Published:Updated:

மனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்!

மனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்!

பெண்ணுலகுக்கு இயல்பாக அமைந்திருக்கும் தொண்டு, கடமை போன்றவற்றை நோக்கும்போது, பெண்களே முதன்மை பெற்று விளங்குகிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆண்கள் அடையக்கூடிய அத்தனை பேறுகளுக்கும், நன்மைகளுக்கும், அனைத்து வளங்களுக்கும், ஆண்களின் ஆக்கபூர்வமான அத்தனை செயல்பாடுகளுக்கும் நிலைக்களன்களாக இருப்பது பெண்களே! இத்தகைய பெருமைகள்கொண்ட பெண்களுக்குச் சமூகத்தில் முன்னுரிமை வழங்குவதில் பிழை ஏதும் இல்லை!

- `பெண்ணின் பெருமை’யில் திரு.வி.க.      

மனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்!

ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது பிறந்ததிலிருந்து ஒவ்வொரு கட்டமாக எப்படி அமைகிறது என்று பார்த்தோம். அப்பப்பா... பெண்ணென்று பிறந்துவிட்டால், அவளுக்குத்தான் எத்தனை எத்தனை பொறுப்புகள்? அத்தனை பொறுப்புகளையும் அவள் செவ்வனே நிறைவேற்றும்போதுதான், தன்னுடைய வாழ்க்கைக்கே ஓர் அர்த்தம் இருப்பதாக அவள் நினைத்துக்கொள்கிறாள்.  அப்படித்தான் காமாட்சியின் வாழ்க்கையும் அமைந்திருந்தது.

தன்னுடைய பொறுப்புகளை அன்புடனும் சிரத்தையுடனும் நிறைவேற்றிய காமாட்சிக்கு, இப்போது அறுபது வயது பூர்த்தியானதை முன்னிட்டு, அவளுடைய அத்தனை உறவுகளும் சேர்ந்து சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட விரும்பினார்கள். பொதுவாக ஆண்களுக்குத்தான் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடுவார்கள். ஆனால், காமாட்சியைப் பொறுத்தவரை பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட வேண்டும் என்று உறுதியாக இருந்து சாதித்தும் விட்டனர்.

காமாட்சியின் சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு அம்மாவுடன் வந்திருந்தாள் அன்னபூரணி. காமாட்சி, அன்னபூரணிக்கு மாமி முறை வேண்டும். பாட்டி வீட்டிலேயே வளர்ந்ததால், அம்மாவை விடவும் காமாட்சியிடம் ஒட்டுதல் அதிகம். காமாட்சியைப் பற்றி அம்மா கதை கதையாகச் சொல்வார். அத்தனையிலும் காமாட்சியின் சிறப்பியல்புகளே பிரதிபலித்தன.

தனக்கு வாய்த்த கணவர் பொறுப்பில்லாத கோபக்காரராக இருந்தாலும், திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்ததும், தன்னுடைய அன்பான நடவடிக்கைகளால் மாமாவை மொத்தமாக மாற்றிவிட்டாராம். சித்திகளுக்குத் திருமணம் செய்து வைத்தது, தனது குழந்தைகளைப் படிக்கவைத்து ஆளாக்கியது, தன்னுடைய அன்பான செயல்பாடுகளால் உறவுகளைப் பலப்படுத்தியது, தாத்தாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போன போது ஒரு தாதியைப் போல் பணிவிடைகள் செய்து, குடும்பத்தின் விருப்பத்தையே தன் விருப்பமாக வாழ்ந்துகொண்டிருந்த காமாட்சியின் வாழ்க்கையை அம்மா விவரித்தபோது, அன்னபூரணிக்குக் காமாட்சியிடம் அன்பும் மதிப்பும் பெருகியதில் வியப்பே இல்லைதான்.

அன்னபூரணியின் அம்மா வந்து, ``என்ன பூரணி, யோசனை பலமா இருக்கே?’’ என்று கேட்டார்.

``மாமியை நினைச்சேன்மா, கல்யாணம் கார்த்தின்னா கடமைக்கு வந்துட்டுப் போற இந்தக் காலத்துல, இங்க எல்லோரும் கடனேன்னு இல்லாம, மாமிகிட்ட பேசறதைப் பாரேன். எவ்ளோ ஆசையா அந்நியோன்யமா இருக்காங்க!’’ என்று சிலாகித்த மகளிடம்...

``மாமி ஒரு தனிப்பிறவி. மாமியைப் பெண் பார்க்கப்போனபோது, மாமி துறுதுறுன்னு இருந்ததோட துடுக்காவும் பேசினாளாம். உடனே தாத்தா, கோபக்காரனான தன் பிள்ளைக்கு இவள்தான் பொருத்தமானவள் என்று நினைத்து மாமியைத் தன் பிள்ளைக்குக் கட்டிவைத்துவிட்டார். முதல்ல மாமியோட அம்மா, ‘பெரிய குடும்பத்துல மூத்த மருமகளா தன் மகளை எப்படி கொடுப்பது’ என்று கவலைப்பட்டபோது, எல்லோரும் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்கள்.

புகுந்த வீட்டுக்கு வந்த பிறகு குடும்பத்துடன் மாமி ரொம்பவே ஐக்கியமாயிட்டா. பாட்டியோடு அவ்வளவு ஒட்டுதல். தங்கள் பிள்ளைக்குக் கோபம் அதிகம் என்பதால், மாமியைத் தங்கள் மருமகளா இல்லாமல், ஒரு மகளைப் போல அவ்வளவு அன்பா பார்த்துக் கிட்டாங்க. நாளாக நாளாக காமுதான் எங்க எல்லோரையும் அன்பா, அக்கறையா பார்த்துக் கிட்டா. கல்யாணம், கார்த்தின்னு எது வந்தாலும், மாமி வந்தாத்தான் களைகட்டும்.

அன்னபூரணியின் மனக் கண்களில் மாமியின் வாழ்க்கை அதி அற்புதமான ஒரு படம் போலவே ஓடியது. துறுதுறு சிறுமியாக, தாவணி மங்கையாக, மணக்கோல மடந்தையாக, கருவுற்ற பெண்ணாக, தாய்மை ஒளிரும் முகத்துடன் இடுப்பில் குழந்தையை வைத்திருக்கும் தாயாக, வீட்டு விழாக்களைத் தலைமையேற்று நடத்தும் பேரிளம் பெண்ணாக என்று ஒவ்வொரு பருவத்திலும் மாமியைப் பற்றிய நினைவுகள் அன்பு நிறைந்த ஓர் அழகோவியமாக அல்லவா அமைந்திருக்கிறது.

‘`பூரணி, மாமி தலைக்கு மேல சல்லடையை வைத்து கலச தீர்த்தம் ஊற்றப்போறாங்க. சீக்கிரம் வா’’ என்று அம்மா அழைக்கும் குரல் கேட்டு, மாமியைப் பற்றிய பெருமித நினைவுகளிலிருந்து விடுபட்டுச் சுயநினைவுக்கு வந்த அன்னபூரணி, உறவினர்கள் சூழ்ந்திருந்த இடத் துக்குச் சென்றாள். ஒவ்வொருவராக மாமியைத் தங்கள் தெய்வமாக, குருவாக பாவித்து கலச தீர்த்தத்தை மாமியின் தலையில் மெள்ள ஊற்ற, முகத்தில் வழியும் நீரைக்கூட பொருட் படுத்தாமல், கண்களை மூடி, இரு கரங்களையும் கூப்பியபடி அனை வரின் நலனுக்காகவும் பிரார்த்தித்தபடி இருந்தார் காமாட்சி மாமி.

அந்த வைபவத்தைப் பார்த்தபடி இருந்தவர்களுக்கு அங்கே மனிதம் மறைந்து தெய்விகம்தான் தெரிந்தது.

வைபவம் முடிந்து மாமியிடம் விடைபெற்றுச் சென்ற அன்ன பூரணியின் மனதில், ‘மங்கையராகப் பிறப்பதற்கு நல்ல மாதவம்தான் செய்திடல் வேண்டும்’ என்ற கவி வாக்கின்படி, பெண்கள் சுயமாகப் பக்குவம் பெற்ற நிலையையும், பெண்களின் தெய்விக அம்சத்தையும் அற்புதமாக உணர்த்துவது போல அமைந்ததுதான் மாமியின் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்’ என்ற நினைவே ஆக்கிரமித்திருந்தது.

(நிறைவடைந்தது) 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!