Published:Updated:

உங்கள்மீது நம்பிக்கை இருக்கட்டும்!

உங்கள்மீது நம்பிக்கை இருக்கட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள்மீது நம்பிக்கை இருக்கட்டும்!

நிலவொளிப் பெண்நிவேதா லூயிஸ்

ல்லாம் பேசி முடித்தபின்தான் கேட்டேன், அந்தக் கேள்வியை. “இலோனா என்றால் என்ன அர்த்தம்?” என்றவுடன், ‘க்ளுக்’கென சிரிக்கிறார். `நிலவொளி’ என்கிறார். இலோனாக்கள் நிலவின் ஒளியைவிட கதிரவனின் வீச்சாகத் திகழ்வதை நான் உணர்ந்திருக்கிறேன். இலோனா கெத்சியா, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண். இந்தியாவில் தங்கியிருந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். அவருடன் ஓர் உரையாடல்...

“நான் பிறந்தது தென்கிழக்கு போலந்தில் உள்ள ஸ்வில்க்ஸா என்ற சிறிய ஊரில். மிகச்சாதாரணமான குடும்பம். ஓர் அக்கா, ஒரு தம்பி. அம்மா அதே ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆங்கில ஆசிரியை. அப்பா ஒரு வாக்யூம் கிளீனர் கம்பெனியில் பணிபுரிகிறார். நிறைய பயணிக்கும் வேலை அவருக்கு. ஐரோப்பா மற்றும் இந்தியாவுக்குப் பணி நிமித்தமாகப் பயணித்திருக்கிறார். இந்தியா அவருக்கு மிகவும் பிடித்த நாடு. ‘உனக்கும் பிடிக்கும் பார்’ என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவார். அக்கா இப்போது இத்தாலியில் இருக்கிறார். அவரும் மும்பை, டெல்லி என்று இந்தியாவைச் சுற்றியிருக்கிறார். இந்தியா எப்படி இருக்கும் என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்!

உங்கள்மீது நம்பிக்கை இருக்கட்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழ் மீதான ஆர்வம் எப்படி வந்தது?

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்ததும், கிரக்கோவில் பி.ஏ படிக்க விரும்பினேன். சிறுவயது முதலே மொழிகளின் மீது அதீத ஆர்வமுண்டு.இப்போது ஆங்கிலம், இத்தாலியன், போலிஷ், ஜெர்மன், தமிழ், சமஸ்கிருதம், இந்தி என ஏழு மொழிகள் பேசுவேன். ‘இண்டாலஜி’ என்ற இந்திய வரலாறு, இலக்கியம், கலாசாரம் குறித்துப் படிக்க ஆவல். இண்டாலஜி படிப்பில், சமஸ்கிருதமும் இந்தியும் கட்டாயப் பாடங்கள். கூடுதல் மொழியாகத் தமிழும் கற்றேன். தமிழ் இனிமையான மொழி. சமஸ்கிருதம் போல வழக்கொழிந்துவிட்ட மொழியாக இல்லாமல், தொன்றுதொட்டு இன்றும் பேசப்பட்டுவரும் மொழியாக விளங்குகிறது. பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் வேறுபாடு இருப்பினும், மொழியின் இனிமை என்னை ஈர்த்தது. ஐரோப்பாவில் அதிகம் அறியப்படாத மொழி என்பதாலும், எனக்குப் புதியதாகத் தோன்றியதாலும், தமிழ் கற்க ஆவல் கொண்டேன். போலந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சொல்லித் தர பேராசிரியர் எவரும் இல்லை. கிடைத்த புத்தகங்களைக்கொண்டு நானே படித்தேன்.

உங்கள் ஆய்வு குறித்துச் சொல்லுங்கள்...

பி.ஏ முடித்து எம்.ஏ சேர்ந்ததும், போலந்து வார்சா நகரில் உள்ள இந்தியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ் (ICCR) மற்றும் இந்தியத் தூதரகம் மூலம் கல்வி உதவித்தொகையும் இந்தியாவில் கற்க வாய்ப்பும் கிடைத்தது. அதற்குள் கற்றுக்கொண்ட யோகாவால் சமஸ்கிருதம்மீது மிகுந்த ஆர்வம் தொற்றிக் கொள்ள, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் ஓராண்டு சமஸ்கிருதம் பயின்றேன். சமஸ்கிருத மொழியில் ஆயுர்வேத இலக்கியம் கற்றேன். அதன்பின் ஆய்வுப் படிப்பைத் தொடர்ந்தேன்.லெ’எக்கோல் ஃப்ராங்காய்ஸ் டி எக்ஸ்ட்ரீம் (EFEO)என்ற அமைப்பின் உதவித்தொகையில் ஐந்து மாதங்கள் புதுச்சேரியில் உள்ள அவர்களது கல்வி நிறுவனத்தில் பயிலும் வாய்ப்பு கிட்டியது. தமிழ் சித்தா இலக்கியம்தான் என் ஆய்வுப் படிப்புக்கான தலைப்பு.

சித்தர்கள் குறித்தும், அவர்கள் உபயோகித்த மருத்துவ வழிமுறைகள் குறித்த பழைமையான இலக்கியங்கள் குறித்தும், இன்றைய நிலையில் அவர்கள் வாழ்வியல் குறித்தும், மரணமில்லா வாழ்வு சாத்தியமா என்பது குறித்தும் படித்து வருகிறேன். இப்போது ராமதேவர், திருமூலர், வள்ளலார் மற்றும் அவர்கள் எழுதிய நூல்கள் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்.திருமூலரின் ‘திருமந்திரம்’ சைவ சித்தாந்தம் பற்றியும், மரணமில்லா வாழ்வை அடைவதற்கான வழியையும் சொல்கிறது. ராமதேவரின் ‘வைத்தியக் கல்லடம்’ எனும் நூல் மருத்துவம், ரசவாதம், யோகா என்று பலவற்றைப் பேசுகிறது. சில செய்யுள் புதிர் போலவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது.

பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்கும் நிறைய வேறுபாடு உண்டே... எப்படி தமிழ் கற்றுக்கொண்டீர்கள்?

புதுச்சேரி டாக்டர் ஆரோக்கியநாதனிடம் பேச்சுத்தமிழ் கற்றுக்கொண்டேன். புத்தகங்கள் சில உரையுடன் கிடைத்தன. அதில் குறிப்பிடப் பட்டுள்ள பொருள்கள் குறித்தும், செயல்முறை பற்றியும் இப்போதைய சித்தர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். 100% சரியான பொருள், முறை என்பதை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், ஓரளவுக்கேனும் விசாரித்துத் தெரிந்துகொள்வேன்.ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றம் செய்யப்படும்போது நிச்சயமாகத் தவறுகள் இருக்கும். அவற்றைக் குறைக்க முயல்கிறேன். புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட்டின் உதவியுடன், பழைய சித்தர் இலக்கியத்தை நானே மொழிபெயர்த்துக்கொள்கிறேன்.

உங்கள்மீது நம்பிக்கை இருக்கட்டும்!

வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள். கலாசார அதிர்வு என எதைச் சந்தித்திருக்கிறீர்கள்?

கலாசார வித்தியாசம் என எதுவும் எனக்குப் பெரியதாகத் தோன்றவில்லை. என் படிப்பே கலாசாரம் குறித்ததுதானே? இண்டாலஜி பற்றிப் படித்ததாலும், ஓரளவுக்கு இந்தியா இப்படித்தான் என்பது முன்பே தெரிந்ததாலும் வேறுபாடு தெரியவில்லை. கோயிலில் யானையைப் பார்ப்பது எல்லாம் அதிசயமாகத் தெரியவில்லை. வந்த புதிதில் இங்குள்ள தட்பவெப்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது எல்லாம் நன்றாகவே இருக்கிறது.

போலந்துப் பெண்களுக்கும் தமிழ்ப் பெண்களுக்கும் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?

தமிழ்ப்பெண்களின் வாழ்க்கை அவர்களின் குடும்பத்துடன் மிகுந்த தொடர்புடையது. இதை நான் குறைவாக மதிப்பிடவில்லை. போலந்துப் பெண்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் மிகவும் சுதந்திரமாக வாழ்கிறார்கள். தங்கள் வாழ்க்கையைத் தாங்கள் விரும்பியபடி அமைத்துக் கொள்கிறார்கள். தங்கள் தொழில்மீது அதிக நாட்டம்கொண்டுள்ளனர். ஏறக்குறைய முப்பது வயதுக்கு மேல்தான் திருமணம் செய்வது குறித்து யோசிக்கிறார்கள். தமிழகத்தில் அப்படியில்லை.

இங்குள்ள பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

தன் மீது இன்னும் அதிக நம்பிக்கை வேண்டும்.இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக, அடுத்தவரை எதிர்பாராமல் வாழப் பழக வேண்டும். குடும்ப அக்கறை வேண்டும்தான். ஆனால், தன் சுயம் மீதான உறுதிப்பாடு இன்னும் அதிகம் வேண்டும். எந்த உறவுமுறையிலும் தன்னைத் தொலைக்கத் தேவையில்லை. அடுத்தவரை மகிழ்விக்க நினைப்பதற்கு முன், நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அல்லவா? உறவுகளுக்குள், நட்புகளுக்குள் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வேண்டியதில்லை. தியாகமும் தேவையில்லை.அடுத்தவரின் ஆதரவைப் பெறுவதும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் சரிசமமாக இருக்கட்டும்.  குறிப்பாக உங்கள்மீது நம்பிக்கை இருக்கட்டும்.நிச்சயம் அதில் ஜெயிப்பீர்கள்!”

எங்கிருந்தாலும், ஒளி பாய்ச்சிக்கொண்டிருக்க வாழ்த்துகள் இலோனா!