Published:Updated:

கடலைமிட்டாயில் ஒளிந்திருக்கும் என் அப்பாவின் அன்பு!

கடலைமிட்டாயில் ஒளிந்திருக்கும் என் அப்பாவின் அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
கடலைமிட்டாயில் ஒளிந்திருக்கும் என் அப்பாவின் அன்பு!

கு.ஆனந்தராஜ, படம்: ரா.வருண்பிரசாத்

"கல்யாணமான நாள்லயிருந்து இப்போ வரை எங்க அன்பு அதிகரிச்சுட்டேதான் வருது. மருத்துவம், அரசியல்னு நாங்க ஆளுக்கு ஒரு திசையில் பரபரப்பா இருந்தாலும், எங்களுக்குள்ள இடைவெளி இல்லாத உணர்வை அந்த அன்புதான் கொடுக்குது’’ என மனைவியைப் பார்த்து டாக்டர் செளந்தரராஜன் சொல்ல, “கட்சிக் கூட்டங்கள்ல கம்பீரமா பேசுற என்னை வெட்கப்பட வைக்காதீங்க” எனச் சொல்லிச் சிரிக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.

“காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அப்பா குமரி அனந்தனுடன் சேர்ந்து புத்தகம் படிக்கிறது, அறிக்கை எழுதிக் கொடுக்கிறது, விவாதிக்கிறதுனு சின்ன வயசுலேயே எனக்கும் அரசியல் ஆர்வம் ஏற்பட்டுடுச்சு. எட்டாவது படிக்கிறபோதிலிருந்தே அப்பாகூட சேர்ந்து தேர்தல் பிரசாரம் முதல் நடைப்பயணம் வரை போயிருக்கேன். பள்ளி இறுதிக்காலத்துல, ‘நானும் அப்பாவை மாதிரியே அரசியல்ல ஈடுபட ஆசைப்படுறேன்’னு அம்மாகிட்டச் சொன்னேன். ‘முதல்ல படிப்புதான் முக்கியம்’னு சொல்ல, அம்மாவின் ஆசைப்படியே எம்.பி.பி.எஸ்-ல சேர்ந்தேன்.

கடலைமிட்டாயில் ஒளிந்திருக்கும் என் அப்பாவின் அன்பு!

சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகும் என்னோட பேச்சாற்றல், எழுத்தாற்றலை விடாமல் தொடர்ந்தேன். கல்லூரித் தமிழ் மன்றத் தலைவரானேன். முதல் வருஷம் படிச்சுட்டிருந்தப்பவே எனக்கும் அப்போ சிறுநீரகச் சிறப்பு மருத்துவத்துக்கான மேற்படிப்புப் படிச்சிட்டிருந்த அத்தானுக்கும் (டாக்டர் செளந்தரராஜன்) கல்யாணமாச்சு. பிறகு, அவருக்குத் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில போஸ்ட்டிங் கிடைச்சது. அங்கேயே நானும் மூன்றாம் வருடத்திலிருந்து படிப்பைத் தொடர்ந்தேன். அப்போ, எங்க பையன் சுகநாதன் பிறந்தான். அவன் என் பெற்றோர்கிட்ட வளர்ந்தான்’’ என்பவர், தன்னை மீண்டும் அரசியல் பாதை நோக்கிச் செல்லத் தூண்டிய அந்தச் சம்பவத்துடன் தொடர்ந்தார்...

‘`எங்க கல்லூரியில் ஒருமுறை ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டு குழந்தைங்க பாதிக்கப்பட்டதை டீன்கிட்ட சொன்னேன். ‘அதையெல்லாம் ஸ்டூடன்ட்ஸ் பேசக்கூடாது’னு சொன்னவர்கிட்ட, ‘இவங்க குமரி அனந்தனோட பொண்ணு’னு பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க. நான் குறிப்பிட்ட பிரச்னை உடனடியாகச் சரிசெய்யப்பட்டது. ‘நாம அதிகாரமிக்க இடத்துல இருந்தா, நிறைய நல்லது பண்ண முடியும்’கிற எண்ணம் எனக்குள் அழுத்தமா விழுந்தது. தொடர்ந்து பல நாடுகள்ல உயர்படிப்புப் படிச்சுட்டு இறுதியாக, ‘ஃபீட்டல் (Fetal) தெரப்பி’ங்கிற கருவிலேயே குறைபாடுகளைக் கண்டறிஞ்சு குழந்தையைக் குணப்படுத்துற ஸ்கேன் சர்ஜரி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் கோர்ஸைக் கனடாவுல முடிச்சேன். கனடா அரசு மருத்துவமனைகளின் தரம் என்னை அதிசயிக்க வெச்சது. இந்தியால அப்போ ஆட்சியில இருந்த கட்சி மருத்துவம், கல்வி, சாலைத்திட்டங்கள் உள்ளிட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்யலையேங்கிற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டுச்சு. திராவிடக் கட்சிகள் மேலயும் எனக்கு நம்பிக்கையில்லாதப்போ, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் வாஜ்பாய் சிறப்பான மக்கள் பணி செய்திட்டிருந்ததா உணர்ந்தேன். நானும் பா.ஜ.க-வில் இணையணும்னு முடிவெடுத்து, அத்தான்கிட்டச் சொன்னேன்” என்ற தன் மனைவியை நிறுத்தி, டாக்டர் சௌந்தரராஜன் தொடர்ந்தார்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கடலைமிட்டாயில் ஒளிந்திருக்கும் என் அப்பாவின் அன்பு!

“1997-ல் போரூர் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ்ல அசிஸ்டென்ட் புரொபசர் மற்றும் டாக்டராகவும், பல மருத்துவமனைகள்ல ஸ்கேன் ஸ்பெஷலிஸ்ட் கன்சல்டன்டாகவும், தனியா கிளினிக்கும் நடத்திட்டிருந்தாங்க இசை. கூடவே ‘பெண் சக்தி’னு ஓர் இயக்கம் தொடங்கி மருத்துவம், கல்வி உதவினு சேவைகளும் செய்திட்டிருந்தாங்க. தினமும் இரவு 12 மணி வரைக்கும் பரபரப்பாதான் இருப்பாங்க. ஆரம்பத்திலிருந்து தனக்குள் எரியுற அரசியல் கனலை அவங்க எங்கிட்டச் சொல்லியிருக்காங்க. ஒருநாள், ‘பா.ஜ.க-வில் சேர்றேன்’னு அவங்க உறுதியா சொன்னப்போ, மனப்பூர்வமா வாழ்த்தினாலும், என் மாமனாரை நினைச்சுதான் நான் ஜெர்க் ஆனேன்’’ என்பவர், ‘அப்பா - மகள் சண்டை’ எபிசோடையும் தானே தொடர்ந்தார்.

‘`1998-ல் இசை தன் அப்பாவின் எதிர்க்கட்சியான பா.ஜ.க-வில் உறுப்பினராகச் சேர்ந்தது என்னைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. பல மாதங்களுக்குப் பிறகு ஒரு மீட்டிங்ல புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினப்போ அதில் இசையும் இடம்பெற... அடுத்த நாளே, ‘குமரி அனந்தனின் மகள் பா.ஜ.க-வில் சேர்ந்தார்’னு தலைப்புச் செய்தி ஆகிடுச்சு. அன்னிக்கு நான் என் மாமனாருக்கு போன் செய்ய, அவர் பயங்கரக் கோபத்தோடு பேசி போனை கட் பண்ணிட்டார். அடுத்த ஆறு மாசங்கள் தொடர்பே இல்லை. ‘ஒரு பொண்ணுக்குப் பொறந்த வீட்டுத் தொடர்பு அறுந்துபோறது மரணத்துக்கு இணையான வலி’னு இசை புலம்பிட்டே இருப்பாங்க’’ என செளந்தரராஜன் சொல்ல, ஆதங்கத்துடன் வார்த்தைகள் வருகின்றன தமிழிசையிடமிருந்து...

“ ‘நீங்கதானே முடிவெடுக்கக்கூடிய சுதந்திரத்துடன் என்னை வளர்த்தீங்க? எனக்குப் பிடிச்ச கட்சியில சேர்ந்திருக்கேன். உங்க பெயரை எந்த வகையிலும் நான் கெடுக்க மாட்டேன். எப்போதும்போல தந்தையாக என் மேல அன்பு காட்டுங்க’னு அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்.

ஒரு வருஷம் கழிச்சுதான் அப்பாகிட்ட நேர்ல பேசுற சந்தர்ப்பம் கிடைச்சது. அந்தச் சம்பிரதாயச் சந்திப்பில் எனக்கு வார்த்தைகளைவிட அழுகைதான் வந்தது. இப்போ வரைக்கும் எங்க அப்பா - மகள் உறவு பட்டும்படாமதான் இருக்குது. அப்பாக்கூட இயல்பா பேசமுடியாத இந்த வாழ்க்கை ஒருவகையில ரணம்தான். ஆனா, அந்தளவுக்கு நாங்க ரெண்டு பேரும் எங்களோட கட்சிக்கு உண்மையான விசுவாசிகளா இருக்கோம் என்பது பெரிய பெருமை’’ என்றவர், கட்சியில் தன் வளர்ச்சி பற்றிப் பேசினார்.

‘`கட்சியில தேசியச் செயலாளர் பதவிக்கு வந்ததும், என்னோட மருத்துவச் சேவையைப் பெரும்பகுதி குறைச்சுக்கிட்டேன். கட்சியில் என் 19 வருட உழைப்புக்கான அங்கீகாரமா கிடைச்சது மாநிலத் தலைவர் பொறுப்பு. இப்போ, தொழில் ரீதியான பிராக்டீஸை நிறுத்திட்டு, சேவை மருத்துவப் பணிகளை மட்டும் செய்திட்டிருக்கேன்’’ என்றவரைத் தொடர்கிறார் கணவர்.

“இசையோட சிறப்பான மேடைப் பேச்சு, செயல்பாடுகளை எப்பயாச்சும் என் மாமனார் எங்கிட்ட பாராட்டிச் சொல்வார். அதை இசைகிட்டச் சொல்லும்போது கிட்டத்தட்ட அழுதுடுவாங்க. இசை மாநிலத் தலைவர் ஆனதும், மாமா கோயிலுக்குப் போய் அர்ச்சனை செஞ்சு எங்கிட்ட பிரசாதம் கொண்டுவந்து கொடுத்தார். அதை இசைகிட்ட கொடுத்ததும் பூரிச்சுப்போயிட்டாங்க’’ என்று டாக்டர் சௌந்தரராஜன் சொல்ல, ‘`நான் ‘அத்தான்’னு கூப்பிடுறது உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்ல? அதைச் சொன்னீங்களா?’’ என்று கணவரைக் கலகலப்பாக்கித் தொடர்கிறார் தமிழிசை.

‘`கலைஞர் முதல் சூப்பர் ஸ்டார் வரை இவருடைய க்ளையன்ட்ஸ் லிஸ்ட் ரொம்பப் பெருசு. பரபரப்பான மருத்துவரா இருந்தாலும்கூட, என் பேட்டிகளையெல்லாம் உடனே எங்கிட்ட கொண்டுவந்து காட்டுறது, ‘நீ பேசின சிறப்பான போர்ஷனை எடிட் பண்ணிட்டாங்களே’னு வருந்துறதுனு, இவர் எனக்காகச் செலவழிக்கிற நேரம்... நிறைய!’’ என்று தன் கணவரின் கரம் கோத்துக்கொள்பவர் கேசம், நிறம் எனத் தோற்றம் ரீதியாகத் தன்மீது வைக்கப்படும் கேலிகளைப் பற்றிப் பேசும்போது ஆதங்கப்படுகிறார்.

“அதிகாரமிக்க அரசியல் துறையில் இருக்கும் பெண்களையே கறுப்பு, பரட்டைனு கேலி செய்ற இந்தச் சமூகம், அப்போ மற்ற துறைப் பெண்களையெல்லாம் எந்தளவுக்குத் துன்புறுத்தும்? அரசியல்ரீதியான ஒரு கருத்தைச் சொன்னால், ஆபாசமான வார்த்தைகளால அதற்கு எதிர்வினை செய்றாங்க. நேர்மையானவங்க என்னைக் கருத்துக்களத்தில் சந்திப்பாங்க. கோழைகள்தான், ‘இவள் பெண் என்பதை வைத்து இவளை இழிவுபடுத்தலாம்’னு யோசிப்பாங்க. உண்மை என்னன்னா, இந்த எண்ணமே நம்ம சமூகத்தின் மூளைக்குறைபாடுதான். என்னோட அரசியல் பணியை குறைச்சொல்ல முடியாததாலதான், என் தோற்றத்தை ஒப்பிட்டுக் குறைச்சொல்றாங்க. இதுக்காகவெல்லாம் நான் வருந்தி என் நாள்களை வீணடிக்க மாட்டேன். ஆனா, என் குடும்பத்தினருக்கு இது வருத்தம் தருவதா அமைந்தது’’ என்று பேசிக்கொண்டிருந்த தமிழிசையிடம் சௌந்தரராஜன் சொல்கிறார்...

‘`அதெல்லாம் விட்டுத்தள்ளு. தினமும் தூங்கிறதுக்கு முன்னாடி ஒரு மணி நேரம் புத்தகம் படிப்பியே... இன்னிக்கு இந்தக் கவிதை புக் `ஓகே’வா?’’

ஆம்... அவர்கள் ஓர் அழகிய இணை!“

கடலைமிட்டாயில் ஒளிந்திருக்கும் என் அப்பாவின் அன்பு!

இதுதான் என் அப்பா!”

“எனக்குக் கடலைமிட்டாய் ரொம்பப் பிடிக்கும் என்பதால, என்னோட சின்ன வயசுல அப்பா வெளிய போயிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஒரு கடலைமிட்டாய் பாக்கெட்டோடதான் வருவார். அப்பாவுக்கு என் மேல கொஞ்சம் கோபம் குறைஞ்ச பிறகு, பேரக் குழந்தைகளைப் பார்க்க எப்போவாச்சும் வீட்டுக்கு வருவார். அப்போ அவங் களுக்கு வாங்கிட்டு வர்ற தின்பண்டங்களில், எனக்கான கடலைமிட்டாயும் இருக்கும். ‘இது என் அப்பாவோட அன்பு’னு எங்க வீட்டுல எல்லோர்கிட்டயும் அதைக் காட்டிச் சொல்லிட்டே சாப்பிடும்போது, அவ்வளவு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக இருக்கும்!” என்கிறார் டாக்டர் தமிழிசை.

“மாதம்தோறும் ஷாப்பிங்!”

“காலேஜ் படிக்கும் போதிலிருந்தே டிரஸ்ஸுக்கு மேட்சிங்கா கம்மல், வளையல் பயன்படுத்துறது என் வழக்கம். இப்பவும் அது தொடருது. அதனால, பணிச்சூழலுக்கும் இடையேவும் மாசத்துல சில மணி நேரங்களை ஒதுக்கி அதுக்காக ஷாப்பிங் போவேன். தங்கத்தில் அவ்வளவா விருப்பம் இல்லை’’ என்று சிரிக்கிறார் டாக்டர் தமிழிசை.

“எங்க குடும்பத்தில்  ஐந்து டாக்டர்கள்!

“நான், என் மனைவி, போன வருஷம் கல்யாணமான என் மகன் சுகநாதன், மருமகள் திவ்யா, எங்க பொண்ணு பூவினினு எங்க வீட்டுல மொத்தம் ஐந்து டாக்டர்கள்’’ என்கிறார் டாக்டர் அப்பா செளந்தரராஜன்.