Published:Updated:

ஆசை மருமகனும் ஆடு வளர்த்த மாமியாரும்!

ஆசை மருமகனும் ஆடு வளர்த்த மாமியாரும்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசை மருமகனும் ஆடு வளர்த்த மாமியாரும்!

சிறப்புச் சிறுகதைபாரததேவி, ஓவியம் : கோ.ராமமூர்த்தி

செல்லம்மாளுக்கும் அய்யாச்சாமிக்கும் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே மகள்தான் பிறந்திருந்தாள். அவளுக்கு `தங்கப்பவுனு’ என்று பெயர் வைத்தார்கள். ஊரே அவளை `பவுனு... பவுனு’ என்று கூப்பிடுவதைப் பார்த்து, செல்லம்மாளுக்கும் அய்யாச்சாமிக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.

போன சித்திரையில்தான் பக்கத்து ஊரிலிருந்த தன் தூரத்துச் சொந்தமான அண்ணன் மகன் ராசகோபாலுக்கு, ஆசை ஆசையாகத் தன் மகளைக் கட்டிக்கொடுத்திருந்தாள் செல்லம்மா. அஞ்சாறு மாதம்தான், பின்னாலேயே தீபாவளி வந்துவிட்டது.

தன் ஆசை மருமகனையும் அருமை மகளையும் தீபாவளிக்குக் கூட்டிவந்து, தன் வீட்டில் இரண்டு நாள்கள் தங்கவைத்து, செழிக்கக் கறி சாப்பாடு போட வேண்டும்; அவர்கள் ஊருக்குப் போகும்போது சிறு நார்ப்பெட்டி நிறைய உப்புக்கண்டம் கொடுத்துவிட வேண்டும்; சம்பந்தக்காரர்களும் சரி, ஊர்க்காரர்களும் சரி... நம்மைப் பார்த்துப் பெருமையாகப் பேச வேண்டுமென்று நினைத்தாள். அதனால், தீபாவளி வருவதற்கு நான்கு மாதங்கள் இருக்கும்போதே, ஆயிரம் ரூபாய்க்கு ஓர் ஆட்டுக்குட்டி வாங்கி, நாள் முழுக்க அவத்திக்கொளையும், பச்சை அறுகம்புல்லும், பிண்ணாக்குத் தண்ணியுமாகவிட்டு ஆட்டைக் கொழுக்க வளர்த்தாள். கறுப்பு நிற ஆடு, நெற்றியில் பளிச்சென்று இரண்டு வெள்ளைக்கோடு வாங்கியதில் பார்க்க அம்சமாயிருந்தது. ஊருக்குள் போகிறவர்கள், வருகிறவர்கள் இவள் மருமகனுக்காக ஆடு வளர்ப்பதைப் பார்த்து, ``பாருத்தா, ஊருக்குள்ள இருக்க எல்லாரும் தீபாவளிக்கு மருமவனக் கூட்டிட்டுவந்து ஒரு எட கறி எடுத்து கொழம்பு வெப்பாக... இல்லாட்டா ஒரு கோழிய அடிச்சி வெஞ்ஞனம் வெப்பாக. இவ என்னன்னா மருமவனுக்காக ஒத்த ஆட்டவில்ல வளக்கா... இவளுக்கு வந்த மருமவன் கொடுத்து வெச்சவந்தேன்’’ என்று பாதிப் பொறாமையாகவும் பாதிப் பெருமையாகவும் பேசினார்கள்.

ஆசை மருமகனும் ஆடு வளர்த்த மாமியாரும்!

சிலர் அவளிடம் நேரடியாகவே, ``என்ன செல்லம்மா... தீவாளிக்கு வார மருமவனுக்காக ஆட்ட வாங்கி வளக்கயாக்கும்?’’ என்று கேட்க, அவர்களுக்கெல்லாம் செல்லம்மா, ``ஆமக்கா, செல்லமா ஒரு மவளும், மருமவனும் வெச்சிருக்கேன். அவங்களுக்குச் செய்யாம வேற யாருக்கு செய்யப்போறேன்? மருமவன தீவாவளிக்குக் கூட்டிவந்த கையோட ஊருக்கு அனுப்பாம தலக்கறி, கொடலானமின்னு வெச்சி செழிக்கப் போட்டு, ரெண்டு நாளைக்கு என் வீட்டுலேயே வெச்சிருந்து, அவுக ஊருக்குப் போகையில மிச்சம் மீதி இருக்க கறியவெல்லாம் உப்புக்கண்டம் போட்டு, என் சம்பந்தக்காரங்களுக்கும் கொடுத்துவிடப் போறேன்’’ என்றாள் பெருமையாக.

இவள் சொன்னதைக் கேட்டு, போன தீபாவளிக்குத் தன் மகனைப் புது மருமகனாக மாமியார் வீட்டுக்கு அனுப்பியவர்கள் எல்லாம், ``ம்... எனக்கும் ஒரு சம்பந்தகாரி வாய்ச்சா... மொத தீவாளின்னு போன என் பிள்ளைக்கு ரெண்டு எலும்புத் துண்டப்போட்டு, `விருந்து போட்டேன்’னு பவுசா ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு அலைஞ்சாளாம். எம்புள்ள வந்து அம்புட்டுக்கு வவுத்தெறிச்சப்பட்டுக் கெடந்தான்’’ என்று பெருமூச்சுவிட்டார்கள்.

செல்லம்மா மருமவனுக்காகத் தீபாவளிக்கு ஆடு வாங்கி வளர்ப்பதும், மருமகனும் மகளும் ஊருக்குப் போகையில், அவர்களிடம் சம்பந்தக்காரர்களுக்காக உப்புக்கண்டம் கொடுத்துவிடப் போவதையும் ஆட்கள் மூலமாகக் கேள்விப்பட்ட செல்லம்மா, சம்பந்தக்காரியான செம்பவத்துக்கு பவுசு பொறுக்க முடியவில்லை. ஊரெல்லாம் இந்த விஷயத்தைப் பெருமையாகச் சொன்னதோடு, தன் மகன் ராசகோபாலிடமும் சொன்னாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆசை மருமகனும் ஆடு வளர்த்த மாமியாரும்!

தன் ஆத்தா சொன்னதைக் கேட்டதிலிருந்து ராசகோபாலுக்கு நடையே மாறிவிட்டது. தன் னோடு கல்யாணம் முடித்துப் புது மாப்பிள்ளையாக மாமி யார் வீட்டுக்குப்போகப் போகிறவர்களிட மெல்லாம், ``என்னப்பா செய்ய, உங்களைக் கணக்கா தீவாளி அழைப்புக்காக மாமியா வீட்டுக்குப் போனமா, ஒருநா தங்குனமா, மறுநா நம்ம வீடு வந்து சேந்தமான்னு எனக்கு வர முடியாது போலிருக்கே’’ என்று அவர்கள் என்னவென்று கேட்க வேண்டுமென்பதற்காகவே அலுத்துக்கொண்டான்.

அவர்களும் இவன் எண்ணப்படியே ``எதுக்குடா இப்படிச் சொல்லுத?’’ என்று கேட்க, ``பிறகென்னடா, மாமியா வீட்டுக்குப் புது மாப்பிள்ளையா போனமா, ஒருதரம் கறியும் சோறும் சாப்பிட்டமா, வீடு வந்து சேந்தமான்னு இல்லாம... என் மாமியா, என்ன ரெண்டு நாளைக்கு அவுக வீட்டுல இருக்க வைக்கணுங்கதுக்காவவே ஓர் ஆட்ட கொழுக்க வளக்காளாம். நானு ரெண்டு நா கறியும், சோறுமா தின்னதுமில்லாம, என் வீட்டுக்கு வாரயில எங்க அம்மாவுக்கும் எம் பொண்டாட்டிக்கிட்ட ஒரு பொட்டி நெறைய உப்புக்கண்டமும் கொடுத்துவிடப் போறாளாம்’’ என்று சொல்ல... எல்லோரும், ``நீ கொடுத்து வெச்சவன்டா. உனக்கு கெடச்ச மாமியா மாதிரி எனக்குக் கெடச்சா, நானெல்லாம் அவளத் தூக்கி தலையில வெச்சி கெரக ஆட்டமில்ல போட்டுருவேன்’’ என்று சொல்லி அனல் மூச்சுவிட்டார்கள்.

தீபாவளிக்கான நாள் நெருங்க நெருங்க ராசகோபாலனுக்கு உறக்கமே வரவில்லை. தலைக்கறி என்றால், அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். எப்போதும் அவனுக்குத் தலைக்கறி கிடைத்ததில்லை. ஒரு வருஷத்தில் வரும் ஆடி, தீபாவளி, தைப்பொங்கல் என்று விசேஷ நாள்களுக்கெல்லாம் அவன் அம்மா ஒரு சேவலை மட்டுமே அடிப்பாள். தம்பி, தங்கைகள் என்று அவன் குடும்பம் பெரிய குடும்பம். நாலு துண்டு கறி கிடைப்பதே அவனுக்குப் பெரும் விஷயமாக இருந்தது. இதில் அவன் ஆட்டுத் தலைக்கறிக்கு எங்கே போவான்? ஆக, தலைக்கறி என்பது தனக்குக் கிடைக்காமல், தன் கனவாகவே போய்விடுமோ என்று நெஞ்சுக்குள் ஒருபுறம் ஏங்கிக்கொண்டு இருக்கையில், கல்யாணமான உடனே தலைக்கறி தின்பதற்கான வாய்ப்புக்கிடைத்தால் எப்படி இருக்கும்? அதனால், அவன் மனது ஆதாளி போட்டு ஆர்ப்பரித்தது. இத்தனை நாளுமில்லாத ஆசையும் பிரியமும் அவனின் பொண்டாட்டியான பவுனின் மீது பெருகி வழிந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவளை உரசி உரசி, தன் ஆசையை வெளியிட்டுக்கொண்டான். அதோடு, தீபாவளி முடிந்து ஊருக்கு வந்த பின்பு, காட்டு வேலைக்குப் போகும்போது வெஞ்சனமாக ஊறுகாய், வெங்காயம் என்று கொண்டு போகக் கூடாது. வறுத்த உப்புக்கண்டத்தை மட்டுமே கொண்டு போக வேண்டும்; நாலு பேர் முன்னால் வைத்துச் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டான்.

விடிந்தால் தீபாவளி. கொஞ்சம் தூரமான ஊராகயிருந்ததால், முதல் நாளே செல்லம்மாள் மருமகனையும் மகளையும் ஊருக்குக் கூட்டிக்கொண்டு வந்தாள். வழியில் பார்க்கிறவர்கள் எல்லாம் செல்லம்மாளிடம், ``என்ன செல்லம், நாளத்தான தீவாளி. இன்னிக்கே மருமவனயும் மவளயும் கூட்டிட்டுப் போற?’’ என்று கேட்டவர்களிடம் எல்லாம், ``எக்கா, இவுகளுக்காக வீட்டுல ஆடுல்ல அறுக்கப்போறேன். அறுத்துப் பெறக்கி எடுக்கமின்ன மத்தியானம் வந்துரும். பெறவு இவுகள கூட்டிட்டு வாரதுக்குப் பொழுது இருக்காதுல்ல... அதேன் இப்பவே கூட்டிட்டுப் போறேன்’’ என்றாள். மகளையும் மருமகனையும் முன்னால்விட்டு, இவள் கொசுவம் குலுங்கப் பின்னால் நடந்தாள். நெஞ்சுக்குள் பெருமை அள்ளிக்கொண்டு போனது.

ஐப்பசி மாத மேகம் நீர் கோத்தவாறு வானம் முழுக்கக் கறுப்பாக இறங்கியிருந்தது. மரங்களினூடே வீசிய குளிர்காற்று சில்லிட்டு உடலை நடுங்கச்செய்தது. மறுநாள் தீபாவளி என்பதால், ஊர் மக்கள் அனைவரும் வெளிச்ச முகத்தோடு திரிந்தார்கள்.

ஆசை மருமகனும் ஆடு வளர்த்த மாமியாரும்!

செல்லம்மா தன் வீட்டு வாசலில் கால் வைத்ததுமே, முன் திண்ணையில் கிடுகு அடைப்புக்குள் கட்டியிருந்த ஆட்டை மருமகனிடம் காட்டினாள்.

``ஏய்யா, இந்தா இருக்குப்பாருங்க ஆடு... ஒத்த ஆயிரத்துக்கு வாங்கியது. இப்ப வாங்கி நாலஞ்சி மாசமாச்சி. அவத்திக்கொளயும், பிண்ணாக்குத் தண்ணியுமாவிட்டு அப்படி வளத்திருக்கேன். நேத்துக்கூட உங்க சின்னய்யா கருப்பசாமி வந்து அய்யாயிர ரூவாய கையில வெச்சிக்கிட்டு, `எனக்கு ஆட்ட வெலைக்குக் கொடு’ன்னு மல்லுக்கு நின்னாரு. எனக்கு ரூவா பெருசில்ல, எம்மருமவந்தேன் பெருசுன்னு ஆட்ட கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டேன்’’ என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.

மாமியாரின் பின்னாலேயே வந்த ராசகோபால், ஒருவித மினுமினுப்போடு நின்றிருந்த ஆட்டைத் தடவிப் பார்த்தான். கை தடவுவதிலேயே ஆட்டின் உடல் கொழுத்து கிண்ணென்றிருப்பது தெரிய, அப்போதே அவனுக்கு வாய் ஊறியது.

தன் அருகில் நின்றிருந்த பொண்டாட்டியைச் சட்டென்று இறுக்கமாக அணைத்துக்கொண்டவன், ``உன்னைக் கட்டுன நானு கொடுத்து வெச்சவந்தேன். தீவாளிக்கு மருமவனுக்கு ஆடு வாங்கி அறுத்துப் போடுத மாமியா யாருக்குக் கிடைப்பா?’’ என்று சொல்ல பவுனு, ``எங்கம்மா பாத்திரப்போறா’’ என்று செல்லமாகச் சிணுங்கினாள்.

விடிந்ததும் தீபாவளி என்பதால், ராவிடிய ஊர்ச்சனம் உறங்கவில்லை. மருமகனையும் மகளையும் கூட்டிவந்த செல்லம்மா, சோளத்தை நனையவைத்து, தோசைக்கு மாவாட்டி வைத்தாள். பணியாரத்துக்கு வரகரிசியை ஆட்டி வைத்தவள், சுக்கு - கருப்பட்டியோடு எள்ளுருண்டை இடித்துவைத்தாள். இதற்குள் ஒரு சாமம் ஆகிவிட்டது. உடம்பு அலுப்பில் கெஞ்ச... `விடியற்காலையில் முதல் ஆளாகத் தன் ஆட்டை அறுத்திரணும். அதனால, இப்பச் செத்தப் படுப்போம்’ என்று நினைத்தவள், கொஞ்சம் புல்லை அள்ளி ஆட்டுக்குப் போட்டுவிட்டு வந்து படுத்தாள்.

நடுச்சாமத்திலேயே ஆடுகளின் `மே... மே...’ கத்தலும், கோழிகளின் அலறலும் கேட்க... திடுக்கிட்டுக் கண்விழித்தாள் செல்லம்மா. `அடடா அதுக்குள்ள ஊரே முழிச்சில்ல இருக்கு... நம்மளும் வெரசாப் போயி ஆடு அறுக்கும் நாராயணனைக் கூப்பிட்டு வந்து ஆட்ட அறுக்கச் சொல்லிரணும்’ என்று நினைத்தவாறே வெளியே வந்து ஆட்டுக்கொட்டிலைத் திறந்து பார்க்க... அங்கே இவள் ஆசையாக வளர்த்த ஆட்டைக் காணவில்லை. ஆடு கட்டியிருந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது.