Published:Updated:

“பாம்பெல்லாம் எனக்கு பச்சப்புள்ள மாதிரி!”

“பாம்பெல்லாம் எனக்கு பச்சப்புள்ள மாதிரி!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பாம்பெல்லாம் எனக்கு பச்சப்புள்ள மாதிரி!”

ஆச்சர்யம்வெ.நீலகண்டன், படங்கள்: கா.முரளி

செஞ்சியிலிருந்து விழுப்புரம் செல்லும் வழியில் இருக்கிறது அனந்தபுரம். நகரத்துப் பரபரப்புகளைத் தாண்டி, ஒரு சரிந்த பகுதியில் வரிசையாக நாற்பதுக்கும் மேற்பட்ட வீடுகள். அந்தக் குடியிருப்புக்கு நடுவில் மண்டிய புதர்களுக்கு மத்தியில் இருக்கிறது மல்லிகாவின் வீடு. “வீட்டைச் சுத்தி இவ்வளவு புதர் இருக்கே... பாம்பு எதுவும் இருக்கப்போகுது...” என்றால், “பாம்பா... அதெல்லாம் என் வாசனைப்பட்டாலே தெறிச்சு ஓடிப்போயிடும்...” என்று சிரிக்கிறார் மல்லிகா.

மல்லிகாவுக்கு வயது 60-க்கு மேல். கணவர் முனுசாமி காலத்தோடு போய்ச் சேர்ந்துவிட்டார். நான்கு பிள்ளைகளும் மணம்முடிந்து தனியாக வசிக்கிறார்கள். சுற்றுவட்டாரப் பகுதியில் எந்த ஊரில் போய் மல்லிகாவைப் பற்றிக் கேட்டாலும் கதை கதையாகச் சொல்கிறார்கள்.

“சங்கீதமங்கலத்துல ஒரு வீட்டுக்குள்ள பெரிய விரியன் புகுந்துடுச்சு. அந்த அம்மாவைக் கூட்டியாந்தாங்க. வாசனையை வெச்சே பாம்பு இருந்த இடத்தை கண்டுபிடிச்சிடுச்சு. வாலைப் புடிச்சுச் சுத்துச்சுப் பாருங்க... காலடியில மயங்கி விழுந்திருச்சு பாம்பு!”

“பனைமலைப்பேட்டையில ஒரு நல்ல பாம்பு... வீட்டுக்கு மேல பரணுக்குள்ள சுருக்கிட்டுப் பதுங்கிடுச்சு. அந்த அம்மா கையை விட்டுச்சு பாருங்க... விரல்ல ஒரே போடு... பாம்பு கொத்தினதைப் பார்த்த ஓர் ஆளு மயங்கி விழுந்துட்டார். ஆனா, இந்த அம்மா, சுருக்குப் பையில இருந்து ஒரு கடி மருந்தை அள்ளிப்போட்டு தண்ணியைக் குடிச்சுட்டு மரம் மாதிரி நிக்குது!”

“பாம்பெல்லாம் எனக்கு பச்சப்புள்ள மாதிரி!”

“வெள்ளையாம்பட்டு தலையாரி வீட்டுக்குள்ள ஒரு பாம்பு புகுந்துடுச்சு. பெரிய சாரை... சாவகாசமா கையில புடிச்சு தோள்ல போட்டுக்கிட்டு தெருவுல நடந்துச்சு பாரு... எல்லாரும் வீட்டுக்குள்ள ஓடி ஒளிஞ்சுட்டாங்க...”

மல்லிகா ஆதி பழங்குடிகளில் ஒன்றான இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் வனவாழ்குடிகளாக இருந்த இருளர்கள் காலப்போக்கில் பிழைப்புநாடி சமவெளிக்கு வந்துவிட்டார்கள். இன்னும் ஆதித்தன்மை மாறாமல் வாழும் இம்மக்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடில்களை அமைத்துக் கொண்டு ஒதுங்கி வாழ்கிறார்கள். பல்வேறு பகுதிகளில் சாதிய ஒடுக்குமுறைகளையும் பாலியல் வன்முறைகளையும் எதிர்கொண்டு அஞ்சி வாழும் இம்மக்களின் பூர்வீகத் தொழிலே பாம்பு பிடிப்பதுதான். பாம்பின் தோலை உரித்து விற்பார்கள். பாம்பு பிடிக்க அரசு தடை விதித்த பிறகு, இவர்களின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. செங்கற்சூளை, கரும்பு வெட்டுதல் எனக் கிடைத்த வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள்.

வாழ்வின்போக்கில் இருளர்களின் கலாசாரங்கள் மாறிவிட்டன. இன்றுள்ள பிள்ளைகள் பாம்பைக் கண்டால் பதறி ஓடுகிறார்கள். உணவு, கலை, சடங்குகள் என எல்லாமும் மலையேறி விட்டன. பிராய்லர் கோழிகள் இம்மக்களின் வேட்டைத்தன்மையை மங்கச் செய்துவிட்டன. ஆனாலும், மல்லிகா போல மிஞ்சியிருக்கும் சிலர் இன்னும் தங்கள் தொன்ம வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக இருளர் சமூகத்தில் பெண்கள் பாம்பு பிடிப்பதில்லை. அது ஆண்களின் தொழில். தொழிலுக்குச் செல்லும் ஆண்களுக்குச் சமைத்துத் தர பெண்கள் கூடவே செல்வார்கள். அப்படி, தன் கணவர் முனுசாமியோடு சென்றவர் தான் மல்லிகா. இன்று சுத்துப்பட்டில் எங்கு பாம்பு புகுந்தாலும் மல்லிகாவைத்தான் தேடி ஓடி வருகிறார்கள். பாம்பு பிடிக்க மட்டுமல்ல... பாம்பு கடித்தால் அதற்கு வைத்தியம் செய்யவும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“பாம்பெல்லாம் எனக்கு பச்சப்புள்ள மாதிரி!”

"அந்தக் காலத்துல பாம்புதான் எங்களுக்கு வாழ்க்கை. அதிகாலையில புள்ளைகளைத் தூக்கிக்கிட்டு கடப்பாரை, மம்மட்டி சகிதமா கிளம்பிடுவோம். வெயில் வர்றதுக்கு முன்னாடிதான் பாம்புங்க இரை தேடி ஊரும். வெயில் பட்டா, ஓடி கிடைச்ச வளைக்குள்ள உக்காந்துக்கும். குறிப்பா, ஈரப்பதமா இருக்கிற வளைங்கதான் பாம்புகளுக்குப் பிடிக்கும். அதனால வாய்க்கால் ஓரத்துல இருக்கிற வளைகளா வெட்டி எங்க ஆம்பளைங்க தேடுவாங்க. ரெண்டு வளைக்கு ஒரு வளையில பாம்பு அம்புட்டுக்கும். பாம்பு பிடிச்ச இடைவெளியில `ஊத்தாம்பானை’ போட்டு வரப்பு எலி, வெள்ளை எலி பிடிப்பாங்க. பொம்பளைங்க அதையெல்லாம் அங்கேயே சுட்டுச் சமைப்போம். உடும்பு, கீரிப்பிள்ளை, முயல்னு எதையும் விடமாட்டோம்.

எங்க வீட்டுக்காரர், பாம்பு பிடிக்கும்போது என்னையும் கூப்பிட்டுப் பக்கத்துல வெச்சுக்குவாரு. புடிச்சப் பாம்பை மேலே தூக்கிப் போடுவாரு. ஒவ்வொரு பாம்பைப் பத்தியும் சொல்லித் தருவாரு. அப்படியே பாம்பு பிடிக்கிறது எனக்கும் அத்துப்படியாகிப் போச்சு. பாம்பு பிடிக்கத் தடை வந்தபிறகு, தஞ்சாவூர்ல வாழைத்தோப்புக்குக் காவலாளி வேலைக்குப் போயிட்டோம். அங்கே உடம்பு சரியில்லாமப் போயி என் வீட்டுக்காரரு இறந்துட்டாரு. அப்போ கடைசிப் பயலுக்கு ஒரு வயசு. புள்ளைகளைத் தூக்கிக்கிட்டு திரும்பவும் அனந்தபுரத்துக்கே வந்துட்டேன். செங்கச்சூளை வேலைக்குப் போவேன். அதுவும் உடம்புக்கு ஆகலே. பக்கத்து ஊர்கள்ல யாரு வீட்டிலயாவது பாம்பு புகுத்துட்டா என்னை வந்து கூப்பிடுவாங்க. புடிச்சுக் கொண்டுபோய் காட்டுப்பகுதியில விடுவேன்.

ஏதாவது காசு கொடுப்பாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான்... இப்போ அதுவே நமக்குப் பொழைப்பாப் போச்சு...” - உற்சாகமாகப் பேசுகிறார் மல்லிகா.

இருளர் சமூகத்தில் கைதேர்ந்த வைத்தியர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக, விஷக்கடிக்கு இவர்கள் செய்யும் வைத்தியம் அபாரமானது. பாம்பு, தேள், வண்டு, பூரான் எது கடித்தாலும் மருந்து கையில் இருக்கிறது. மல்லிகாவின் கணவர் பாம்புக்கடி வைத்தியத்தில் கைதேர்ந்தவராம். அனந்தபுரத்துக்கு அருகில் வசிக்கும் மல்லிகாவின் மாமா சின்ராசுவும் இப்போது புகழ்பெற்ற விஷக்கடி வைத்தியர். மல்லிகாவும் மருந்து தருவார். பாம்பு பிடிக்கச் சென்றால் சுருக்குப்பையில் இந்த மருந்தை எடுத்துச் செல்ல மறப்பதில்லை.

“பாம்புகளைப் பத்தி நம்ம மக்கள்கிட்ட நிறைய நம்பிக்கைங்க இருக்கு. பாம்பு புத்துக்குள்ள இருக்கும்னு சொல்லி பால் ஊத்தி, முட்டையெல்லாம் வைப்பாங்க. உண்மையில பாம்புக்குன்னு ஒரு இருப்பிடமும் கிடையாது. எலிகளைச் சாப்பிட எலி வளைக்குள்ள போகும். சாப்பிட்டுட்டு அப்படியே அங்கேயே அசந்திடும். ஒரே இடத்துல அது ரொம்ப நாள் தங்காது. அதேமாதிரி, கறையான்களைச் சாப்பிட புத்துக்குள்ள போவும். சாப்பிட்டுக் களைப்புத் தீர்ந்ததும் வெளியேறிப் போயிடும். மனுஷங்கலாம் பாம்பைக் கண்டு பயந்து ஓடுவாங்க. உண்மையில பாம்புங்களுக்குத்தான் மனுஷங்களைக் கண்டா பயம். மனுஷ வாடை இருந்தாலே அந்தப்பக்கம் வராது. ஒவ்வொரு பாம்புக்கும் ஒரு வாசனை இருக்கு. பாம்பு நகரும்போது அந்த வாசனை வரும். நல்ல பாம்புக்கு உளுந்து வாடை வரும். சாரை பாம்பு இணை சேர்ந்தா மல்லிப்பூ வாசனை வரும். பாம்பு இருக்கா, இல்லையான்னு அந்த இடத்தோட தன்மையை வெச்சே சொல்லிடலாம். குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை பாம்பு மேல் தோலை உறிச்சுப் போட்டுடும். அந்தத் தோலு ஈரமா இருந்தா, பாம்பு 10 அடி தூரத்துக்குள்ள இருக்குன்னு அர்த்தம். பாம்பு ஊறிப்போன தடத்தை வெச்சும் அது எதுக்குள்ள பதுங்கியிருக்குன்னு கண்டு பிடிச்சிடலாம். ஒருவேளை தடம் அழிஞ்சிட்டா, பாம்புங்க சத்தத்தை வெச்சுக் கண்டுபிடிப்போம். விரியன் பாம்போட குரல் சன்னமா நாக்கை மடிச்சு வெச்சு ஊதுற மாதிரி இருக்கும். நல்ல பாம்போட சத்தம் கட்டையா இருக்கும். சாரையோட குரல் பெருசா இருக்கும். மலை நாகம் மூச்சை இழுத்துவிட்டுக்கிட்டு நகரும். குரல்ல கண்டுபிடிக்க முடியலேன்னா, குருவிங்களை வெச்சு கண்டுபிடிக்கலாம். கல்லுக்குருவி இறக்கை அடிச்சு கத்துச்சுன்னா அங்கே விரியன் பாம்பு இருக்குன்னு அர்த்தம். மைனா பதற்றமா கத்துனா நல்ல பாம்பு. அணிலு கத்திக்கிட்டே ஓடுனா சாரை...” - படபடவென தொழில் ரகசியங்களை விவரிக்கிறார் மல்லிகா.

மிகச்சில பாம்புகளே விஷம் கொண்டவை. பெருவாரியான பாம்புகள் மிரட்ட மட்டுமே செய்யும். கொத்தினால் உயிர் போகாது.

“பாம்பு கடிச்சு செத்தவங்களைவிட பயந்து செத்தவங்கதான் அதிகம். நானெல்லாம் வாங்காத பாம்பு கடியா..? எத்தனையோ பாம்புங்க கடிச்சிருக்கு. கடிவாயை அழுத்தி ரத்தத்தை வெளியேத்திட்டு, ஒரு மந்திரத்தைச் சொல்லி, எங்க மருந்தை மூணு கடி அள்ளிப்போட்டு, வாயில தண்ணியை ஊத்திக்குவோம். பாம்போட தன்மைக்குத் தகுந்தமாதிரி மருந்தோட அளவு வித்தியாசப்படும். கொஞ்சம் மயக்கமா வரும். ஆனா, மயங்கவோ, தூங்கவோ கூடாது.

“பாம்பெல்லாம் எனக்கு பச்சப்புள்ள மாதிரி!”

21 மூலிகைங்க கலந்த மருந்து இது. எல்லாம் எங்க முன்னோர் கொடுத்துட்டுப் போனது.  சிறியாநங்கை, பெரியாநங்கை, சிறுகுறிஞ்சா, பெருகுறிஞ்சா, ஆகாச கருடன், வேப்பிலைக் கொழுந்து, தும்பத்தளை, தொட்டாச்சிணுங்கி, பாம்புக்கலா, எருக்கன்தூறு, எலிக்காதுச்செடி... இன்னும் பல இலை, வேரெல்லாம் இருக்கு. எங்களுக்கு அதோட பேரெல்லாம் தெரியாது. ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை மலைக்குப் போயி பறிச்சுக் கொண்டாருவோம். எந்த இலை எங்கேயிருக்குன்னு எங்களுக்கு அடையாளம் தெரியும். பொதுவா, எல்லா இருளருங்க வீட்டிலயும் இந்த மருந்து இருக்கும். இந்தச் சுத்துப்பட்டியில யாருக்குப் பாம்பு கடிச்சாலும் எங்க குடியிருப்புக்குத் தான் தூக்கிட்டு வருவாங்க. நானோ, எங்க மாமாவோ மருந்து கொடுத்து, மந்திரிச்சு விடுவோம். `நம்பிக்கையிருந்தா நாங்க சொல்றதைக் கேட்டுக்குங்க... இல்லேன்னா ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருங்க'ன்னு சொல்லிருவோம். அந்தக் கண்ணிமாரு புண்ணியத்துல, இதுநாள் வரைக்கும் எங்கக்கிட்ட வந்த யாரோட உயிரும் போனதில்லை...” என்கிறார் மல்லிகா.

பாம்பில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம் வட்டாரத்தில் கருநாகம், செந்நாகம், சோளப்பொறி நாகம், பாப்பர நாகம், புளியம்பூ நாகம், கண்ணாடி விரியன், கம்பளத்துவிரியன், கட்டைவிரியன், கருவிரியன், மஞ்சள்சாரை, கரும்சாரை, செஞ்சாரை, கோல்சாரை, கொம்பேறி மூக்கன் போன்ற பாம்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார் மல்லிகா.

“பாம்பு பிடிக்கப் போகும்போது கவனமெல்லாம் பாம்பு மேலதான் இருக்கணும். நம்மை எதிரிங்கன்னு முடிவு செஞ்சுட்டா கடுமையா தாக்கப் பார்க்கும். பாம்புங்கக்கிட்ட கையை கொடுத்திடக்கூடாது. நல்ல பாம்புங்க, விரலைக் கோத்துப் பிடிச்சுக்கும். அதனால வளைக்குள்ள கைய விடாம, முதல்ல சின்னதா ஒரு குச்சியை விடணும். ஆக்ரோஷமா கொத்தும். அதை வெச்சு பாம்போட தன்மையை புரிஞ்சுக்கலாம். வளையைச் சுத்தி மண்ணை வெட்டிவிட்டு கவக்கோலை வளைக்குள்ள விட்டுப் பாம்பை அழுத்தி பிடிக்கணும். தலையைத் தொடக்கூடாது. தொட்டா போட்டுரும். வாலைப் பிடிச்சு தலைக்கு மேலே தூக்கி நாலு சுத்து சுத்தணும். சுத்தின உடனே போதை போட்ட ஆளு மாதிரி சோர்ந்து விழுந்திடும். அப்படியே தலையைப் பிடிச்சு அழுத்திக்கணும். நல்ல பாம்பு, விரியன் பாம்புங்கள்ல விஷம் அதிகம். சாரை கடிச்சா விஷமில்லை. ஆனா, கடிச்ச பிறகு வாலால அடிச்சிட்டா விஷம் ஏறிப்போகும்...” என்று மிரளச் செய்கிறார் மல்லிகா.

வேலையில்லாத நாள்களில் மல்லிகாவும் அவரது வயதுக் காரர்களும் எலி பிடிக்கச் செல்கிறார்கள். இருளர்களின் விருப்பமான உணவு எலி. இவர்களின் எலி பிடிக்கும் நுட்பம் ரொம்பவே வித்தியாசமானது. எலியின் வாழ்க்கை முறைபற்றி விரல் நுனியில் தகவல் வைத்திருக் கிறார்கள்.

“வெள்ளெலி, புல்லெலி, கல்லெலி, பெரிய எலி, மூஞ்செலி, சுண்டெலி, மரத்தெலி, வரப்பெலின்னு பலவகைங்க இருக்கு. பெரிய எலியையும் மூஞ்செலியையும் தொடமாட்டோம். மத்ததெல்லாம் சாப்பிடலாம். எந்த எலி, எப்படி வளை தோண்டும்னு எங்க ஆளுங்களுக்குத் தெரியும். வரப்பெலிதான் இருக்கறதுலயே ரொம்ப புத்திசாலி. அறை அறையா தோண்டி வெச்சிருக்கும். ஓர் அறை கிழக்கே தோண்டுனா, இன்னோர் அறை வடக்குல இருக்கும். தானியங்களுக்கு ஓர் அறை, குட்டிகளுக்கு ஓர் அறை, கழிவுக்கு ஓர் அறைன்னு தனித்தனியா இருக்கும். வெளியே போக நிறைய வழிகள் இருக்கும். பாம்புங்க உள்ளே வர்றதைத் தடுக்கிறதுக்காக முன்பாதையை அடைச்சுக்கும். உள்ளுக்குள்ள, இலைதழையெல்லாம் போட்டு, படுக்கை செஞ்சு வெச்சிருக்கும். வயக்காட்டுல விளைஞ்சு கிடக்கிற நெல்லு, கடலைன்னு எல்லாத்தையும் கொண்டு போய்ப் பதுக்கி வெச்சுக்கும். அந்தக் காலத்துல எங்களுக்குச் சோறு போட்டது இந்த வரப்பெலிங்க தான். ஒரு வரப்பை வெட்டுனா, அதுக்குள்ள ஏழெட்டு எலிக்குட்டிங்களும் ரெண்டு மரக்கா நெல்லும் கிடைக்கும். அந்த நெல்லை இடிச்சு அரிசியாக்கித்தான் எங்க மக்கள் அரிசி சோறு தின்னுருக்காக...” என்கிறார் மல்லிகா.

“பாம்பெல்லாம் எனக்கு பச்சப்புள்ள மாதிரி!”

ஊத்தாம்பானைதான் எலி பிடிப்பதற்கு முக்கிய சாதனம். வாயகன்ற ஒரு பானை. அதன் பின்புறத்தில் சிறிய ஓட்டை இருக்கும். பானை நிறைய வைக்கோல், காகிதங்களை வைத்து நிரப்புகிறார்கள். சிறு தீ ஜுவாலையைப் பின்புறமுள்ள ஓட்டைக்குள் வைக்கிறார்கள். உள்ளிருக்கும் வைக்கோலில் அந்தத் தீப்பற்றி, பானையின் வாய் வழியாகப் புகை கிளம்புகிறது. எலியின் வளைக்குள், பானையின் வாயை வைத்துச் சுற்றிலும் மண் போட்டு மூடி, பின்புறமுள்ள ஓட்டை வழியாக, ஊதுகிறார்கள். பானைக்குள் இருந்து அதிவேகத்தில் புகை, எலியின் வளைக்குள் பரவுகிறது. எங்கெல்லாம் எலி வெளியேறும் பாதைகள் வைத்திருக்கிறதோ அந்த வழியாகவெல்லாம் புகை வெளியேறும். அவசரக்கால வழிகளில் எலி தப்பிக்க முயற்சி செய்யும். அதை அடித்துப் பிடிப்பார்கள் அல்லது புகை மூட்டம் தாங்காமல் வளைக்குள்ளேயே எலிகள் செத்துப்போகும்.

புகைபோகும் திசையை வைத்துக் கணித்து வளையை வெட்டுவார்கள். செத்துப்போன எலிகளோடு, தானியங்களும் சேர, அன்றைய உணவு, நல்லுணவு.

“இந்த பொழப்பெல்லாம் எங்களோட போயிடணும்னுதான் நாங்க நினைக்கிறோம். ஆனா, இந்த அரசாங்கம் எங்க புள்ளைகளையும் இந்தத் தொழிலுக்குள்ள இழுத்து விட்டுரும் போலிருக்கு. இன்னிக்கு எல்லா புள்ளைகளும் பள்ளிக்கூடம் போகுதுங்க. பழைய மரபெல்லாம் மாறிப்போச்சு. பாம்பைக் கண்டாலே எங்க புள்ளைங்க அலறுதுங்க. ஆனா, `புள்ளைங்க படிக்கணும், சாதிச்சான்று கொடுங்க'ன்னு போயி அதிகாரிங்கக்கிட்ட கேட்டா, `உம் புள்ளைக்கு பாம்பு பிடிக்கத் தெரியுமா? எலி பிடிக்கத் தெரியுமா? அதெல்லாம் தெரிஞ்சாதான் இருளர்னு நம்புவோம். இல்லேன்னா உனக்கு எஸ்.டி. சர்டிபிகேட் தரமாட்டோம்'னு சொல்றாங்க. இதெல்லாம் வேணாம்னுதானேய்யா புள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்புறோம். நீங்களே அதையெல்லாம் செய்யச் சொன்னா எப்படி? எங்களை வாழ விடுங்கய்யா...” 

ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்த சாரைப் பாம்பைப் பிடித்துப் புதரில் விட்டுத் துரத்திவிட்டு கை கூப்புகிறார் மல்லிகா.

வேக வேகமாகப் புதரில் ஓடி மறைகிறது சாரை.