Published:Updated:

நம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்!

நம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்!

நிவேதிதா லூயிஸ், படங்கள்: லெய்னா

ம் நாட்டில் விளையும் உப்புக்கு முதன்முதலில் வரி விதித்தது யார்? ஆங்கிலேயர் என்பது உங்கள் பதிலானால், தவறு. விடை: கட்டுரையின் முடிவில்!

வரலாற்று ஆர்வலர் நாவலாசிரியர் வெங்கடேஷ் தலைமையில் மரக்காணம் வரை சென்று திரும்புவதாகத் திட்டம் தீட்டினோம். காலை 6 மணிக்குத் திருவான்மியூரிலிருந்து பயணம் தொடங்குவதாக ஏற்பாடு. வருவதாக வாக்களித்துவிட்டு, காலை 6:30 வரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரைத் தவிர, மற்ற எட்டு பேரும் ஒருவர் பின் ஒருவராக திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் எதிரே குழுமினோம்.

நம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்!

இந்தியாவின் முதல் பெருங்காப்பியம் என்று சொல்லப்படும் ராமாயணத்தை எழுதிய ஆதிகவி வான்மீகி முனிவர் தங்கியதாக ஒரு சாராரும், ஜீவசமாதி அடைந்ததாக மற்றொரு சாராரும் நம்பும் 1300 வருடங்களுக்கு முந்தைய கோயில், திருவான்மியூரின் கிழக்குக் கடற்கரைச் சாலை தொடக்கத்தில், அதன் நடுவே அமைந்திருக்கிறது. வான்மீகி தங்கிய ஊர் என்பதை குறிக்கும்பொருட்டே, திரு-வான்மீகி-ஊர் என்று அழைக்கப்பட்ட ஊர் பெயர் மருவி, இன்று திருவான்மியூராகி இருக்கிறது. அத்தனை பரபரப்புக்கும் நடுவே அமைதியாக நிற்கிறார் வான்மீகி. மருந்தீசுவரர் கோயிலின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயிலில் பௌர்ணமி பூஜைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

காலைச் சிற்றுண்டியை மகாபலிபுரத்தில் முடித்துக் கிளம்பிய சிறிது தொலைவில், சாலையோர மண்டபம் ஒன்று, கேட்பாரற்று அமைதியாக நிற்கிறது. ஒரு சிறிய மண்டபத் தில் என்ன இருந்துவிட முடியும் என்ற அசட்டையுடன் நுழைந்தவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்!

17-18-ம் நூற்றாண்டின் நாயக்கர் கால வேலைப்பாடு கொண்ட மண்டப நுழைவாயி லின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்குத் தூண்களில் ஐரோப்பிய ‘ஹேட்’ மற்றும் பட்டன்கள் வைத்த கோட் உடை, ஹை ஹீல்ஸ் சகிதம், கையில் கையுறை மற்றும் வாக்கிங் ஸ்டிக்குடன் டச்சுக்காரர்களின் சிற்பங்கள். இருவரும் அந்தக் காலத்தின் பிரபுக்களாகவோ, விஓசி என்ற `வெரீனிக்டு ஊஸ்ட்-இண்டிஸ்ச் கம்பெனி’ என்ற டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏஜெண்டு களாகவோ இருந்திருக்கலாம். இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில், 17-18-ம் நூற் றாண்டில் கோலோச்சிய டச்சுக்காரர்களின் சதராஸ் கோட்டையில் வசித்தவர்களாக இருந்திருக்கலாம். அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த மண்டபத்துக்கு பொருள் உதவி செய்தவர்களாக இருந்திருக்கலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தூண்களில் கஜுராஹோவுக்குப் போட்டியாகச் சில சிற்பங்கள்.

நம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்!

அவற்றைப் பார்த்துவிட்டு, கிளம்ப யத்தனிக்கையில் தற்செயலாகக் கண்ணில் பட்டன, கூரையில் வடிக்கப் பட்ட சிற்பங்கள். அத்தனையும் கிரகணங்களைக் குறிக்கும் வண்ணம் அமைந்திருந்தன. `கிரகண மண்டபம்’ என்ற பெயர் இதற்கு வரக் காரணம், கூரைச் சிற்பங்கள். நிலவையும் கதிரவனையும் விழுங்கத் தயாராக சர்ப்பங்கள், மானை வேட்டையாடும் புலி, இருதலை கொண்ட கண்டபெருண்டப் பட்சி, மனித முகம்கொண்ட தேள், சிங்க உடல் மனிதத் தலையுடன் புருஷ மிருகம், கண்ணப்ப நாயனார், குட்டியுடன் ஒரு குரங்குக் குடும்பம், எலியை வேட்டையாடும் பாம்பு, இரு மீன்கள், ஆமை, முயலை விழுங்க முயற்சி செய்யும் முர்ரே ஈல் எனப்படும் விலாங்கு மீன் என அசத்தலான சிற்பங்கள். இவற்றுடன் உடலற்ற ராகுவின் சிற்பம் ஒன்று. இந்த மண்டபத்தின் சிற்பங்கள் அனைத்தும் கிரகணங்கள், ராசி, போன்றவற்றில் அன்றைய தமிழனின் ஈடுபாட்டைச் சொல்கின்றன.

இடைகழிநாட்டையும், காயல்களையும் கடந்து தொடர்ந்த பயணத்தின் அடுத்த நிறுத்தம் - மரக்காணம் பூமீசுவரர் கோயில். சிறுபாணாற்றுப்படை ஒயிம நாட்டின் எயிர்பட்டணம் என்றே மரக்காணத்தைக் குறிக்கிறது. முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட `பெரிப்ளஸ் ஆஃப் எரித்ரியன் சீ’ என்ற கிரேக்க மாலுமியின் நூலில் `சோபட்டணம்’ என்று மரக்காணம் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய பழைமை வாய்ந்த கடல் வாணிப நகரமான எயிர்பட்டணத்தின் பூமீசுவரர் கோயில், சோழர் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

நம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்!

முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் குலோத்துங் கனின் கல்வெட்டுகள் கோயில் கருவறையைச் சுற்றி அழகு சேர்க் கின்றன. பெரிதாக கல்வெட்டுகள் படிக்கத் தெரியாவிடினும், `ஸ்ரீ இராஜ ராஜ’ என்ற எழுத்துகளைத் தேடிப் பிடிக்கும் நொடி தோன்றும் உணர்ச்சிப் பிரவாகத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடிவதில்லை.  பாவை விளக்கு ஒன்று அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்த கருவறையில், அருள் பாலிக்கிறார் பூமீசுவரர். சிவன் சந்நிதியில் பாவை விளக்கும், அம்மன் சந்நிதி முன் நந்தியும் அமைந்திருப்பது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. வெளிப்பிராகாரத்தில் பிச்சாண்டவர், மகாவிஷ்ணு, பிரம்மா, குடையின் கீழ் துர்கை என்று அழகாகச் சிலைகள். மகாவிஷ்ணுவின் சிலைக்கு மேல் பூதகணங்கள் செதுக்கிய குறும்புக்கார சிற்பி ஒருவன்,

ராஜராஜனை அழகாகச் சிற்பமாக வடித்திருக்கிறான். சிவன் கோயில் இல்லாத ஊரில் உணவருந்த வந்த சிவபக்தர் வணங்க என்று நெல் அளக்கும் மரக்கால் ஒன்றைக் கவிழ்த்து, அதில் விபூதியிட்டு அதுவே சிவம் என்று சொல்லிய பெண்ணின் ஆசைக்குத் தலைவணங்கி மரக்காலே பூமீசுவரராக அவ்விடத்தில் இருந்து அசைக்க முடியாமல் மாறியதாக ஸ்தல புராணம் சொல்கிறது. அதிலிருந்து வந்த பெயரே - மரக்கா-ணம். மன்மதனும் கண்வ முனிவரும் வணங்கிய கோயில் இது.

வெளியேறும்போதுதான் கவனிக்கிறோம், கொடிமரத்தின் அருகில் வாளால் தன் தலையைத் தானே துண்டிக்கும் போர் வீரனின் சிற்பம்கொண்ட அரிகண்டம் எனும் வீரர் கல். போருக்குச் செல்லும் முன் வெற்றிவாகை சூடும் ஆசையில் இவ்வாறு உயிர் தியாகம் செய்வது ஒரு காலத்தில் வாடிக்கையாக இருந்திருக்கிறது.

நம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்!

உப்பளங்களை ரசித்தவாறு, வெடால் கிராமத்தின் வசந்த நாயகி சமேத வடவாமுக அக்னீசுவரர் கோயிலை அடைகிறோம். பிற்கால பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட செங்கல் கோயிலான இதை மாற்றமின்றி அப்படியே திருப்பணி செய்திருக்கின்றனர் சோழர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான வெடால் ஏரிக்கரையில் கஜபிருஷ்ட வடிவ விமானத்துடன் கம்பீரமாக நிற்கிறது கோயில். விமானத்தின் நடுவே மேலிருந்து கீழ் இரண்டாகப் பிளந்து திருப்பணிக்காகக் காத்து நிற்கிறது. கோயிலின் முன் மிகப்பெரிய வட்ட வடிவிலான க்ரந்த கல்வெட்டு. கோயிலைச் சுற்றியும் கல்வெட்டுகள். வலது காலை இடது காலின் மீது வைத்து அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி. ஓர் ஓரமாக ஜ்யேஷ்தா தேவி, சப்த கன்னியர் கல் ஒன்று. கோயில் திறக்காமல் இருந்ததால், உள்ளே செல்ல முடியவில்லை.

அங்கிருந்து சென்றது - வாயலூர் திருப்புல்லீசு வரர் மற்றும் வைகுண்டவாசப்பெருமாள் கோயில். எந்தவித விமானமும் இன்றி கஜ பிருஷ்ட வடிவில் இருக்கின்றன சிவன் மற்றும் பெருமாள் சந்நிதிகள். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயிலின் முகமண்டபத்தில், அழகிய கோலாட்டம் ஆடும் பெண்கள் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. வெண்ணைத் திருடும் கிருஷ்ணர், புத்தர், குழலூதும் கிருஷ்ணர் என்று அழகிய சிற்பங்கள் கண்ணைப் பறிக்கின்றன. கி.பி 400-ம் ஆண்டு மகேந்திரவர்ம பல்லவரால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், சமஸ்கிருதம், பாலி என பல மொழிகளில் பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்திரக்கூடர்களின் கல்வெட்டுகள் இருக்கின்றன.

நம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்!

அடுத்துச் சென்ற இடம் சதராஸ் என்ற சதுரங்கப்பட்டணம் கோட்டை. கல்பாக்கம் அணு உலை குடியிருப்பின் அருகில் உள்ள இந்தப் புராதனக் கோட்டை, இப்போது தொல்லியல் துறையின் சீரான பராமரிப்பில் உள்ளது. சம்புவராயர்களால் ராஜநாராயண பட்டணம் என வழங்கப்பட்ட இந்த இடத்தில், 17-18-ம் நூற்றாண்டில், வாணிபத்துக்காக டச்சுக்காரர்களால் கட்டப்பட்டதே சதராஸ் கோட்டை. உப்பு, முத்து, மஸ்லின் துணி, குதிரைகள், பருத்தி, வாசனைப் பொருள்கள் என இங்கிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்தனர் டச்சுக்காரர்கள். தேவாலயம், குதிரை லாயம், பணியாளர் இல்லம், கிணற்றுடன் சமையலறை, அலுவலக அறைகள், தானியம் சேமிக்கும் கிடங்கு, கல்லறை, கடற்கொள்ளையரைக் கழுவில் ஏற்றும் தூக்குமேடை, கோட்டை அரண், மணிக்கூண்டு என சகலமும் உண்டு, இந்தச் செங்கல் கோட்டையுள். வெடிமருந்து சேமிக்கும் அறை ஒன்று சிதில மடைந்து கிடக்கிறது. 1670 முதல் 1790 வரை உள்ள 19 கல்லறைகள் இங்கு உள்ளன. அதில் இரண்டு அடுக்காக தாய்-சேய் சுமை தாங்கிக் கல்லறை ஒன்றும் உண்டு.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் பயணம் தொடர்ந்தது. மகாபலிபுரத்தின் வலியன்குட்டை மற்றும் பிடாரி ரதங்கள்... பல்லவர்களின் கல் குவாரி இருந்த இடம் அதன் அருகிலேயே உள்ளது. ரதங்களுக்குச் செல்லும் வழியிலேயே கையில் பாசாங்குசம் ஏந்திய பிள்ளையார் காட்சி தருகிறார். இந்தப் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் சிற்பிகள் உள்ளே நுழைந்து பணியைத் தினமும் தொடங்கி யிருக்கின்றனர். முடிக்கப்படாத இரு ரதங்கள், உளியின் அடையாளங்களுடன் காட்சி தருகின்றன. அதற்கு அப்பால், பல்வேறு நிலைகளின் வெட்டப்பட்ட பாறைகள். அத்தனை தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் உளிகொண்டு பாறைகளில் சிறு துவாரங்கள் அமைத்து, அவற்றுள் மூங்கில் கழிகள் செருகி, உள்ளே தண்ணீர் ஊற்றியிருக்கின்றனர். அழுத்தம் தாளாமல், பாறை விரிசல் அடைந்ததும், சீராக உடைத்திருக்கிறார்கள். பல்லவர்களின் கைவண்ணம் கண்டு வியந்தபடி சாளுவன்குப்பம் முருகர் கோயிலை அடைந்தது குழு. சாளுவ மன்னன் நரசிம்ம தேவராயனின் காலத்தில் பெயர் மாற்றமடைந்த திருவிழிச்சில் எனும் ஊரில்தான் இருக்கிறது, 2004-ம் ஆண்டு சுனாமி வெளிக்கொணர்ந்த முருகர் கோயில். புலிக்குகையின் அருகில் இருக்கும் கோயிலில், தரைமட்டத்துக்குப் பத்து அடிக்குக் கீழ் வேல், பலிபீடம், அர்த்த மண்டபம், கருவறை என முற்றிலும் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. கி.பி 4-5 முதல் 11-12 வரை இதன் காலம் இருக்கலாம் எனக் கணிக்கின்றனர். ராஜ ராஜனின் கல்வெட்டும் சில பல்லவர் காலத்துக் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.

நம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்!

புலிக்குகைக்கு அடுத்து பயணித்தது குழு. குகையின் சிற்பங்களையும், அதிரணசண்ட மண்டபத்தின் நாகரி மற்றும் பல்லவ கிரந்த கல்வெட்டுகளை ரசித்தபடி வெளிவந்தால், அழகிய மகிஷாசுரமர்த்தினி பலத்தை கண்டு பூரிப்பு அடைந்தது. வாட்டிய வெயிலின் தாக்கம் அதிகரிக்க, கோவளம் கார்மெல் தேவாலயத்துடன் அன்றைய பயணத்தை நிறைவு செய்வதாக முடிவானது. 1808-ம் ஆண்டு, பெரும் செல்வந்தரான டிமாண்டேயினால் கட்டப்பட்டது, உத்தரிய மாதா தேவாலயம். டிமாண்டே காலனி புகழ் டிமாண்டேதான் அது. தற்போது பேயாக உலவுவதாகக் கதை திரிக்கப்படும் டிமாண்டேயின் வாழ்க்கை சோகம் நிறைந்தது. ஒரே மகனை 20 வயதில் பறிகொடுத்த டிமாண்டேயின் மனைவி, மன நிம்மதி தேடி கோவளம் கடற்கரைக்கு அடிக்கடி வர, அவர் மனம் தெளிவடைய வேண்டி, டிமாண்டே கட்டிய ஆலயம் இது. முற்றிலும் புனரமைக்கப்பட்டு விட்டாலும், டிமாண்டேயின் கல்லறையும், சிறு குழந்தையைத் தொட்டிலில் இட்டு, பூமாலையால் ஆட்டியபடி உள்ள சலவைக்கல் சிற்பமும் கண்ணைக் கவர்கின்றன. டிமாண்டேயின் கல்லறையில், `வலக்கை செய்வதை, இடக்கை அறியாமல் இருக்கட்டும்’ என்ற விவிலிய வார்த்தைகள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. இன்றளவும், மயிலை பேராயத்தின் மிகப்பெரும் கொடையாளர், டிமாண்டேதான்.

மரக்காணத்தின் உப்பளங்களுக்கு முதன் முதலில் வரி விதித்தது முதலாம் ராஜேந்திர சோழன். வரியை அரசுக்கு நேரடியாகச் செலுத்தாமல், மரக்காணம் பூமீசுவரர் கோயிலில் தினமும் இரு விளக்குகள் அணையாமல் எரியுமாறு பார்த்துக்கொள்ளச் சொல்லி, அதை பூமீசுவரர் கோயில் கல்வெட்டிலும் வடித்தான் ராஜேந்திரன்!