Published:Updated:

இசை தீபாவளி - “கத்துக்க நான் தயங்கவே மாட்டேன்!''

இசை தீபாவளி - “கத்துக்க நான் தயங்கவே மாட்டேன்!''
பிரீமியம் ஸ்டோரி
News
இசை தீபாவளி - “கத்துக்க நான் தயங்கவே மாட்டேன்!''

ஆர்.வைதேகி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

“பாடுவதற்காக விருதுகள் வாங்குகிறீர்களா? விருதுகளுக்காகவே பாடுகிறீர்களா?” 
- பின்னணிப் பாடகி பத்மலதாவிடம் இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது. காரணம், பாடிய பாடல்களைவிடவும் பத்மலதா வாங்கிக் குவித்திருக்கும் விருதுகளின் எண்ணிக்கை அதிகம்!   

இசை தீபாவளி - “கத்துக்க நான் தயங்கவே மாட்டேன்!''

‘`இது மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ்ல  ‘பெஸ்ட் ஃபீமேல்' சிங்கருக்காக (தெலுங்கு) வாங்கினது...’’ லேட்டஸ்ட் விருதை ஏந்தியபடிப் பேசத்தொடங்கினார் பத்மலதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், துளு என ஆறு மொழி களில் அசத்துபவர்.

‘காந்தாரி யாரோ’, ‘டைம் பாஸுக்கோசரம்’ - ‘மகளிர் மட்டும்’ படத்தில் ஒலித்த இந்த இரண்டு பாடல்களும் இவரின் சமீபத்திய ஹிட்ஸ். எத்தனைப் பாடல்கள் பாடியிருக்கிறார் என்றுகூட கணக்கு வைத்திருக்கவில்லை.

‘`அது ஆயிரக்கணக்குல இருக்கும். ஆனா, மக்கள்கிட்ட என்னைப் பிரபலப்படுத்தின பாடல்கள் கம்மிதான்’’ - அடக்கமாகச் சொன்னாலும் பத்மலதாவின் அநேகப் பாடல்கள் டாப் 10-ல் இருந்தவை, இருப்பவை.

‘`நாலு வயசுல இருந்து பாடிக் கிட்டிருக்கேன். சொந்தக்காரங்க கல்யாணத்துல ஸ்டேஜ்ல ஏறிப் பாடணும்னு அடம்பிடிச்சிருக்கேன். அப்போ நான் மைக் உயரம்கூட இல்லை. ஆனாலும், என் ஆர்வத்தை எல்லாரும் பாராட்டியிருக்காங்க. மீரா சவுர், வீரேஷ்வர் மாதி ரெண்டு பேர்கிட்டயும் ஹிந்துஸ்தானியும் கஜலும் கத்துக்கிட்டேன், ஆல்ஃபிரெட்கிட்ட லைட்  மியூசிக் கத்துக்கிட்டேன். 15-வது வயசுலயே படங்கள்ல பாட வந்துட்டேன். ‘குருவம்மா’னு ஒரு படத்துல இசையமைப்பாளர் சாஹித்யா கொடுத்த வாய்ப்பு அது.

 ‘குட்டிப்புலி’, ‘நையாண்டி’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘அமரகாவியம்’, ‘ஆப்பிள் பெண்ணே’, ‘கோலிசோடா’னு நிறைய பாடியிருக்கேன். ‘உத்தம வில்லன்’ படத்துல ‘காதலாம் கடவுள்’னு  கமல் சார் வரிகளுக்குப் பாடினது மறக்கமுடியாத அனுபவம்’’ என்று சிலிர்ப்பவருக்கு ‘கவண்’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘எட்டுத் தோட்டாக்கள்’ என இந்த வருடமும் ஏகப்பட்ட ஹிட்ஸ்.

படத்துக்கொரு பாடகர் என்ற நிலைமாறி, பாடலுக்கொரு பாடகர் என்கிற நிலை இன்று. எந்தப் பாடல், யார் பாடியது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத சூழலை பத்மலதா எப்படிப் பார்க்கிறார்?

``இன்னிக்கு மெலடி பாடல்களோட எண்ணிக்கை குறைஞ்சிருச்சு. பெண்களுக்கான சோலோவும் குறைஞ்சிருச்சு. நான் ஹீரோயினுக் கான சோலோதான் பாடுவேன்னு சொல்லிட்டிருக்க முடியாது. ஆக்‌ஷன் படங்களும், த்ரில்லர் படங்களும், பேய்ப் படங்களும் அதிகமா வர ஆரம்பிச்சிருக்கிற ட்ரெண்டுல ஃபாஸ்ட் சாங்ஸ் அதிகமாகியிருக்கு. மாறிக்கிட்டிருக்கிற ட்ரெண்டுக்கு ஏத்தபடி நாங்களும் எங்களைத் தயார்படுத்திக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்.

`இப்படித்தான் பாடுவேன்'னு நான் எனக்குள்ள எந்தக் கட்டுப்பாடும் வெச்சுக்கிறதில்லை. எந்தப் பாட்டு கொடுத்தாலும் என்னால பாட முடியும். திடீர்னு ஜாஸ் ஸ்டைல்ல பாடுங்கம்பாங்க. ராப் பண்ணுங்கம் பாங்க. எல்லாத்துக்கும் நான் ரெடியா யிருப்பேன். காரணம், என் ஆர்வம். புதுசு புதுசா கத்துக்கிறதுல நான் தயக்கம் காட்டவே மாட்டேன்.

அதேமாதிரி இன்னிக்கு பாடகர்களுக்கு முழுசா ஒரு பாட்டைப் பாடக் கிடைக்கிற வாய்ப்பும் அபூர்வமா இருக்கு. நாலஞ்சு பேர் சேர்ந்து பாடகிறபோது எந்த வரிகள் யார் பாடினதுன்னு தெரியாமப் போயிடுது. ஒரு பாடகர் குறைஞ்சது முப்பது, நாற்பது சோலோ பாடல்களாவது பாடினாதான் அவங்க குரல் மக்கள் மனசுல பதியும்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இசை தீபாவளி - “கத்துக்க நான் தயங்கவே மாட்டேன்!''

அதிர்ஷ்டமா, கடவுளோட அனுக்கிரஹமா தெரியலை, எனக்கு நிறைய சோலோ பாடற வாய்ப்புகள் அமைஞ்சது. அத்தனை பாட்டும் ஏதோ ஒருவகையில ஹிட்டாகியிருக்கு. குரலை வெச்சு இது பத்மலதா பாடினதும்னு கண்டுபிடிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன்.

டிராக் நிறைய பாடுவேன். அதை வெறும் டிராக்கா மட்டும் நினைச்சுப் பாடாம, ஃபைனலா நினைச்சுத்தான் பாடறேன். கேட்கிறவங்களுக்கு அந்த டிராக்ல பாடின குரலையே ஃபைனல்ல பாட வைக்கிற அளவுக்கு அதிகபட்ச உழைப்பைக் கொடுப்பேன். டிராக் பாடப்போய், அது பிடிச்சுப்போய் என்னையே பாட வெச்சு ரிலீஸான பாடல்கள் அதிகம். டிராக்ல பாடி வெளியில வராத பாடல்களும் நிறைய இருக்கு. ஆனாலும், நான் வருத்தப்படறதில்லை. என் தொழில் பாடறது. அதை நூறு சதவிகிதம் சிறப்பா செய்யணும்கிறது மட்டும்தான் என் நோக்கம்’’ - தன்னம்பிக்கை தெறிக்கிறது பத்மலதாவின் வார்த்தைகளில்.

படங்களுக்குப் பாடுவது என்பதைத் தாண்டி, இசையில் இவரது தனிப்பட்ட விருப்பம்தான் வியக்க வைக்கிறது.

‘`நண்பர்கள் சேர்ந்து ‘மெக்சிகன் ப்ளூஸ்’னு ஒரு மியூசிக் பேண்ட் வெச்சிருக்கோம். பன்னிரண்டு பேர்ல நான் மட்டும்தான் பெண். எல்லாரும் சேர்ந்து இண்டிபென்டெண்ட் சாங்ஸ் பண்ணுவோம். அதுல நாங்க சினிமா பாட்டு, கிளாசிகல், ஃபியூஷன்னு எல்லாம் பண்ணுவோம். இந்த வருஷம் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில பர்ஃபார்ம் பண்ணப் போறோம்.  

இசை தீபாவளி - “கத்துக்க நான் தயங்கவே மாட்டேன்!''

வெஸ்டர்ன்ல ஜாஸ், ப்ளூஸ், கன்ட்ரினு எல்லா ஸ்டைலையும் தமிழ்ல ட்ரை பண்ணு வோம். சினிமா பாட்டை மக்கள் ரசிக்கிற மாதிரி இதையும் ரசிக்கணும்கிற நோக்கத்துல பண்ற விஷயங்கள் இவையெல்லாம். தமிழ்ல இருக்கிறதாலயும் ஃபாஸ்ட்டா இருக்கிறதாலயும்தான் மக்கள் ரசிக்கிறாங்க. அதையே ஹிந்துஸ்தானியிலயும் வெஸ்டர்னலயும் கொடுத்தா ரசிப்பாங்க. இன்னும் சொல்லப்போனா இன்னிக்கு வர்ற பெரும்பாலான பாடல்கள் ஜாஸ், ப்ளூஸ், கன்ட்ரி ஸ்டைல்லதான் வருது. பாரதிதாசன் பாடல்களை ப்ளூஸ்ல பண்ணினோம். ‘இருவர்’ படத்துல வரும் ‘வெண்ணிலா வெண்ணிலா’வும் ‘எனக்குள் ஒருவன்’ல ‘ஏண்டி இப்படி எனக்கு உன் மேல’வும் ப்ளூஸ் ஸ்டைலுக்குச் சரியான உதாரணம். பாரதிதாசன் வரிகளை ப்ளூஸ்ல பண்ணினதுக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சது.

பாரதியார் பாடல்களை ப்ளூகிராஸ்னு ஒரு ஸ்டைல்ல பண்ணினோம். ‘முண்டாசுப்பட்டி’ யில வரும் ‘ராசா மகராசா...’ பாட்டு ப்ளூகிராஸ் ஸ்டைல்தான். ‘கடல்’ படத்துல வரும் ‘அடியே... அடியே... என்னை எங்கே நீ கூட்டிப்போறே...’ பாட்டு ஜாஸ் ஸ்டைல்...’’ - புதுப்புது தகவல்கள் பகிர்கிறவரின் அடுத்தடுத்த லட்சியங்கள்?

‘`கத்துக்கிறது மட்டும்தான். நிறைய மியூசிக் கேட்பேன். கேட்கிற எல்லாமே எனக்கு ஞானம்னு நினைக்கிறேன். கத்துக்கக் கத்துக்க நான் என்னை மேம்படுத்திக்கிறேன்.’’

- அனைவருக்குமான வெற்றிச் சூத்திரம் சொல்லி முடிக்கிறார் விருது லதா.