
குட்டி சரண்யா ஆர்.வைதேகி
சுப்பு கேரக்டருக்கும் தனக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லை என்கிற மாதிரி செம ஸ்டைலாக இருக்கிறார் நிவேதிதா சதீஷ்... ‘மகளிர் மட்டும்’ படத்தில் ஜூனியர் சரண்யா.
எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் விஸ்காம் படிக்கிற நிவி, காலேஜ் பக்கம் போய் ரொம்ப நாளாச்சு என்கிறார்.
`` ‘மகளிர் மட்டும்’ படத்துக்குப் பிறகு இப்போ விக்ரம் கே.குமாரோட டைரக் ஷன்ல ஒரு தெலுங்குப் படம் பண்ணிட்டிருக்கேன். பிசியா இருக்கிறதால காலேஜ் போக முடியலை. நிஜமா அதுதான் காரணம்...’’ - சத்தியம் செய்கிறவருக்கு கிளாஸை கட் அடிப்பதொன்றும் புதிதல்லவாம்.

``ஸ்கூல் படிக்கிறபோது நான் பண்ணாத அட்டூழியமே இல்லை. செம வாலு. டீச்சர்ஸ் என்னைத் துரத்திட்டு வந்த கதையெல்லாம் நடந்திருக்கு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எனக்கு நானே ஸ்கூலுக்கு லீவு விட்டுப்பேன். ஸ்கூல்ல என்னை காணலைன்னா ஏதாவது ஒரு தியேட்டர்ல பார்க்கலாம். அதனாலயோ என்னவோ படத்துல ஹாஸ்டல் சுவரேறிக் குதிச்சு தியேட்டருக்குப் போற சீன்ல கேரக்டராவே வாழ்ந்துட்டேன்...’’ - சிரிக்கிறவரை நடிப்புக்குள் இழுத்துவந்திருப்பது அவரது நடன ஆர்வம்.

``அப்பா, அம்மா, நான், தம்பினு சிறிய குடும்பம். எங்க பரம்பரையிலேயே யாருக்கும் சினிமாவோடு தொடர்பு கிடையாது. நான்தான் முதல் தலைமுறை நடிகை. எட்டாவது படிக்கிறபோதுதான் நடிகையாகிற ஆசை எனக்குள்ள எட்டிப் பார்த்தது. ஆனாலும், வீட்டுக்குத் தெரிஞ்சா ரியாக்ஷன் எப்படியிருக்குமோனு யார்கிட்டயும் சொல்லலை. ஸ்கூல் கல்ச்சுரல்ஸ்ல டான்ஸ், டிராமானு எல்லாத்துலயும் முதல்ல நிப்பேன். அந்தப் பாராட்டும் கைதட்டல்களும் என்னோட நடிப்பாசையை இன்னும் தூண்டினது. ப்ளஸ் ஒன் வந்ததும் அம்மாகிட்ட ஆசையைச் சொன்னேன். ப்ளஸ் டூவுல 90 பர்சென்ட்டுக்கு மேல வாங்கிட்டு அதைப் பத்திப் பேசுன்னாங்க. கரெக்ட்டா 91.2 பர்சென்ட் எடுத்தேன். அப்புறம் ஃபேமிலியோடு சிங்கப்பூருக்கு டூர் போயிருந்தோம். அப்ப பிரம்மா சார்கிட்டருந்து போன் வந்தது. ‘மகளிர் மட்டும்’ படத்தோட அசோசியேட் டைரக்டர் கோகுலும் டான்ஸர். சரண்யா கேரக்டருக்கு லுக் அலைக் தேடிட்டிருந்தபோது, அவர் என் போட்டோஸையும் கொடுத்திருக்கார். பானுப்ரியா, சரண்யானு ரெண்டு பேர் கேரக்டருக்குமே பொருத்தமா இருப்பேன்னு செலக்ட் பண்ணியிருந்தாங்க. மீட் பண்ணினேன். தமிழ், தெலுங்கு ரெண்டுலயும் டயலாக் கொடுத்துப் பேசச் சொன்னாங்க. எனக்குத் தெலுங்கு தெரியும்கிறதால சூப்பரா பேசிட்டேன். அந்த வீடியோ பிரம்மா சாருக்குப் போச்சு. அப்புறம் மேக்கப்பெல்லாம் போட்டு ஆடிஷன் பண்ணினாங்க. செலக்ட் ஆயிட்டேன்...’’ - நடிகையின் கதை சொல்கிறவர், கமல் - ரஜினி ரசிகையாம்.
``இந்தப் படம் எனக்கு நடிகைங்கிற அறிமுகத்தைக் கொடுத்தது மாதிரியே இன்னொரு ஸ்பெஷலான விஷயத்தையும் தந்திருக்கு. அது சூர்யா - ஜோதிகாவோட ஃப்ரெண்ட்ஷிப். ‘உன்கிட்ட ஒரு பொறி தெரியுது. நீ நிச்சயம் பெரிய இடத்துக்கு வருவே’னு ஜோ பாராட்டினாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்த சூர்யா சார் கிட்ட பேசினபோது அவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருந்தார். முதல் நாள் முதல் ஷோ போயிருந்தப்ப ஜோ மேடம், அவங்க ஃப்ரெண்ட்ஸ்கூட வந்திருந்தாங்க. என்னை அவங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தி வெச்சாங்க. இப்பவரைக்கும் சூர்யா - ஜோதிகாவோட நட்பு தொடருது...’’ - சரண்யா சாயலில் சிரிக்கிறார் நிவி!