Published:Updated:

“நாங்க சூர்யவம்சம் குடும்பத்தினர்!”

“நாங்க சூர்யவம்சம் குடும்பத்தினர்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நாங்க சூர்யவம்சம் குடும்பத்தினர்!”

வெற்றி மந்திரம்மு.பார்த்தசாரதி - படங்கள்: மீ.நிவேதன்

`` ‘பொண்ணுங்கன்னாலே கல்யாணம் கட்டிக்கிட்டு புள்ளகுட்டியப் பெத்துக்க வேண்டியதுதான். உன் பொண்ணு கோல்டு மெடல் வாங்கியிருக்கா. எம்பொண்ணு வாங்கல. ஆனா, ரெண்டு பேருமே பாத்திரம் கழுவிக்கிட்டு, துணி துவைச்சுப் போட்டுக்கிட்டு சமையலறையிலதானே கெடக்குறாங்க?’ என்று எங்கம்மாவிடம் சொல்லிக் கிண்டல் பண்ணினார் என் உறவினர்.   

“நாங்க சூர்யவம்சம் குடும்பத்தினர்!”

எனக்குக் குழந்தை பிறந்த போது பார்க்க வந்த அவர், அப்போது சொன்னது எனக்கு `சுர்’ரென உறைத்தது. அவங்க சொல்றதைபோல, `கோல்டு மெடலுடன் படிப்பை முடிச்ச நான் ஏன் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன்' என்கிற கேள்வி என்னைத் துரத்த ஆரம்பிச்சது. அது துரத்திய வேகம்தான் இன்னிக்கு வெற்றிக்கான இலக்கை அடைய வெச்சிருக்கு.”

சொல்லும்போதே திருவள்ளுர் மாவட்டம் குமணன்சாவடியைச் சேர்ந்த காயத்ரி சுப்ரமணி முகத்தில் தன்னம்பிக்கை... பூரிப்பு. இவர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து வெற்றி பெற்றவர்.

“பள்ளிப் பருவத்திலிருந்தே முதல் மாணவி நான். சென்னை, பனிமலர் இன்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ படிச்சப்போ, பல்கலைக்கழக கோல்டு மெடல் வாங்கினேன். அந்த உற்சாகத்தோடு எம்.இ படிக்கக் காத்திட்டிருந்தேன். ‘சுப்ரமணி... நீ மூணு பொண்ணுங்களை வெச்சிருக்க. பெரிய பொண்ண காலாகாலத்துல கட்டிக்கொடுத்த மாதிரி காயத்ரிக்கும் சட்டு புட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிடு’னு உறவினர்கள் அப்பாகிட்ட சொன்னாங்க. எம்.இ கனவு காற்றோடு போக, இருபது வயதிலேயே எனக்குக் கல்யாணத்தை முடிச்சு வெச்சாங்க... அடுத்த வருஷமே என் பொண்ணு பிறந்தா...’’ என்று சொல்லிப் பேச்சை நிறுத்திய காயத்ரி, தொடர்ந்து தன் பிறந்த வீட்டினரையும், புகுந்த வீட்டினரையும் பற்றிக் குறிப்பிட்டார்...

“எங்க வீட்டுல மூணு பொண்ணுங்களும் அப்பா அம்மாவுக்குச் செல்லங்கள். படிப்பாளியான என்னை உட்கார வெச்சு, ‘சொல்லுங்க... நீங்க கலெக்டர் ஆகிட்டீங்கன்னா, இந்த மாவட்டத்துக்கு என்ன நல்லது பண்ணுவீங்க’ன்னு பேட்டி எடுத்துட்டே இருப்பா என் தங்கை. இப்படியே கலகலப்பும் குதூகலமுமாகச் சுற்றி வந்தவ நான். ஆனாலும், எம்.இ படிக்க முடியாத ஏக்கத்தையும் சேர்த்துச் சீராகக் கொடுத்து என்னைப் புகுந்து வீட்டுக்கு அனுப்பி வெச்ச என் பிறந்த வீட்டின் மேல எனக்கு வருத்தம் இருந்துச்சு. ஆனா, என் கனவுகளுக்கு எல்லாம் சிறகுகள் கட்டிப் பறக்கவிடுற கணவர் வீட்டினர் எனக்கு அமைந்தது என் வரம்’’ என்றவர், அந்த ‘சூர்யவம்சம்’ கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நாங்க சூர்யவம்சம் குடும்பத்தினர்!”‘`பள்ளி, கல்லூரி காலங்களில் படிப்பு சம்பந்தமா எனக்குச் சின்னச் சின்ன இலக்குகள் இருந்துட்டே இருக்கும். அதேபோலதான் மகள் பிறந்ததுக்குப் பிறகு, ‘நாம ஏன் அரசுத்தேர்வுக்குத் தயாராகக் கூடாது’னு தோணுச்சு. வீட்டில் சொன்னப்போ அத்தையும் மாமாவும், ‘எங்க பேத்தியை நாங்க பார்த்துக்குறோம். நீ நம்பிக்கையோட படிம்மா’ன்னு உற்சாகப்படுத்தினாங்க. 2012-ல படிக்கிறதுக்கான முதல் முயற்சி எடுத்துப் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டதும், ‘தொடர்ந்து முயற்சி செய் கண்ணு’னு என் குடும்பத்தினர் தட்டிக்கொடுத்தனர். 2015-ல் மீண்டும் படிக்க ஆரம்பித்து முதல் முயற்சியிலேயே பாஸ் ஆகியிருக்கிறேன்’’ என்றவரிடம், அவருடைய தோற்றம் குறித்துக் கேட்க, சிரித்தபடி பதில் சொல்ல வருகிறார் அவர் கணவர் கார்த்திகேயன்...

“அதை ஏன் கேட்கறீங்க... திடீர்னு ஒருநாள் பார்லர் போய் ஹேர்கட் பண்ணிட்டு வந்து நிக்கறாங்க... நீளமான கூந்தலோடு பார்த்த என் மனைவியை `பாய் கட்' ஸ்டைலில் பார்த்த செகண்டு அதிர்ந்துட்டேன். ‘ஏம்மா’னு கேட்டா, ‘எனக்கு மனரீதியா கொஞ்சம் மாற்றம் தேவைப்படுது. நான் இன்னும் கூடுதலாக என் ஆளுமையை நிரூபிக்க இது உதவியா இருக்கும்’னு அவங்க சொன்னதும் எனக்கு மட்டுமல்ல, என் வீட்ல எல்லாருக்கும் அவங்க அப்படி மனசுக்குள்ள ஒரு நெருப்போட இருந்தது பெருமையா இருந்தது. இன்னொரு விஷயம் சொன்னா நம்புவீங்களா? வீட்டு நினைப்பிலிருந்து விடுபட்டு மொத்தக் கவனத்தையும் அவங்க படிப்பில் செலுத்த, நாலைந்து மாதங்களா சி.ஐ.டி நகர்ல தனியா தங்கியிருந்தாங்க. என் அம்மாவும், அவங்க அம்மாவும்தான் மாத்தி மாத்தி சாப்பாடு செய்து எடுத்துட்டுப் போய் அவங்களுக்குக் கொடுத்துட்டு வருவாங்க’’ என்று அசரவைத்தார் கார்த்திகேயன்.  

“நாங்க சூர்யவம்சம் குடும்பத்தினர்!”

“இவரும் அவர் கையாலேயே சமைச்சு அப்பப்போ எடுத்துட்டு வருவார். ஒருபக்கம் என் பொண்ணையும், இன்னொருபக்கம் எங்க ரெண்டு பேரோட குடும்பத்தையும் தனியாளா அவர்தான் சமாளிச்சார். நான் அப்போலோ இன்ஸ்டிட்யூட்ல கோச்சிங் போய்க்கிட்டிருந்தேன். அங்கிருந்து சில மாதங்கள் மனிதநேய அறக்கட்டளைக்கும் போய் பயிற்சி எடுத்துட்டிருந்தப்ப, இவர்தான் எனக்கு அரசியல் நிகழ்வுகளையெல்லாம் சொல்லிட்டே இருப்பார். ‘உன்னால நிச்சயமா முடியும். அதுக்காக ரொம்ப அழுத்தம் ஏத்திக்காதே... முடிந்தவரை முயற்சி செய்’னு எனக்கு அக்கறையா, ஆதரவா இருப்பார். பெருமைக்காகச் சொல்லல... என் கணவர் ஒரு ரியல் ‘சூர்யவம்சம்’ சரத்குமார்!’’ - காயத்ரியின் கண்கள் நேசத்துடன் கார்த்திகேயனைப் பார்க்கின்றன.

“நாங்க எவ்வளவுதான் சப்போர்ட் பண்ணினாலும் இரண்டு வருஷங்கள் கஷ்டப்பட்டு படிச்சது அவங்கதானே. எக்ஸாம் அன்னிக்குப் பரீட்சை எழுதிட்டு வந்ததுமே என்கிட்ட பாஸிட்டிவ்வான ரிசல்ட்தான் சொன்னாங்க. அப்பவே அவங்களுக்குள்ள கான்ஃபிடன்ஸ் இருந்துச்சு. ஆனாலும், ரிசல்ட் வர்ற அன்னிக்கு வீட்டுல எல்லாருமே டென்ஷனாதான் இருந்தோம். மனைவியை டெலிவரி ரூமுக்கு அனுப்பிட்டு வெளியில நின்னு பரிதவிக்கிற கணவனைப்போலதான் நானும் சுத்திட்டே இருந்தேன். போன் ரிங் அடிச்சாலே ஹார்ட் பீட் படபடன்னு அடிச்சுக்கும். டென்ஷன்ல நான் வெளியில கௌம்பிப் போயிட்டேன். கொஞ்ச நேரத்துலயே காயத்ரி போன் பண்ணினாங்க. எடுத்ததும் `நான்தாங்க ஸ்டேட் ஃபர்ஸ்ட்டு’ன்னு அவங்க சொன்னதுமே நான் ரோடுன்னுகூட பார்க்காம எம்பி குதிச்சிட்டேன்” சொல்லிக்கொண்டே அந்த நாள் நினைவலையில் மூழ்குகிறார் கார்த்திகேயன்.

குடும்பத்தலைவியாகி, ஒரு குழந்தைக்குத் தாயான பின்னரும் தன் இலக்கை அடைந்திருக்கும் காயத்ரி, தன் சொந்த மாவட்டமான திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரவல்லிதான் தனக்கு ரோல் மாடல் என்கிறார். சக தோழிகளுக்கு அவர் சொல்லும் அட்வைஸ்...

“கல்யாணத்துக்கு அப்புறம் முழுநேரக் குடும்பத்தலைவியா நேரத்தைச் செலவழிக் காதீங்க. உங்களுக்குனு ஒரு குறிக்கோளை வெச்சுக்கோங்க; அதை அடைய நேரத்தை முறையாகப் பயன்படுத்துங்க. பலரும் பலவிதமான யோசனைகளைச் சொல்வாங்க. எல்லாத்தையும் காதில் வாங்காம, நீங்களாகவே ஒரு முடிவெடுத்து அதில் உறுதியா நில்லுங்க. வெற்றி உங்கள் வசம்!”

- கம்பீரம் நிரம்பி வழிகிறது டெபுடி - கலெக்டர் காயத்ரியின் வார்த்தைகளில்!