Published:Updated:

“தாக்குதல்களால் சோர்ந்துபோக மாட்டேன்!”

“தாக்குதல்களால் சோர்ந்துபோக மாட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தாக்குதல்களால் சோர்ந்துபோக மாட்டேன்!”

உற்சாக ரகசியம்கு.ஆனந்தராஜ், படம் : ரா.வருண் பிரசாத்

“தொகுதி மக்களைச் சந்திச்சுட்டு இன்னிக்குதான் சென்னைக்கு வந்தேன். நாளைக்கு ஒரு கேஸ் விஷயமா சுப்ரீம் கோர்ட்ல வாதாடப் போகணும். காலாண்டுத் தேர்வு நடக்கிறதால பையனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கணும். நைட் டி.வி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கணும். கட்சி வேலைகளும் நிறைய இருக்கு. பேட்டியைக் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுடுங்க!” - வேண்டுகோள் வைத்துவிட்டுப் பேச ஆரம்பிக்கிறார் விஜயதாரணி எம்.எல்.ஏ. அகில இந்திய மகிளா காங்கிரஸ் பிரிவின் பொதுச்செயலாளர். நாம் பார்க்கும் அரசியல் முகம் தவிர்த்து சிங்கிள் பேரன்ட், வழக்கறிஞர் எனத் தன் பர்சனல் பக்கங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

“என்னோட கொள்ளுத்தாத்தா கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையும், என் தாத்தா வும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள். பெற்றோர் இருவரும் டாக்டர்கள். 70-களின் இறுதிவரை அப்பா பத்மநாபன் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலருக்கு பர்சனல் டென்டிஸ்ட்டா இருந்தார். அப்பாவுக்கு அரசியல் ஆர்வமில்லையென்றாலும், காமராஜர் அய்யா மேலிருந்த அதீத அன்பால் அவர்கூடவே ஓய்வுநேரங்களைக் கழிப்பார். எங்க வீட்டில் மூணு சகோதரிகள்ல நான் ரெண்டாவது பெண். நாங்க கன்னியாகுமரியில பிறந்தாலும், வளர்ந்ததெல்லாம் சென்னைதான். என்னோட ஒன்பது வயசுல அப்பா இறந்துட்டாரு. சிங்கிள் மதரா எங்களை வளர்த்து ஆளாக்க, அம்மா ரொம்பச் சிரமப்பட்டாங்க. என்னோட மாமா மகாதேவன்பிள்ளை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரா இருந்த சூழல்ல, அம்மாவுக்கும் காங்கிரஸ் கட்சி மேல ஈடுபாடு வந்தது. டாக்டர் பணிக்கு இடையே தொடர்ந்து அரசியல்லயும் கவனம் செலுத்தினாங்க.

“தாக்குதல்களால் சோர்ந்துபோக மாட்டேன்!”

இந்திரா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்திக்கப் போகும்போது, சிறுமியா இருந்த என்னையும் அம்மா அழைச்சுட்டுப் போவாங்க. அம்மா தமிழக மகிளா காங்கிரஸ்ல முக்கியப் பொறுப்புல இருந்தபோது,  நிறைய பெண்களை காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களா சேர்த்துவிட்டாங்க. அப்போ பி.எல் படிச்சுட்டிருந்த என்னையும், மாணவர் காங்கிரஸ் உறுப்பினரா சேர்த்துவிட்டாங்க. அப்போதிலிருந்து அரசியல் நிகழ்வுகள்ல ஆர்வம்கொள்ள ஆரம்பிச்சேன்’’ என்பவர், காதல், கல்யாணம் எனத் தன் வாழ்க்கை பயணத்தைத் தொடர்கிறார்...

``காலேஜ் படிச்சுகிட்டே ஜூனியர் ஸ்டூடன்ட் அட்வகேட்டா பல நிறுவனங்களுக்கு ஆடிட்டிங் வேலைகள் செய்துகொடுத்துட்டும், கட்சிப் பணிகளைக் கவனிச்சுக்கிட்டும் இருந்தேன். மாணவர் காங்கிரஸ்ல தொடங்கின என் கட்சிப் பயணம், காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர், செய்திப்பிரிவு தலைவர், பெண்கள் குறை தீர்க்கும் பிரிவு தலைவர், மகிளா காங்கிரஸ் தலைவர்னு தமிழக அளவிலான பல பொறுப்புகளைக் கவனிக்கிற அளவுக்கு விரிவடைஞ்சது. நான் ஸ்டூடன்ட் அட்வகேட்டா இருந்த நேரத்துல என்னுடன் வேலைபார்த்தவர், என் கணவர் சிவக்குமார் கென்னடி. அப்போ எங்க ஆபீஸ்ல புக் எடுக்க அடிக்கடி வருவார். ‘போன வாரம் ஆறு புக் எடுத்தீங்க, ஒரு புக் இன்னும் வரலை. அதுக்குள்ள மறுபடியும் புக் வேணுமா’னு அவர்கிட்ட மல்லுக்கு நிப்பேன். ஆனா, அவர் என்னைக் காதலிச்சது, எனக்குத் தெரியாமலேயே என் பக்கத்தில் நின்னு ஜோடிப் பொருத்தம் பார்த்ததுனு அறியாதவளா இருந்திருக்கேன். படிப்பு முடிஞ்சதும், நான் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநில உயர் நீதிமன்றங்கள்லயும், டெல்லி உச்ச நீதிமன்றத்துலயும் வழக்கறிஞரா பிராக்டீஸ் செய்ய ஆரம்பிச்சேன். அந்த ஆறு மாசத்துல என்னை ரொம்பவே மிஸ் செய்தவர், தன் நண்பர்கள் மூலமா என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறதைச் சொல்லியனுப்பினார். எனக்கும் அவரைப் பிடிச்சிருந்தது. 1993-ல் எங்க கல்யாணம் நடந்தது’’ என்பவர், தன் கணவர் தன்னை எந்தளவுக்குப் புரிந்துகொண்டவராகவும், தனக்குப் பக்கபலமாகவும் இருந்தார் என்பதைச் சொல்லும்போது அவர் முகத்தில் கனிவு. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``ரெண்டு பேரும் இந்தியாவுல பல நீதி மன்றங்கள்ல பரபரப்பா வாதாடிட்டு இருந் தோம். கல்யாணமான ஒரு வருஷத்துல பொண்ணு அபிராமி பிறந்தா. காலையில விமானத்துல பறந்து டெல்லி, வெளிமாநிலங்
கள்னு வழக்கறிஞர் பணிகளைப் பார்த்துட்டு, மாலை வீடடைஞ்சி குழந்தையைப் பார்த்துப்பேன்.

‘உனக்கு அரசியல் ஆர்வமும் அதுக்கான ஆற்றலும் இருக்கு’னு சொல்லி, கட்சிப் பணிகள்லயும் என்னைக் கவனம் செலுத்த வெச்சார். ஒருமுறை நான் வாதாட வேண்டிய ஒரு பொதுநல வழக்கு சுப்ரீம் கோர்ட்ல விசாரணைக்கு வந்தப்போ, நான் கட்சிப் பணிகளால வேற ஒரு மாநிலத்துல இருந்தேன். ‘நீங்க எனக்குப் பதிலா போய் வாதாடுறீங்களா'னு என் கணவர்கிட்ட கேட்க, கடைசி நேரத்துல 62 ஆயிரம் ரூபாய்ல டிக்கெட் எடுத்துட்டு போய் அந்த கேஸ்ல வாதாடி வெற்றியும் பெற்றார். நான் வெளியூர்ல இருந்தால், ஒருநாளைக்கு இருபது முறைக்கும் மேல அவருடன் போன்ல பேசுவேன். எல்லா விஷயங்களையும் டிஸ்கஸ் பண்ணி முடிவெடுப்போம். இப்படி வாழ்க்கையில் எல்லா நொடிகளிலும் அவர் எனக்காக இருந்திருக்கார்’’ என்றவர் தன் குடும்பப் புகைப்படத்தைக் காட்டுகிறார். தன் கணவரின் மறைவுபற்றிப் பேசும்போது அவர் குரல் தணிகிறது.

“தாக்குதல்களால் சோர்ந்துபோக மாட்டேன்!”

``அவருக்குச் சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டு, டயாசிலிஸ் நிலைவரை போயிட்டார். பல வருடங்களா நோயோடு போராடியபடியேதான், வழக்கறிஞர் பணியையும் பார்த்துட்டிருந்தார். போன வருஷம் மார்ச் மாசம். நான் டெல்லியில நடந்த பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டுல இருந்தேன். மதியம் பிரஸ் மீட்ல பேசிக்கிட்டிருந்தப்போ என் பொண்ணுகிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘அப்பா  நம்மளைவிட்டுட்டுப் போயிட்டார்மா’னு மகளோட அழுகுரல் கேட்க, அப்படியே நிலைகுலைஞ்சு போயிட்டேன். ‘இனி நமக்குன்னு யார் இருக்கா? அவரில்லாத ஒரு வாழ்க்கையை நம்மாள வாழ்ந்துட முடியுமா’னு அழுகையும் தவிப்புமா விமானத்தில் சென்னைக்கு வந்துசேர்ந்த அந்த நிமிஷங்கள் முழுக்க மறக்கமுடியாதவை. இழப்பிலிருந்து நான் மீண்டுவர பல மாதங்கள் ஆச்சு. ஒன்பது வயசுல என் அப்பாவை இழந்து நான் நின்ன மாதிரி, என் பையன் ஆகாஷும் தன்னோட ஒன்பது வயசுல அவங்கப்பாவை இழந்து நின்னான். அப்போ பொண்ணு எம்.பி.பி.எஸ் படிச்சுட்டு இருந்தா. என் அம்மாவைப்போல நானும் சிங்கிள் பேரன்ட்டா இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள, என்னை இன்னும் வலிமையாக்கிக்க வேண்டியிருந்தது. வாழ்க்கையைப் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிற உணர்வு’’ என்பவர் தன் உறுதியால் அதிலிருந்து மீண்டிருக்கிறார்.

``அம்மாங்கிற பொறுப்புதான் முக்கியமானது எனக்கு. பொண்ணு வளர்ந்துட்டா. ஃபைனல் இயர் படிக்குற பொண்ணு காலேஜ் போறதுக்கு வசதியா இருக்கும் என்பதால, என் மாமனார் வீட்டிலிருக்கா. பையன் எட்டாவது படிக்கிறான் என்பதால அவனுக்கு நான் அதிகமாகத் தேவைப்படுறேன். தினமும் காலையில அவனை அஞ்சு மணிக்கு எழுப்பிவிட்டு, ஏழு மணி வரைக்கும் கூடவே இருந்து படிக்க வெச்சுனு ஒருபக்கம் அம்மா டியூட்டி பார்த்தாலும், அரசியல்லயும் தீவிரமா செயல்படறேன். அந்தப் பணி எனக்குத் தினம் தினம் சவால்களை வெச்சுட்டுக் காத்திருக்கும்’’ என்ற விஜயதாரணி, தன் கட்சி அரசியல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பணியைப் பற்றிப் பேசினார். 

“அரசியல்ல அவ்வளவு சீக்கிரம் பெண்களை வளரவிட மாட்டாங்க என்பது உண்மை. அதுக்கு நானும் கண்கூடான எடுத்துக்காட்டு. கட்சிப் பணிக்கு வந்து 24 வருஷங்கள் கழிச்சுதான் எனக்கு
எம்.எல்.ஏ சீட் கிடைச்சுது. 2011, 2016-ம் வருட தமிழகச் சட்டமன்றத் தேர்தல்கள்ல  கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வானேன். இப்போ சட்டமன்றத்தில் எங்கக் கட்சியின் சார்பில் இருக்குற எட்டு எம்.எல்.ஏ-க்களில் நான் மட்டும்தான் பெண் என்பதில் பெருமை எனக்கு. சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாவும் இருக்கேன். தினமும் கட்சி வேலைகள் மற்றும் கட்சிக் கூட்டங்கள், டி.வி விவாதங்கள்ல கலந்துக்கிறது, வாரத்துல தவறாம மூணு நாளைக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறதுனு பரபரப்பா இயங்கிட்டிருக்கேன்.

எவ்வளவுதான் சிறப்பா செயல்பட்டாலும், பெண்ணா இருக்கிற ஒரே காரணத்துக்காக நம்மை அதிகம் போராட வைப்பாங்க, தொடர்ந்து பல்முனைத் தாக்குதல்களைக் கொடுத்துட்டே இருப்பாங்க. அதுக்காகவெல்லாம் ஒருநாளும் சோர்ந்துபோக மாட்டேன். சமீபத்தில் அபத்தமான விமர்சனங்களை எதிர்கொண்டப்போ, டெல்லி போய் சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சந்திச்சு என் வலியைச் சொல்லிட்டு வந்தேன். அப்போதும் துணிஞ்சுப் போராடினதால்தான், எனக்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்புக் கிடைச்சுது’’ என்பவரிடம், வழக்கறிஞர் விஜயதாரணி ரோல் பற்றிக் கேட்டதும் ஆனந்தமாகச் சிரிக்கிறார்.

``எனக்குக் கறுப்புக் கோட்டுப் போட்டுட்டு கோர்ட்ல வாதாடுறது ரொம்பப் பிடிக்கும். அந்தத் தோற்றத்தில் என்னை நான் கம்பீரமா உணர்வேன். கட்சி மற்றும் எம்.எல்.ஏ பொறுப்புகளால, என் வழக்கறிஞர் பணியில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுடுச்சு. ஆனா, அதன்மூலமா பெறும் ஊதியத்துல மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளைச் செஞ்சுட்டு வர்றேன் என்பதால, வாரத்துல சில நாள்களைக் கறுப்புக் கோட்டுக்கு ஒதுக்கியிருக்கேன். படிப்பு விஷயமா வெளியூர் போயிருக்குற பொண்ணுக்கும், இவருக்கும்கூட அட்வகேட் விஜயதாரணியை ரொம்பப் பிடிக்கும்’’ என்பவர், தன் மகனைக் கட்டியணைத்துக்கொள்கிறார்.