

திருமிகு கணவர்கள் - சமைப்பது... துவைப்பது...  இதுவும் எங்க வேலைதானே!”

``எனக்கு இப்போ 64 வயசாகுது. கல்யாணமான புதுசுல இருந்தே நானும் என் மனைவியும் வீட்டுல ஆளுக்கொரு வேலையாதான் பார்ப்போம். காலையில் எழுந்ததும் பெட்ஷீட் மடிச்சு, பெட், சோஃபாவைத் தூசிதட்டி சுத்தம் செய்துட்டு, வீட்டைப் பெருக்கி, பாத்திரம் துலக்கிட்டு, வேலைக்குக் கிளம்பிடுவேன். சமையல் வேலைகளை மனைவி பார்ப்பாங்க.

பல் மருத்துவரான எங்க பொண்ணு சுகாசினிக்குக் கல்யாணம் முடிச்சிட்டோம். பையன் வெங்கடேசகுமார் இதய சிறப்பு மருத்துவர். வீட்டு வேலைகளில் ஆண்-பெண் பாகுபாடு இருக்கக்கூடாதுங்கிறதை அவங்க ரெண்டு பேருக்கும் நாங்க வாழ்ந்து காட்டியிருக்கோம்’’ என்று சொல்லும் ராஜனையே பார்த்துக்கொண்டிருந்த புஷ்பா, ``நான் பேங்க்ல வேலை பார்க்கிறேன். வீட்டு வேலைகளில் இருந்து குழந்தைகளை வளர்க்கிறது வரை எல்லாத்துலயும் அவர் ஈக்குவல் பார்ட்னர் எனக்கு. சொல்லப்போனா எங்க வீட்டுல நான் செய்யாத வேலைனு ஏதாச்சும் இருக்கும். ஆனா, அவர் செய்யாத வேலைனு எதுவும் இல்ல. மளிகைப் பொருள்களை இன்னிக்கு வரைக்கும் நான் வாங்கினதே இல்லை. இப்படி வீட்டுல, வெளியேனு எல்லா வேலைகளையும் பார்த்துக்குவார்.

நான் ஆபீஸ் கிளம்பும்போது லிஃப்ட் வரைக்கும் வந்து ‘ஆல் த பெஸ்ட்’ சொல்லி வழியனுப்பி வெச்சுட்டுத்தான் போவார். என் வெற்றிக்குக் காரணம் அவர்தான்’’ என்று சொல்லும்போது  கன்னங்கள் சிவக்கிறது புஷ்பாவுக்கு.

திருமிகு கணவர்கள் - சமைப்பது... துவைப்பது...  இதுவும் எங்க வேலைதானே!”

``கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் கிச்சன் பக்கம் எட்டிப்பார்த்ததுகூட இல்ல. மனைவி வந்ததுக்கு அப்புறம், அவங்களுக்கு உதவி செய்யலாமேனு தோணுச்சு. பார்க்கிறவங்க என்ன சொல்வாங்கங்கிற தயக்கம், பயமெல்லாம் எனக்கு என்னிக்குமே இருந்ததில்ல. வீட்டைச் சுத்தம் செய்றது, துணிகளை மடிச்சு வைக்கிறதுனு சின்னச் சின்ன வேலைகளைச் செய்தேன். குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வீட்டில் வேலைகள் பெருகிப்போக, மனைவிக்குக் கூடமாட ஒத்தாசைங்கிறதுல ஆரம்பிச்சு, இருக்கிற வேலைகளை ரெண்டு பேருமே சேர்ந்து செய்றதுனு ஆகிடுச்சு. குறிப்பா, யூகேஜி படிக்கிற எங்க பையன் சிவபிரசாத்தைப் படுக்கையிலிருந்து எழப்பறதிலிருந்து ஸ்கூலுக்குக் கிளப்பிக் கொண்டுபோய் விட்டுட்டு வர்றது வரை முழுக்க என் பொறுப்பு. காலையில எக்ஸர்சைஸ் எல்லாம் செய்ய வேண்டாம்... பையன் டிரில் வாங்கிடுவான்’’ என்று பாலசுப்ரமணியன் சிரிக்க, ``காலையில ஆறு மணிக்கு எழுந்து வேலைகளை முடிச்சுட்டு ஆபீஸ் கிளம்பிடுவார். என்ன வேலை இருந்தாலும் சரி, மாலை ஏழு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவார். ரெண்டு பேருமா வீட்டு வேலைகளைச் சேர்ந்து முடிச்சிட்டு, குழந்தைகூட நேரத்தை செலவழிப்போம். சனி, ஞாயிறுகளில் நான் கிராஃப்ட் கிளாஸ் எடுக்கிறபோது, முழுக்க முழுக்க குழந்தையை அவர்தான் பார்த்துக்குவார். எனக்கு முடியலைன்னா, ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு என்னையும், குழந்தையையும், வீட்டையும் பார்த்துப்பார்’’ என்கிறார் மகிழ்ச்சி தாளாமல்!